மரம் -- ருத்ரா .இ.பரமசிவன்

.


என்னை வெட்டியெறியும் முன்
யோசித்திருக்கவேண்டும்.
இப்போது
வெப்பம் பூமியை
விழுங்க வந்து விட்டது.
நீ பெட்ரோலால் மலம் கழித்து
உன்னையே
கரிப்புகைக்குள் தள்ளி
காணாமல் போய்க்கொண்டிருக்கிறாய்.
தலைநகரங்கள் எல்லாம்
முகமூடி போட்டு உட்கார்ந்து இருக்கின்றன.
உன் நுரையீரல் பூங்கொத்துகள்
உனக்கே அங்கு
உன் கல்லறையின் கடைசிக்கல்லை
மூடக்காத்திருக்கின்றன.
வியாபாரம் செய்தால் போதும்
லாபம் குவித்தால் போதும் என்று
கம்பெனிகள்
சில பல ஆயிரங்களின் ரூபாய்களுக்கு
இரும்புகளின் எலும்புக்குவியலாய்
மோட்டார் சைக்கிள்கள்
விற்பதற்கு குவித்து வைத்திருக்கின்றன.
அவை அத்தனையும்




நச்சுப்புகை படிமானங்களில்
ம‌ரணங்களின் சல்லாத்துணியாய்
இந்த பூமியைப் போர்த்தி
உயிர்கள் எனும்
அழகின்
அறிவின்
ஆற்றலின் ஊற்றுக்கண்ணை
தூர்த்துவிடக்காத்திருக்கின்றன.
ஆம்
இந்த பூதங்களின்
தாராளமய பொருளாதாரத்தில்
இனி
இந்த பூமியில் வெட்டவெளியே மிச்சம்.
இரவில்
ஒற்றை உயிர்ப்பிஞ்சு கூட‌
மேலே நட்சத்திரங்களை பார்ப்பதற்கு
மிஞ்சப்போவதில்லை.
காலையின் இளஞ்சூரியனுக்கு
ஹலோ சொல்வதற்கும்
யாரும் இருக்கப்போவதில்லை.

No comments: