ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளின் ஆசிரியர் பாபி கோஷ், கடந்த செப்.11, 2017 அன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். அவர் தனது சொந்தக் காரணங்களுக்காக அமெரிக்கா திரும்பவிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.
மோடியுடன் ஷோபனா பார்த்தியா
ஆனால் பாஜக தரப்பிலிருந்தும், அரசு அதிகாரிகள் மட்டத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நிர்பந்தங்களின் காரணமாகத்தான், பத்திரிக்கை நிர்வாகத்தால், அவர் இராஜினாமா செய்ய வைக்கப்பட்டார் என ’தி வயர்’ இணையதளம் தெரிவிக்கிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் கோஷுடன் பணிபுரிபவர்களும் அவ்வாறே கருதுவதாகக் கூறுகிறது.
பாபி கோஷ் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். இதற்கு முன் ‘குவார்ட்ஸ்’ என்ற பத்திரிக்கையின் நிர்வாக இயக்குனராகவும், ’டைம்’ பத்திரிக்கையின் சர்வதேச பதிப்புக்கு ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஆசிரியராக பதவியேற்ற பின்னர், பல புதிய புதிய விசயங்களைச் செயல்படுத்தினார்.

கடந்த ஜூன் மாதம் ‘ஹேட் ட்ராக்கர்’ என்ற ஒரு இணையதளத்தை ஏற்படுத்தி அதில், வெறுப்பரசியல் காரணமாக நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்துப் பதிவு செய்து வந்துள்ளார். பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசைக் கண்டித்து தலையங்கமும், கட்டுரைகளும் எழுதிவந்தார். அவர் பதவியேற்ற பின்னர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் அரசியல் பார்வை, மத்திய அரசு மற்றும் சங்க பரிவாரக் கும்பலுக்கு குடைச்சலாக இருந்துள்ளது.
பாபி கோஷ்
இந்நிலையில் தான் இந்தப் பத்திரிக்கையின் உரிமையாளர் ஷோபனா பார்த்தியா தனது பத்திரிக்கையின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக மோடியை அழைப்பதற்காக அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களிலேயே பாபி கோஷ் வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மோடியுடனான சந்திப்பில், பாபி கோஷின் அமெரிக்கக் குடியுரிமை குறித்து சோபனா பார்த்தியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், பாபியை ஏன் ஆசிரியராக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாகம் வைத்திருக்கிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழைச் சேர்ந்த சிலர் கூறியதாக, ’தி வயர்’ இணையதளம் தெரிவிக்கிறது.
’தி ஹிந்து’ நளேட்டில் ஆசிரியராக இருந்த சித்தார்த் வரதராஜனை (தற்போது ’தி வயர்’ இணையதள நிறுவனர்), அமெரிக்கப் பாஸ்போர்ட் வைத்திருந்த காரணத்தால் அவர் அந்நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றத் தகுதியற்றவர் என்று சுப்பிரமணியசாமியால் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்திய சட்டங்களின் படி அவரது நியமனம் செல்லத்தக்கதாகும் எனக் கூறி இந்த வழக்கில் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
இந்த வழக்கை சோபனா பார்த்தியாவிடம் எடுத்துக் கூறி மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலர், மத்திய அரசின் மிரட்டல் குறித்து கவலைப்படத் தேவையில்லை எனக் கூறியதாகவும், அதற்கு சோபனா பார்த்தியா, ’சுப்பிரமணியசாமி என்னும் தனிநபர் வேறு, அரசாங்கம் வேறு, இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று கூறியதாகவும், இதன் தொடர்ச்சியாக பாபி கோஷ் வெளியேற்றப்பட்டதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழைச் சேர்ந்தவர்கள் கூறியதாக ‘தி வயர்’ இணையதளம் தெரிவித்திருக்கிறது.

மேலும் சோபனா பார்த்தியா, பாபி கோஷ் வெளியேறுவது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், அவர் இராஜினாமா செய்ததாகக் குறிப்பிடப்படவில்லை. பாபி கோஷ் அவரது சொந்தக் காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு திரும்ப விருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். கோஷும் தான் அமெரிக்கா திரும்பப் போவது பற்றி தனிப்பட்டரீதியில் எந்தத் தகவலும் அளிக்கவில்லை. வழக்கத்திற்கு மாறான இந்த நிலைமைகள் பாபி கோஷ் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறது ’தி வயர்’ இணையதளம்.
இதை உறுதி செய்யும் வண்ணம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. பாபி கோஷின் இராஜினாமா செய்தி வெளியிடப்பட்ட பிறகு இரண்டு நாள் கழித்து செப். 13 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ன் ட்விட்டர் பக்கத்தில், ’ஹேட் ட்ராக்கர்’-ன் தகவல்கள் ஒரு ட்விட்டில் வெளியிடப்பட்டது. அடுத்த 20 நிமிடங்களில் கீட்டிகா ருஸ்டகி என்ற ஹிந்துஷ்தான் டைம்ஸ் நிர்வாகி ஒருவரிடமிருந்து அதன் ஆசிரியர் குழுவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.
அதில், ”ராஜேஷின் வழிகாட்டுதலின் படி, ‘ஹேட் டிராக்கர்’ குறித்த செய்திகளை மறு அறிவிப்பு வரும் வரையில் யாரும் மீண்டும் ட்வீட் செய்யக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தது. ராஜேஷ் மஹாபத்ரா என்பவர், ஷோபனா பார்த்தியாவிற்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்டவர். ஹேட் டிராக்கர் இணையதளம் அலுவலகரீதியாக முடக்கப்படவில்லை எனினும், சமூக வலைத்தளங்களில் ஹேட் டிராக்கரின் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அங்கு பணிபுரிபவர்கள் தெரிவித்ததாக ‘தி வயர்’ இணையதளம் கூறுகிறது.
மற்ற ஊடகங்களில் பணி புரியும் மூத்த பத்திரிக்கையாளர்கள் பலரும் அவரது பணி விலகல் செய்தி வெளியானதும், அவர் முயற்சித்து உருவாக்கிய ’ஹேட் ட்ராக்கர்’ இணையதளம் தான் அவருக்கு பிரச்சினை ஏற்படுத்தியவற்றில் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ’தி வயர்’ இணையதளம் முன் வைத்த கேள்விகளுக்கு, சோபனா பார்த்தியாவின் கடிதத்தையே பதிலாகக் கூறி, மற்ற கேள்விகள் அனைத்தும் வெறும் அனுமானங்கள் என்றும், அனுமானங்களுக்குப் பதில் சொல்ல முடியாது என்று தவிர்த்திருக்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாகம்.
கடந்த ஆண்டில், இது போன்று பல்வேறு சமயங்களில் பிரபல பத்திரிக்கைகளின் ஆசிரியர்களுக்கும் ஆளும் கட்சிக்கும் மற்றும் அரசிற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இப்பத்திரிகை இணையதளங்களில் வெளியிடப்பட்ட பாஜகவினரின் மீதான விமர்சனக் கட்டுரைகள், அழுத்தம் காரணமாக சத்தமின்றி நீக்கப்பட்டுள்ளன.
ஒருபுறம் தம்மை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்களையும், பத்திரிக்கை நிறுவனங்களையும் மிரட்டிக் கொண்டே மறுபுறத்தில் தமக்கு ஆதரவான பத்திரிக்கையாளர்களையும், தமது ஹிந்துத்துவ செயல்திட்டத்திற்கு ஆதரவாகவும் உள்ள பத்திரிக்கையாளர்களையும் ஊடகங்களையும் வைத்துக் கொண்டு மக்களை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது பாஜக.
பாஜக ஆட்சியில்தான் பத்திரிக்கையாளர்கள் அதிகமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த ஆட்சியில்தான் பத்திரிக்கையாளர்கள் அதிகமாகத் தாக்கப்படுகின்றனர். இத்தகைய பாசிச நிலையில்தான் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டுள்ளார். நடுநிலையாளர்கள், நேர்மையாளர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்ளும் பத்திரிக்கையாளர்கள் இத்தகைய பாசிச வெறிக்கெதிராக அணிதிரள வேண்டிய நேரம் இது !