சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இன்று வடக்கிற்கு விஜயம்
ஸ்ரீலங்கா ஏயர் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைக்க ஒப்புதல்
திடீர் யாழ்.விஜயம் செய்த அங்கஜன், ரிஷாட்: காரணம் வெளியாகியது.?
''மகனுடன் பேசமுற்பட்டபோது இராணுவ சிப்பாய் அடிக்க வந்தார் '': ஆணைக்குழு முன் தாயார் கதறல்
கடத்தப்பட்ட ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்
சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் தலைவர்களில் ஒருவரான நகுலன் கைது
இராணுவத்திடம் ஒப்படைத்த கணவனை மீட்பதற்கு பலரிடம் பணத்தினைக் கொடுத்து ஏமாந்தேன்
இனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி முறையிலேயே அமைய வேண்டும் : சுவீடன் அமைச்சரிடம் சி.வி.
கடுவலை நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷ
மே தினத்தில் என்ன பொய் சொல்ல போகின்றீர்கள்.?
முன்னாள் புலி உறுப்பினர்களின் கைது தொடர்பில் ஆராயப்படும் : சூழ்ச்சி மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அனுமதியேன்
கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரிக்கவே முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது.!
அடக்கு முறைக்கெதிராக பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மகனை கருணாவும் மற்றைய இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்: கண்ணீருடன் தாய் சாட்சியம்
சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இன்று வடக்கிற்கு விஜயம்
26/04/2016 உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுகிழமை இலங்கைக்கு வருகை தந்த சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரம் இன்று வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, வட மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்தரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் நலன்புரி முகாம்களிற்கும் செல்லவுள்ளதுடன், சிவில் அமைப்புகளை சந்திக்கவுள்ளதுடன், மறவன்புலவு வீட்டுத் திட்டத்தையும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கண்காணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஸ்ரீலங்கா ஏயர் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைக்க ஒப்புதல்
26/04/2016 ஸ்ரீலங்கா ஏயர் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
திடீர் யாழ்.விஜயம் செய்த அங்கஜன், ரிஷாட்: காரணம் வெளியாகியது.?
26/04/2016 யாழ்ப்பாணத்திற்கு நேற்று மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து உடல நலன் குறித்து விசாரித்துள்ளனர்.
இதன்போது, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் சுகவீனமடைந்து சகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
''மகனுடன் பேசமுற்பட்டபோது இராணுவ சிப்பாய் அடிக்க வந்தார் '': ஆணைக்குழு முன் தாயார் கதறல்
26/04/2016 ஓமந்தையில் இராணுவத்தினரின் வாகனத்தில் எனது மகனை ஏற்றியபோது அவருடன் பேசுவதற்கு அனுமதியுங்கள் என அருகில் நின்ற இராணுவச்சிப்பாயிடம் கேட்டிருந்தேன்.
இதன்போது அவர் என்னை அடிக்க வந்ததோடு உரிய இடத்தில் இருக்குமாறு அதிகாரதொனியில் தெரிவித்தார் என்று காணாமல் போன இராஜரட்ணம் ஜெயராஜ் (வயது 28) என்பவரின் தாயார் நேற்று காணா மல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித் தார்.
மேலும், காணாமல்போன எனது மகனை மீட்டுத் தருவோம் என கடந்த கால ஆட்சியாளர்கள் எம்மை ஏமாற்றியிருந்தனர். எனினும் தற் போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் எனது மகன் எனக்கு மீளக் கிடைப்பார் என்ற நம்பிக்கையுள்ளது என்று காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் முன்னிலையில் மற்றுமொரு தாயொருவர் சாட்சியமளித்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையிலேயே காணாமல் போனோரின் உறவுகள் இவ்வாறு சாட்சியமளித்தனர்.
கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த குறித்த தாய் காணாமல்போன பத்மநாதன் சுலக்ஸன் (வயது 17) என்ற மகன் தொடர்பில் சாட்சியமளிக்கையில்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த எனது மகனை கடந்த 2008ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். அவர்களிடமிருந்து மீண்டு வந்த எனது மகன் எங்களுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அமைப்பினர் மீண்டும் எனது மகனைப் பிடித்துச் சென்றனர்.
இந்நிலையில் இறுதி யுத்தம் ஆரம்பமானதையடுத்து நாங்கள் குடும்பமாக இடம்பெயர்ந்த நிலையில் நான்கு நாட்கள் வட்டுவாகலில் முள்வேலி சுற்றப்பட்ட பகுதிக்குள் தங்கவைக்கப்பட்டிருந்தோம். இதனையடுத்து நாங்கள் குடும்பமாக ஆனந்தகுமாரசுவாமி முகாமுக்கு மாற்றப்பட்டோம்.
இதேவேளை எனது மகன் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதை பார்த்ததாக எனது உறவினர்கள் என்னிடம் தெரிவித்தனர். இந்நிலையில் அவரை மீட்பதற்காக பல இடங்கள் தேடிஅலைந்தேன். எனினும் இன்றுவரை எனது மகன் கிடைக்கப்பெறவில்லை.
காணாமல் போன மகனை மீட்டுத்தருமாறு குறிப்பாக கடந்த கால ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் எனது மகனை அவர்கள் மீட்டுத்தரவில்லை. எனினும் உயிரோடுள்ள எனது மகனை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மீட்டுத்தரும் என்ற அசையாத நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.
இராணுவத்தினரிடமே கணவனை ஒப்படைத்தேன்; மனைவி சாட்சியம்
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் வைத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருந்தேன். அதன் பின்னர் வவுனியா யோசப் மற்றும் பூசா முகாங்களில் எனது கணவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கு ஒட்டப்பட்டிருந்த பெயர் விபரங்கள் மூலம் அறிந்து கொண்டேன் என காணாமல்போன செல்லையா விஸ்வநாதன் (வயது 47) என்பவரின் மனைவி சாட்சியமளித்தார்.
அவர் மேலும் அங்கு சாட்சியமளிக்கையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளியாகவிருந்த எனது கணவரை கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எனது இரண்டு பிள்ளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைத்தேன்.
பாதிரியார் பிரான்சிஸூடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் எனது கணவரையும் பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்றனர். அதன் பின்னர் எனது கணவர் வவுனியா யோசப் மற்றும் பூசா முகாங்களில் உள்ளதாக அறிந்திருந்தேன். எனினும் அவரை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை.
எனது கணவரை மீட்பதற்காக பல இடங்கள் தேடி அலைந்து தற்போது 7 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் கணவர் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. ஆணைக்குழு எங்களிடம் மட்டுமே விசாரணைகளை மேற்கொள்கின்றது. எனது கணவர் காணாமற்போனமை தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கலும் மேற்கொண்டுள்ளேன். இத்தனை விடயங்களை மேற்கொண்டும் இதுவரை எனது கணவரை விடுவிக்காமல் தடுத்து வைத்துள்ளார்கள். தயவு செய்து உயிருடன் உள்ள எனது கணவரை விட்டு விடுங்கள் என அவர் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
இராணுவப் பேருந்திலேயே எனது மகனை இறுதியாகக் கண்டேன்: தாய் சாட்சியம்
இராணுவத்தினர் எனது மகனை பேருந்தில் ஏற்றிச் செல்வதை ஓமந்தைப் பகுதியில் வைத்துக் கண்டிருந்தேன். அதன் பின்னர் அவரை இன்றுவரை காணவில்லை என தாயொருவர் சாட்சியமளித்துள்ளார்.
கிளிநொச்சி விவேகானந்த நகரை சேர்ந்த காணாமல் போன இராஜசட்னம் ஜெயராஜ் ( வயது 28) என்பவரின் தாயார் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,
கடந்த 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் முள்ளிவாய்காலில் இருந்து எங்களை இராணுவத்தினர் பேருந்துகளில் ஏற்றி ஓமந்தைக்கு கொண்டு சென்று இறக்கி விட்டனர். இதன்போது மற்றுமொரு பேருந்தில் சில இளைஞர்கள் ஏற்றி வரப்பட்டு நாமிருந்த பகுதியில் இறக்கி விடப்பட்டு மீண்டும் அங்கு நின்ற இராணுவத்தினர் பிறிதொரு பேருந்தில் அவர்களை ஏற்றினார்கள். இவ்வாறு ஏற்றும் போது எனது மகனும் அங்கு காணப்பட்டிருந்தார். அதுவே எனது மகனை பார்த்த கடைசி நாளாகும்.
எனது மகனை அவ்வாறு கண்ட நிலையில் எனது மகனுடன் பேசுவதற்கு அனுமதியுங்கள் என அருகில் நின்ற இராணுவ சிப்பாயிடம் கேட்டிருந்தேன். இதன்போது அவர் என்னை அடிக்க வந்ததோடு உரிய இடத்தில் இருக்குமாறு அதிகாரதொனியில் தெரிவித்ததுடன் விசாரணைகளின் பின்னர் எனது மகனை இராணுவத்தினர் விடுவிப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
எனினும் இன்று வரை எனது மகன் விடுவிக்கப்படவில்லை. எனது மகனை இராணுவம் எதற்காக இன்று வரை தடுத்து வைத்துள்ளார்கள் என்பது விளங்கவில்லை. எனவே தயவு செய்து எனது மகனை விட்டு விடுங்கள் என கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
நேற்றைய தினம் ஆரம்பமான குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் தொடர்ச்சியாக எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை வரை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கடத்தப்பட்ட ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்
25/04/2016 திருக்கோவில் தம்பிலுவிலில் உள்ள வீட்டில் வைத்து நேற்று காலை இனம் தெரியாதவர்களினால் ஜீப் ஒன்றில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட, புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் தம்பிலுவிலில் உள்ள அவரது வ வீட்டில் வைத்து நேற்று காலை 8.30 மணியளவில் நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த சிலரால், தனது கணவர் கடத்தப்பட்டதாக அவரது மனைவி சுதாராணி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினராலே அவர் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் அம்பாறைமாவட்ட தளபதியாக இருந்து 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் திருகோணமலையில் வைத்து கைதுசெய்யப்பட்டு பின்னர் 2013 ஆம் ஆண்டு விடுதலையானார்.
அதன் பின்னர் திருமணம் முடித்து திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்துவருவதுடன் விவசாயம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் தலைவர்களில் ஒருவரான நகுலன் கைது
27/04/2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் தலைவர்களில் ஒருவரான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் நேற்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் நீர்வேலி தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து சிவில் உடையில் வந்த நான்கு பேரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு நீர்வேலியில் உள்ள நகுலனின் இல்லத்துக்கு சென்ற நான்குபேர் அவர் தொடர்பாக வீட்டிலிருந்தவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் மீண்டும் அவரது வீட்டிற்கு சென்ற குறித்த நால்வர், மீண்டும் நகுலன் தொடர்பாக விசாரித்ததுடன் அவர் தற்போது எங்குள்ளார் என வீட்டிலிருந்தவர்களிடம் கேட்டுள்ளனர். இதன்போது நகுலன் நீர்வேலி கரந்தனில் உள்ள தோட்டத்துப் பயிர்களுக்கு நீர்பாய்ச்சுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சிவில் உடையில் நின்ற நால்வரும் குறித்த தோட்டத்துக்குச் சென்று நகுலனுடன் உரையாடியதுடன் அவரை விசாரணைக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் செல்வதாக உறவினர்களிடம் தெரிவித்து கைது செய்துள்ளனர். இதன்போது நகுலனின் தந்தையும் அவருடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நகுலனை கொழும்பு தலைமையக விசாரணைக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக அவரது தந்தையிடம் கைது செய்த சிவில் உடை தரித்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனிபடைப் பிரிவின் தளபதிகளில் ஒருவரான கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி (நகுலன்) என்பவர் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் அவர் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்து முழுநேர விவசாயியாக வாழ்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இராணுவத்திடம் ஒப்படைத்த கணவனை மீட்பதற்கு பலரிடம் பணத்தினைக் கொடுத்து ஏமாந்தேன்
முல்லைத்தீவு வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்த எனது கணவர் திருகோணமலை புல்மோட்டை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பலர் தெரிவித்தனர். அவ்வாறு தெரிவித்த அவர்கள் கணவனை மீட்டுத் தருவதற்கு பணம் வழங்குமாறு கோரியிருந்தனர். அவர்கள் கோரிய பணத்தினை வழங்கியிருந்தும் இன்றுவரை எனது கணவன் விடுவிக்கப்படவில்லை என இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போன மச்சயக்காளை கண்ணன் என்பவரது மனைவி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் காணாமல்போனேர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போதே குறித்த மனைவி மேற்கண்டவாறு சாட்சியமளித்துள்ளார். அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்,
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எனது கணவரை நான் வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைத்தேன். தற்போது 7 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் கணவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
எனது கணவர் கடந்த 2002ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு 2009ஆம் ஆண்டு வரையும் அதில் செயற்பட்டவராவார். இறுதி யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நாங்கள் குடும்பமாக இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் வந்தோம். இதன்போது வட்டுவாகலில் நின்ற இராணுவத்தினரின் வாக்குறுதிகளை நம்பி எனது கணவரை அவர்களிடம் ஒப்படைத்தேன்.
பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு எனது கணவர் திருகோணமலை, புல்மோட்டை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பலர் என்னிடம் தெரிவித்ததுடன் கணவரை அங்கிருந்துமீட்பதற்கு
அதிக பணம் செலவாகும் என்றும் கூறினர். இந்நிலையில் எவ்வாறாவது எனது கணவனை
மீட்பதற்காக வெளிநாட்டிலுள்ள எனது சகோதரனிடம் தெரிவித்திருந்தேன். எனது சகோதரனும் அவ்வாறு கூறிய அந்த நபர்களுக்கு பணத்தினை அனுப்பியிருந்தார். இவ்வாறு இரண்டு மூன்று
தடவைகள் பணத்தினைக் கொடுத்து ஏமாந்துள்ளோம். எனினும் பணத்தினைப் பெற்ற வர்களிடமிருந்து இன்று வரை எவ்விதமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை. தயவுசெய்து எனது கணவனை மீட்டுத் தாருங்கள் என அவர் கண்ணீர் மல்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். நன்றி வீரகேசரி
இனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி முறையிலேயே அமைய வேண்டும் : சுவீடன் அமைச்சரிடம் சி.வி.
27/04/2016 இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டி முறையின் அடிப்படையிலேயே காணப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு விஜ யம் மேற்கொண்ட சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ட்ஸ்டர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இவர் வடமாகாண முதலமைச்சரை கைதடியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இக்கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததாவது,
கலந்துரையாடலில் ஈடுபட்ட சுவீடன் வெ ளிவிவகார அமைச்சர் இலங்கையின் அரசியல் நிலைப்பாடுதொடர்பில் தாம் அறிந்து வைத்துள்ளதாகவும் தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாட்டில் அரசியல் ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டு ஜனநாயகம் எங்களிடம் பரவியுள்ளது என எண்ணுகிறேன் என அவரிடம் பதிலளித்திருந்தேன். இதன்போது அவர், உங்களுடைய நாட்டிலே அனைத்து செயற்பாட்டையும் சேர்த்துப் பார்க்கும்போது நாடு நல்ல இடத்திலேயே இருப்பதை உணருகின்றேன் எனத் தெரிவித்ததுடன் தம்மால் எவ்விதமான உதவிகளையும் செய்யமுடியாமல் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
நாட்டிலுள்ள செயற்பாடுகள் அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் போது நல்ல நிலையில் இருந்தாலும் வடமாகாணத்தைப் பொறுத்தவரை பின்தங்கிய நிலையிலே உள்ளது. எனவும் அதனை மீள்கட்டமைக்க உங்களுடைய உதவி தேவையென்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் என்னிடம் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படவேண்டும் எனக் கேட்டிருந்தார்.
