இலங்கைச் செய்திகள்


ராஜீவ் ராஜேந்திரன் மரணம் குறித்து தவறான தகவல்கள்; ஆஸி. தூதரகம் விளக்கம்

ரோஹிங்யா விவகாரம் குறித்து சவூதியில் உயர் மட்டப் பேச்சு

புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாமிடம்

சுற்றுலா தலைவர்கள் மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்...!




ராஜீவ் ராஜேந்திரன் மரணம் குறித்து தவறான தகவல்கள்; ஆஸி. தூதரகம் விளக்கம்
பப்புவா நியூகினியின் மனுஸ் தீவில் அண்மையில் மரணமடைந்த இலங்கைத் தமிழரின் பூதவுடலை இலங்கைக்குத் திருப்பியனுப்ப, அவரது உறவினர்களிடம் பணம் கோரியதாக ஊடகங்களில் எழுந்த தகவல்களை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் மறுத்திருக்கிறது.

உண்மைக்குப் புறம்பான செய்தி என இதைக் குறிப்பிட்டிருக்கும் தூதரகம், இது பற்றிய விளக்கம் ஒன்றையும் விடுத்துள்ளது.
“மனுஸ் தீவில் மரணமடைந்த இலங்கைத் தமிழர் ராஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலை இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக அவரது உறவினர்களிடம் பணம் கேட்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 
“ராஜீவின் பூதவுடலை இலங்கைக்குக் கொண்டுவர நிதியளித்து உதவுமாறு அவரது உறவினர்கள் அவுஸ்திரேலிய அரசையோ, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தையோ அணுகவில்லை.
“மேலும், ராஜீவ் பப்புவா நியூகினியில் மரணமடைந்ததால் அவரது உடலைத் திருப்பியனுப்புவது அந்நாட்டின் பொறுப்பாகும்.”
இவ்வாறு அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி  













ரோஹிங்யா விவகாரம் குறித்து சவூதியில் உயர் மட்டப் பேச்சு

03/10/2017 சவூதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளுக்கான நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் சவூதியில் உயர் மட்டப்பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். 
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று ஜித்தாவை சென்றடைந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை, சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் பின் அப்துல் அஸீஸின் செயலாளர் உள்ளிட்ட உயர் குழுவினரால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் விஜயத்தின் போது சவூதி அரேபியாவின் அரச உயர் அதிகாரிகளையும், சர்வதேச இஸ்லாமிய நிறுவனத்தினுடைய செயலாளர் நாயகம், சவூதி இளவரசர் பஹத் பின் அப்துல் அஸீஸ் உள்ளிட்ட பல்வேறு அரச தலைவர்களை சந்திக்கவுள்ளார். இதன்போது, சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள்  தொடர்பாகவும், பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி










புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாமிடம்

05/10/2017 வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா நல்லதண்ணிர் ஆரம்ப வித்தியாலய மாணவி சமூவேல் செல்வா, தயாவதி தம்பதிகளின் செல்வ புதல்வி ஹொஸ்னீ என்ஸலேக்கா 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

2017 ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த இவர் நல்லதண்ணி மறே தோட்டம் வலதள பகுதியை சேர்ந்தவராவார்.
இதேவேளை, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான அருள்ஞானம் நிதர்ஷன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

மேலும் அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஆரம்ப பாடசாலை மாணவன் சிவஞானம் சுரேன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.  நன்றி வீரகேசரி














சுற்றுலா தலைவர்கள் மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்...!
04/10/2017 உலக சுற்றுலா தினத்துடன் இணைந்ததாக இலங்கையில் இடம்பெறும் 'சுற்றுலா தலைவர்கள் மாநாடு – 2017' ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய நிபுணர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் அரச கொள்கை வகுப்பாளர்களின் உதவியுடன் தேசிய உரையாடல் ஒன்றை உருவாக்கி அதனூடாக காலத்திற்கேற்ற தேசிய கொள்கையை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான  பங்களிப்பு இம்மாநாட்டின் நோக்கமாகும். சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஊடாக நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் தமது ஆய்வு அறிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளை முன் வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக நடைபெறும் இம்மாநாட்டை சுற்றுலாத்துறை, கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சும் கொழும்பு பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 'அபிவிருத்திக்கு பேண்தகு சுற்றுலாத்துறை - இலங்கையின் முன்னோக்கிய பயணம்' என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை மாநாடு நடைபெறுகின்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்கவினால் மாநாட்டின் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது. விசேட தபால் முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், சுற்றுலா கைத்தொழில்துறைக்கு சேவை செய்தவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
ஆதிவாசியான ஊருவரிகே வன்னிலா எத்தோ, சிரேஷ்ட சமயற்கலை நிபுணர் திமுத்து குமாரசிங்க ஆகியோருக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டன.
சுற்றுலாத்துறை, கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, அமைச்சின் செயலாளர் எசல வீரகோன் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.    நன்றி வீரகேசரி







No comments: