யாழ்ப்பாணம்
ரவுணுக்கை சைக்கிள் கடை வச்சிருந்த வேலாயுதம் மாமாவுக்கு பெரிய வீடு,
வளவு. ஊருக்குள்ளை ஒரு பெரிய அரண்மனை மாதிரியிருக்கும். எண்பத்தேழில
இந்தியன் ஆமி வந்த கையோட வேலாயுதம் மாமா குடும்பம் கொழும்புக்குப் போய்
அப்பிடியே கனடாவுக்குப் போயிட்டினம்.
சண்டை மூண்ட பிறகு இந்தியன் ஆமி காம்ப் ஆக வேலாயுதம் மாமா வீடு இருந்தது.
இந்தியன்
ஆமிக்காறர் போன கையோட பூட்டிக் கிடந்த வீட்டை இயக்கக்காறர்
எடுத்திட்டினம். ஆனால் இயக்கப் பெடியள் அங்கே நிரந்தரமாகத் தங்குவதில்லை.
இருந்திட்டு எப்பவாவது ட்றக்கில குவியலா வருவினம். ரெண்டு மூண்டு நாளிலை
ஆக்களைக் காணேலாது. வெளி மாவட்டத்தில இருந்து சண்டைக்காக வாற பெடியள் எண்டு
கந்தையா அண்ணை ஒருமுறை அப்பாவின் காதில் குசுகுசுத்தது கேட்டது.
வேலாயுதம் மாமா வீட்டில் ஒருத்தர் மட்டும் அங்கே நிரந்தரமாகத் தங்கியிருப்பார். அவர் தான் தவாண்ணை.
எங்கட ஊர்ச் சனத்துக்குத் தான் அவர் சென்றிப் பெடியன் ஆனால் எனக்கு அவர் “தவண்ணை”
வேலாயுதம் மாமா வீட்டு வளவை மூடிக் கட்டிய பென்னம் பெரிய மதிலுக்கு மேல் இருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார் தவாண்ணை. கையில துவக்கு, இடுப்பைச் சுற்றிய சாரத்தை இறுக்கியிருக்கும் பெல்ட் கிரனேட் குண்டு பொருத்த வாகாக இருக்கும்.
ஒல்லி உடம்பெண்டாலும் கறுத்த புறூஸ்லீ மாதிரி இருப்பார் அவர்.
தவா
அண்ணையோடு எப்படி எனக்குப் பழக்கம் வந்தது எண்டு யோசித்துப் பார்க்கிறேன்.
வேலாயுதம் மாமா வீட்டு வளவுக்குள்ள இருந்த வயிரவர் கோயில் எங்கட ஊர்ச்
சனத்துக்குப் பொதுச் சொத்து மாதிரி. அப்பிடித்தான் நானும் கோயில் கும்பிடப்
போற சாக்கில இயக்கப் பெடியளை விடுப்புப் பார்க்கப் போவேன்.
சாந்தன்
அண்ணா என்னை விட ஐந்து வயது மூத்தவர். வேலாயுதம் மாமா வீட்டுக் காணியோட
ஒட்டின ஒரே மதில்காறர். ஊர்க்காறரைக் கண்டால் அதிகம் பேச்சுவார்த்தை
வைத்துக் கொள்ளாத தவா அண்ணைக்கு ஏனோ என்னிலும் சாந்தன் அண்ணையிலும் ஒரு
நேசத்தை வைத்துக் கொண்டிருந்தார். சினேகமாகச் சிரித்து விட்டுக் கடந்த
காலம் போய். சாந்தன் அண்ணா வீட்டு விசேசங்களில் செய்யும் சாப்பாடு முதற்
கொண்டு வைரவர் கோயில் புக்கை வரைக்கும் வாழையிலையில மடிச்சிக் கொண்டு போய்
தவா அண்ணரோடு பங்கிட்டுச் சாப்பிடும் அளவுக்குப் பழக்கம் பிடித்து
விட்டோம். பின்னேரம் ஆனால் மதிலில் இருந்து அலட்டிக் கொண்டிருப்பம்.
இந்த
மூன்று பேர் கூட்டணியில் தவா அண்ணரை விட இரண்டு வயது இளையவர் சாந்தன்
அண்ணா என்பதால் அவர்களுடைய கதைக்குள்ள நான் அதிகம் தலையிட மாட்டன்.
கேட்டுக் கொண்டிருப்பன்.
ஒரு நாள் சுப்பையா அண்ணை கண்டு என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்.
“எடேய்
இயக்கப் பெடியனோட உங்களுக்கென்னடா சினேகிதம் அவன் பாவி மடியில
கட்டியிருக்கிற குண்டு வெடிச்சுக் கிடிச்சுப் போனால் என்ன செய்வியள்? என்று
வெருட்டிப் பார்த்தார். சுப்பையா அண்ணை கவலைப்படுவதிலும் நியாயம்
இருந்தது. இந்தியன் ஆமி வர முந்தின காலத்தில ஒருமுறை சுதுமலைத் தோட்டத்தில
இலங்கை ஆமி ஹெலியை இறக்கி நோட்டம் பார்த்தவன். அந்த நாள் தொட்டு எங்கட ஊர்
முச்சந்தியில இரவு நேரம் இயக்கப் பெடியள் மாறி மாறி சென்றியில்
நிப்பினம்.
“நானொரு சென்றி தாவடிச் சென்றி
பாதை
தெரியவில்லை இந்த ஊரும் புரியவில்லை” எண்டு எங்கட ஊர் அண்ணைமார் “நானொரு
சிந்து காவடிச் சிந்து“ சினிமாப்பாட்டை மாத்திப் பாடும் அளவுக்கு
முச்சந்திச் சென்றிக்காறர் பிரபலமாகீட்டினம்.
அந்த
முச்சந்தியில தான் வெட்டின சுரக்காய்க்குக் குங்குமம் போட்டு களிப்புக்
கழிக்கிறது. செத்த வீட்டு எட்டுச் சாப்பாடெல்லாம் அதில் தான் போடுறது.
அந்தச் சந்தியைக் கடக்கும் போதே பயத்தில அங்காலை திரும்பிப் பார்த்துக்
கொண்டு போகுமளவுக்குப் பயமான ஏரியா அது. ஆனால் இயக்கக்காறர் சென்றி
போட்டதில இருந்து எல்லாருக்கும் பயம் தெளிஞ்சுட்டுது. கள்ளர் காடையர் கூட
இரவில இனி வராயினம் என்று ஊர்ச்சனத்துக்குப் பெரும் ஆறுதல்.
ஆனால்
ஒருநாள் இரவு நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டது. படார் என்ற சத்தம்
கேட்டு ஊர் நாயெல்லாம் வாள் வாளெண்டு குலைக்குது. சனம் அரக்கப் பரக்க
வீதிக்கு வந்துட்டுது. முச்சந்திப் பக்கமிருந்து தான் அந்தச் சத்தம்
வந்தது. காவலுக்கு நின்ற இயக்க அண்ணையின் கிரனேட் க்ளிப் கழண்டு குண்டு
வெடிச்சு ஆள் அந்த இடத்திலேயே பலியாம் ஊர்ச்சனத்துக்கு மெல்லக் கதை பரவி
விட்டது. சுப்பையா அண்ணை முதற் கொண்டு ஊர்ச்சனமெல்லாம் இயக்கத்தைப் பய
பக்தியோட பார்க்கத் தொடங்கி விட்டுது.
“தவாண்ணை உந்த கிரனேட் கிளிப் தவறுதலாக்
கழண்டால் என்ன செய்வியள்?”
“அது
வெடிச்சுச் செத்துப் போவன் ஆனால் சண்டையில சாகேல்லை எண்ட கவலை இருக்கும்”
என்று சொல்லும் போது தவா அண்ணையை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன்.
முற்றிக் கிடந்த பப்பாக் காயைக் கத்தியால் செதுக்கி கிரனைட் மாதிரிச்
செஞ்சு தந்தார். பறித்திருந்த குருமணல் திட்டியில் அதை மாறி மாறி எறிந்து,
தெறித்துப் பாயும் மண்ணைப் பார்த்துக் கை தட்டி ஆமிக் காம்புக்குக் குண்டு
போட்டாச்சு என்று கை தட்டிச் சிரிப்போம்.
தவாண்ணை
இயக்கத்தில் சேர்ந்த கதையைச் சிரித்துச் சிரித்துச் சொல்லிக்
கொண்டிருந்தார் சாந்தன் அண்ணையிடம். நான் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
தன்னுடைய ஊர் கிளிநொச்சியாம். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்
போது இயக்கக்காறரைக் கண்டதும் இவருக்கும் இயக்கத்துக்குச் சேர வேண்டும்,
யூனிஃபோர்ம் போட வேணும், துவக்குத் தூக்க வேண்டும் என்று ஆசை. ஆனால்
சண்டைக்குப் போகப் பயம். ஏன் காயப்பட்டு இறந்தவர்களைக் கண்டால் அதை விடப்
பயப்பிடுவாராம்.
இயக்கக் காம்புக்குப் போய் அங்குள்ள பெரியாளிடம்
“நான்
இயக்கத்தில சேர ஆசை ஆனால் அரசியல் துறையில் சேர ஆசை” என்று
சொல்லியிருக்கிறார். தவாண்ணையின் நினைப்பு அரசியல் துறையில் இருந்தால்
சண்டை பிடிக்கத் தேவையிராது என்று அவராகவே எடுத்த தீர்மானம் அது.
“வாரும் தம்பி தாராளமா அரசியல்துறையில் இறங்கலாம்” என்று கொடுப்புக்குள்ளை சிரித்துக் கொண்டே வரவேற்றாராம் இயக்கத்தின் பெரியாள்.
தவாண்ணைக்குக் கொடுத்த முதல் பொறுப்பு சண்டையில காயப்பட்ட போராளிகளைப் பராமரிப்பது. அதுவரை காணாத காட்சியெல்லாம் கண்டாராம்.
ஒரு
பக்கம் இடுப்புக்குக் கீழை ஒண்டுமே இல்லாமல் போர்வையைப் போர்த்துக் கொண்டு
அனத்திக் கொண்டிருக்கும் போராளி, கண் பக்கம் கட்டுப் போட்டு கொண்டு “ஐயோ
அம்மா வலிக்குது” என்று கத்திக் கொண்டிருக்கும் இன்னொருவர், கையோ, காலோ
இழந்து சுய நினைவின்றிப் படுத்திருக்கும் ஒரு கூட்டம், இவர்களையெல்லாம்
கடந்து போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் பக்கம் வந்தால், கலங்கிய கண்களோடு
அவர்களில் இலையான் மொய்க்காது பனையோலை விசிறியால் வீசிக் கொண்டிருக்கும்
முந்த நாள் போருக்குப் போனவர்கள். இவர்களோடு இருந்து இரவிரவிரவாகப் பணிவிடை
செய்தாராம். விடியக்காத்தால வந்த பொறுப்பாளரரின் போய்த் தவண்ணை கேட்டாராம்
“அண்ணை எப்ப பயிற்சி தொடங்குது?” என்று. முந்திய இரவு தவாண்ணைக்கு மன
ரீதியான பயிற்சியைக் கொடுத்து விட்டது. மணலாறு காணச் சண்டைக்குப் போகும்
அளவுக்குத் தவாண்ணை தேறி விட்டார். அடிக்கடி வெவ்வேறு கள முனைக்குத்
தேவைப்படும்போது கூப்பிடுவார்களாம்.
சாந்தன் அண்ணை ஓ எல் எடுத்த கையோட ஜேர்மனிக்குப் போய் விட்டார். தவாண்ணைக்குப் பேச்சுத் துணை நான் மட்டுமே.
“உங்களுக்கு வெளிநாடு போற ஆசை வரேல்லையோ தவாண்ணை”
“எனக்கிருக்கிற
ஒரே ஆசை நான் சந்திக்கிற கடைசிச் சண்டைக்கு முன்னம் தலைவருக்குப்
பக்கத்தில நிக்கோணும்” தவாண்ணையின் கறுத்த முகத்தில் ரோச் லைற் அடிச்ச
மாதிரி மின்னியது அதைச் சொல்லும் போது.
பிள்ளையாரடி
கொடியேறி விட்டுது. ஒவ்வொரு நாளும் திருவிழா போற சாக்கில கச்சானும்,
தும்பு முட்டாசும் சாப்பிடலாம் என்று நாக்கு சப்புக் கொட்டியது. பாதி
சாப்பிட்டுக் குறைந்த கச்சான் சரையைக் கொண்டு வந்து தவாண்ணையிடம்
கொடுத்தால் ஒன்றை உடைத்துக் கோதை வீசி விட்டு உள் பருப்பை ஆமிக்காறனைப்
பார்ப்பது போலப் பார்த்துட்டு
“என்ன இருந்தாலும் எங்கட வன்னிக் கச்சான் மாதிரி வராது, கொப்பேக்கடுவ மாதிரிக் கொழுத்ததுகள்” என்பார்.
பிள்ளையார்
கோயில் தேருக்குத் தவாண்ணையைக் கொண்டு போய்க் காட்டுவம் என்று எனக்கு
உள்ளூர ஆசை. கடும் கடவுள் பக்தி அவருக்கு. ஆனால் வருவாரோ மாட்டாரோ என்று
சந்தேகம்.
தேர்
அண்டு கேப்பம் என்று காத்திருந்தேன். சப்பறத் திருவிழாவுக்கு
வெளிக்கிட்டுக் கொண்டு தவாண்ணையிடம் போனேன். வேலாயுதம் மாமா வீட்டில் ஒரு
ட்றக் நிற்கிறது. இயக்க ஆட்கள் வந்தால் நான் தவா அண்ணையைத் தொந்தரவு
செய்யாமல் ஒதுங்கி விடுவேன். நான் வந்துட்டுப் போறதைத் தவாண்ணை
கண்டுட்டார்.
“தம்பி
இஞ்ச வாரும்” என்று ஆசையாகக் கூப்பிட்டார். தயங்கித் தயங்கிப் போனேன்.
மற்றைய போராளிகளைப் போலத் தவாண்ணையும் யூனிஃபோர்ம் போட்டிருக்கிறார்.
“நான் அடிபாட்டுக்குப் போறன், வந்தால் சந்திப்பம் என்ன” தவண்ணை.
“அப்ப நாளைக்குத் தேருக்கும் கூட்டிக் கொண்டு பொவம் எண்டு நினைச்சன்....” நான்
பொக்கற்றுக்குள்ள கையை விட்டு இருந்த பத்து ரூபாத் தாளை எடுத்து என் கைக்குள் திணிக்கிறார்.
“தவாண்ணையை நினைச்சு தும்பு முட்டாசும், கச்சானும்
வாங்கிச்
சாப்பிடும், கண்ட கண்ட இனிப்புச் சாப்பிடாதையும் வயித்துக்குள்ள பூச்சி
வரும்” தவாண்ணையின் கதை ஒண்டும் என்ர மூளைக்குள்ள ஏறுதில்லை. அவரைக் கோயில்
திருவிழாவுக்குக் கொண்டு போகேல்லை என்ற ஏமாற்றம் தான் நிக்குது.
வேலாயுதம்
மாமா வீடு பூட்டிக் கிடக்குது. அடுத்த நாள், அடுத்த நாள் என்று
எண்ணிக்கொண்டிருக்கிறேன். பிள்ளையார் கோயில் தேரடிப் பொங்கலும்
வந்துட்டுது.
கோயிலுக்குப்
போய் விட்டு வீடு திரும்பும் போது வேலாயுதம் மாமா வீட்டுச் சுவர் முழுக்க
நோட்டீஸ் ஒட்டியிருக்கு. எட்டிப் போய் அரை இருட்டில் பார்த்தால்
தொப்பியோட தவாண்ணையின் படம்.
மேஜர் செம்பருதி (தவச்செல்வன்) கோட்டை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச் சாவடைந்தார்.
அரசியல்
துறை - யாழ்ப்பாணம் என்று போஸ்டரில் எழுதியிருக்கு. தவாண்ணையும் நானும்
குந்தியிருக்கிற மதில் பக்கம் போய்ப் பார்த்தேன். நோட்டீஸ் எதுவுமில்லாமல்
வெறுமையாகக் கிடக்குது.
🥀 ஈழப் போரில் தம் இன்னுயிர் ஈய்ந்த அனைத்துப் போராளிகளுக்கும் இச் சிறுகதை சமர்ப்பணம்.
என் வாழ்வில் கடந்து போன பாத்திரங்கள், சம்பவங்களை வைத்து எழுதிய சிறுகதை இது
தவாண்ணை மாதிரி ஒருவரை உங்களூரிலும் நீங்கள் சந்தித்திருக்கலாம்
கானா பிரபா
24.11.2017
No comments:
Post a Comment