26/04/2017 வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்காக கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டு வருகின்றமை வலய நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியாவிற்கு எதிராக செயற்படுவதற்காக ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றது. 
குறித்த பயிற்சியை காரணமாக கொண்டு அமெரிக்காவின் ‘யு.எஸ்.எஸ். மிசிகன்’ ஏவுகணை தாங்கு நீர்மூழ்கி கப்பலை தென் கொரியாவின் பூசன் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளது. அத்தோடு ஏற்கனேவே விமானம் தாங்கி கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டுள்ள நிலையில் அந்நாட்டின் முதன்மை அணி நீர் மூழ்கி கப்பலுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதற்காக, மற்றொரு பாரிய விமானந்தாங்கி போர்க்கப்பல் கொரியா நோக்கி பயணிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் தோன்றியுள்ள போர் பதற்றநிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி, ஜப்பான் பிரதமர் மற்றும் ஜேர்மனி ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளநிலையில், தற்போது அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 








எறிகணை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; மூன்று இராணுவத்தினர் பலி!
27/04/2017 ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா பகுதியின் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய இராணுவத்துக்குச் சொந்தமான எறிகணை முகாம் ஒன்றின் மீது, இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அதிகாரி ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
அதிகாலையில் திடீரென்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், எறிகணைக் களஞ்சியத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் முயற்சித்ததாகவும், தமது எதிர்த் தாக்குதலில் தற்கொலைத் தாக்குதல் தவிர்க்கப்பட்டதுடன் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சுமார் நான்கு மணி நேரம் நீடித்ததாகவும், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டபோதிலும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி