உலகச் செய்திகள்


இரண்டாம் உலகப்போரிற்கு பின் ஜப்பானில் இடம்பெற்ற பாரிய கொலை சம்பவம் 

பங்களாதேஷில் பொலிஸார் தாக்குதல் ; 9 இஸ்லாமிய கடும்வாபோக்குவாதிகள் பலி, ஒருவர் கைது

சோமாலியாவில் இரட்டை குண்டுத் தாக்குதல் : ஐ.நா.வின் 9 பாதுகாவலர்கள் பலி : அல் ஷபாப் பொறுப்பேற்பு

பிரான்ஸில் மீண்டும் பயங்கரம் ; பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் சுட்டுக் கொலை!

லிபியக் கடற்கரையில் கரையொதுங்கிய 87 சடலங்கள்

நேபாளத்தில் 54 பேர் பலி

சிரியா இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 44 ஆக உயர்வு: தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றது











இரண்டாம் உலகப்போரிற்கு பின் ஜப்பானில் இடம்பெற்ற பாரிய கொலை சம்பவம் 

26/07/2016 ஜப்பான் நாட்டில் கனகவா மாகாணத்தில் உள்ள சகமிஹரா நகரில் முதியோர்இல்லமொன்றில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 19 பேர் பலியாகியுள்ளதோடு 26 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த இல்லம் மாற்றுத் திறனாளிகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பாக அதிகாலை 2.30 மணியளவில் குறித்து இல்லத்தின்நிர்வாகி, 20 வயதுமிக்க இளைஞரே தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளார்.



இதனையடுத்து அதிகாலை 3.00 மணியளவில் குறித்த இளைஞன் தானாகவே கனகவாமாகாண பொலிஸாரிடம் சரணடைந்தார்.

குறிந்த இளைஞன் அம்முதியோர் இல்லத்தின் முன்னாள் பணியாளர் என்றுகூறப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரிற்கு பின் ஜப்பானில் இடம்பெற்ற பாரிய கொலை சம்பவம் இதுயென்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி வீரகேசரி 












பங்களாதேஷில் பொலிஸார் தாக்குதல் ; 9 இஸ்லாமிய கடும்வாபோக்குவாதிகள் பலி, ஒருவர் கைது

26/07/2016 பங்களாதேஷின் தலைநகரான டாக்காவிற்கு அருகில் இருக்கும் ஒரு மறைவிடத்தின் மீது அந்நாட்டுப் பொலிஸார் தாக்குதல் நடத்தியதில்  இஸ்லாமிய கடும்வாபோக்குவாதிகள் என சந்தேகப்படும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் எந்த குழுவை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ஜமாத்துல்-முஜாஹிதீன் இஸ்லாமியவாதக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் என சந்தேகப்படும் பலரை பங்களாதேஷ் பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.
அண்மையில் டாக்காவில் கபே ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இந்த குழுவின் ஈடுபாடுள்ளதாக  பங்களாதேஷ் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











சோமாலியாவில் இரட்டை குண்டுத் தாக்குதல் : ஐ.நா.வின் 9 பாதுகாவலர்கள் பலி : அல் ஷபாப் பொறுப்பேற்பு

26/07/2016 சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே இடம்பெற்று இரட்டை இரண்டு தற்கொலைப்படை தாக்குதலில் ஐக்கிய நாடுகளின் 9 பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அல் ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  
 மொகடிசுவில் தொடர்ந்து  துப்பாக்கிச்சூடு மேற்கொள்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
ஒரு தாக்குதல் விமான நிலையத்தின் வாயில் அருகில் உள்ள சோதனைச்சாவடி பகுதியிலும் மற்றுமொரு தாக்குதல் விமான நிலையத்திற்கு சற்று அப்பால் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளனர். 9 பேர் ஐ.நா., பாதுகாவலர்கள் எனவும், 3 பேர் பொது மக்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் சம்பவத்திற்கு அல் சபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வெளிநாட்டினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.     நன்றி வீரகேசரி 











பிரான்ஸில் மீண்டும் பயங்கரம் ; பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் சுட்டுக் கொலை!

26/07/2016 வடக்கு பிரான்ஸில் ரூவானுக்கு அருகே தேவாலயமொன்றில் 6 பேரை பிடித்து பணயக்கைதியாக வைத்திருந்த இரு ஆயுதாரிகளும்  கொல்லப்பட்டார்கள்.
பிரான்சின் நார்மான்டி பகுதியில் அமைந்துள்ள செயின்ட் எதின்னே டு ரோவாரி (Saint-Etienne-du-Rouvray) தேவாலயத்தினுள் நுழைந்த இனந்தெரியாத இரு நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி தேவாலயத்தில் இருந்த 5 முதல் 6 பேரை பணயக்கைதிகளாக பிடித்துள்ளனர்.
தேவாலயத்தின் குருவானவர் இரண்டு அருட்சகோதரிகள் மற்றும் வழிப்பாட்டுக்கு வந்த இரண்டு பேர் உட்பட 5 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்தனர்.
பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட குருவானவர் பலியானதாகவும், ஏனைய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.  
இந்த சம்பவத்தால், அங்கு பரபரப்பான சூழல் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  குறித்த சம்பவம் முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 நன்றி வீரகேசரி 












லிபியக் கடற்கரையில் கரையொதுங்கிய 87 சடலங்கள்

26/07/2016 லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற  87 அகதிகளின் சடலங்கள் லிபியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
 தலைநகர் திரிபோலிக்கு வடக்கே உள்ள சப்ரதா கடற்கரையிலிருந்து 87 சடலங்களை சிறப்பு மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 
அந்த சடலங்கள், 5 அல்லது 6 நாட்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில், கடலில் மூழ்கிய அகதிகளின் சடலங்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. சனிக்கிழமை 41 சடலங்களும் ஏனைய சடலங்கள் ஞாயிற்றுக்கிழமையும் கரையொதுங்கியுள்ளது . 
நன்றி வீரகேசரி 












நேபாளத்தில் 54 பேர் பலி

27/07/2016 நேபாள நாட்டில் கடந்த 24 மணிநேரமாக பெய்த மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்தனர்.
நேபாள நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பெருக்கெடுத்து ஓடும் டினாவ் ஆற்றில் இருந்து கரைபுரண்டு பாய்ந்துவரும் வெள்ளநீர் பல பாலங்களை உடைத்துகொண்டு ஊர்களுக்குள் புகுந்துள்ளது.
இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
சப்தகோஷி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இந்த ஆற்றில் உள்ள 56 மதகுகளில் 37 திறந்து விடப்பட்டன.
வேகமாக பாய்ந்தோடி வந்த வெள்ள நீரால் பல பகுதிகளில்  ஏற்பட்ட மண்சரிவில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. சப்தகோஷி ஆற்றங்கரை பகுதியில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாராயணி ஆற்றின் நீர்மட்டம் ஆபத்தான கட்டத்தை நெருங்கி வருகிறது. 
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு சார்ந்த விபத்துகளில் 54 பேர் பலியானதாகவும் பலரை காணவில்லை எனவும் நேபாள ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி வீரகேசரி 












சிரியா இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 44 ஆக உயர்வு: தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றது

27/07/2016 சிரியாவில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளது.
வடக்கு சிரியாவில் உள்ள காமிஷ்லி நகரில் குர்திஷ் போராளிகளின் தலைமை முகாம் மீது லொரியில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை ஏற்றி வந்த தற்கொலைப்படை வெடிக்கச் செய்தான். 
அதன்பின்னர் சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதியும் வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். 
இந்த தாக்குதல்களில் 31 பேர் பலியானதாகவும், 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. 
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு 44 ஆக உயர்ந்துள்ளது. 
இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 




















No comments: