வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா


     நீரிழிவு எனும்வார்த்தை பாரினையே கலக்கிறது
     யாருக்கு வருமென்று யாருக்கும் தெரியாது
     எல்லோரும் நீரிழிவை எதிரியாய்ப் பார்க்கின்றார்
     வல்லவரும் நல்லவரும் நீரிழிவால் வாடுகிறார் ! 

    நல்லகாலம் இருப்பார்க்கு நீரிழிவு வருவதில்லை
    அல்லல்தரும் நோயெனவே அனைவருமே எண்ணுகிறார்
    அறுசுவையுள் பலவற்றை அணுகிடவே முடியாமல்
    அடக்கிவைக்கும் நோயாக நீரிழிவு வந்திருக்கு ! 

    நீரிழிவு இப்போது யாரையுமே விடுவதில்லை
    ஏழை பணக்காரென்று பாரபட்சம் பார்ப்பதில்லை
    குழந்தைமுதல் கிழவர்வரை கொடுக்கிறது தொல்லியினை
    நலமிழந்து வாடிநிற்க நீரிழிவு செய்கிறது !

   உணவைக் குறையுங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்
   நலன்கெடுக்கும் வகையினிலே நடக்காது இருந்திடுங்கள்
   பசித்தவுடன் உண்ணுங்கள் புசித்தவுடன் உறங்காதீர் 
   எதற்குமே பதட்டமதை இயன்றவரை தடுத்திடுவீர் !


  இனிப்புக் குறைவென்று எழுதிவைத்த உணவுகளை
  இயன்றவரை தவிர்த்துவிடல் எல்லோர்க்கும் உகந்ததுவே 
  காய்கறிகள் உண்டிடுங்கள் கனிகள்தேர்ந் தெடுத்திடுங்கள் 
  வாழ்வினிலே நிறைவாக வாழ்வதற்கு வழிபிறக்கும் ! 

  காசில்லாப் பயிற்சி கனக்கவே இருக்கிறது
  யாருமே அப்பயிற்சி தனைக்கண்டு கொள்வதில்லை
  கிடைக்கின்ற நேரமதில் நடைப்பயிற்சி செய்துவிடின்
  உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகி வருமன்றோ !

  நீரிழிவு வியாதிபற்றி நினையாமல் இருக்கையிலே
  எப்படியோ வந்தெங்கள் இன்பமதைப் போக்கிவிடும்
  விழிப்புணர்வு எனுமுணர்வு எமைவிட்டு அகலுவதும்
  வில்லங்கம் வருவதற்கு காரணமாய் இருக்குதன்றோ ! 

  வெள்ளம் வருமுன்னே அணைகட்டிக் காப்பதுபோல்
  தெள்ளத் தெழிவாக விழிப்புணர்வைப் பெறவேண்டும் 
  வந்தபின்பு எல்லோரும் நொந்துநிற்கும் நிலைமாறி
  வாராமல் காப்பதற்கு வழிவகைகள் தேவையன்றோ !
   


image1.JPG

 எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா

No comments: