நாடகக் கலைஞர் பிரான்சிஸ் ஜெனம் மறைவு

 .

1980 இல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் அரங்கேறிய "பொறுத்தது போதும்" என்ற நாடகக் கூத்தினை பார்த்து பிரமிப்படைந்தேன். அது அ.தாசியசினால் கூத்து வடிவில் எழுதப்பட்ட மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை. அதில் சம்மாட்டியாராக நடித்து சிறந்த நடிகர் ஜனாதிபதி விருது பெற்றவர் பிரான்சிஸ் ஜெனம்
பிறகு நா. சுந்தரலிங்கத்தின் "அபசுரம்" யாழ் பல்கலைக்கழகத்தில் மேடையேறியபோது அருளர் என்ற அரசியல்வாதியின் பாத்திரத்தில் அவரது நடிப்பினை மீண்டும் பார்க்கக் கிடைத்தது. இயல்பாகவே நகைச்சுவையுணர்வு நிரம்பிய ஜெனத்துக்கு இப்பாத்திரம் நன்றாக பொருந்தியது.
1985 க்குப் பின் யாழ் பல்கலைக் கலாசாரக் குழுவினரின் தொடர்புகள் மூலம் நாடக அரங்கக் கல்லூரியை சேர்ந்த பலருடனும் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களில் வயது வித்தியாசம் பாராது எவருடனும்  நட்புடன் பழகும் ஜெனத்தை ஜெனம் அண்ணை என்று அழைத்தோம்.
நடிகராக மட்டுமன்றி அவர் இயக்கி பாடசாலைகளில் மேடையேற்றிய குழந்தை சண்முகலிங்கத்தின்(குழந்தை மாஸ்டர்) நாடகங்களிலொன்று "தாயுமாய் நாயுமானார்".
இரு முறை அவர் பங்கேற்ற நாடகப் பட்டறைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதெல்லாம் வார நாட்களில் குழந்தை மாஸ்டர் வீட்டில் நடைபெறும் சந்திப்புகளில் தவறாது கலந்து கொள்வார். அப்போது அவர் அரியாலையில் இருந்தார்.
1990 க்குப் பிறகு ஈழ அரசியற் சூழலில் பெரும் மாறுதல்கள். பிள்ளைகள் வெளிநாடுகளுக்குச் சென்று விட தனித்துப் போய் விடும் முதிய பெற்றோரின் தவிப்பினை சொல்ல "எந்தையும் தாயும்" என்ற நாடகத்தினை குழந்தை மாஸ்டர் எழுதினார். இதன் முதலாவது நிகழ்த்துகை "மண் சுமந்த மேனியர்" நெறியாளர் சிதம்பரநாதனின் நாற்சார் வீட்டினுள் நிகழ்த்தப்பட்டது. இதில் பிரதான பாத்திரமாகிய தந்தை பாத்திரத்தில் நடித்தவர் ஜெனம். இந்நாடகம் பல புலம் பெயர் நாடுகளிலும் இங்கும் மேடையேற்றப்பட்டபோது பார்த்தவர்கள் அழுததை கண்டேன்.
தமிழகத்தில் லண்டன் களரி அமைப்பும் நாடக அரங்கக் கல்லூரியும் இணைந்து நடாத்திய "நாராய் நாராய்" என்ற நாடகப் பயணத்தில் இந்த நாடகமும் அங்கு அரங்கேறியது. அதில் ஜெனத்தின் நடிப்பைப் பார்த்து வியந்து போன நாடகவியலாலர் பேராசிரியர் அரசு ஜெனம் இந்தியாவில் பிறந்திருந்தால் நடிப்புத்துறையில் சாதனை புரிந்திருப்பார் என்று குறிப்பிட்டார்.
ஈழத்தில் வெளிவந்த "வாடைக்காற்று" திரைப்படத்திலும் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை பிறகு அறிந்தேன்.
2015 இல் இறுதியாக அவரை சந்தித்த போது அவர் கொழும்பில் வத்தளையிலிருந்தார். இரு கண் பார்வையும் முற்றாக போய் விட்டது. வீணை ஆசிரியையாகவிருந்த அவர் மகள் வீதி விபத்தில் இறந்து விட்ட சோகத்தையும் கொண்டிருந்தார்.
நேற்று (29-4-2017)அவர் காலமானதாக அறிந்தேன்.
ஈழத்து நாடக வரலாற்றில் அவர் பெயர் மறக்கப்படலாகாது. அவருக்கு எமது அஞ்சலி.

(யோகன் கன்பெரா)

No comments: