இலங்கையில் பாரதி -- அங்கம் 17 - முருகபூபதி

.

"மாவலியின்  இரு கிளைக்கரங்களாலும் அரவணைக்கப்பட்டு, அதன் முகவணையில் ஓர் ஆற்றிடை மேடென மிளிர்வது கொட்டியாபுரப்பற்று.
அகத்தியர் தாபனம், சேர்வாவலை, திருமங்கலாவை, வெருகலம்பதி, இலங்கைத்துறை, நொக்ஸ் புளியை, கோட்டையாற்றுத்துறை, வண. மிக்கேல்மெல் கல்லறை முதலான பல இட - தல பெயர் வரலாறுகளைக்கொண்டு புராண இதிகாச, சரித்திரங்களில் இடம்பெற்றுத்திகழுமிந் நற்பதி நீர்வள நிலவளத்தின் மிக்கது. எனினும் கலைவளமின்மையாற் கவின் குறைந்தது. இப்பழம் பெருமை நிறைந்த பரந்த பதியின் முகநகரே மூதூர்."
இவ்வாறு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை மாவட்டத்தில் திகழும் மூதூர் பற்றிய விவரணம் 1965 ஆம் ஆண்டளவில் வெளியாகியிருக்கிறது.
இலங்கைத்தமிழின அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை வகித்திருப்பது மூதூர்.
நீண்ட காலமாக ஈழத்தமிழரின் தலைநகரம் என வர்ணிக்கப்பட்ட திருக்கோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மூதூரில் மூவின மக்களும் வாழ்கின்றனர். அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய பிரதேசமாகவும் இவ்வூர் கருதப்படுகிறது.




ஈழப்போரின் இறுதிக்கட்ட வரலாறு இந்தப்பகுதியிலேயே தொடங்கி, நந்திக்கடலின் அருகே முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதப்பட்டது.
ஒருகாலத்தில் முத்துக்குளிக்கும் கடல்சார்ந்த தொழிலுக்கும் இந்தப்பிரதேசம் பிரசித்தி பெற்றிருந்தமையால் முத்தூர் எனவும் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்தப் பூர்வீகப்பெயர் மருவி மூதூர் ஆகியிருக்கிறது.
மூதூரின் அழகிய கிராமம் சேனையூர். இங்கு பாரதியின் சிந்தனைத்தாக்கம் வேரூன்றுவதற்கு இங்கு வாழ்ந்த கல்விமான்களும் அறிஞர்களும்தான் காரணம். இற்றைக்கு அரைநூற்றாண்டுக்கு முன்னர் 1965 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில்  மூதூரில்   இயங்கிய வெகுஜன அமைப்பு சேனையூர் கலாமன்றம்.
இங்கிருந்த அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலயத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடைபெற்ற பாரதி விழாவில் ஆசிரியர் திரு. என். வஸ்தியான் நீக்கொலாஸ் என்பவர்  சிறப்புரையாற்றினார்.
அந்த உரையை விரிவாக்கி அவர் எழுதி வெளியிட்ட நூல்: நான் கண்ட பாரதி.  பின்னாளில் தினபதி - சிந்தாமணி ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம் அவர்களும் இதே தலைப்பில் பாரதி நூற்றாண்டு காலத்தில் சிந்தாமணியில் நீண்ட தொடர் எழுதியிருக்கும் தகவலை இந்தத்தொடரில் முன்னர் வந்த அங்கத்தில் பார்த்திருப்பீர்கள்.
மகாகவி பாரதியைப்பற்றி மேடைகளில் பேசுவதாயின் மேலோட்டமாகப்பேசமுடியாது. பாரதியை ஆழமாக கற்றிருந்தால்தான் அதுவும் சாத்தியம். பாரதியின் கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், அவர் பணியாற்றிய பத்திரிகைகள் - இதழ்கள் பற்றியெல்லாம் ஆழ்ந்து கற்ற பலர் இலங்கையில் பல பாகங்களிலும் வாழ்ந்தார்கள்.


நாடெங்கும் நீண்ட காலமாகவே நடைபெற்றுவரும் பாரதி விழாக்களிலும் பாரதி இயல் ஆய்வரங்குகளிலும் நிகழ்த்தப்பட்ட உரைகள் பின்னர் நூல்களாக வெளியாகியுள்ளன.
அத்துடன், அவ்வாறு வெளியான நூல்களை உசாத்துணையாகக்கொண்டும் பலர் தமது ஆய்வுகளையும் மேடைப்பேச்சுக்களையும்  தயாரித்தனர்.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சுபைர் இளங்கீரன் தமிழகத்தில் நிகழ்த்திய மேடைப்பேச்சுக்களை தொகுத்து பாரதி கண்ட சமுதாயம் என்ற  நூலை வரவாக்கினார்.
பேராசிரியர் க. கைலாசபதி  பல இதழ்களிலும் ஏற்கனவே எழுதிய பாரதி சம்பந்தமான ஆய்வுக்கட்டுரைகளைத்  தொகுத்து பாரதி ஆய்வுகள் என்ற பெயரில் அவரது மறைவின் பின்னர் அவரது மனைவி திருமதி சர்வமங்களம் கைலாசபதி வெளியிட்டார். இதுவரையில் மூன்று பதிப்புகளைக்கண்டுள்ள இந்த அரிய நூல் மேலும் பல பதிப்புகளுக்குரியதாகவே  திகழ்கின்றது.
அரைநூற்றாண்டுக்கு முன்னர் (12 செப்டெம்பர் 1965) சேனையூரில் நடந்த பாரதிவிழாவில் வஸ்தியான் நீக்கொலாஸ் நிகழ்த்திய உரையை அங்கம் அங்கமாக விரித்து தனது வாசிப்பு அனுபவத்திலிருந்து நான் கண்ட பாரதி நூலை எழுதியிருக்கிறார்.
மூதூர் கம்பன் கலைப்பண்ணை வெளியீடாக வந்துள்ள இந்நூலை கொழும்பு 13 இல்  ஆதிருப்பள்ளித்தெருவில் அமைந்திருந்த ரெயின்போ அச்சகம்  அச்சிட்டது.
இந்த அச்சகத்திலிருந்துதான்   எம். ஏ. ரஹ்மானின் அரசு வெளியீடு என்ற பதிப்பகம் இயங்கியது.  பல நூல்களின் வருகையுடன் சம்பந்தப்பட்டிருந்த  ரெயின்போ அச்சகத்திலிருந்து இளங்கீரன் நடத்திய மரகதம், ரஹ்மான் நடத்திய இளம்பிறை முதலான இதழ்களும் வெளியாகியிருக்கின்றன.
ஆசிரியர் வஸ்தியான் நீக்கொலாஸ் , மூதூரில் பிறந்தவர். இலங்கையில் அக்காலப்பகுதியில் பயிற்றப்பட்ட முதலாம்தர தமிழ் ஆசிரியர். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் பண்டிதர் பரீட்சையில் தேறியவர். பல்துறை ஆற்றல் மிக்க இவர், தமது நான் கண்ட பாரதி நூலின் இறுதியில் நமது கடமைகள் என்ற அங்கத்தில், நம்மவர்கள் பாரதிக்காக என்ன செய்யவேண்டும் என்பதை விபரிக்கிறார்.
" வருடா வருடம் புரட்டாதி மாதம் பதினோராந்திகதி ஊர்கள் தோறும், சந்திகள் தோறும், சதுக்கங்கள் தோறும், அம்பலங்கள் தோறும், ஆலயங்கள் தோறும், வீதிகள் தோறும், வீடுகள் தோறும் , கலைக்கூடங்கள் தோறும் ,  கலா மன்றங்கள் தோறும் பாரதிக்கு விழாக்களெடுத்து அழகாக ஆணித்தரமாகச் சொற்பொழிவுகள் செய்வதினால் மட்டும்  நம் கடமை முடிந்துவிடாது. இவ்வித செயல்களை நடிப்புச்சுதேசிகள் செயல்கள் என்று அவனே இழித்துப் பழித்துப் பரிகசித்திருக்கின்றான். 'கூட்டத்திற் கூடி நின்று  கூடிப்பிதற்றலன்றி  நாட்டத்திற் கொள்ளாரடி - கிளியே, நாளில் மறப்பாரடி ' என்று.


ஆகையால் நாமும் அவன் போதங்களைச் சிரமேற்கொண்டு, சாதி வேற்றுமைகளை வேரறுத்து, உலகத்தொழில்கள் அனைத்தையும் உவந்து செய்து, சகோதர பாவத்துடன் ஓற்றுமையாய் வாழ்வோம். சகல துறைகளிலும் முன்னேறி, ஏற்றமுந் தோற்றமும் வாய்ந்த ஒரு ஒப்பரிய சமுதாயமாய்த் திகழ்வோம்.  இப்படியாக நாம் அவன் வகுத்துத் தந்த உயரிய சீர்திருத்தப்பாதைகளால் நடந்து செல்வோம்"
வஸ்தியான்  நீக்கொலாஸ் அவர்கள் பாரதிக்காக நாம் என்ன செய்யவேண்டும் என்று சுமார் 52 வருடங்களுக்கு முன்னர் அவ்வாறு சொல்லியிருக்கிறார்.
அதற்குப்பிறகு, 1981 இல்  -  பாரதி நூற்றாண்டை நோக்கி... செய்யவேண்டியவை செய்யக்கூடியவை என்ற தலைப்பில் தமக்கே உரித்தான ஆய்வுக்கண்ணோட்டத்தில் பேராசிரியர் க. கைலாசபதி இலங்கையில் வெளியான வசந்தம் (ஜனவரி - பெப்ரவரி ) இதழில் விரிவாக எழுதியிருக்கிறார்.
அதில் அவர் எழுதியிருக்கும்  பின்வரும் வரிகளை பாருங்கள்:
"இலங்கையிலும்  தமிழ்நாட்டிலும் தற்கால இலக்கியங்கள் சம்பந்தமான சர்ச்சைகளிலும் விசாரங்களிலும் பலருக்கு ஈடுபாடு அதிகரித்திருப்பது வெளிப்படையேயாயினும் பெரும்பாலான ஆர்வலர்களுக்கு  இலக்கியக்கொள்கை, வரலாற்றுணர்வு, சமூகவியல் அறிவு என்பவற்றில் பயிற்சியும் பரிச்சயமும் போதியளவு இல்லாமையால், அரங்கின்றி வட்டாடுவதாகவே அவர்களின் எத்தனங்கள்  அமைந்துவிடுகின்றன. ஆக்கங்கள் அச்சகங்களிலிருந்து வெளிவந்த உடனே சிந்திப்பதற்குக்கூட அவகாசமின்றி  அவசரம்  அவசரமாக  அபிப்பிராயங்களைச் சிந்திவிடும் நுனிப்புல் மேயும் நோக்கு விமர்சனக்கலைக்கு ஊறு செய்து வருகிறது. இந்நிலையில் நவீன தமிழ் இலக்கியமேயன்றி பாரதியார் படைப்புக்களும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்படாமை ஆச்சரியத்தைத்  தரவேண்டியதில்லை"
பாரதி பல்துறைகளிலும் தமது குறைந்த ஆயுளுக்குள் எழுதியிருப்பவர். ஆழமும் விரிவும் கொண்டிருந்த ஆளுமையாகத் தமிழ் உலகில் மிளிர்ந்தவர்.
பாரதியை பயில்பவர்கள் அனைவருக்கும் பாரதியின் அனைத்துப்படைப்புகளும் கிட்டவில்லை என்ற ஆதங்கத்தை கைலாசபதி இக்கட்டுரையில் வெளிப்படுத்தியிருந்தார்.
ரா.அ.பத்மநாதன், பெ. தூரன், இளசை மணியன், சிதம்பர ரகுநாதன், சீனி. விசுவநாதன், டி.வி. எஸ். மணி  ஆகியோர் மேற்கொண்ட தேடுதல் பற்றியும் இக்கட்டுரை விதந்துரைக்கின்றது.
பாரதி பற்றிய தீவிர தேடலை அவரது நூற்றாண்டு காலத்திலாவது நம்மவர்கள் மேற்கொள்ளவேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்தவர் கைலாசபதி. அதனால் செய்யவேண்டியவை செய்யக்கூடியவை  என்ற தலைப்பினை மிகவும் பொருத்தமாகவே அதற்குச்சூட்டியிருந்தார்.
பாரதி தமது வாழ்நாளில் எழுதியவை அனைத்தும் வெளிக்கொணரப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டும் அவர், இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளியாகப்போற்றப்படும் ராஜாராம் மோஹனராயர் பற்றி பாரதியின் பார்வையையும் பதிவுசெய்கிறார்.
அதில் பாரதியின் உளப்பாங்கினையும் வெட்டவெளிச்சமாக்கி, ராஜாராம் மோஹன்ராயின் மரணத்தில் நடந்த சுவாரஸ்யமான காட்சியையும்  பாரதியின் எழுத்திலேயே  கைலாசபதி  விபரிக்கின்றார்
பாரதியைப்போன்றே ராஜாராம் மோஹனராயும் தாம் அணிந்திருந்த பூனூலை அறுத்தெறிந்தவர். " ஆனால், இவர் மரணமடைந்தபோது இவர் மீது முப்புரி நூல் தவழ்ந்துகொண்டிருந்ததாம்." என்று பாரதி கோபத்தில்  எழுதியிருக்கும் கட்டுரை பற்றி அதில் சொல்லப்படுகிறது.
இவ்வாறு பாரதி எழுதிய பல முக்கியமான கட்டுரைகள் இன்னும் எத்தனையோ உலகறியாமல் உள்ளன. அவையும் கிடைத்தால் பாரதி ஆய்வுகள் ஆழ அகலம் பெறும் என்று கைலாசபதி வலியுறுத்துகிறார்.
1965 காலப்பகுதியில் பாரதி பற்றி எழுதியும் பேசியும் வந்த வஸ்தியான் நீக்கொலாஸ் நாம்  பாரதிக்காக  என்ன செய்யவேண்டும் என்று அக்கால கட்டத்தின் பின்புலத்திலிருந்து சொன்னார்.
அதற்குப்பிறகு 1981 காலப்பகுதியில் பாரதியின் நூற்றாண்டு தருணத்தில்  நாம் பாரதி ஆய்வுகளில் என்ன செய்யவேண்டும் என்று கைலாசபதி வலியுறுத்துகிறார்.
இன்று இவர்கள் இருவரும் எம்மத்தியில் இல்லை.
இவர்களின் கருத்தியல்களின் பின்னணியில் நம்மவர்கள் பாரதிக்காக என்ன செய்தார்கள்...? எவற்றைச் செய்யத்தவறினார்கள்...? என்பதை இனிவரும் அங்கங்களில் பார்க்கலாம்.
பூனூலை விட்டெறிந்த  ராஜாராம் மோஹனராயரின் இறுதி நிகழ்வில் நடந்தமை குறித்து பாரதி கவலை தெரிவிக்கிறார்.
அதேபோன்று - பாரதியின் இறுதி நிகழ்வின் பின்னர், அவரது மனைவி செல்லம்மாவுக்கு என்ன நடந்தது...? என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தெரிவிக்கும் கவலை ஆழ்ந்து நோக்கத்தக்கது.
பிராமண குல சம்பிரதாயப்படி செல்லம்மாவுக்கு மொட்டை அடித்து அவரை வீட்டின் மூலையில் அமர்த்தினார்களாம்.
பெண்விடுதலைக்கு குரல் கொடுத்த பாரதியின்  மனைவிக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சியளிக்கிறது.
பாரதி - ராஜாராம் மோஹனராயர் பற்றிய அரிய தகவல்களை தமது கட்டுரையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் கைலாசபதி ஒரு மாக்ஸீயவாதி. ஆனால், அவர் 1982 இறுதியில் மரணித்தபோது கொழும்பு கனத்தை மயானத்தில் சாதி சமய சடங்குகளுடன் (கொள்ளிக்குடமும் உடைக்கப்பட்டது) இறுதிச்சடங்குகள் நடந்தன.
பாரதி சொன்ன கிருத யுகத்தை கேடின்றி நிலைநிறுத்தவேண்டும் என அவாக்கொண்டிருந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் சமூகச்சிந்தனையாளரும், வடபுலத்து அடிநிலை மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்காக போராடி மரணித்தவருமான மு. தளையசிங்கம் அவர்களுக்கு புங்குடுதீவில் நடந்த இறுதி மரியாதையிலும் சாதி சமய சடங்குகளுடன் (கொள்ளிக்குடமும் உடைக்கப்பட்டது) இறுதிச்சடங்குகள் நடந்தன.
இலங்கையில் பாரதி பற்றி ஆராயப்புகும்பொழுது, சாதி சமய வேறுபாடின்றி உயர்ந்த சிந்தனைகளுடன் வாழ்ந்தவர்கள் தமது வாழ்நாளில் எதற்காக உழைத்தார்களோ அவற்றை அவர்களைச்சூழ்ந்திருப்பவர்கள் பின்பற்றி ஒழுகுவதில்லை என்ற கசப்பான உண்மையும் சொல்லப்படவேண்டியதே.
இது குறித்து எம்மவர்கள் எதிர்வினையாற்றலாம்.
(தொடரும்)

No comments: