இலங்கைச் செய்திகள்

மூத்த பத்திரிகையாளர் கோபு காலமானார்

வறட்சி நிவாரணம் கோரி மன்னார் சாந்திபுரத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

காணாமல்போனோரின் உறவுகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

யாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள் ; கட்டுக்குள் கொண்டுவர எஸ்.ரி.எப்.

யாழில் இளைஞர் சுட்டுக்கொலை : பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

இரு தினங்களில் 6 வாள்­வெட்டு சம்­ப­வங்கள் 

காலியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் 

கைது செய்யப்பட்ட 19 பேருக்கும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்




  மூத்த பத்திரிகையாளர் கோபு காலமானார்

15/11/2017 மூத்த தமிழ்ப் பத்திரிகையாளரான கோபு எனப்படும் எஸ்.எம். கோபாலரெத்தினம் இன்று புதன்கிழமை தனது 87 ஆவது வயதில் மட்டக்களப்பில் காலமானார்.


தமிழ் பத்திரிகைத் துறையில் 1953 ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்புநோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார்.
1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'ஈழநாடு' நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்டு, அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அந்நிறுவனத்தில் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான " தினக்கதிர் " நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில வருடங்கள் பணியாற்றினார்.
யாழ்பாணத்தில் வெளிவந்த " ஈழமுரசு "பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய வேளை 1987 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்திய அமைதிப்படையினரால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது அனுபவத்தை " ஈழ மண்ணில் ஓர் இந்திய சிறை " என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதினார்.
இலங்கை தமிழ் பத்திரிகை உலகில் கோபு ,எஸ்.எம்.ஜி என பலராலும் அறியப்பட்ட எஸ்.எம். கோபாலரெத்தினம் ஆணித்தரமான அரசியல் தலையங்கங்கள், கட்டுரைகள் மற்றும் செய்திகள் மூலம் துணிச்சல் மிக்க பத்திரிகையாளராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி












வறட்சி நிவாரணம் கோரி மன்னார் சாந்திபுரத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

15/11/2017 மன்னார், சாந்திபுரம் கிராம மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு வருவதைக் கண்டித்து இன்று (15) காலை மன்னார் பிரதேச செயலகத்துக்கு முன்பாக அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் பல பாகங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றபோதும் இக்கிராமம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதை முன்னிட்டு சாந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன் ஒன்று திரண்டு பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து சாந்திபுரம் கிராம மட்டத் தலைவர்களுக்கும் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பரமதாஸுக்கும் இடையில் பிரதேசச் செயலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மன்னார் பிரதேசச் செயலாளர் வழங்கிய உறுதி மொழியையடுத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.
சாந்திபுரம் கிராமத்தில்  452 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 60 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது எனக் கூறப்படுகிறது.
மேலும், இதுபற்றி சாந்திபுரம் கிராம அலுவலகர் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்றும்  கூறும் மக்கள், தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  நன்றி வீரகேசரி












காணாமல்போனோரின் உறவுகள் ஜனாதிபதியை சந்தித்தனர்
17/11/2017 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை இதன்போது அவர்கள் ஜனாதிபதியிடம் விரிவாக முன்வைத்தனர்.
நாட்டின் அனைத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் போதிய புரிந்துணர்வினைத் தான் கொண்டிருப்பதாக இதன்போது குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் சிறைக்கூடங்களில் சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
அத்தகைய இரகசிய தடுப்புமுகாம்கள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் செயற்படவில்லை என்றும் அவ்வாறு எவரும் இரகசியமாகத் தடுத்து வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
காணாமல் போனோரின் உறவினர்களின் முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கான புதிய விண்ணப்பப்படிவம் ஒன்றினை மாவட்ட செயலாளரின் ஊடாக வழங்குவதற்கும் இதன் போது ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தகவல்களை சேகரிக்குமாறு சகல மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றுநிருபம் ஒன்றினை அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.
சேகரிக்கப்படும் தகவல்களை காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் காணாமல் போனோர் பற்றிய ஆணைக்குழுவின் ஊடாக மீண்டும் விசாரணை செய்யவும் அறிவுறுத்தல் வழங்கினார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  நன்றி வீரகேசரி











யாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள் ; கட்டுக்குள் கொண்டுவர எஸ்.ரி.எப்.

16/11/2017 யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். 
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்த விஷேட கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 கடந்த காலப்பகுதியில் யாழ் குடாவில் ஆவா குழுவின் அட்டகாசம் தலைவிரித்தடிய போது,  விஷேட நடவடிக்கைகள் ஊடாக சுமார் 25 பேர் வரையில் வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து வாள் வெட்டுக்கள் சற்று ஓய்ந்த போதும் மீள வாள் வெட்டுக்கள் யாழ். குடாவில் பதிவாகி வருகின்றன.
குறிப்பாக கடந்த 13 ஆம் 14 ஆம் திகதிகளில் மட்டும் யாழில் இடம்பெற்ற 6 வாள் வெட்டுச் சம்பவங்கள் காரணமாக 12 பேர் காயமடைந்தமை  குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி










யாழில் இளைஞர் சுட்டுக்கொலை : பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

16/11/2017 யாழ். மணியம் தோட்டப் பகுதியில் இளைஞன் ஒருவனை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது அடையாள அணிவகுப்பு இடம்பெற்றிருந்தது. 
மேலும் சந்தேகநபர்கள் சார்பான முன்னிலையான சட்டத்தரணி இருவருக்கும் பிணை கோரி விண்ணப்பம் செய்திருந்தார்.
எனினும் இவ் வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும், சந்தேகநபர்களிடம் கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.  நன்றி வீரகேசரி











இரு தினங்களில் 6 வாள்­வெட்டு சம்­ப­வங்கள்

16/11/2017 யாழ் - கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் கடந்த இரு நாட்­க­ளுக்குள் 6 வாள் வெட்டு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் அவை கார­ண­மாக 12 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

இதனால் மீளவும் யாழ்.மாவட்­டத்தில் வாள் வெட்டுக்கும்­பல்­களின் அட்­டகாசம் தலை தூக்­கு­கி­றதா என்ற கேள்வி எழுந்­துள்­ள­துடன் பொது மக்கள் பெரும் அச்­சத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.
இந் நிலை­மையை உட­ன­டி­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு நேற்று உத்­த­ர­விட்­டுள்ளார். அவ­சி­ய­மான அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்து  சந்­தேக நபர்­களைக் கைது செய்­யு­மாறு பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்­டோ­வுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.
நேற்று முன் தினம் 14 ஆம் திகதி இரவு வேளையில் இடம்­பெற்ற வாள் வெட்டு சம்­ப­வங்­களில் 8 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.  மானிப்பாய் - சங்­கு­வேலி வடக்கு பகு­தியில் முச்­சக்­கர வண்டி சாரதி ஒரு­வரை வெட்­டு­வ­தற்­காக வாள் வெட்டுக் குழு­வினர் துரத்­தி­யுள்­ளனர். இதன்­போது அவர்­க­ளிடம் இருந்து தப்­பிக்க வீடொன்­றுக்குள் அந்த முச்­சக்­கர வண்டி சாரதி நுழைந்­துள்ள நிலையில், அவ்­வீட்டில் இருந்த, நேற்று வெளி நாடு செல்ல தயா­ராக இருந்த நபர்கள் மூவரை வாள் வெட்டுக் குழு­வினர் வெட்­டி­யுள்­ளனர்.
அதன் பின்னர் யாழ் செல்லும் வீதியில் நின்­றி­ருந்த நபர் ஒரு­வ­ரையும்,  கோப்பாய் முக­மடம் பகு­தியில் வைத்து இரு­வ­ரையும் கோண்­டாவில் பஸ் நிலையம் அருகில் வைத்து மற்­றொ­ரு­வ­ரையும்  வாள் வெட்­டுக்கு   உள்­ளா­கி­யுள்­ளனர். அதற்கு முன்னர் 13 ஆம் திகதி  இரு சம்­ப­வங்­களில் நால்வர் வெட்­டுக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.
இவர்கள் அனை­வரும் யாழ். போதனா  வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெறும் நிலையில் விஷேட பொலிஸ் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்டோ, யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்­ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் விஜித்த குண­ரத்ன ஆகி­யோரின் மேற்­பார்­வையில் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில், இந்த வாள் வெட்­டுக்­க­ளுடன் 10 பேர் கொன்ட குழு­வொன்று தொடர்­பு­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்ள நிலையில், அவர்கள் 5 மோட்டார் சைக்­கிள்­களைப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாள் வெட்டு சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதா என ஆராயும் பொலிஸார் சந்தேக நபர்களை தேடி பல் முணை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி












காலியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்

18/11/2017 காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதியின் சில பிரதேசங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை  மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களிலேயே இன்று மாலை 6 மணி முதல்  அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி










கைது செய்யப்பட்ட 19 பேருக்கும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்

18/11/2017 காலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே  ஏற்பட்ட  முறுகல்நிலையை அடுத்து  முஸ்லிம்களுக்கு  சொந்தமான 50க்கும் மேற்பட்ட வீடுகளும், வியாபார நிலையங்களும் அடித்துடைக்கப்பட்டுள்ளன.
குறித்த இச் சம்பவத்தோடு தொடர்பட்டுள்ளனர் என சந்தேகத்தின் பேரில் 19 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்ய்ப்பட்ட குறித்த 19 சந்தேக நபர்களும் எதிர் வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவத்தார். 



நன்றி வீரகேசரி





No comments: