ஜீவநதி 100


ஈழத்து இலக்கிய உலகில் பல நூறு சஞ்சிகைகள் இதழ் விரித்துப் போயிருக்கின்றன. இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய சஞ்சிகைகளில் ஒன்றாகவும், காத்திரமான படைப்புகளால் தன் தனித்துவத்தைப் பேணும் வகையிலும் ஜீவநதி சஞ்சிகை வெளிவருவது போற்றிப் பாராட்ட வேண்டியது.

ஈழத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் என் வீடு தேடி வரும் அச்சு இதழாக, என் கையில் கிட்டும் போது அதை நெருக்கமாக நுகரும் ஒரு உணர்வு.
வணிக சமரசங்கள், பொழுது போக்கு நிரப்பல்கள் இன்றி அது தரும் காத்திரமான இலக்கியப் பேட்டிகள், விமர்சனங்கள், சிறுகதைகள் என்று ஈழத்து இலக்கிய உலகின் விசாலமான பார்வையின் திண்ணையாகவே இருக்கிறது.

சினிமாவைத் தன் எழுத்தில் தொட்டாலும் அது உலக சினிமாவை உள்ளூர் வாசகனுக்கு அறிமுகம் செய்யும் பணியாகவே இருக்கிறது. யாழ்ப்பாணம் தாண்டி, மலையக,முஸ்லீம் எழுத்தாளர்களையும் அரவணைத்து வைத்திருக்கிறது. வாசகர் கடிதத்தில் புலமை சார் அறிஞர்கள், கல்விமான்கள் வரை எழுதுகிறார்கள்.

மூத்த ஆளுமை தெணியானோடு தொடங்கி எண்ணற்ற இளம் எழுத்தாளர் பலரின் எழுத்தைப் பதித்துக் களம் அமைப்பதை ஒவ்வொரு இதழிலும் பார்க்க முடிகிறது.

போர்க்கால இலக்கியத்தில் இருந்து, ஈழத்தின் பல்வேறு சமூகச் சிக்கல்களை உள்ளடக்கி ஒவ்வொரு இதழும் தன்னை நிறுவுகிறது.

ஈழத்தின் கலை இலக்கியப் படைப்பாளி திரு கலாமணி அவர்களின் புலமைச் சொத்து அவரின் மகர் பரணீதரனுக்கும் பாய்ச்சப்பட்டிருப்பதை இந்த ஜீவநதி வழியாகவே பார்க்க முடிகிறது.
ஜீவநதி பீடத்தில் மூத்த ஆளுமைகளை இருத்தி வைத்து, அவர்களின். நெறிப்படுத்தலோடு ஜீவ நதி இதழாசிரியர் இளவல் பரணீதரன் கலாமணி இன்று நூறு இதழ் வரை ஒரு ஓர்மத்தோடு இயக்கிக் காட்டியிருக்கிறார்.

ஜீவநதி சஞ்சிகை, இலக்கியச் சந்திப்பு, மூத்த படைப்பாளிகள் கெளரவம் மற்றும் நூல் வெளியீடுகளிலும் தன் பணியை அகல விரித்திருக்கின்றது.

ஈழத்துப் பெண் எழுத்தாளர் சிறப்பிதழாக நூறாவது ஜீவநதி இதழ் வெளிவந்திருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் ஆக்கங்கள், எழுத்தாளர்களை நோக்கும் போது மலைத்துப் போகுமளவுக்கு  மாதக்கணக்கில் ஒரு பெரிய பட்டாளத்தோடு சேர்ந்து செய்து முடிக்க முனையும் பணியை இவர் செய்து முடித்திருப்பது ஆச்சரியத்தை விளைவிக்கிறது.


ஈழத்து இலக்கிய உலகில் செழுமையான பங்களிப்பை நல்கும் ஜீவநதி இதழை நம் எல்லோரும் வாங்கிப் படித்தல் அவசியம்.

 "ஜீவ நதி"சஞ்சிகை 100வது இதழைத் தொடும் இவ்வேளை இந்த இதழை வாழ்த்தி வணங்குகிறேன், பரணீதரன் கலாமணி மற்றும் இந்த சஞ்சிகையின் ஆலோசக பீடத்தில் இருப்போர், எழுத்தாளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.