.
த
மிழில் நகைச்சுவையுடன் எழுதிய ஒருசில எழுத்தாளர்களில் சாவி என்கிற சா.விஸ்வநாதனுக்கு முக்கிய இடம் உண்டு. ‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற 11 அத்தியாயங்களைக் கொண்ட நாவலை இன்றைக்குப் படித்தாலும் ரசிக்க முடியும். அத்துடன் ‘ஆப்பிள் பசி’, ‘விசிறி வாழை’, ‘வழிப்போக்கன்’, ‘கனவுப் பாலம்’, ‘ஊரார்’, ‘வேதவித்து’, ‘காலேஜ் ரோடு காதலி’, ‘தெப்போ-76’ என்று நாவல்களும் ‘கேரக்டர்’, ‘நவகாளி யாத்திரை’, ‘சிவகாமியின் செல்வன்’, ‘இங்கே போயிருக்கிறீர்களா?’, ‘பழைய கணக்கு’, ‘என்னுரை’ என்று கட்டுரைத் தொடர்களும் இத்தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
வாஷிங்டனுக்குப் போகாமலேயே அங்கேயுள்ள வீதிகளையும் கட்டிடங்களையும் பூங்காக்களையும் குறிப்பிட்டு இங்கிருந்தபடியே ஒரு திருமணத்தைத் தொடராக எழுதி வாசகர்களைக் கிறங்க வைத்திருக்கிறார் சாவி. “அமெரிக்காவிலுள்ள மிஸஸ் ராக்ஃபெல்லரின் நாத்தனார்(!) கேத்தரினின் பெண் லோரிட்டாவும், நியூயார்க் நகரில் யுனெஸ்கோவில் பணிபுரியும் மிஸஸ் மூர்த்தியின் மகள் வசண்டாவும் கலாசாலைத் தோழிகள். கேதரின் ஹஸ்பண்ட் ஹரி ஹாப்ஸும் கும்பகோணம் டி.கே. மூர்த்தியும் ஒரே ஆபீஸில் வேலைபார்ப்பவர்கள். எனவே கேதரினுக்கும் மூர்த்தியின் மனைவி லோசனாவுக்கும் நட்பு. கேதரினின் நாய் இறந்தபோது மிஸஸ் மூர்த்தி மூன்று நாள் தீட்டுக் காத்தாள்! மிஸஸ் மூர்த்தியின் பனாரஸ் புடவை சாயம் போய்விட்டது என்று அறிந்து, கேதரின் துக்கம் விசாரிக்க வந்தாள்” என்று ஆரம்பமே விலா நோக வைக்கும்.
அமெரிக்காவில் நடக்கும் அந்த இந்தியத் திருமணத்துக்காக, இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பூசணிக்காயைக் கையினால் தூக்கிப் பார்த்தார் ராக்ஃபெல்லர். காம்பு வசதியாக இல்லாமல் போகவே கீழே நழுவி விழுந்துவிட்டது. அவ்வளவுதான், உடனே அத்தனை பூசணிக்காய்களுக்கும் பிளாஸ்டிக்கில் கைப்பிடி ஃபிக்ஸ் செய்துவிடும்படி உத்தரவு போட்டுவிட்டார் அவர். இது போன்ற பகடிகள் சாவிக்குக் கைவந்த கலை.
“அதோ ஒரு மண்டபம் தெரிகிறதே அதுதான் ஆப்ரஹாம் லிங்கன் மண்டபம்” என்றான் பஞ்சு. ‘ஹர ஹர’ என்று அந்த மண்டபத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டார் சாஸ்திரிகள். “லிங்கம் வைத்து மண்டபம் கட்டியிருக்காளே! மஹாலிங்கம் ஜம்புலிங்கம் மாதிரி அமெரிக்காவிலே ஆபிரஹாம் லிங்கம் விசேஷம் போலிருக்கு” என்றும் சிலாகிக்கிறார். சித்ராலயாவின் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் முழு நீள நகைச்சுவைப் படம் என்றால் வாஷிங்டனில் திருமணம் முழு நீள நகைச்சுவை நாவல். எத்தனை முறை படித்தாலும் சலிக்காதது.
