உயிர்காற்றிற்கு அஞ்சாதொரு கடற்காற்றில் அறப்போர்.. (கவிதை) வித்யாசாகர்!



pover

ரு பிடி வீரம்
உலுக்கிப்போனதிந்த நகரம்
ஒரு அறமமேந்தியப் போர்
உடைந்துபோனது இந்திய முகம்;

ஒரு காட்சி
விழுங்கித் தின்கிறது பகலையும் இரவையும்
உயிர் சாட்சி
ஒருங்கே நின்றது ஆணும் பெண்ணும்;;

சிறு கடலடி
சினத்தில் பொங்கியது மானம்
இனி ஒரு கொடி
இரண்டாய் ஆனாலும் ஆகும்;

எவர் இவர்
எம் உரிமை பறித்தல் தீது
எது வரினு மெமது
வாக்கு வெல்வதே மாண்பு;


சுடுசொல்
சுடுசொல் போட்டு வாரீர்
ஒரு சொல்
ஒரு சொல் சுட எழுவோம்;

விதையாய் உயிர்களை
விதைத்த தேசம்
விழுந்தாலும் வீரம் பூண்டே
எழுவோம்;

அலையாய்
அலையாய் மீண்டும் வருவோம்
கடலாய்
ஒரு நீதிக்கென உயிர் தருவோம்;

இனி நில்லோம்
எக் கயவர்தம் கபடமினி ஓயும்
கடலும் அலையுமெம் காளையின்
வீரத்தைப் பேசும்;

பரம்பரை பரம்பரை யாட்டமாடு
புஜமது புடைத்திட பாடு
தமிழச்சி முலைப்பால் குடித்த நெஞ்சே
உன் காளைக்கும் உரிமையுண்டு கேளு;

அடங்கி
அடங்கிப் போனதே சாபம்
ஒதுங்கி
ஒதுங்கி நின்றதே பாவம்;

இனி துடித்துயெழு
நிலம் அதிர்ந்திட வீரம் கொள்
அடிமை உடை
தணல் பரப்பி நீதி யுரை

அறம் அறைந்திட
உரிமையைக் கேட்டு வாங்கு
புரட்சி செய்
பாரிற்கு இவண் தமிழனென்றுக் காட்டு!!
-----------------------------------------------------------------------------
வித்யாசாகர்