.
மெல்பேணில் கோலாகலமாகவும் உணர்வோடும் நடந்தேறிய
பிரம்மஸ்ரீ.மகாதேவ ஐயர்.ஜெயராமசர்மா அவர்களின் ” உணர்வுகள்
“ கவிதை நூல் வெளியீட்டு விழா.
மெல்பேண் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய பீக்கொக் மண்டபத்தில் கடந்த
மாதம் 28.03.2016 திங்கட்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு அரங்கம் நிறைந்த தமிழ் அறிஞர்கள்,
அன்பர்கள், நண்பர்கள் ஆதரவாளர்கள் முன்னிலையில் உணர்வுகள் நூல் வெளியீட்டு விழா ஆரம்பமானது.
ஸ்ரீமதி சாந்திசர்மா, ஸ்ரீமதி சுந்தரம்பாள், ஸ்ரீமதி தேவகி,
ஸ்ரீமதி கௌசல்யா, ஸ்ரீமதி மங்களம் ஆகியோரின் மங்கள விளக்கேற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா
ஆரம்பமானது. கடவுள் வாழ்த்துப் பாடலை செல்வி.ஆகர்ஷணா சாயி ஜீவானந்தக்குருக்கள், செல்வி.பிரவர்த்திகா
சாயி ஜீவானந்தக்குருக்கள், ஆகிய இரு பிள்ளைகளின் மழலை மொழியில் கேட்டிருந்தோம். மழலைத்
தமிழை நன்கு அழகாக உச்சரித்திருந்தார்கள்.
தமிழ் வாழ்த்துப் பாடலை ஸ்ரீமதி ஜனனி அபர்ணாசுத சர்மா அவர்கள்
பாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்னிசை அமுதம் நிகழ்ச்சியை செல்வி.அபிதாரணி சந்திரன்
அவர்கள் வழங்கியிருந்தார். மெல்பேண் சிறுவர்கள் எவ்வளவு தூரம் தமிழை நன்கு உச்சரிபோடு
பேசுகின்றார்கள், பண்ணோடு இசைக்கின்றார்கள் என்பதை பல மேடைகளில் பார்த்திருக்கின்றேன்.
அந்த வகையில் எமது பிள்ளைகள் அதற்கு குறையில்லாமல் இனிய குரலில் தமிழால் தமிழுக்கு
அழகு சேர்த்திருந்தார்கள்.
இசைக்கோலம் என்ற நிகழ்ச்சியில் திருசிவபாலன் புல்லாங்குழல்
இசை, திரு.முருகதாஸ் தவில் இசை, செல்வி.ஆகர்ஷணா மற்றும் செல்வி.பிரவர்த்திகா இருவரும்
வயலின் இசை, செல்வன்.கார்த்திகேயன் கீ போட் வாத்திய இசை எனக் கலைஞர்கள் யாவரும் இணைந்து
செவிக்கினிய, அற்புதமான இசையை வழங்கியிருந்தார்கள். உணர்வுகள் கவிதை நூல் வெளியீட்டிற்கு
வந்திருந்த அனைத்து தமிழ் அன்பர்களையும் செம்மொழியாகிய சங்கத் தமிழால், மங்காத புகழுடைய
எங்கள் தமிழ் சார்பில் ஸ்ரீமதி.ஜானகி சாயி ஜீவானந்தக்குருக்கள் அவர்கள் வரவேற்புரையை
வழங்கினார்.
முக்கிய நிகழ்வான உணர்வுகள் கவிதை நூல் வெளியீட்டு விழாவினை
தலைமை வகித்து நடாத்த வந்திருந்தவர் ஸ்ரீமதி.பாலம் லக்சுமண ஐயர் அவர்கள். ஸ்ரீமதி பாலம்
லக்சுமண ஐயர் உடைய இனிய தமிழ், அழகு தமிழ், இன்பத் தமிழ் பற்றி அதிகம் குறிப்பிடத்
தேவையில்லை. காரணம் தமிழ் உலகம் அறிந்த ஒரு பெண் பேரறிஞர் ஆகும். அவரது தமிழ்ப் பேச்சில்
பல் சுவைகள் நிறைந்த செந்தமிழ் தமிழ் ஆறாக ஓடியதைக் கேட்டேன். தொடர்ந்து அவரது தமிழைக்
கேட்க வேண்டும் போலிருந்தது. .
கவிதைத் தொகுப்பான உணர்வுகள் நூலினை நன்கு வாசித்து அதில்
கவி வரிகளில் பொதிந்திருந்த விடயங்களை அலசி ஆராய்ந்து தங்கள் விமர்சனங்களை தமிழ்ப்
பேச்சாளர்களான திரு.பொன்னரசு மற்றும் திரு.சசிதரன் ஆகியோர் தமது கருத்துக்களை முன்
வைத்து விமர்சித்தார்கள். அதன் போதே நூலுக்குள் பொதிந்திருந்த
பொக்கிஷங்களை எடுத்துரைத்தார்கள். உணர்வுகள் நூலின் வெளியீட்டுரையை
வழங்கிய சிவஸ்ரீ.பிரேமகாந்தக்குருக்கள் உணர்வு பூர்வமான கருத்துக்களை முன் வைத்திருந்தார்.
அதே போன்று சிவஸ்ரீ.சாயி ஜீவானந்தக்குருக்கள் என் மனவானில் என்ற கருத்தில் அவர்பால்
ஈர்த்துக் கொண்ட கவி வரிகளைக் குறிப்பிட்டு அந்த கவிதை நூல் படைப்பின், தரத்தின், மேன்மையை
உணர்ச்சியோடு விளக்கமாகக் கூறியிருந்தார். உணர்வுகள் கவிதை நூல் படைப்பாளர் பிரம்ஸ்ரீம..ஜெயராமசர்மா
வருகை தந்து ஆதரவு வழங்கிய அத்தனை உணர்வாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறினார்.
இறுதியில் அனைவருக்கும் இரவுணவு வழங்கப்பட்டது.
இந்த கவிதை நூலாசிரியர் பற்றிக் குறிப்பிட வேண்டும். பிரம்ஸ்ரீ.மகாதேவஐயர்.ஜெயராமசர்மா
அவர்கள் இலங்கையில் தமிழ் மொழியில் நன்கு கற்றுத் தேர்ந்த தமிழ் அறிஞர். எழுத்தாளர்,
கவிஞர், நாடகாசிரியர், நூல் விமர்சகர், நூலாசிரியர், ஆராய்ச்சியாளர், விவுரையாளர்,
பத்திரிகை ஆலோசகர், சைவசமயக் குருத்துவப் பட்டம் பெற்ற குருக்கள் என்று பல பரிமாணங்களை
தன்னகத்தே கொண்டதொரு பேரறிஞர். இவரால் தமிழ் உலகத்துக்குப் பெருமை என்றால் அது மிகையாகாது.
அனைவரது முன்னிலையில் நூலாசிரியரைக் கௌரவித்து பட்டம் வழங்கப்பட்டது.
ஐயா உங்கள் சேவை எமது தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும்.
அதே வேளை எல்லாம் வல்ல இறைவன் அனுக்கிரகத்தோடு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றேன்.
இது போன்ற தமிழ்ப் படைப்புக்கள் எமக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஆதரவு
வழங்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன். வாழ்க தமிழ்.
மெல்பேண் நவரத்தினம் அல்லமதேவன்