‘விசிறி வாழை’ நாவலுக்கு சாவி ஒரு முன்னுரை தந்திருக்கிறார். ‘இந்தக் கதை வாஷிங்டனில் திருமணத்தைப் போன்ற நகைச்சுவைத் தொடர் அல்ல. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதுவரை தோன்றியுள்ள காதல் கதைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் இந்தக் கதை அமைந்துள்ளது’ என்று சாவி குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னையில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்ததும் அல்லாமல், ‘இங்கே போயிருக்கிறீர்களா?’ என்று கேட்டு வாசகர்களுக்கும் அவற்றைச் சொற் சித்திரங்களாகப் படைத்திருக்கிறார் சாவி. மெரினா கடற்கரை, உயிர்ப் பூங்கா, சென்ட்ரல் ரயில் நிலையம் என்று எல்லாம் வருகிறது.
மெரினாவில் இரண்டு பேர் பேசிக்கொண்டு போகிறார்கள். “இந்தக் காதல் ஜோடிகளெல்லாம் எதுக்கு படகுக்குப் பக்கத்திலே வந்து உட்கார்ந்துகிட்டு சமுத்திரத்தையே வெறிச்சுப் பார்க்கிறாங்க?”. “அதுவா, சம்சாரம் என்னும் சாகரத்தை வாழ்க்கைப் படகைக் கொண்டு கடப்பது எப்படின்னு பாக்கறாங்களோ என்னமோ?”
காந்தி, ராஜாஜி, காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர் ஆகிய தலைவர்களுடன் நன்கு பழகியவர் சாவி. ராஜாஜி உவமையோடு பேசும் அழகை சாவி பதிவுசெய்கிறார். “தனிநபர் சத்தியாகிரகத்தின்போது ராஜாஜி எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று செய்தி பரவியது. அவ்வளவு தான் ஆயிரக்கணக்கானோர் அவர் வசித்த பஸ்லுல்லா வீதியில் கூடிவிட்டனர்.
‘காலை பத்து மணிக்கு அரெஸ்ட் பண்ணப் போறாங்களாம்’ என்று செய்தி பரவும். எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்க ள். ஆனால், கைதாக மாட்டார். ‘சாயங்காலம் இருக்கும்’ என்று கூட்டத்தினர் பேசிக்கொண்டு போவார்கள். சாயங்காலம் திரும்ப வந்து காத்திருப்பார்கள். இப்படியே மூன்று நான்கு நாட்கள் ஒரே சஸ்பென்ஸாக இருந்தது.
இதுகுறித்து ராஜாஜி சொன்னார். “கிராமங்களில் வாழைத்தாரை அறுத்துப் பழுக்கப் போடுவார்கள். அதை ஒரு பானையில் வைத்து வைக்கோல் போட்டு மூடிவிடுவார்கள். தார் பழுக்க நாலைந்து நாட்கள் ஆகும். ஆனால் வீட்டிலிருக்கும் சின்னப் பயல்களுக்கு அதுவரை தாள முடியாது. அடிக்கொரு முறை உள்ளே போய் வைக்கோலை எடுத்து, தார் பழுத்துவிட்டதா என்று பார்ப்பார்கள். அதுபோல நான் கைதாகும் வரை இவர்களால் பொறுக்க முடியவில்லை!”.
சாவி என்ற பத்திரிகையாளரையும் படைப்பாளியையும் ஒருங்கே அறிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் அவரது எழுத்துகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது!
- சாரி,
தொடர்புக்கு: ranga chari.v@thehindutamil.co.in
தொடர்புக்கு: ranga chari.v@thehindutamil.co.in
nantri http://tamil.thehindu.com
No comments:
Post a Comment