தோப்பூர் மகாராஜா - கே.எஸ்.சுதாகர்


காரை நிறுத்திவிட்டு, பிரமாண்டமாகத் தெரிந்த அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தேன். வீட்டின் பின்புலத்தில் எங்குமே பச்சைப் பசுஞ்சோலை. ஒரு முதிய கம் மரத்தில் ஒரு சோடிக்கிளிகள். கிங் பறற்---யாழ்ப்பாணத்து பச்சைக்கிளிகள் போல அல்ல--- ஆண் கிளிக்கு சிகப்புத்தலை, பெண்கிளிக்கு பச்சைத் தலை. அதனைப் பார்த்து ரசித்த எனக்கு, அதன் ஓரமாக அமைந்த அழகான அந்த வீட்டைப் பார்க்க ஆத்திரமாக வந்தது.

யாழ்ப்பாணத்தில் தோப்பு என்ற ஊரில், ஒரு ஓலைக்குடிசையில் வாழ்ந்த ராஜசிங்கம் – அவுஸ்திரேலியா வந்து, அடுத்தவரை ஏமாற்றி அடாத்து வேலைகள் செய்து கட்டிய வீடு அது.

புதிய வீடு. ஹோலிங் பெல் கூடப் பளிச்சிட்டது. அழுத்திவிட்டு நின்றேன். ஒருவரும் வந்து கதவைத் திறக்கவில்லை. கைத்தொலைபேசி மூலம் ராஜசிங்கத்துடன் தொடர்பு கொண்டேன்.

வீட்டின் மேல் மாடியில் ரியூசன் கொடுத்துக் கொண்டிருந்த ராஜசிங்கத்தின் கைத்தொலைபேசி ‘என்னவளே அடி என்னவளேஎனப் பாடியது கேட்டது. ரெலிபோன் நம்பரைப் பார்த்துவிட்டு அடித்து வைத்துவிட்டான் ராஜசிங்கம். சற்று நேரத்தில் ஜன்னல் சீலை சிரித்தது. எட்டி வீதியைப் பார்த்தான் அவன்.

பொறுமை இழந்த நான் வீட்டின் கதவைக் கைகளால் அடித்தேன். குசினிக்குள் அப்பொழுதுதான் காலை ஆகாரத்தை முடித்து ஏப்பம் விட்டபடி கதவைத் திறந்தார் பொன்னுத்துரை.

“எட தம்பி... கணேஷ். நீயே கதவை விழுத்திறமாதிரி அடிச்சனி. வாடாப்பா... வா... கனகாலம் கண்டு. ஊரிலை அப்பா அம்மா எப்பிடிச் சுகமா இருக்கினமே!

“எங்கை ராஜா அண்ணை... நான் அவரோடை ஒருக்காக் கதைக்க வேணும்?
“மகன் மேலுக்கு ரியூசன் குடுத்துக் கொண்டிருக்கிறான். வாரும்... வந்து இரும் கணேஷ்.

பொன்னுத்துரை என்னை உற்றுப் பார்த்தார். அவர் மனம் தனக்குள் பேசியது.

கசங்கிய சட்டை, கருவாடாகிப் போன பான்ஸ். வேலை முடித்து நேரே இங்குதான் வந்திருக்கிறான் போல. வியர்வை வாடை வேறு அடிக்குது. வீட்டுக்குள்ளை கூப்பிட்டு ‘செற்றியிலைஇருத்தினா மருமகள் கத்துவாளோ


ராஜாவின் வீட்டிற்குள் செல்வதற்கு மறுத்தேன். பொன்னுத்துரை என்னுடன் கூடிக்கொண்டு கார் நிற்குமிடம் வந்தார். தெருவால் உலாப்போன நாய் ஒன்று இவர்களின் வீட்டைப் பார்த்து ‘வள்... வள்...என்று கத்தியது. அதன் எஜமானன் அதனை அதட்டி இழுத்துச் சென்றான். இவர்களின் வீடு முடியும்வரையும் அது தன் கத்துதலை நிறுத்தவில்லை. வீட்டிலே நாய் இல்லாதபோதும் ‘BEWARE OF DOG என்றொரு அறிவிப்புப்பலகை வீட்டுக்கு முன்னால் தொங்குகின்றது.

“எவ்வளவோ கஷ்டப்பட்டு வேலை செய்துதான் வட்டியையே கட்டிக் கொண்டு  வாறன். இப்ப முழுதையும் தா எண்டா நான் எங்கை போவன்.” 

தம்பி கணேஷ் அழாதையும். நான் மகனோடை இதைப்பற்றிக் கதைக்கிறன்அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது, வீதியோரத்தில் நின்ற நெடிய இயூகலிப்ரஸ் மரத்தில் இருந்து சில புலிமுகச் சிலந்திகள் போட்டி போட்டுக்கொண்டு ஊஞ்சலாடி இறங்கின.

நாங்கள் எல்லாம் முள்ளிவாய்க்காலிலேயே செத்துத் தொலைஞ்சிருக்க வேணும்!

●●●●●

இந்த இடத்தில் நான் உங்களுக்கு ராஜாவைப் பற்றியும், என்னைப் பற்றியும் சிலவற்றைச் சொல்லியாக வேண்டும்.
●●●●●
அதிதி

மட்டக்குளியவில் கொழுத்த சீதனத்துடன் மணம் புரிந்திருந்தான் ராஜசிங்கம். கொக்குப் போல உயர்ந்து, நீத்துப் பூசணிக்காய் போன்று திரண்ட உருவம் அவனுக்கு. என்னத்தைச் சாப்பிட்டாலும் உடம்பிலே சுவறுவதில்லை. தொண்டை கிழியக் கத்துவதில் ஊட்டச்சத்துகள் விரயமாகிவிடுகின்றன. திருமணத்தின் பின்னர் அவனை எல்லோரும் ராஜா என்றே அழைத்தார்கள். ராஜா  கோவிலுக்குப் போவது கிடையாது. கடவுள் நம்பிக்கையற்றவன். கடவுள் இல்லை இல்லையென்று கத்திக் கத்தி, அவனது கழுத்து நீண்டுவிட்டது. அவன் கத்துவதைப் பார்த்தால், இவன் ஒருநாள் தொண்டை வெடித்து இறந்துவிடக்கூடும் எனப் பயப்படுவீர்கள்.

பொறியியலாளன் என்ற ஒரே பட்டத்தை வைத்துக் கொண்டு, புள்ளி அடிப்படையில் அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரத்தில் கால் பதித்தான். அன்று சிட்னி நகரத்திலுள்ள தமிழ் மக்களுக்கு தொட்டுக் கொண்டது சனியன். அவனது காலம், வந்து சேர்ந்து இரு வாரங்களில் சிட்னி தமிழ்ச்சங்கத்தின் கலைவிழா பெரும் எடுப்பாக நடந்தது. அந்த மேடையில் ஒரு நாடகத்தில் நாகேஷ் போல கால்களைப் பின்னிப் பின்னி ஆடி, பெரும் கரகோஷத்தைப் பெற்றான். அதையே அடித்தளமாக்கி, வந்திருந்தவர்களுடன் உறவாடத் தொடங்கினான்.

“சேர்... நாட்டரிசி மிளகாய்த்தூள் கருவேப்பிலை இவையெல்லாம் எங்கை எடுக்கலாம்?தமிழ்ச்சங்கத்தலைவரைச் சந்தித்தவுடன் முதலில் கேட்ட கேள்வி இதுதான். அவரும் நாதனைக் கூப்பிட்டு,

“நாதன்... எட நாதன்... இந்தத்  தம்பிக்கு வாற சனிக்கிழமை உப்பு புளி தூள் கொஞ்சம் குடுத்துவிடும்என்றார்.

“ஓம் சேர்... ஓம் சேர்...”  என்று கும்பிடு போட்டுக் கொண்டே ராஜாவிடம் முகவரியைப் பெற்றுக் கொண்டார் நாதன்.
(அடுத்த வருடம் தலைவருக்கும் நாதனுக்கும், ராஜா தூளும் அரிசியும் சப்ளை செய்தான் என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்)

அடுத்த சனிக்கிழமை மாலை ஐந்தரை மணியளவில் ராஜாவின் வீட்டின் முன் நாதன் நின்றார். மைம்மல் வேளையில் வாசலில் நின்று கதைத்துவிட்டு ராஜாவை தனது கார் நிற்குமிடம் கூட்டிச் சென்றார் நாதன். காரின் டிக்கியைத் திறக்க, மின்குமிழ் வெளிச்சம் போட்டது. உள்ளே ஒரு மினி ஷொப்’. ஒரு தூள் பக்கற்றை எடுத்து ராஜாவிடம் நீட்டும்போது,

“அண்ணை! இரவிலும் சாமானுகள் குடுக்கிறதுக்கு வசதியாக டிக்கிக்குள்ளை லைற்றும் பூட்டியிருக்கிறியள்என்று ஒரு மொக்குத்தனமான கேள்வியைக் கேட்டான்.

என்ன இவன் படு மொக்கனாக் கிடக்கு. இஞ்சினியர் எண்டாங்கள். ஒரு காரை இன்னும் பாக்கேல்லைப்போல கிடக்குஎன்று நினைத்தவாறு அரிசி பாக் ஒன்றையும் எடுத்து நீட்டினார்.

நாதன் காரை லாவகமாகத் திருப்புவதை பார்த்தபடி நின்ற ராஜாவுக்கு, அவர் கை காட்டியதைக்கூடக் காணவில்லை. தானும் ஒரு கார் வாங்கி ஃபிறீவேயில் சுக்கா சுக்கா என்று ஓட வேண்டும் என்ற ஆசை அவன் மனதில் துளிர்த்தது. அதற்கான முயற்சியில் அடுத்தநாளே இறங்கிவிட்டான். செயன்முறைப் பரீட்சைக்கு முன்னர் தோன்றவேண்டிய எழுத்துப் பரீட்சைக்கு மாய்ந்து மாய்ந்து படிக்கத் தொடங்கினான். பேராதனைப் பல்கலைக்கழகத்தில்கூட அப்பிடியொரு படிப்பைப் படித்திருக்கமாட்டான்.

ஒருமுறை ராஜா ஃபிறீவேயில் கார் ஓடும்போது றைவர்சீற் இரண்டாகப் பிரிந்துவிட்டது. பின்புறம் அப்படியே கழன்றுவிட வீடு வந்து சேர்ந்ததை திறில் கலந்து கதையாகச் சொல்லுவான். அவனது காருக்குள் அப்பொழுது புல்லு முளைத்திருந்தது. அவ்வளவு சுத்தம் அவன்.

சிட்னியில் தனக்குத் தோதான கரப்பான் பூச்சிகள், கறையான்கள் வாசம் செய்யும் மரப்பலகையிலான வீடொன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டான். தனது குலத்தொழிலை இங்கும் ஆரம்பித்தான். தொழிலுடன் கூடவே பிறக்கும் சண்டை சச்சரவுகள் அவனுக்குச் சுவாசம் மாதிரி. ஏ லெவல்பரீட்சையை  ஏழு கடல் தாண்டிப் பல்கலைக்கழகம் சென்றதால், தரம் பன்னிரண்டுப் பாடங்கள் அவனுக்கு அத்துப்படி. ஆங்கிலம் அதிகம் ஓடவில்லை. எப்பொழுதாவது புலம்பெயர்ந்து வெளிநாடு போகலாம் என்ற சிந்தனை அப்பொழுது இல்லாதிருந்ததால் ஆங்கிலத்தில் நாட்டம் இருக்கவில்லை. அவுஸ்திரேலியாவில் தமிழ் மாணவர்களுக்கு மட்டும் ரியூசன் குடுத்தான். ஏமாளிகளும் கோமாளிகளும் நிறைந்த இவ்வுலகில் சிலர் தமது பிள்ளைகளை அங்கே படிக்கவிட்டார்கள். படிக்க வரும் பிள்ளைகள், துள்ளி வரும் கரப்பான் பூச்சிகளைப் பார்த்துப் பயந்துவிடலாம் என்பதால் அவை ஓடி ஒழிந்துகொள்ள பூச்சாடிகளை வைக்கலாம் என மனைவி மதிவதனி ஆலோசனை சொன்னாள். மனைவி சொன்னால் அதற்கு ஏது அப்பீல்? மதிவதனிக்கு சீதனத்தைக் கொண்டு வந்து குவித்ததும், அதை சீரழிப்பதற்கென்று மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றதுடன் அவர் கடமை முடிந்தது.

தம்பதிகளுக்கிடையில் ஒரு உடன்பாடு உண்டு. ஜே.ஆர் - ரஜீவ் உடன்படிக்கை மாதிரி. வெளியிலே எங்கே என்றாலும், எவ்வளவு பேர் மத்தியில் என்றாலும் அவளைத் திட்டுவதற்கோ அடிக்கக் கை ஓங்குவதற்கு அவனுக்கு உரிமை உண்டு..

|மொக்கு! மொக்கு!! இருபது வருஷமாகியும் லைஷென்ஸ் எடுத்துக் கார் ஓடத் தெரியாது. புலம்பெயர்ந்து வந்த தமிழர்களிலை உனக்கும் உன்ரை கொக்காவுக்கும்தான் கார் லைஷென்ஸ் இல்லை.|

ஆனால் வீட்டிற்குள் பெட்டிப்பாம்பு. தோப்புக்கரணம் நல்லாத் தெரியும். காலை பத்துமணி மட்டில்தான் மனைவி எழும்புவார். இவர் ‘பெட் கொஃபிபோட்டுக் கொடுக்க வேண்டும். சில்மிஷம் செய்யும் நாட்களில் காலும் பிடித்து விட வேண்டும். பின்னர் நெட்டி முறிச்சுக்கொண்டு அவர் சொல்லும் பொருட்களை ஒரு பேப்பரில் குறித்து, அதனுடன் மதியச் சாப்பாட்டையும் வாங்கி வந்துவிடுவார். இப்பொழுது மதிவதனி பிள்ளைத்தாச்சி.

ஒருநாள் சிட்னி மாநகரின் களை கட்டும் பிளமிங்ரன் (Flemington) மாக்கற்ரில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும்போது எதேச்சையாகத்தான் என்னைச் சந்தித்தான். ராஜாவைவிட நான் நான்கு வயதுகள் இளமையானவன். ஊரில் இவனிடம்தான் தூய பிரயோக கணிதங்களை ஐயம் திரிபுறக் கற்றேன்.

என்னடாப்பா கணேஷ் இஞ்சை நிக்கிறாய்என் தோள்மீது கை போட்டான் ராஜா.

அகதி

“நாங்கள் வந்து எட்டுமாதங்கள் ஆகுது அண்ணை. எங்கடை சோகக்கதையைச் சொல்ல ஒருநாள் போதாது. நான் ஒரு படகிலும், மனைசி பிள்ளையள் இன்னொரு படகிலுமாக... இப்ப நினைச்சுப் பாத்தாலுமே வயித்தக் கலக்குது. கப்பல் பயணம் மிகவும் கொடுமையானது. கடலிலை மீன் பிடிச்சு, கப்பலுக்கை சமைச்சு... சாப்பிட்டதும் அதுக்கைதான் சத்தி எடுத்ததும் அதுக்கைதான்... களவா ஒருநாளுமே வெளிக்கிடக் கூடாது.

எது நடந்தாலும் நாட்டைவிட்டு வெளியேறுவதில்லை என்று பிடிவாதமாக இருந்தேன். 2009 இறுதி யுத்தம் எங்களைப் புரட்டிப் போட்டதுக்குப் பிறகுதான்  நாட்டை விட்டுப் புறப்பட்டேன். எங்களைக் கிறிஸ்மஸ் தீவுக்குக் கிட்ட வைச்சுத்தான் அவுஸ்திரேலியக் கடற்படையினர் கைது செய்தார்கள். நாங்கள் அங்கேதான் தங்க வைக்கப்பட்டோம், விசாரிக்கப்பட்டோம்.

மனிசி பிள்ளையளை ஒருக்காக் கூட்டிக்கொண்டு வீட்டை வாருமன். ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் மட்டிலை வந்தால் நல்லதுதனது விசிற்றிங்கார்ட்டை எனக்குத் தந்தான் ராஜா.

“அது சரி இப்ப என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

“தமிழ் ஆக்களின்ரை கொன்ஸ்றக்சன் கொம்பனியிலை வேலை செய்யிறன். நிலத்திற்கு மாபிள் சிலேற்றுப் போடுறது. அதுவும் இப்ப என்னைப்போல ஆக்கள் நிறையப்பேர் வந்து போட்டி. நீங்கள் இஞ்சினியறிங் படிச்சனியள் எண்டு தெரியும்.

“சிவில் இஞ்சினியறிங் செய்தனான். கவுன்சில் ஒண்டிலை வேலை பாத்தனான். இப்ப ரிட்டையர் பண்ணிட்டன்.

“அம்பது வயது மட்டிலைதானே வரும். அதுக்கிடையிலை....

“அம்பத்தி மூண்டு. உவங்களோடை மாரடிக்கேலாது. இப்ப முழு நேரமா ரியூசன் குடுக்கிறன்.

“ரியூசனா?என்னுள் ஒரு பெருமூச்சு உண்டானது.

முதலும் வட்டியும்  

ராஜாவால் உருப்படியாக ஒரு கடிதம் ஆங்கிலத்தில் எழுத முடியாது. அவனுடன் படித்த சகநண்பர்கள் பெற்றுக் கொடுத்த அந்த வேலையை தக்க வைப்பதற்காக அவர்களிடமே ஆலோசனை கேட்டுத் தொந்தரவு செய்தான். இதற்குள் சீட்டுக்காசு வட்டிக்கணக்கு திருகுதாளங்களால் பலரும் அவனை வெட்டி ஓடிவிட்டார்கள். நண்பர்கள் என்பவர்கள் நிலையானவர்கள் அல்ல என்பது அவன் வாதம். இந்த நிலையில் வேலைக்கு லீவு போடத் தொடங்கினான். நிர்வாகத்திடம் தொண்டைத் தண்ணி வற்றக் கத்துவான். கடைசியில் வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதற்கு ரிட்டையர் என்று செல்லப்பெயர் கொண்டு அழைத்தான்.

வட்டிக்காசைக் கூட்டிப் பார்த்து, லாபம் ஒரு எல்லையைத் தாண்டும்போது சம்பந்தப்பட்டவர்களைக் கூப்பிட்டு பார்ட்டி வைப்பான். அவர்களும் ஒரு மார்க்கமாக வந்து போவார்கள். அந்தப் பார்ட்டியில் கலந்து கொள்பவர்களில் பலரை அடுத்த பார்ட்டியில் பார்க்க முடியாது..

கத்தரிக்காய் வெள்ளைக்கறி, இறைச்சிக்கூட்டுடன் எங்களுக்குப் பார்ட்டி வைத்தான். என் மனைவி ஒரு 'புத்தா' சிலையை மதிவதனியிடம் கொடுத்து, “இதின்ர வயித்தைத் தடவிக் கொண்டு இருங்கோ. காசு கொட்டோ கொட்டெண்டு கொட்டும்என்றாள்.

சாப்பாட்டடின் பின்னர் நானும் ராஜாவும் வீட்டு வேலைகள் செய்தோம். அப்போது ராஜா புதுவீடு ஒன்று கட்டத் தொடங்கியிருந்தான்.

காரிற்குள் ஏறும்போது எனது காதை முறுக்கித் திருகினாள் என் தர்மபத்தினி.

“எனக்கு ஒருநாளைக்கு வீடு மொப் பண்ணித் தரேலாது. நாள் முழுக்க ஆற்றையேன் நிலத்தைக் கொத்திக் கிழறுறியள்.

“ராஜாவல்லே எங்களுக்கு ஒரு வீடு வாங்கித் தரப் போறான்என்று சொல்ல, “என்னப்பா புதுக்கதை விடுறியள்?என்று ஆச்சரியப்பட்டாள் மனைவி.

அவுஸ்திரேலியாவிற்குள் தமிழ் அகதிகளின் படகுகள் வரவர ராஜாவின் மகிழ்ச்சி பெருகும். அவனின் வியாபாரம் இப்பொழுது அவர்களுடன்தான். விருந்து முடிந்த மறுநாள் மோட்கேஜ் புறோக்கர் ஒருவருடன் எனது வீட்டிற்கு வந்தான் ராஜா.

அண்ணை! நானும் மனிஷியும் அப்பிடி இப்பிடியெண்டு வேலையள் செய்து பிழைக்கிறம். எங்களுக்கு என்னண்டு லோன் தருவான்கள்.

“அதுக்குத்தானே ஒரு ஆளைக் கூட்டி வந்திருக்கிறன். லோனுக்கு நான் பொறுப்பு.

“அப்பிடியெண்டாலும் பத்தாயிரம் மட்டிலை டிப்பொஷிற் போட வேணுமல்லே!

“குறைஞ்ச வட்டியிலை நான் உனக்கு காசு தருவன். மாதம் மாதம் வட்டியைத் தா! றென்றுக்கு இருந்து ஆருக்கேன் காசு குடுக்கிற நேரம், நீயே உனக்கெண்டு ஒரு சொந்த வீட்டை வாங்கிப் போடு.

லோனுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, மறுபுறம் ராஜாவும் நாங்களும் வீடு தேடி வலை விரித்தோம். வீடு ஒன்று ‘ஹோம்புஸ்என்ற இடததில் - கடைகள், தமிழ் உணவு விடுதிகள், நூலகம், உயர்தரப்பாடசாலை என்பவற்றிற்கு அண்மையாக உள்ள தொடர்குடியிருப்பில் சரிவந்தது. பத்தாயிரத்திற்குப் பதிலாக எட்டாயிரம் டொலர்கள்தான் ராஜாவினால் கொடுக்க முடிந்தது.

“எங்கை அண்ணை மிச்சத்துக்கு நான் போவன். அதையும் நீங்கள்தான் ஒழுங்கு செய்து தரவேணும்.

“அப்பிடியெண்டா டபிள் வட்டிக்குத்தான் ஆரிட்டையேன் எடுத்துத் தரவேணும்”  தானே அந்தப் பணைத்தையும் கொடுத்து, இரட்டை வட்டியும் வாங்கி போதாக்குறைக்கு நகையும் எங்களிடம் வாங்கி வைத்துக் கொண்டான் ராஜா.

அண்ணை! அந்தக் காலத்திலை பங்குவட்டி, முதல்வட்டி படிப்பிக்கிறதிலை நீங்கள் தலைகரணம் என்ன?

அடிக்கடி ராஜாவின் வீட்டிற்குச் சென்று ‘லான்ஸ்கேப்பிங்செய்வதற்கு உதவி புரிந்தேன். விதம் விதமான லைற்றுகள் பூட்டுவதற்கு உதவி செய்தேன். வேலையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதை, தனக்கு வீடு கட்டுவதற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் ராஜா. சிட்னியில் நகரங்களையெல்லாம் மேய்ந்து, வீடுகள் எல்லாவற்றையும் பார்த்து கடைசியில் ‘பிச்சைக்காரன் வாந்திஎடுத்தது போல ஒரு வீட்டைக் கட்டி முடித்தான்.

வீடு கட்டி முடிந்தவுடன் ராஜாவின் பெற்றோர் இலங்கையிலிருந்து வந்தார்கள். மதிவதனி அப்போது நிறைமாதம். தகப்பனார் பொன்னுத்துரைக்கு அவுஸ்திரேலியாவும் பிடிக்கவில்லை, ராஜாவின் நடவடிக்கைகளும் பிடிக்கவில்லை.

அவுஸ்திரேலியாவில் ஆரம்பப் பள்ளியில் இருந்து இடைநிலைப்பள்ளிக்குப் போகும் போது ஒரு கண்டத்தைக் தாண்ட வேண்டும். சிட்னியில் அது ‘பெருங்கண்டம்’. ராஜாவின் இரண்டாவது மகளும், எனது மூத்த மகளும் ஒரே வகுப்பில் படித்தார்கள். நல்லகாலத்திற்கு வெவ்வேறு பாடசாலைகள். அந்தப் பரீட்சையில் எனது மகள் நல்ல நிலையில் தேறி, நகரத்தின் அதிசிறந்த பாடசாலைக்குச் சென்றாள். அதுவே பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தொடங்குபுள்ளி ஆயிற்று.

“றிரெய்னிங் வோல் கட்ட வேணும். காசு தேவையாக் கிடக்கு கணேஷ். முழுக்காசையும் தந்துவிடுஎன்றான் ராஜா. அப்போதுதான்,

முள்ளிவாய்க்காலிலை  எங்கட பரம்பரை அழியேக்கை நாங்களும் அங்கேயே செத்துத் தொலைஞ்சிருக்க வேணும்! நெஞ்சில் ஈட்டியாகச் செருகியது அந்த நினைவு.

●●●●●      

அதிதியும் ஒரு அகதியும் சந்தித்துக் கொண்டதைப் பற்றிச் சொல்லிவிட்டேன். இனி மீண்டும் கதைக்கு வருவோம்.
●●●●●

நான்  பொன்னுத்துரையைச் சந்தித்ததன் பிற்பாடு பல தடவைகள் ராஜாவுடன் சண்டை போட்டுவிட்டார்.
“உந்த நாசமாப் போனதை விட்டிட்டு, வேலை செய்து பிழைக்கிற வழியைப் பார். அதுகள் அகதியாக வந்ததுகள். கஷ்டத்தை அனுபவித்ததுகள். அதுகளோடை உந்தத் திருகுதாளி விளையாட்டை வைச்சுக்காதைஉபதேசம் செய்தார்.

இதையெல்லாம் ராஜா எங்கே கேட்டான். உலகத்தில் இப்ப கொலை, களவு, விபச்சாரம் செய்கின்றவர்கள் எல்லாம் தலை நிமிர்ந்து கம்பீரமாக நடக்கிற காலம்!

எந்தவித சுதந்திரமும் இல்லாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தார்கள் பொன்னுத்துரையும் மனைவியும்.

சுயமாக ஒரு கடை கண்ணிக்குப் போய், என்னாலை ஏதாவது வாங்க முடியுதா? ஊரிலை தோட்டம் துரவு எண்டு திரிஞ்ச என்னை இஞ்சை கூப்பிட்டுச் சித்திரவதை செய்யுறியள். இந்த நாட்டிலை என்னத்துக்குத்தான் என்னாலை கை உயர்த்த முடியும்? இஞ்சை நான் இருக்க விரும்பவில்லை. நீர் இருந்து பிள்ளைப்பேத்தைப் பாத்திட்டு வாரும்மனைவியிடம் சொல்லிவிட்டு பொன்னுத்துரை இலங்கைக்குப் போய்விட்டார்.

ஊரில் சந்தோஷமாக்க் காலத்தைக் கழித்த தாயாருக்கு அவுஸ்திரேலியா பெரிய சிறையாக இருந்தது. சிலபொழுதுகளில் மருமகளுடன் சண்டையும் வரும். அப்பொழுது மாயமாக மறைந்தும் விடுவார். தொலைந்து போன அவரை ராஜா தேடிப் பிடித்து கூட்டி வருவான். அவருக்கு வாயிற்குள் பாக்கு வெற்றிலையைத் தவிர வேறு எதையும் அடக்கி வைத்திருக்கத் தெரியாது. போறவாற இடமெல்லாம் மகனையும் மருமகளையும் பற்றிக் கதை கதையாகச் சொல்லுவார்.

தோப்பூர் மகாராஜாவுக்கு புலம்பெயர்ந்த காலத்திலிருந்து ஒரு ஆசையுண்டு. தாயகம் சென்று வன்னியிலை ஏக்கர் கணக்கிலை காணி வாங்கி – வயல், பண்ணை, தென்னந்தோட்டம் வைக்க வேண்டும். வயல் வரப்பிலை வேஷ்டி நாஷனல் சகிதம் கம்பீரமாகப் நடந்து போகும்போது, குடியானவர்கள் எல்லாம் முதுகைக் கூனிக் குறுக்கி ‘ஐயா! கும்பிடுறேன் சாமிஎன்று சொல்ல வேண்டும். ஊரவர்கள் பிரச்சினைக்கு பஞ்சாயத்து செய்து வைக்கவேணும்.

அவுஸ்திரேலியாவில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் வீடு வீடாகக் காசு சேர்க்கும்போதும் இவரின் வீட்டுக் கதவைத் தட்டுவதில்லை. கடிநாயுடன் மல்லுக்கட்ட அவர்கள் தயாரில்லை.

திடீரென ஒருநாள் பிலிப்பீன்ஸ் நாட்டவன் ஒருவனுடன், வீட்டுக்கதவைத் தட்டினான் ராஜா.

இவர் திருவாளர் ரேமண்ட். றியல் எஸ்ரேற்றில் வேலை செய்கின்றார். இன்னும் இரண்டு வாரங்களில் எனது காசைத் தராவிட்டால், இவர் மூலம் உனது வீட்டை விற்று எனது காசைத் தாபாம்பு சீறிக் கொத்துவது போலக் கத்தினான் ராஜா.

“றியல் எஸ்ரேற்காரன்களிட்டைப் போனால், வீடு விக்கிற காசிலை ஐஞ்சு வீதம் குடுக்க வேணும். இவரும் அங்கேதான் வேலை செய்கின்றார். ஆனா பிரைவேற்ராக உனக்கு விற்றுத் தருவார். இரண்டு வீதம் குடுத்தால் போதும்.

கல்லுளிமங்கன் போலக் கதிரைக்குள் புதைந்து இருந்த ரேமண்ட், எழுந்து வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, “இருநூறு தேறும்”  என்று சைகை செய்தான்.

இரண்டு என்ன? இருபது வருடங்கள் சென்றாலும் என்னால் ராஜாவின் காசைக் கொடுக்க முடியாது என்பதை அவன் அறிவான்.

வீடு வாங்கி ஒருவருடத்திற்குள் விற்பனைக்கு விடப்பட்டதால் விற்பனையில் பெரிதாக லாபம் இருக்கவில்லை. கையெழுத்தை மாத்திரம் வைத்தேன். மிகுதியை அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். இரண்டாயிரம் டொலர்கள் மாத்திரம் எங்களுக்கு லாபமாகக் கிடைத்தது. மீண்டும் ஒரு வாடகை வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தோம்.

ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாறிச் செல்வது என்பது லேசுப்பட்ட விடயமல்ல. இன்னமும் போன வீட்டிற்கு ரெலிபோன், கரண்ட் கிடைக்கவில்லை, நிறையப் பெட்டிகள் அடுக்கப்படவில்லை. மூன்று கிழமைகள் ஆகிவிட்டன. ஒரு செத்தவீடு நடந்ததன் துயரம் அது.

அப்போதுதான் பூதாகாரமாக வந்தது அந்தச் செய்தி.

அவசர அவசரமாக வைத்தியசாலைக்குச் சென்றோம். பலமாக வீசியிருந்த காற்று மரங்களை அடித்து முறித்துப் போட்டிருந்தது. உஸ்ணக் காற்று எங்குமே அனலாக வீசியது. அவுஸ்திரேலியாவில் மூன்று டபிள்யுக்களை நம்பக்கூடாது என்பார்கள். வேலை, காலநிலை, பெண்---வேர்க், வெதர், வுமன்.

ராஜா விரும்பியபடியே ஆண் குழந்தை பிறந்திருந்தது. மதிவதனி கட்டிலில் படுத்திருந்தாள். தொட்டிலிற்குள் குழந்தை. மூன்று பெண்பிள்ளைகளும் நாடிக்குக் கையூன்றியபடி தாயின் அருகில் கவலையுடன் இருந்தனர். ராஜாவைக் காணவில்லை. வேறு சிலரும் பார்வையாளர்களாக நின்றனர்.

சிசுவின் தலை உடலளவு பருமனில் இருந்தது. அது அங்குமிங்குமாகப் புரண்டு உத்தரிக்கின்றது. எல்லாரும் குழந்தையைப் பார்த்தபடி நின்றார்கள்.

பார்வையாளர்களில் என்னுடன் கப்பலில் வந்த தெய்வசிகாமணி நின்றான். அவனது நட்பு மரணத்தில் துளிர்த்தது. கப்பலில் பிறந்தது. அவன் போகும்போது தன்னைச் சந்திக்கும்படி சொன்னான்.

இலட்சம் பேரிலை ஒருத்தருக்குத்தான் இந்த நோய் வருமாம். டொக்ரர் சொன்னவர்என்றான் சிகாமணி.

“தோப்பூர் மகாராஜாவின் தேட்டம்என்று ஒரு மூதாட்டி நொடித்துவிட்டுச் சென்றது என் காதில் விழுந்தது.

ஆண்டவன் இப்படியொரு குழந்தையை அவர்களுக்குக் கொடுத்திருக்கக் கூடாது.மனைவி ஒன்றும் சொல்லாமல் அருகே வந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன. விடைபெறும்போது, “கணேஷ்... நேரம் இருக்கும்போது வீட்டிற்கு வாஎன்றான் சிகாமணி.

சிகாமணி தான் ‘ஹோம்புஸ்சில் ராஜாவின் வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பதாகச் சொன்னான். இருவரும் எமது முகவரிகளைப் பரிமாறிக் கொண்டோம்.


சிகாமணியின் வீட்டு முகவரியைப் பார்த்த நான் திகைத்துப் போனேன். அந்த முகவரியும் - நான் விற்ற வீட்டின் முகவரியும் ஒன்றாக இருந்ததுதான் அதற்குக் காரணமா?