கபாலி
வந்துட்டேன்னு சொல்லு...நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சூப்பர் ஸ்டாரின் கம்பீர குரலில் கபாலி டீசர் ஒரு சில நாட்களுக்கு முன் வந்தது. டீசர் வந்த அடுத்த நொடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் கபாலி பீவர் தர்மா மீட்டரை தாண்டி எகிறியது.
அத்தனை பேரின் ஆவலும் நிறைவேறும் வகையில் உலகம் முழுவதும் கபாலி எண்ணிலடங்கா திரையரங்குகளில் இன்று வெளிவந்துள்ளது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் பழைய ரஜினியாக புதிய களத்தில் இறங்கியிருக்கும் சூப்பர் ஸ்டாரின் இந்த கபாலி எப்படியிருக்கிறது...இதோ...
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் சிறையில் இருந்து 25 வருடங்கள் கழித்து வெளியே வருகிறார், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடி சிறை செல்கிறார். கிட்டத்தட்ட நெல்சன் மண்டேலா ஸ்டைல்.
அவர் சிறையிலிருந்து வந்த உடனே ஒரு சண்டைக்காட்சியுடன் டீசரில் வரும் கபாலிடா காட்சி வருகிறது. சிறை சென்ற பின்னால் அவர் குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது, அங்குள்ள மக்கள் என்ன சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்து அதை சரி செய்ய முயலுகிறார். இடைவேளைக்கு பின்னால் படத்தின் கதைப்போக்கு மாறுகிறது.
க்ளைமேக்ஸ் இரண்டாம் பாகம் வருமா என்ற ஒரு சஸ்பென்ஸோடு முடிகிறது.
நடிகர், நடிகைகளின் நடிப்பு
படத்தின் மொத்த பலமே சூப்பர்ஸ்டார் தான். வழக்கமான மாஸ் சீன்கள் மட்டுமல்லாது ரஜினியின் இன்னொரு பக்கமான செண்டிமெண்ட் காட்சிகளிலும் பின்னி எடுத்துள்ளார்.
பழைய கெட்டப்பில் பார்க்கையில் பில்லா பட ரஜினியை நினைவுபடுத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் இன்னும் தன்னுடைய அதே ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல என்ற படையப்பா வசனம் தான் ஞாபகம் வருகிறது., பள்ளி நிகழ்ச்சியில் தான் எப்படி டானாக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும், தனது மகளிடம் பேசும் காட்சியிலும் அசத்துகிறார்.
ஜான் விஜய் ரஜினியின் நண்பராக வருகிறார். உடன் வரும் அட்டக்கத்தி தினேஷும் தன் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். தன்ஷிகா பில்லா நயன்தாரா மாதிரியான ஸ்டைலான பெண்ணாக வருகிறார். சண்டைக்காட்சியிலும் அசத்துகிறார். ரித்விகாவின் கதாபாத்திரம் பாராட்டும்படியாக உள்ளது. சூப்பர்ஸ்டாரை எதிர்த்து பேசும் காட்சியில் கைதட்டல் வாங்குகிறார். ராதிகா ஆப்தே தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணாகவும், சூப்பர்ஸ்டாரின் மனைவியாகவும் வருகிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ரஜினியுடனான காதல்காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.
வில்லனாக கிஷோர், லிங்கேஷ் ஆகியோர் வந்தாலும் முக்கிய வில்லனான வின்ஸ்டன் சா அசத்துகிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
பாடல்கள் ஏற்கனவே ஹிட் தான். பின்னணி இசையிலும் பின்னி பெடலெடுத்துள்ளார் சந்தோஷ் நாரயணன்.
ரஞ்சித் சூப்பர்ஸ்டாரை தன்னுடைய கதைக்கேற்ப முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார். படத்தில் தன்னுடைய வழக்கமான பல சிம்பாளிக் காட்சிகளை வைத்துள்ளார். வசனங்களில் அசத்தியுள்ளார். ரஜினியின் படமாக மட்டுமல்லாமல் ரஞ்சித் படமாகவும் மாற்றியிருக்கிறார்.
படத்தின் பல காட்சிகள் செட் ஒர்க் தான் என்றாலும் தெரியாத அளவுக்கு மலேசிய, தாய்லாந்து தெருக்களை கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலைஇயக்குனர் ராமலிங்கம். எதார்த்தமான ஸ்டண்ட் காட்சிகளில் அசத்தியுள்ளனர் இரட்டையர்களான அன்பறிவ். இரண்டரை மணி நேரத்துக்கேற்றபடி விறுவிறுப்பாக கதையை கட் செய்துள்ளார் பிரவீண் கே.எல்
கிளாப்ஸ்
ரசிகர்கள் விரும்பும் சூப்பர்ஸ்டாரின் ஸ்டைல் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள், நாசர் காட்சிகள், ரஜினி யாரை நம்புவது என்ற சஸ்பென்ஸ் காட்சிகள்
ரசிக்க வைக்கும் படத்தின் வசனம், சூப்பர்ஸ்டார் மட்டுமல்லாமல் மற்ற நடிகர், நடிகைகளின் நடிப்பு
மிரட்டும் பின்னணி இசை
பல்ப்ஸ்
ஒரு கேங்ஸ்டர் படம் என்று எதிர்பார்த்து செல்பவர்களுக்கு சண்டை குறைவு தான்.
மொத்தத்தில் கபாலி முந்தைய படங்களின் தோல்வியை உடைத்தெறிந்து சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.
No comments:
Post a Comment