புத்தகக்கடை பூபாலசிங்கம் நினைவலைகள்: எழுத்தாளர்களின் தேவைகளை உணர்ந்து அறிவொளி வழங்கிய படிக்காத மேதை தடைசெய்யப்பட்ட சமதர்மம் பத்திரிகை விற்றதற்காக சவுக்கடியும் வாங்கினார் முருகபூபதி" கவியரசு கண்ணதாசன் மறைந்துவிட்டார்" என்ற ஒரு தொலைபேசித்  தகவல் சென்னையில் பலரையும் பரபரப்புக்குள்ளாக்கிவிட்டது. அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலர் கவிஞரின் வீட்டுக்கு படையெடுத்துவிட்டனர்.
அதில் ஒருவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். அவர் நெஞ்சிலே அடித்து புலம்பிக்கொண்டு ஓடிவந்துள்ளார்.
ஆனால், இவர்களெல்லாம் அதிசயிக்கும்வகையில் ஆசனத்தில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார் கவிஞர். அந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை பலருக்கும் அனுப்பியவரே அவர்தான் என்பது தெரிந்தது. குரலை மாற்றி அவ்வாறு சொல்லி பலரையும் தான் பதட்டப்படவைத்தமைக்கு காரணமும் சொன்னாராம்.
தான் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை தான் உயிரோடு இருக்கும்போதே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விபரீத ஆசை நெடுநாளாக இருந்ததாம். அன்று அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டதுடன், அவ்வாறு உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக செய்தி வெளியானால் இன்னும் அதிக காலம் வாழமுடியும் என்று ஒரு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் அன்று துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் சொல்லிச்சிரித்தாராம். அவர் சொன்னவாறே அதன் பிறகு பல வருடங்கள் வாழ்ந்து விட்டுத்தான் இயற்கை எய்தினார்.
இலங்கையில் தமிழ் புத்தக இறக்குமதி விற்பனை விநியோகத்தில் பெரும் புகழ்பெற்றிருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் ஸ்தாபகர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களைப்பற்றி நினைக்கும்போது கண்ணதாசனும் நினைவுக்கு வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
கொழும்பு பொரளையில் கொட்டாவீதியில் அமைந்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ சார்பு) தலைமை அலுவலகத்திற்கு 1972  - 1977   காலப்பகுதியில்  அடிக்கடி சென்றுவருவேன்.  அங்கிருந்துதான் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி, புதுயுகம் முதலான பத்திரிகைகளும் அத்த என்ற சிங்கள நாளேடும் வெளியாகின. தமிழ் பத்திரிகைகள்,  வாரவெளியீடுகள்தான்.
 அத்த பத்திரிகையில் ஒரு நாள்,  யாழ்ப்பாணத்தில் பூபாலசிங்கம் மறைந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்தது.
கொழும்பில் வசித்த கட்சியைச்சார்ந்த தமிழ்த்தோழர்கள் உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு தொடர்புகொண்டபோது அந்தச்செய்தி தவறானது என்பது ஊர்ஜிதமானது.
இது நிகழ்ந்து பலவருடங்களின் பின்னர்தான் 1982 இல் புத்தகக்கடை பூபாலசிங்கம் மறைந்தார். அவரது பெயரில் வாழ்ந்த மற்றும் ஒருவர் இறந்த செய்தியை அன்றைய அத்த பத்திரிகை வெளியிட்டு,  பின்னர் மன்னிப்பும் கேட்டது. அத்த என்றால் தமிழ் அர்த்தம் உண்மை.
உண்மைக்குப்புறம்பான செய்தியை வெளியிட்டு கட்சித்தோழர்களிடம் திட்டும் வாங்கியது அந்தப்பத்திரிகை.
இதுபோன்று அ.செ. முருகானந்தனுக்கும் நடந்திருக்கிறது.
பீனிக்ஸ் பறவையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. ஆனால், அது எரிக்கப்பட்டாலும் மீண்டும் புத்துயிர்கொள்ளும் என்று பலரும் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக கவிஞர்கள் பீனிக்ஸ் பறவையை  உவமித்து கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.
பூபாலசிங்கம் புத்தகசாலையையும் பீனிக்ஸ் பறவைக்கே உவமிப்பார்கள்.  சீதையைப்போன்று தீக்குளித்து எழுந்ததுதான் இந்த  புத்தக களஞ்சியம். ஒரு தடவையல்ல மூன்று தடவைகள்.
யாழ்ப்பாணத்தில் நான்  படித்துக்கொண்டிருந்த 1963 - 1965 காலப்பகுதியில் சனிக்கிழமைகளில் வெளியே சென்றுவருவதற்கு எங்கள் கல்லூரி ஆண்கள் விடுதியில் அனுமதி தருவார்கள்.  அரியாலையிலிருந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையம் சென்று பூபாலசிங்கம் புத்தகசாலையில் அம்புலி மாமா சஞ்சிகை வாங்கிவருவேன். நண்பர்களுடன் வெலிங்டன், ராஜா தியேட்டர்களுக்குச்சென்று முற்பகல், பிற்பகல்- படங்களும் பார்த்துவிடுவேன். எனினும் படம் பார்ப்பதைவிட  அம்புலிமாமா வாங்குவதுதான்   எனக்கு முக்கியமானது.
பின்னாளில் இந்த புத்தகசாலையின் ஸ்தாபகர், இன்றைய அதன் அதிபர் அவரது மகன் ஶ்ரீதரசிங் ஆகியோருடனும் அவர்களின் குடும்பத்தவர்களுடனும் எனக்கு நட்புறவு தோன்றும் என்று அக்காலத்தில் கனவிலும் நினைத்திருக்க மாட்டேன்.
தங்களையெல்லாம் வளர்த்துவிட்ட பெருமை பூபாலசிங்கம் அவர்களுக்குண்டு என்று மல்லிகை ஜீவா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
1966 ஆம் ஆண்டில்,  தான் மல்லிகையை தொடங்கியபோது தனக்கு மூலதனமாக 25 ரூபா தந்து ஊக்குவித்தவர் பூபாலசிங்கம்தான் என்றும் பதிவுசெய்துள்ளார் ஜீவா. அப்படிப்பட்ட பூபாலசிங்கம் 1931 ஆம் ஆண்டளவில் தமது ஒன்பது வயதில் நாளொன்றுக்கு 21 சதம் சம்பளம் பெற்று தம்பித்துரை புத்தகசாலையில் வேலைசெய்திருக்கிறார் என்னும் தகவலை தோழர் சிவா சுப்பிரமணியம் பதிவுசெய்துள்ளார்.
நயினாதீவில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1922 ஆம் ஆண்டில் பிறந்திருக்கும் இவர்,  ஆரம்ப பாடசாலைப்படிப்பை தனது ஒன்பது வயதிலேயே நிறைவுசெய்துகொண்டு பின்னாளில்,  மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்விமான்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் உட்பட கலை, இலக்கியவாதிகளுக்கும் இடதுசாரித்தலைவர்களுக்கும்  அறிவொளி தந்திருக்கிறார் என்பது ஆச்சரியமானது.
இவர்கள் அனைவரும் பல வழிகளில் அவரது புத்தகசாலையினால் பயன்பெற்றவர்களே. சிறியோர் முதல் பெரியோர் வரையில் நன்கு அறிந்த புத்தக விற்பனை நிலையமாக  அதனை வளர்த்தெடுக்க அவர் கொடுத்த விலை அதிகம்.
1975 இல்  என்னை முதல் முதலில் அவருக்கு அறிமுகப்படுத்திய  மல்லிகைஜீவா, " இவர்தான் நீர்கொழும்பிலிருந்து எழுதும் முருகபூபதி" என்றார். என்னை ஏற இறங்கப்பார்த்துவிட்டு, வழக்கமாக எவரும் என்னிடம்  கேட்கும், " யாழ்ப்பாணத்தில் எவ்விடம்...?" என்ற கேள்வியைத்தான் கேட்டார்.
நான் சிரித்தேன். ஜீவா எனது பூர்வீகம் சொன்னார்.                            " மல்லிகை என்னைப்போன்று பல பிரதேசங்களையும் சேர்ந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி ஊக்குவிக்கிறது" எனச்சொல்லி ஜீவாவை தோளில் தட்டி பாராட்டினார்.
எனது வாழ்நாளில் அவரை சில தடவைகள்தான் சந்தித்திருக்கின்றேன். எனினும் அந்தக்கணங்கள் நினைவில் நிற்கின்றன. 1981 ஜூன் மாதம் 1 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு   கயவர்கள் தீ மூட்டியபொழுது யாழ். பொதுநூலகம், உட்பட பூபாலசிங்கம் புத்தகசாலையும்  அவ்விடத்திலிருந்த கடைத்தொகுதிகளும்      யாழ். எம்.பி. வெ. யோகேஸ்வரனின் வீடும் இரையானது.
செய்தி அறிந்து மறுநாள் நான் யாழ்ப்பாணம் சென்று ஜீவாவுடன் பஸ்நிலையம் வந்தேன். பூபாலசிங்கம் அவர்கள் எரியூட்டப்பட்ட கடை வாசலில் ஒரு மேசையில் அன்றைய பத்திரிகைகளை பரப்பிவைத்து விற்பனையை கவனித்துக்கொண்டிருந்தார்.
அவருடை  ஓர்மம்  எனக்கு திகைப்பூட்டியது. மரணத்துள் வாழ்ந்த மக்கள் மத்தியில் மரணத்தை கடந்து வந்தவராக அவர் உறுதியோடு  இயங்கினார்.
கயவர்களுக்கு எரிப்பதற்கு தோதான பொருள் காகிதம்தான். அது வெற்றுத்தாளாக இருந்தாலென்ன அறிவுக்களஞ்சியத்தை உள்ளடக்கிய நூல்களாக இருந்தாலென்ன இரண்டும் ஒன்றுதான். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை மூன்று தடவைகள்  தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அவர் அதனால் துவண்டுவிடவில்லை. அவருக்குத்தெரிந்தது புத்தகம் - பத்திரிகை விற்பனைதான். அந்தத்தொழில்தான் அவருக்கு எல்லாம். அவரது கனவு உழைப்பு அனைத்தும் அதில்தான்  தங்கியிருந்தது. அதனால் இவ்வுலகை விட்டு நீங்கும் வரையில் அதனைவிட்டு அவர் அகலவில்லை. தனக்குப்பிறகும் தனது சந்ததியிடம் அதனை ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
தொழிலில்  தொடர்ச்சியான இழப்புகள் நேர்ந்தால் அதனை விட்டுவிட்டு வேறு தொழில் துறையை நாடுபவர்களைத்தான் காண்போம். ஆனால், வைராக்கியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தான்  ஆழ்ந்து நேசித்த தொழிலையே  தொடர்ந்து மேற்கொண்டு  எமக்கு முன்மாதிரியாகத்திகழ்ந்தவர் பூபாலசிங்கம்.
போருக்குமுந்தியகாலத்திலும்(1975-1982) போர்க்காலத்திலும் (1983 - 1986) யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் செல்லத்தவறாத ஒரு இடம் இருக்கிறது என்றால் அது யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலைதான். 2010 இற்குப்பின்னரும் அங்கு சென்றுவருகின்றேன்.  இறுதியாக கடந்த மே மாதமும் அங்கு சென்று பத்திரிகைகளை வாங்கினேன்.
கொழும்பு புத்தகசாலைக்கும் சென்று அதன் அதிபர் நண்பர் ஶ்ரீதரசிங் அவர்களை சந்திப்பது வழக்கம். அவர்களின் வெள்ளவத்தை இல்லத்தில் நடந்த பல இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துகொண்டிருக்கின்றேன். அதனால் 1975 இல் தொடங்கிய இந்த உறவு இற்றைவரையில் நான் புலம்பெயர்ந்த பின்னரும்  நீடிக்கிறது.
என்னைப்போன்ற பல இலக்கியவாதிகளுக்கு பூபாலசிங்கம் அவர்கள்  நெஞ்சத்துக்கு நெருக்கமானவர். அந்த உறவு காலம் காலமாக நீடிக்கும் சாசுவதமான பண்பைக்கொண்டது. அந்த உறவு அவரது மறைவுக்குப்பின்னரும் தொடருவதிலிருந்து அதன் ஆழம் புரிந்துகொள்ளத்தக்கது.
ஏழ்மையினால் கல்வியை தொடரமுடியாமல், சிறிய வயதிலே பத்திரிகைகளை தோளில் சுமந்து சென்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் விற்று குடும்பச்சுமை தாங்கி வாழ்ந்த அவர், லங்கா சமசமாஜக்கட்சியின் சமதர்மம் பத்திரிகையை யாழ். ரயில் நிலையத்தில் விற்றுக்கொண்டிருக்கும்போது ( அன்றைய அரசினால் அது தடைசெய்யப்பட்டிருந்தது) அதனைக்கண்ட பொலிஸ் உயர் அதிகாரி சிட்னி டீ சொய்சா, பத்திரிகைகளை பறிமுதல் செய்ததோடு சவுக்கினால் அடித்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவலை சிவா சுப்பிரமணியம் எழுதியிருக்கிறார். அந்த சவுக்கடி தழும்பு அவருடனேயே அடையாளமாக இறுதிவரையில் வாழ்ந்திருக்கிறது.
1983 இல் பாரதி நூற்றாண்டு விழாக்களுக்காக தமிழகத்திலிருந்து ராஜம் கிருஷ்ணன், ரகுநாதன், பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தபோது யாழ்ப்பாண நிகழ்ச்சிகளுக்கு இவர்களை அழைத்துச்சென்றிருந்தோம். அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர், கொட்டடியில் அமைந்திருந்த பூபாலசிங்கம் அவர்களின் இல்லத்தில்தான் மூத்த எழுத்தாளர் அகஸ்தியர் தலைமையில் இலக்கிய சந்திப்பு நடந்தது.
1985 இல் நான் மாஸ்கோவுக்கு சென்று திரும்பியிருந்த வேளையில் யாழ்நகரில்  பூபாலசிங்கம் அவர்களின் ஒரு கிளை அலுவலகத்தில்தான் மல்லிகை ஜீவா எனக்கு தேநீர் விருந்துபசார நிகழ்ச்சியை மூத்த எழுத்தாளர் வரதர் தலைமையில் நடத்தினார்.
இந்த சம்பவங்கள் நடக்கும் காலங்களில் பூபாலசிங்கம் இல்லை. ஆனால், அவரில்லாமலேயே  இவைபோன்ற நிகழ்ச்சிகள் அவரது இடத்தில் நடந்திருப்பதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்ன...?
அவர் தமது பெயரில் வளர்த்த நிறுவனம் அவருக்காகவும் அவரது குடும்ப வாரிசுகளுக்காகவும் அல்ல, அது அவர் நேசித்த ஈழத்து இலக்கியத்திற்கும்  அவற்றைப்படைத்த   தமிழ் இலக்கியவாதிகளுக்காகவும்  வளர்த்த அறிவார்ந்த நிழல்பரப்பும் ஆலமரம்தான்.
யாழ்ப்பாணத்தில்  பூபாலசிங்கம் புத்தகசாலை எழுத்தாளர்களும் ஆசிரியர்கள் மாணவர்களும் சங்கமிக்கும் இடமாகத்திகழ்வதற்கு அங்கு அவர்களுக்குத்  தேவையானது கிடைப்பதுதான் காரணம்.
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே வடபிரதேசத்தில் இடதுசாரி இயக்கம் வேரூன்றுவதற்கு உழைத்த முன்னோடிதான் பூபாலசிங்கம்.  மூத்த  இடதுசாரித்தோழர்கள் கார்த்திகேசன் மாஸ்டர், ஐ.ஆர் அரியரத்தினம்,  எம்.சி. சுப்பிரமணியம், இராமசாமி அய்யர், அ. வைத்திலிங்கம், பி. குமாரசாமி, சி. குமாரசாமி, வி.பொன்னம்பலம், விஜயானந்தன் உட்பட பல முற்போக்காளர்களுடனும் சிவத்தம்பி, கைலாசபதி மற்றும் மல்லிகை ஜீவா, டானியல், ரகுநாதன், நாவேந்தன், செங்கைஆழியான், செம்பியன் செல்வன், சிவாசுப்பிரமணியம்  உட்பட பல இலக்கியவாதிகளுடனும் நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தவர்தான் இந்த படிக்காத மேதை.
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு அருகில் வசித்த மல்லிகை ஜீவா, காலையில் எழுந்ததும் தனது சைக்கிளில் வந்து தரிசனம் செய்யும்   முதலாவது இடம் யாழ். பஸ் நிலைய புத்தகசாலைதான்.
அவருடைய காலைத்தரிசனமே இந்த அறிவுக்களஞ்சிய கோயில்தான். தெய்வங்கள் இருப்பதாக நம்பப்படும் கோயில்களில் அர்ச்சனைக்கு பணம் கொடுக்கவேண்டும். ஆனால், இந்தக்கோயிலுக்கு தரிசனத்திற்கு செல்லும் ஜீவா போன்ற இலக்கியவாதிகள் பணம் கொடுக்காமலேயே தினசரி பத்திரிகைளை படித்துவிட்டு அகன்றுவிடுவார்கள்.
அந்த உரிமையை எழுதாத சட்டமாக வைத்திருந்தவர்தான் பெருமகனார் பூபாலசிங்கம். எழுத்தாளர்களின் பொருளாதாரம் எத்தகையது என்பது தெரிந்தவர், அதனால் பெருந்தகையானார்.
அவர் விட்டுச்சென்ற பாதையில் செல்லும் அவரது புதல்வர் ஶ்ரீதரசிங் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இனியவர். மூவினங்களையும் சேர்ந்த படைப்பாளிகளின் நண்பர். பலரது நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். தந்தையைப்போன்று இலக்கிய அமைப்புகளின் பணிகளுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கிவருபவர்.
பூபாலசிங்கம் அவர்கள் தாம் பிறந்த ஊருக்கும்பெருமை சேர்த்தவர். ஏழ்மையிலிருந்து முன்னேறி  இடதுசாரியாக இயங்கியிருந்தபோதிலும் நயினாதீவில் ஆலயத்திருப்பணிகள்,  அன்னதானம் உட்பட  பல பொதுப்பணிகளிலும் ஈடுபட்டவர். அங்கும் முற்போக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்.
ஒருசமயம், தீவுப்பகுதியில் தமிழரசுக்கட்சியினர் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது நயினாதீவிலும் ஒரு கூட்டத்திற்கு ஒழுங்குசெய்திருந்தனராம். படகில் வந்து கரையேறி ஆலயதரிசனம் செய்யச்சென்றபோது, ஆலயத்தின் வாசலில் பூபாலசிங்கம் அவர்களைக்கண்டதும், அவர் எதிரணியைச் (கம்யூனிஸ்ட்) சேர்ந்தவர் என்பதனால், ஏதும் வில்லங்கம் நேரலாம் எனத்தங்களுக்குள்ளே  தயங்கித் தயங்கி பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களைக்கண்டுவிட்ட அவரோ, அருகே ஓடிவந்து தமது இல்லத்திற்கு அழைத்துச்சென்று தேநீர் விருந்து வழங்கி உபசரித்துவிட்டு அவர்களின் பிரசாரக்கூட்டத்திற்கு வழியனுப்பிவைத்தாராம்.
இந்தத்தகவலை, அக்காட்சியை உடனிருந்து பார்த்திருக்கும் மெல்பனில் வதியும் ஜெயராம சர்மா என்னிடம் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், தமிழர் விடுதலைக்கூட்டணியும், தமிழ்க்காங்கிரஸ் கட்சி உட்பட இதர தமிழ் அரசியல் கட்சிகளும் அமரர் பூபாலசிங்கம் அவர்களிடமிருந்த  பண்புகளை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்தத்தகவலையும் இங்கு பதிவுசெய்கின்றேன்.
சமகாலத்தில் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் "திருக்கூத்து" க்களை பார்க்காமலேயே பூபாலசிங்கம் போய்விட்டார்.
லண்டனில் வதியும் நூலகர் என். செல்வராஜா, இந்தப்பெரியார் பற்றிய  நெருநல் உளனொருவன்  என்னும் நூலை பதிப்பித்திருக்கிறார். மல்லிகை, ஞானம் ஆகிய இதழ்கள் பூபாலசிங்கம் அவர்களை அட்டைப்பட அதிதியாக பாராட்டியிருக்கின்றன.
---0---No comments: