ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தினம் - கானா பிரபா



ஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர் பலர் தமது ஊடகப் பயண அனுபபங்களை நூலுருவில் ஆக்கியிருந்தாலும் போரியல் சார்ந்த வரலாற்றுப் பகிர்வுகளைச் சுய தணிக்கை செய்தே எழுத வேண்டிய நிலை இருக்கிறது. ஒரு சில விதிவிலக்குகள் இருப்பினும் இதுவே நடைமுறை யதார்த்தம். 
ஈழத்தின் போர்க்கால வரலாற்றில் கள முனையில் நின்று போரிட்டவர்களுக்குச் சமமாகப் பேனா பிடித்து எழுதியவர்கள் இயங்கியிருக்கிறார்கள். பாலியல் சித்திரவதையிலிருந்து துப்பாக்கி வன்முறை வழியாகக் காவெடுக்கப்பட்ட வகையில் ஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர்களே உலக அரங்கில் போர்க்குற்றங்கள் வழியாக அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு இவர்களில் பலர் இருந்திருந்தால் போர்ப் பயங்கரவாத நடவடிக்கைகள் பலதும் வரலாற்று ஆவணங்களாக மெய்த்தன்மையோடு பகிரப்பட்டிருக்கும். ஆனால் இன்றும் கூட ஒரு வட இந்திய எழுத்தாளரோ அல்லது இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு இயங்க வல்ல தமிழகத்து ஆங்கில ஊடகவியலாளர்களோ அல்லது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளோ எழுதிய நூல்களையே மேற்கோள் காட்ட வேண்டிய நிலையில் ஈழத்துப் போரியல் வாழ்வில் வரலாற்றுப் பக்கங்கள் இருக்கின்றன. 

இந்த நிலையில் “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற நூல் ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த போது நிகழ்த்திய நீண்ட துன்பியல் வன்முறைக் களத்தில் பேசப்படாத பக்கங்களில் ஒரு சில பக்கங்களை நிரப்பும் நூலாக அமையும் வகையில் மிக முக்கியமானதொரு ஆவணமாகத் திகழ்கின்றது. யோசித்துப் பாருங்கள் 1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழப் பகுதியில் தனி நபர் துஷ்பிரயோகம், படுகொலை, சித்திரவதை, பாலியல் வன்முறை என்று எவ்வளவு பல இன்னல்களை அனுபவித்திருக்கிறது அந்த உலகம். ஆனால் அந்தக் கால கட்டத்திலும், அதற்குப் பின்னான காலப்பகுதியிலும் இந்தத் துன்பியல் வரலாறுகள் முறையாகப் பதியப்படவில்லை. இந்த நிலையில் தான் ஏற்கனவே சந்தித்த உயிர் அச்சுறுத்தலையும் எதிர் கொண்டு, 1989 இல் தமிழக ஏடான ஜூனியர் விகடனில் “கோபு” என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம் ஒரு தொடர் எழுதத் தொடங்குகிறார். அதுதான் இந்த “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை”.

ஆறு தசாப்தங்களாகப் பத்திரிகையாளராக வாழ்ந்தவர் எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்கள். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்
“1987 ஒக்ரோபர் முதல் 1990 பெப்ரவரி வரை இலங்கையிலிருந்த அமைதிப்படை பற்றி வாத விவாதங்கள் நிறைய உண்டு. வரலாற்றின் தவிர்க்க முடியாத குருதிக் குலைவுகளில் ஒன்றாக அது அமைந்து விட்டது.
இன்று ஒரு தசாப்தத்தின் பின் மீளத் திரும்பிப் பார்க்கும் பொழுது இந்த நாடகத்தில் (இலங்கையின் இனக் குழும நெருக்கடி) இந்தியாவுக்கு ஒரு முக்கியமான வகிபாகம் உண்டு என்பது புறக்கணிக்கப்படக் கூடாத உண்மை என்பது புலனாக்கப்பட்டுள்ளது. இதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்” (27.07.2000) என்கிறார். 

எம்.எஸ்.ஜி (கோபாலரத்தினம்) வீரகேசரியில் தொடங்கி ஈழ நாடு, ஈழ முரசு, காலைக் கதிரி, செய்திக் கதிர், ஈழ நாதம், தினக் கதிர் (மட்டக்களப்பு), சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர்.
இவரின் அரை நூற்றாண்டுப் பணிக்காக 2004 ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனால் தேசிய சின்னம் பொறித்த தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். ஶ்ரீ ரங்கன் என்ற பெயரில் சிறுகதைகளில் எழுதியதோடு எம்.எம்.ஜி, பாலரத்தினம், ஊர் சுற்றி ஆகிய பெயர்களில் பத்திரிகைப் பணியாற்ரியிருக்கிறார். ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை, அந்த உயிர் தானா உயிர், பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.
மேலும் இவரின் ஊடகப் பணியின் ஆரம்பம் தொட்டு விலாவாரியான தகவல்களை உதயன் நாளேட்டின் உதவி ஆசிரியராக இருந்த சி.பெருமாள் பகிர்ந்திருக்கிறார்.

ஈழ முரசு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை நானும் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு 62 நாட்கள் சிறையில் இருந்த போது யான் பெற்ற அனுபவம், அங்கு கண்டு கேட்டுப் பெற்றவைகளையே எழுதியிருக்கிறேன் என்று நூலாசிரியர் எம்.எஸ்.கோபாலரத்தினம் குறிப்பிடுகிறார்.
1988 இல் ஜூனியர் விகடனில் தொடராக வந்த போதும் பலதும் விடுபட்டதால் விடுபட்டதையும் சேர்த்து நூலுருவாக்க 1990 இல் முயன்று 2007 ஆம் ஆண்டே சாத்தியப்பட்டிருக்கிறது. அந்த இன்னல்களை எல்லாம் தன்னுரையில் பகிர்ந்திருக்கிறார். “எனது முடிவில்லாப் பயணத்தில்” (பாரிஸ் ஈழநாடு குக நாதன் முன்னர் நூலாக்கியது) கட்டுரைத் தொடரையும் மீள் பதிக்க வேண்டும் என்ற அவாவையும் குறிப்பிடுகின்றார்.

1987 ஒக்ரோபர் 10 ஆம் ஆண்டு ஈழ முரசு பத்திரிகை அலுவலகம் இந்தியப் படையால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதிலிருந்து நூலின் பக்கங்கள் விரிகின்றன. தானும், பத்திரிகைக் காரியாலயத்தில் பணி புரிந்தோரும் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு பத்திரிகைக்காரர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று இராணுவ மேலதிகாரிக்கும் சிப்பாய்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைச் சம்பவங்களுனூடு காட்டுகிறார்.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக் கொண்டு வரும் தறுவாயில் இடம் பெயர்ந்தும் ஈழ முரசு பத்திரிகையை வெளிக் கொணர்ந்த அனுபவங்கள், பட்டினிப் போராட்டம் என்பவற்றைத் தன் அனுபவங்களூடாகப் பகிர்கிறார்.

தீபாவளித் தினத்தில் இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில்  எழுபதுக்கு மேற்பட்ட நோயாளிகள், வைத்தியப் பணியாளர்கள், வைத்தியர்கள் உட்படக் கொல்லபட்ட சம்பவங்கள், தாய், தகப்பனைக் கொன்று விட்டு மகளைப் பாலியல் வல்லுறவுக்கு இரையாக்கிக் கிணற்றில் போட்டது, மூதாட்டிகளைக் கூடத் தம் பாலியல் இச்சைகளுக்குத் தப்பாமல் பயன்படுத்தியது எல்லாம் நூலில் பதிவாகியிருக்கிறது.

கோட்டைச் சிறைக்குள் ஊத்தைத் தட்டில் உப்பு, புளி இல்லாத சாப்பாடு, சிப்பாய் மனம் இரங்கினால் மல ஜலம் கழிக்கும் உரிமை இந்த அனுபவங்களோடு தான் இவரின் முதல் நாளில் இருந்து தொடங்குகிறது சிறை வாசம். காலை உணவு பூரியைக் கையால் வாங்கி சாப்பிடும் தட்டில் தேநீரை உறுஞ்ச வேண்டுமாம்.
கடும் குற்றவாளிகள் எனக் கருதப்பட்டோர் மன ஜலம் கழித்த பாத்திரத்தைத் தாமே கழுவிப் பாவிக்க வேண்டும்.
“அடிக்காதேங்கோ ஐயா அடிக்காதேங்கோ ஐயா” என்று அழுதழுது கதறும் இளைஞர்களைப் பற்றிய எழுத்துகள் என் வீட்டில் நான் நேரடியாகக் கேட்டது இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட என் அண்ணன் வழியாக. 

சார்ஜண்ட் ராம்பால் “நீ எல்.ரீ.ரீ.ஈ யா?” என்று கேட்டுக் கேட்டு அப்பாவி இளைஞர்களுக்கு அலுமீனியத் தடியால் கொடுக்கும் அடிகளும், தனக்கு வயிற்றுப் போக்கு வந்த போதும் கருணையின்றிக் கிடைத்த ஸ்பெஷல் மண்டிப் போன தேயிலைச் சாயத்தையும் பற்றியும் சொல்கிறார்.
இதே வேளை கோர்ப்பரல் குப்தா என்ற உயர் அதிகாரி சார்ஜண்ட் தடுத்து வைக்கப்பட்ட அப்பாவிகளுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்திக் கொடுமைப்படுத்திய நடவடிக்கைகளில் விசனம் கொண்டு முரண்பட்ட சம்பவங்களையும் விபரிக்கிறார்.

“மதராசித் தமிழனும் யாழ்ப்பாணத் தமிழனும் சேர்ந்து இந்திய இராணுவத்தைத் தாக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே எல்.ரீ.ரீ.ஈ” என்ற சார்ஜண்ட் ராம்பாலின் போக்கோடு இயங்கிய இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளாலேயே தமிழ் மக்கள் இவர்கள் மீது முற்றாக நம்பிக்கை இழக்க வைத்தது என்ற உண்மையைச் சொல்லி வைக்கிறார்.
இவர்களைக் கைது செய்தால் மட்டும் போதாது கொன்று போட வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனராம் இந்திய இராணுவச் சிறையில் இருந்த இந்த அப்பாவிகளைப் பார்க்க விசேட விருந்தினராக வந்த சிங்கள இராணுவ அதிகாரி.

புலிகளால் செயலிழக்கப்பட்ட இயக்கங்களின் கூட்டு த்றீ ஸ்டார் போன்ற கூட்டு இயக்கங்களாலேயே இந்த அப்பாவி இளைஞர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு புலிகளுக்கு உதவினார்கள் ஆகவே இவர்களும் புலிகள் என்று சித்திரவதைக்கு ஆளானார்கள். ஆணுறுப்பில் கத்தியால் கீறித் துன்புறுத்தும் அளவு எல்லையோடு இந்த வன்முறைகள் நிகழ்ந்ததாகச் சாட்சியம் பகிர்கிறார்.

விசாரணை என்ற பெயரில் கண்கள் கட்டப்பட்டு, எல்லோருடைய கைகளும் பிணைக்கப்பட்டு முள்ளு நிலத்தில் ஓட விட்டு அடி கொடுக்கும் போது சிங்களச் சிப்பாய்களதும், ஹிந்தி வீரர்களதும் சிரிப்பொலிகளும் கலக்குமாம்.

கோட்டையில் இருந்து பலாலித் தளத்துக்கு மாற்றப்பட்ட பின் சந்தித்த மாறுபட்ட அனுபவங்களையும் எழுதிச் செல்கிறார், அங்கேயும் கோட்டையில் சந்தித்த குப்தா போன்ற நல்லவர் மேஜர் நாயரால் சித்திரவதைகளில் இருந்து காப்பாற்றப்பட்டது உட்பட.

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையாகும் போது இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பத்திரிரிகையார்களால் இந்த நிகழ்வுகள் பதிவாக்கப்படும் போது, “இரண்டு பத்திரிகை நிறுவனங்களை எமது மண்ணில் தகர்த்து விட்டு உங்கள் பத்திரிகையாளர்களை அழைத்து வருகிறீர்களே” சக பத்திரிகைக்காரர் சர்வேந்திரா பொருமுவாராம்.

பருத்தித்துறை வைத்தியர் லலித் குமாரின் உண்ணாவிரதப் போராட்டம் வழியாக விடுதலையான நினைவுகளும், மேஜர் ஹரிகிரத் சிங் பத்திரிகையாளர்களான தங்களை மீண்டும் பத்திரிகை நடத்தித் தமக்குச் சார்பான செய்திகளை வெளியிட வைத்த முயற்சிகளும் பகிரப்பட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆர் இறந்த செய்தி கேட்டு நண்பகல் உணவைத் தியாகம் செய்து அஞ்சலி செலுத்தினாராம் நண்பர்களோடு. 
இதைப் பார்த்து விட்டு “அந்தப் .....ஆலே தானே இந்தப் பிரச்சனை” என்று தமிழ்ச் சிப்பாய் சொன்னாராம்.

சந்தேச செய்தி நிறுவனத்தை நடத்தியவரும் Saturday Review பிரதம ஆசிரியருமான காமினி நவரத்தின எடுத்த பகீரதப் பிரயத்தனங்களால் தன் விடுதலை கை கூடியதைக் கடிதத்தோடு பகிர்கிறார்.

தமிழ் தெரியாத இந்தியச் சிப்பாய்கள் முன்பு “ஒன்றே குலமென்று பாடுவோம்” பாடலை “தமிழீழமே தீர்வு என்று சொல்லுவோம்” என்று வல்வெட்டித் துறை இளைஞர் முகாமில் நடந்த தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் பாடியதை அப்படியே வரிகளோடு சொல்கிறார்.

“உங்கள் விடுதலைக்கு ராஜீவ் காந்தி எந்த விதமான தலையீட்டையும் செய்ய முடியாது”

“எல்.ரீ.ரீ.ஐ இல்லாமல் ஒழித்துக் கட்டி விட்டுத் தான் போவோம் ஶ்ரீலங்கா ஆமி எதிர்த்தால் அவர்களோடும் சண்டை போடுவோம்”

“சீக்கிரம் பிரபாகரன் எங்களுடன் வந்து விடுவார்”

30 வருடங்களுக்கு முன் இந்திய இராணுவ அதிகாரிகளால் சொல்லப்பட்ட மேற் சொன்ன கூற்றுகள்  பிற்காலத்தில் நடைமுறையில் சந்தித்த வரலாறுகளோடு உரசுகின்றன.

இந்த நூலில் குறிப்பிட்ட சித்திரவதைக்குப் புகழ் பெற்ற இராணுவ அதிகாரி சர்மாவின் நடவடிக்கைகளை நேரடி அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எங்களூர் மருதனார் மடத்திலேயே அவரின் கட்டுப்பாட்டில் இருந்த சித்திரவதை முகாம் இருந்தது.

தன்னுடன் இருந்த சக அப்பாவிகளின் பின்னணிகளையும் இணைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் எம்.எஸ்.கோபாலரத்தினம்.

இந்திய அமைதிப்படையின் நடவடிக்கையால் பலியானவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஜ்ந்த நூலை ஆசிரியர் சமர்ப்பித்திருக்கிறார்.

நேற்று நம்மை விட்டு மறைந்த எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்களின் நினைவுகளோடு புத்தகத்தைக் கையிலெடுத்தேன். பல நாட்களாகத் தேடிய புத்தகம் சிட்னியின் மளிகைக் கடையொன்றில் சீண்டப்படாதிருந்தது கண்டு அப்போது வாங்கியது.

ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் நிகழ்த்திய கோரத் தாண்டவத்தின் முப்பது ஆண்டுகளை வேதனையோடு நினைவுகூரும் இந்த வேளை இவற்றுக்கெல்லாம் நேரடிச் சாட்சியாக விளங்கிய கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்களின் பிரிவுக்கு நாம் செய்யக் கூடிய கைமாறு இந்த “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற நூலை மீள் பதிப்பித்துப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சென்றடைய வைக்க வேண்டும். அத்தோடு இந்த நூல் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் உட்பட வேண்டிய தேவை இருக்கிறது.

“பேனா ஒரு வலிமை மிக்க ஆயுதம் என்கிறார்கள். உண்மை தான்! அவனிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அது மட்டுமே! அதைப் பறித்து விட்டு அவன் கைகளைப் பிணைத்து விட்டால் அவனை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” - கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம்

ஐயா உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் 🙏

கானா பிரபா
16.11.2017



No comments: