தோல்கொடுத்துப் பால்கொடுத்து தோழ்கொடுக்கும் விலங்குகளை
வாழ்வெல்லாம் மனிதவினம் வசைபாடல் முறையாமோ
விலங்குகளோ தம்பாட்டில் இருக்கின்ற வேளைதனில்
வேணுமென்று மனிதன்சென்று வீண்தொல்லை கொடுப்பதேனோ !
பசுவந்து தன்பாலை கறவென்று சொன்னதில்லை
மான்வந்து தனைக்கொன்று தின்னென்று சொன்னதில்லை
ஆனைவந்து மனிதனிடம் அடிமையாக்கச் சொன்னதுண்டா
ஆனாலும் மனிதன்சென்று அத்தனையும் செய்கின்றான் !
காட்டிலே வாழ்ந்துவிட்டு நாட்டுக்கு வந்தபின்பும்
காட்டையே அழிப்பதற்குக் காரணந்தான் தெரியவில்லை
காட்டிலே இருக்கின்ற விலங்குகளை அழித்தொழிக்க
நாட்டிலே இருப்பார்க்கு யார்கொடுத்தார் அதிகாரம் !
அரசியலும் தெரியாது ஆட்சியிலும் ஆசையில்லை
அலைபாயும் மனங்கூட அவற்றுக்குக் கிடையாது
நிலபுலனும் சேர்க்காது நிம்மதியும் இழக்காது
வனமதிலே தன்பாட்டில் வசிக்கிறது விலங்கினமோ !
சிங்கத்தைப் பிடிக்கின்றான் சிறுத்தையையும் பிடிக்கின்றான்
வெங்கரிகள் தனைநாளும் விரட்டியே பிடிக்கின்றான்
காட்டிலே இருப்பவற்றை நாட்டுக்கே கொண்டுவந்து
காட்சிப் பொருளாக்கிக் காசெடுத்து நிற்கின்றான் !
வேட்டையெனும் பெயராலே காட்டையே கலக்குகிறீர்
விலங்குகளைக் கொன்றுவிட்டு வீறாப்பும் பேசுகிறீர்
காட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களே
நாட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாட யார்வருவார் !
மிருகவதை கூடாது எனச்சொல்லும் சட்டமெலாம்
வேட்டையாடும் வெறியர்களை விட்டுவைத்தல் எப்படியோ
காட்டைவிட்டு வந்தபின்பும் காருண்யம் தொலைத்துவிடின்
நாட்டிலே வாழுவதில் நம்வாழ்வு உயிர்ப்பெறுமா !
குரங்கென்றும் கழுதையென்றும் கரடியென்றும் திட்டுகிறோம்
நாயென்றும் மாடென்றும் நரியென்றும் நகைக்கின்றோம்
மிருகமாய் இருந்தாலும் இவைதிட்டை நினைப்பதுண்டா
மனிதராய் இருக்கும்நாம் திட்டுவது முறையாமோ !
எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா
No comments:
Post a Comment