இலங்கையில் பாரதி - அங்கம் 37 முருகபூபதி


"சந்திதெருப் பெருக்கும் சாத்திரம்  கற்போம், சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்"   என்று பாடியிருப்பவர் பாரதியார்.
சந்தி தெருப்பெருக்குவதற்கும், சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவதற்கும்  என்ன  தொடர்பிருக்கிறது...? என்றுதான் நாம் கேட்போம்.  ஆனால், இரண்டுக்குமிடையே தொடர்பிருக்கிறது என்பதை  தீர்க்கதரிசனமாகச்சொன்னவர்  பாரதியார். இரண்டுமே தொழில்கள்தான்.
சந்திதெருப்பெருக்கும் தொழிலை செய்பவர்களை தோட்டிகள் என்றும் தீண்டத்தகாதவர்கள்  என்றும்  புறம்ஒதுக்கியது  கீழைத்தேய சமூகம். ஆனால்,   அந்தத்தொழிலுக்கும்  பயிற்சி இருக்கிறது என்று சொன்னது  மேலைநாட்டு கல்வி முறை.
சந்திரனுக்கு சென்று கால் பதிப்பதற்கும்  விஞ்ஞானக்கல்வி தேவைப்பட்டது. எத்தனையோ வருடங்களுக்கு முன்னர், தீர்க்கதரிசனமாக செய்யும் தொழிலே தெய்வம் என்ற வாக்கிற்கு அமைய, அறிவதற்காக கற்றல், செயலாற்றுவதற்காக கற்றல், பிறரோடு சேர்ந்து வாழக்கற்றல், சுயஆளுமையுடன் வாழக்கற்றல் என்ற பிற்கால யுனெஸ்கோவின்  சிந்தனையை அன்றே மக்களிடம் விதைத்தவர் மகாகவி பாரதி.
இந்த உண்மைகளை தொகுத்து வழங்கியிருப்பவர் இலங்கையின் மூத்த இலக்கிய விமர்சகர் கலாநிதி ந. இரவீந்திரன்.
இலங்கையில் பாரதி இயல் ஆய்வுத்துறையில் கலாநிதி ந. இரவீந்திரனின் பங்களிப்பும் முக்கியமானது. இவர் எழுதிய பாரதியின் மெய்ஞானம்  என்ற நூல் பற்றி முன்னர் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
இந்திய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, பாரதியின் கல்விச்சிந்தனைகளை தொகுத்து வழங்கியிருப்பவர்தான் கலாநிதி ந. இரவீந்திரன். இதுவரையில் நான்கு பதிப்புகளை கண்டுவிட்ட இந்நூலில் பாரதியார்,  சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், சுதேசமித்திரன் முதலான பத்திரிகைகளில் எழுதிய கல்வி சார்ந்த கட்டுரைகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் இரவீந்திரன்.
கல்வியில் மறுமலர்ச்சி தோன்றவேண்டுமென்பதற்காக யுனெஸ்கோ முன்வைத்த கோட்பாடுகளை பாரதியின் கல்விச்சிந்தனைகளிலிருந்தே காணமுடிகிறது என்பதை நிரூபிக்கின்றது  இந்தத்தொகுப்பு நூல்.

" ஒருவர் வாழும்  சமூகச்சூழல், வரலாற்று இருப்பு நிலை, சாதியவர்க்க அமைவு, பண்பாட்டுக்கோலங்கள் ஆகியன அவரது கருத்தியலை வடிவமமைப்பதில்  பங்கு வகிக்கின்றன. வரலாற்று நிர்ப்பந்தங்களால் முன்னதாக  முதலாளித்துவ மாற்றியமைத்தலைக்கண்டு ஏகாதிபத்தியமாகப் பரிணமித்த ஐரோப்பிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட  நிலையில் தமிழகமும், இந்தியாவும் இருந்த காலத்தில் பாரதி பிறந்தார். அவர் தன்னுணர்வோடு சமூகப்பங்களிப்பை ஆற்றத்தொடங்கும்போது சுதந்திர போராட்ட அலை எழுச்சிகொள்ளத்தொடங்கியது. அவரது இறுதிக்காலங்களில் அக்டோபர் புரட்சியினூடாகப் புதிய ரூஷ்யா சோஷலிஸத்தின் சாத்தியத்தை முரசறைந்தது. இந்திய சுதந்திரப்போராட்டத்திலும் தொழிலாளர் விவசாயிகள் பங்கேற்பு வீறுகொள்ளத்தொடங்கியிருந்தது."  என்று பாரதியின் கல்விச்சிந்தனையின் தோற்றத்திற்கான பின்புலத்தையும் இரவீந்திரன் பதிவுசெய்கின்றார்.
அத்துடன், " தேசிய விடுதலையுடன் இணைந்து, ஒவ்வொருவரும் சுதந்திரர்களாய்ப் பரிபூரணத்துவம் எய்தி ஆளுமையுடன் திகழ ஏற்ற கல்வி முறையொன்றை பாரதியின் கல்விச்சிந்தனை வெளிப்படுத்தி நிற்கின்றது. கல்வியில் சரீரப்பயிற்சிக்கு மிகுந்த முக்கியத்துவத்தினை பாரதி வழங்குகின்றார். சரீரப்பயிற்சியால் வலுப்பெறும் திடமான உடலே ஆன்மபலத்துடன் விடுதலை உணர்வை மேலெழச்செய்யும் என பாரதி கருதுகிறார்" என்றும் இரவீந்திரன் குறிப்பிடுகிறார்.
இதிலிருந்து பாரதியின் தீர்க்கதரிசனம் மிக்க கல்விச்சிந்தனைகளையும் நாம்  இனம் காண்கின்றோம். கல்வியலுக்கும் பாரதியியலுக்கும் புதுவரவாக அமையும் இந்நூலை தமிழ்கூறு நல்லுலகு வரவேற்று ஆதரவு வழங்கி உற்சாகமூட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கின்றார்.
பாரதி இந்தியாவில் தமிழகத்தில் பிறந்து கல்வி மறுமலர்ச்சி குறித்து சிந்தித்து எழுதியிருந்தாலும்,  அவை உலகமனைத்துக்கும் பொதுவானதாக திகழ்ந்திருப்பதையும் இரவீந்திரன் அவதானித்திருக்கின்றமையினால், குறிப்பிட்ட கட்டுரைகளை தேடி எடுத்து தொகுப்பதில் கடுமையாக உழைத்திருக்கிறார். அந்தவகையில் பாரதியியலுக்கு இலங்கையர்கள் காண்பித்திருக்கும் அக்கறையை நாம் இந்நூலின் வாயிலாகவும் தெரிந்துகொள்கின்றோம்.
பாரதியின் சர்வதேசப்பார்வையை இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகளினூடாகப் பார்க்க முடிகிறது. மொத்தம் 47 கட்டுரைகள் அடங்கியிருக்கும் இந்நூலின் இறுதியில் பாரதியின் பாரத தேசம் மற்றும் பாப்பாப்பாட்டும் இடம்பெற்றுள்ளன.
பாரத தேசம் என்னும் பாடலில் தேசியப்பொருளாதாரம் முதற்கொண்டு, அயலுறவுக்கொள்கை வரையில் பாரதியின் சமுதாயச்சிந்தனை விரிவிக்கிடக்கிறது. உதாரணத்திற்கு சில வரிகள்:
காசி நகர்ப்புலவர் பேசுமுரைதான் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம்.
பட்டினி லாடையும் பஞ்சிலுடையும் பண்ணி மலைகளென வீதி குவிப்போம்.
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்.
 வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்.
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரங்கற்போம்.
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத்தொழிலனைத்து முவந்து செய்வோம்"
இவ்வாறு இந்நூலானது இரவீந்தரனின் முயற்சியால் தமிழ் கூறும் நல்லுலகிற்கு பல அரிய சிந்தனைகளை பாரதியின் வாயிலாகத் தந்திருக்கிறது.
இது இவ்விதமிருக்க, இலங்கையில் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களும் பாரதியின் கல்விச்சிந்தனைகள் தொடர்பாக ஆய்வுமேற்கொண்டிருப்பதையும்  அறிகின்றோம்.
அவரது  பின்பட்டப்படிப்பு கல்வியியல் ஆய்வுப்பெருங்கட்டுரையும் பாரதியின் கல்விச்சிந்தனைதான். 1974 இல் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். பின்னர் தினகரன் வாரமஞ்சரியில் வாசகரின் தேவைகருதி ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் அதனை தொடராக பிரசுரித்தார்.
 தேசிய கலை இலக்கியப்பேரவை நடத்திய தொடர் கருத்தரங்கிலும் மௌனகுரு பாரதியும் கலைகளும் என்ற கட்டுரையை சமர்ப்பித்தவர். 1997 இல் வெளியான இவரது காலை இலக்கிய கட்டுரைகள் நூலிலும் பாரதியும் மரபும் என்ற ஆக்கமும் இடம்பெற்றுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கிலும் இவரது பாரதியின் உரைநடை என்னும் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
                   நாட்டுக்கூத்தை,  கூத்து என்றே அழையுங்கள் எனச்சொல்லிவரும் மௌனகுரு அவர்கள், தமது நாடகளிலும் பாரதியின் பல  கவிதை வரிகளை இடம்பெறச்செய்துள்ளார். இவரது மழை என்னும் நாட்டிய நாடகத்தில்,  " திக்குகள் எட்டும் சிதறி தக்கத்தீம் தரிகிடதீம் "எனத்தொடங்கும் மழைப்பாடலை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார்.
மழையைக் காணாத மக்கள் வரட்சியினால் வாடித் துன்பப்படுகிறார்கள். இறுதியில் நம்பிக்கையின் அடிப்படையில் யாகம்  முதலான நிகழ்த்துகையின் மூலம் மழையை வரவழைக்க முயற்சிக்கிறார்கள். பின்னர் சுயமுயற்சியால் மழையை கொணர்கிறார்கள்.  அந்தக்காட்சிக்கு பாரதியின் பின்வரும் கவிதை வரிகளை  பயன்படுத்தியிருக்கிறார்.
" வெட்டியடிக்குது மின்னல்  -  கடல்வீரத் திரை கொண்டு விண்ணையிடிக்குது - கொட்டியிடிக்குது மேகம் -கூகூவென்று விண்ணைக் குடையுது காற்று சட்டச் சட சட சட்டா "
என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்  என்ற வரிகள் மிகப் பிரமாண்டமாக ஆடல் பாடல் அசைவுகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன"  எனத் தெரிவித்துள்ளார்.
மெளனகுரு  அவர்களின் தகவல்களின் பிரகாரம் இந்நாடகம் இலங்கையில்  வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரமின்றி நோர்வேயிலும் மேடையேறியிருக்கிறது.
மௌனகுரு தயாரித்து இயக்கிய  நம்மைப்பிடித்த பிசாசுகள் என்னும் நாடகத்திலும்  பாரதி ஒரு கதாபாத்திரம்.  இதில்  பாரதி சிலை உயிர் பெறுகிறது.  இலங்கைத் தமிழர் சமூகத்தில் நடக்கும் பிரதேச  வாதம், பெண் அடக்குமுறை,  சீதனப் பிரச்சினை,  அந்நிய மோகம் என்ற பிசாசுகளைப் பாரதி காண்கிறார். நம்மைபிடித்த  இப்பிசாசுகளை  அடித்துக்கலைக்குமாறு  பாரதி மக்களுக்கு  ஆணையிடுகிறார் . 
 ஒரு கட்டத்தில், "  இவைகளைச் செய்ய உன்னால் முடியாவிட்டால்  செத்துப்போ...  அதுவே நன்று"  என உறுக்குகின்றார்  விழிப்புணர்வு பெற்ற மக்கள் பாரதியின்  ஜெயபேரிகை  கொட்டடா...  கொட்டடா... என்ற அந்த விடுதலைக் கீதத்தை   இசைத்தபடி  பிசாசுகளை விரட்டி விடுதலைக்  கூத்தாடுகிறார்கள்.
                மழை என்ற மெளனகுருவின் நாடக நூலுக்கு, இலங்கையின் மூத்த கவிஞர் (அமரர்) இ.முருகையன் எழுதியிருக்கும்      முன்னுரையில், " இப்புத்தகத்தில்வரும் இன்னுமொரு நாடகம் நம்மைப்பிடித்தபிசாசுகள். அந்நியநாட்டுமோகம், பிரதேச பேதங்கள், உத்தியோக மோகம்,சீதனம் எனும் சின்னத்தனம், ஆகிய சமூகக் குறைபாடுகள் எல்லாவற்றையும்  பிசாசுகளாக உருவகம் செய்கிறார்.  இவற்றினால்  மக்கள் பலர் உருவெறி ஆடுகிறார்கள்.
ஆனால்,  இந்தப் பிசாசுகளின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்கு பாரதியார் சொல்லும் ஒரு மந்திரம் உதவுகிறது. அந்த மந்திரம்  ஒரு பாட்டு:  அச்சமில்லை அணுங்குதல்  இல்லை நடுங்குதல் இல்லை நாணுதல்  இல்லை பாவம் இல்லை  பதுங்குதல் இல்லை ஏது நேரினும் இடர்படமட்டோம்.  கண்டம் சிதறினும் அஞ்சமாட்டோம்  கடல் பொங்கி எழுந்தால்  கலங்க மாட்டோம்.  யார்க்கும் அஞ்சோம்.  எதற்கும் அஞ்சோம்.  எங்கும் அஞ்சோம்.  எப்பொழுதும் அஞ்சோம்.   இன்னும் மந்திரங்கள் பல  ஓதப்படுகின்றன.  அவைகள் எல்லாம் பாரதி பாட்டுக்களே. 
நம்மைப் பிடித்த பிசாசுகளில் பாரதியார் சொற்களும் கருத்துக்களும்,  உணர்வோட்டங்களும் தாராளமாக இடம் பெற்றுள்ளன. மௌனகுருவின்   ஆக்கங்களில் பாரதியாரின் செல்வாக்குக் கணிசமாக  மேலோங்கி நிற்பதைக் காணுகின்றோம் . பாரதியின் ஆளுமையின்  ஆட்சித்திறன் என்று இதனை விபரிக்கலம். 
இந்த ஆட்சித்திறன் பற்றி மெலும் சிலவற்றைக் கூறுதல் வேண்டும். பாரதியார் கவிஞர்.    எல்லை  இன்மை எனும் பொருள் தன்னைக் கம்பன்  குறிகளாற் காட்டினானென்பது பாரதியார் கருத்து.  பாரதியாரும் அப்படிப்பட்டவர்தான்.  அண்டம் முழுவதையும் தழுவி நின்றன அவருடைய எண்ணங்கள்  மௌனகுருவின் போக்கும் அப்படிப்பட்டதுதான்.  சின்னஞ்சிறு வேடிக்கை மாந்தர்களின் அன்றாட சில்லறைச்  சேட்டைகளைப் பற்றி அவருக்கு அதிக அக்கறையில்லை.  "அண்டம் முழுதும் அளந்து அறிவை எடுத்து ஊட்டுவதும்,  அந்திச் சுடர் வானை அப்படியே தீட்டுவதும்,  மிண்டும்  கொடுமைகளை மாய்த்து  அறத்தை  நாட்டுவதும் மாசற்ற  இன்பவெறி மக்களிடை  மூட்டுவதும் தமது நோக்கங்கள் என்று  மகாகவி கருதியது போல ஆகாசம் அளாவுமொரு காதல் கொண்டவர் மௌனகுரு.
அதனாலேதான் அவரது படைப்புகளில் பிரமாண்டமான கற்பனைகளை நாம் காணுகின்றோம்.  இவரது தலை சிறந்த ஆக்கமான சங்காரம்   இந்த   இடத்திலே நினைவு கூரத்தக்கது.
அங்கு சாதி அரக்கனும்  இனபேத அரக்கனும் ,வர்க்க அரக்கனும் சங்காரம்  செய்யப்பட்டனர்.  இங்கு நம்மைப்  பிடித்த பிசாசுகள் ஓட்டப்படுகின்றன.   மலை தகர்க்கப்படுகிறது,  மழை பெய்விக்கப்படுகிறது எல்லாம் அரிய பெரிய சாதனைகளே.  மனிதகுலம்  செய்யவேண்டிய,செய்யக்கூடிய சாதனைகள்.  இச்சாதனைகளை   நோக்கிய   ஏக்கம், ஓர் இலட்சிய நாட்டம் இருப்பதனாலேயே   பாரதியார் மௌனகுருவைப் பிடித்தாட்டுகிறர் - பிசாசு போல அல்ல   தெய்வம்  போல.
இலங்கையில் நாடகம், கூத்து முதலானவற்றில் பாரதியின் கவிதைகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன என்பதற்கு மௌனகுருவின் முயற்சிகள் பதச்சோறு. தொடர்ந்தும் பாரதியின் ஊற்றெடுக்கும் சிந்தனைகளை தமது கலைப்படைப்புகளில் பயன்படுத்திவருகிறார்.
மௌனகுருவின் மற்றும் ஒரு நாடகமான வனவாசத்திலும் துரியோதனன் சபையில் நடக்கும் சூதாட்டக்காட்சியிலும் பாரதியின் பாஞ்சாலி சபதத்திலிருந்து கவிதை வரிகளை எடுத்தாளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.  இவரது சக்தி பிறக்குது, காளிக்கூத்து நாட்டிய நாடகம் ஆகியனவற்றிலும் பாரதியின் வரிகள் இடம்பெறுகின்றன.
(தொடரும்)
---0---





No comments: