நாமுணர்வோம் !
( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )
முள்ளிருக்கும் செடியினிலே
முகிழ்த்துவரும் ரோஜாவே
முள்பற்றி எண்ணாமல்
முறுவலுடன் மலர்ந்துநிற்கும்
நல்லவர்கள் வாழ்வினிலே
நஞ்சுநிறை முள்வரினும்
மெல்லவரும் விலக்கிநின்று
நல்லவற்றை நமக்களிப்பர் !
செடிவளரும் கொடிவளரும்
சிலவெமக்கு மருந்தாகும்
அதனூடே வளர்ந்துவரும்
ஆகாத செடியுமுண்டு
அதுபோல வாழ்வினிலே
ஆலகாலம் வரும்வேளை
அதைப்போக்க வருபவரே
அகிலத்தின் இரட்சகர்கள் !
வருவார்கள் போவார்கள்
வரவெமக்குத் தெரியாது
வரமளித்து விட்டுவிட்டு
மெளனமாய் போய்விடுவார்
தெருவோரம் நின்றாலும்
திரும்பியே நாம்பாரோம்
அவர்சென்ற பின்னால்த்தான்
அவர்பெருமை நாமுணர்வோம் !