அரசியல் ரீதியான தீர்வைக் காணவேண்டிய அவசியத்தைக் அவருக்கு எடுத்துக் கூறினேன். அதன்போது அவர் எவ்வாறான தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என என்னிடம் கேட்டிருந்தார்.
சமஷ்டி முறையே சரியான தீர்வென கூறினேன். அதாவது பல வருடங்களாக நாம் முன்வைத்த இந்த சமஷ்டி முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் சுவிர்ஸர்லாந்தில் இருந்து நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு கலந்தாலோசித்த பின்னரே குறித்த முடிவை இறுதியாக எடுத்திருந்தோம் என அவரிடம் தெரிவித்திருந்தேன்.
நான் கூறியதை ஏற்றுக் கொண்ட அவர், இத்தகைய தீர்வுத் திட்டத்தை பெரும்பான்மை இனத்தவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரியவில்லையே எனத் தெரிவித்திருந்தார்.
நீங்கள் குறிப்பிடுவது உண்மையென அவரிடம் தெரிவித்த நான், அரசியல்வாதிகள் சமஷ்டியை பிரிவினைவாதமாகக் கூறியதனாலேயே இத்தகைய நிலைப்பாடு அவர்களிடம் உருவாகியுள்ளது. உண்மையில் நாங்கள் சமஷ்டியைக் கோருவது நாட்டை ஒற்றுமைப்படுத்தி வைத்திருக்கவே. ஆனால் அதனை பிரிவினைவாதமாகத் பிரச்சாரம் செய்யப்படுவதே பிரச்சினையாக உள்ளது என்பதை வெளிவிவகார அமைச்சரிடம் கூறினேன்.
இறுதியாக வெளிநாட்டு அரசாங்கம் என்ற முறையில் எங்களுடைய பங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறீர்கள் என அவர் என்னிடம் கேள்வி முன்வைத்தார்.
வெளிநாட்டு அரசினுடைய பங்களிப்பு இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் நாம் மேலும் பாதிக்கப்பட்டுவிடுவோம். மேலும் ஜெனீவாத் தீர்மானங்கனை அரசாங்கம் கடைப்பிடிப்பதற்கு வெளிநாட்டு அரசுகளுடைய நெருக்குதல்களும் நல்லெண்ணங்களும் அறிவுரைகளும் எமக்கு நன்மைபயத்தது என அவரிடம் தெரிவித்திருந்தேன் எனக் கூறினார். நன்றி வீரகேசரி
கடுவலை நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷ
28/04/2016 சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இவருடன் இந்த வழக்கில் பிரதவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய சந்கே நபர்களும் குறித்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
மே தினத்தில் என்ன பொய் சொல்ல போகின்றீர்கள்.?
28/04/2016 தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றாது 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் கட்சிகளின் மே தினங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் கறுப்பு மே தினமாக தோட்டங்கள் தோறும் நடாத்த உள்ளோம் என பத்தனை - திம்புள்ள சந்தியில் இன்று பகல் இடம்பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தார்கள்.
சுமார் அரை மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 30ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இம்முறை கொண்டாடப்படும் மே தின விழாவில் மலையக தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் கூறியது போல் 1000 ரூபாய் சம்பள பணத்தை பெற்றுக்கொடுக்க மேதின மேடைகளில் உண்மையான வாக்குறுதியை வழங்க வேண்டும்.
இதைவிடுத்து காலம் காலமாக சொல்லி வந்த பொய்யான கூற்றுக்கள் இம்முறையும் மேடை ஏறும் பட்சத்தில் மேதின விழாவை கறுப்பு கொடிகள் அணிந்து கறுப்பு மேதினமாக தோட்டங்களில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்போவதாக இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம், இவ் ஆர்ப்பாட்டத்தின் போது சில தொழிற்சங்கவாதிகள் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு கோஷம் எழுப்பப்பட்ட நிலையில் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
முன்னாள் புலி உறுப்பினர்களின் கைது தொடர்பில் ஆராயப்படும் : சூழ்ச்சி மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அனுமதியேன்
28/04/2016 சூழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட் சிக்கு 106 உறுப்பினர்களையும், சுதந்திரக்கட்சிக்கு 95 உறுப்பினர்களையும் பொது மக்கள் தெரிவுசெய்திருந்தனர். இதிலிருந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அரசை கவிழ்க்க முயல்பவர்கள் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காண்பிக்கவேண்டும். அதற்கான சாத்தியங்கள் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது அவர்களின் நிலைப்பாடாகும். நாட்டின் இறைமை ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுத்தவோ, அல்லது நாட்டைப் பிரிப்பதற்கோ நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. வடக்கு, தெற்கில் சிலர் தமது அடிப்படைவாத கொள்கைகளை முன்வைக்கின்றனர். ஆனாலும் நாம் நாட்டைப்பிரிக்க இடமளிக்கப்போவதில்லை. தமிழகத்தில் தேர்தலை இலக்காகக் கொண்டு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் நான் அறியவில்லை. அப்படி நடந்தால் அதற்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது. இவ்விடயம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள், மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி மாளிகையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:-
அண்மையில் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு என்பவற்றின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து நான் பேசியிருந்தேன். அவர்களது பிரச்சினைகள் குறித்து நான் கேட்டறிந்துகொண்டேன். ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டவர்கள் தமது பதவிக்காலத்திற்குள் முக்கிய பிரச்சினைகளை தெரிவு செய்து அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும். நானும் அப்படித்தான் செய்து வருகின்றேன். எனது பதவிக்காலத்திற்குள் தேசிய ரீதியில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அவற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
அரசின் மீது குற்றச்சாட்டு
எமது அரசாங்கம் பதவியேற்று 15 மாதங்கள் ஆகின்றன. அரசுக்கு எதிராகவும் எனக்கும் பிரதமருக்கும் எதிராகவும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்கள் நியாயமானதாகவும், தென்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம்திகதி எமது நாட்டு மக்கள் வழங்கிய ஆணை இலகுவானதல்ல.
தேர்தல் ஒன்றை சந்திக்கவுள்ள தலைவர் ஒருவர் முழு ஆயத்தங்களை செய்த பின்னர்தான் தேர்தலில் ஈடுபடுவார். ஆனால் நான் சந்தித்த தேர்தலின் போது நா ன் எவ்வித ஆயத்தங்களுமின்றி அந்த நடவடிக்கையில் இறங்கியிருந்தேன். அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அன்றுதான் நான் வேட்பாளர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்தத் தேர்தலானது மக்கள் பொறுப்பேடுத்த தேர்தலாகும். 49 கட்சிகள் ஒன்றிணைந்து ஒப்பந்தம் செய்து தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் மக்களே அந்தத் தேர்தலை பொறுப்பெடுத்து மேற்கொண்டனர். 1947 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற எந்த தேர்தலிலும் இவ்வாறு மக்கள் செயற்பட்டிருக்கவில்லை. இவ்வாறு ஆணைவழங்கிய மக்கள் புதிய அரசாங்கமானது விரைவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என எதிர்பார்த்தனர். இவ்வாறான எதிர்பார்ப்பே விமர்சனங்களுகு்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
சேதமடைந்த வீதியொன்றினை புனரமைக்கவேண்டுமென்றாலும் அதற்கு கார்பட் போடவேண்டுமென்றாலும், அந்தப் பாதையில் சென்றுதான் அதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும். சேதமடைந்த பாதை வழியாகவே வாகனங்களும் புல்டோசரும் இயந்திரங்களும் எடுத்து செல்லப்படவேண்டும். இவ்வாறு அந்தப் பாதை வழியே சென்று அதனை புனரமைக்கவேண்டும். இவ்வாறு செயற்படும் போது விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுவது என்பது வழமையானதாகும்.
கடந்த பொதுத்தேர்தலின்போது ஐக்கிய தேசியகட்சிக்கு 106 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு 95 ஆசனங்களையும் மக்கள் வழங்கியிருந்தனர். தனித்து ஆட்சி அதிகாரம் செய்வதற்கு மக்கள் இருபிரதான கட்சிகளுக்கும் ஆணை வழங்கவில்லை. அவ்வாறு ஆணை வழங்கியிருந்தால் பாராளுமன்றத்தில் 113 ஆசனங்கள் ஒரு கட்சிக்கு கிடைத்திருக்கவேண்டும்.
எமது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் தேசிய அரசாங்கம் அமையுமென்றே கூறியிருந்தோம். தேர்தல் முடிவையடுத்து சகலரும் ஒன்றிணைந்து ஆட்சி செய்யும் தேசிய அரசாங்கத்தை உருவாக்கியிருந்தோம். எமது புதிய அரசாங்கத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை மக்கள் வைத்துள்ளனர். சேதமடைந்த பாதையினை புதுப்பிப்பதற்காக அந்த வழியில் நாம் முன்னேறி செல்கின்றோம்.
இரண்டு வருடங்களுக்கு
முன்னர் ஏன் தேர்தல்?
எனக்கு முன்பிருந்த ஆட்சியாளர் இரண்டு வருடங்கள் பதவிக்காலம் இக்கும் நிலையில் ஏன் தேர்தலுக்கு சென்றார். என்பது தொடர்பில் நீங்கள் யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை. அதேபோல் அவரும் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு இருவருடங்கள் இருக்கும் நிலையில் தேர்தலுக்கு சென்றார் என்பது குறித்து கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நான் எட்டு விடயங்களை குறிப்பிட்டு தேர்தலுக்கு செல்வதாயின் அந்த எட்டுவிடயங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தேன்.
யுத்தமொன்றுக்கு இராணுவம் செல்வதாயின் படை அதிகாரிகள், மற்றும் படைவீரர்கள் மத்தியில் அதற்கான மனநிலையினை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு தேர்தலுக்கு செல்வதற்கு முன்னர் எமது கட்சியினர் மத்தியில் அதற்கான மன நிலையை ஏற்படுத்துமாறு நான் கேட்டிருந்தேன. ஆனால் அவற்றுக்கு செவிசாய்க்கப்படவில்லை.
உண்மையிலேயே இரண்டு விடயங்களுக்காக மட்டுமே தேர்தலை முன்னதாகவே நடத்துவதற்கு முன்னாள் நாட்டின் தலைவர் தீர்மானித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா தீர்மானத்திற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை, பொருளாதார பிரச்சினை ஆகியவையே இந்த இரு காரணங்களாக அமைந்திருந்தன.
அன்று நாட்டுக்குப் பொருத்தமற்ற தீர்மானங்களே எடுக்கப்பட்டன. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் புதன்கிழமைகளில் தேனீர் விருந்துக்கான சந்தர்ப்பமாகவே அமைச்சரவைக் கூட்டம் அமைந்திருந்தது. அன்று ஆட்சி செய்த குடும்பத்திலுள்ள ஐந்து பேர் மட்டும் அமர்ந்திருந்து முடிவுகளை எடுத்து விட்டு அந்த விடயங்களே அமைச்சரவைக்கு கொண்டுவந்தனர். அதிகாரமற்ற அமைச்சரவையும் அரசாங்கமுமே அன்று காணப்பட்டன.
மாவட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள்
அன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டார். கொழும்பிலிருந்து மேடைகள், கட்டவுட்டுகள் மாவட்டம் தோறும் கொண்டுசெல்லப்பட்டன. பஸ்களில் மக்கள் ஏற்றி இறக்கப்பட்டனர். கட்சியின் மாவட்டத் தலைவர்களுக்கோ, அல்லது மாவட்ட அமைச்சர்களுக்கோ இது குறித்து அறிவிக்கப்படுவதில்லை. மாவட்டம் தோறும் குறித்த அமைச்சர் உரையாற்றுவதாகவே நிகழ்வுகள் அமைந்திருந்தன. ஐந்துசதத்திற்குக்கூட மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை. அவ்வாறு நிதிஒதுக்கியவர் தற்போது மேதினக் கூட்டத்தினை நடத்துவதற்காக பிரதேசங்கள் தோறும் சென்று போக்குவரத்துக்கும் சாப்பாட்டுக்கும் நிதி பகிர்ந்து வருகின்றார். இந்த நிதி எங்கிருந்து வந்திருக்கின்றது என்ற பிரச்சினையும் எழுந்துள்ளது.
சொகுசு விமானக்
கொள்வனவை நிறுத்தினோம்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றது. இந்த நிலையில் கடந்த ஆட்சியாளர்கள் 250 கோடி ரூபா செலவில் அதிசொகுசு விமானமொன்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர். இலங்கை வங்கி மூலம் இதற்கான ஒருதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. நாம் இந்தக் கொள்வனவை இரத்து செய்து அந்தப் பணத்தை விமான சேவை உபகரணங்களை கொள்வனவு செய்யும் வகையில் மாற்றியிருக்கின்றோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் நிலவிய ஊழல் மிக்க செயற்பாடுகளை ஒழிப்பதற்காகவும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காவுமே நான் அன்று அரசாங்கத்திலிருந்து விலகினேன். 48 வருடங்களாக எதிராக செயற்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து புதிய ஆட்சியை உருவாக்கி ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளோம்.
சில ஊடக நிறுவனங்கள் செயற்படும் விதத்தைப் பார்த்தால் அவர்கள் இவ்வாறு ஊழல் மோசடிகளை மேற்கொண்ட தலைவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவே தெரிகின்றது. அன்றைய காலத்தில் ஊடகவியலார்கள் கொல்லப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. ஊடக நிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் நான் தற்போது விபரங்களை கோரியிருக்கின்றேன். ஊடகங்கள் ஒருபக்கம் சாராது நடுநிலையாக செயற்படவேண்டும் என்று தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.
சுதந்திர கட்சிக்குள் உள்முரண்பாடு இல்லை. கட்சியை தோல்வியடையச் செய்ய முயல்பவர்கள் தொடர்பிலேயே முரண்பாடு தொடர்கிறது. அரசாங்கத்தை உடைத்து புதிய ஆட்சியை உருவாக்கும் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. சூழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன். ஆட்சியை அமைப்பதென்றால் பாராளுமன்றதில் 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை காண்பிக்கப்படவேண்டும். பிரதமரின் ஒத்துழைப்பின்றி எனது ஆசீர்வாதமின்றி இவ்வாறு பெரும்பான்மையை பெறமுடியாது.
சுதந்திரக்கட்சி கடந்த தேர்தலில் 95 ஆசனங்களைப் பெற்றிருநந்தது. சூழ்ச்சி செய்பவர்கள் இதில் 50 ஆசனங்களைக் கூட பெற்றுவிட முடியாது. சரி 50 உறுப்பினர்களின் ஆதரவை இவர்கள் பெற்றாலும் இன்னமும் 63 உறுப்பினர்கள் பெரும்பான்மையை பெற தேவையாகும். ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி. தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றால்தான் இந்தப் பெரும்பான்மையினை சூழ்ச்சி செய்வோர் பெறமுடியும். வாழ்க்கையில் ஜே..வி.பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவு இவர்கள் பெற முடியாது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவும் இவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு சூழ்ச்சியை மேறகொள்பவர்கள் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றும் அரசாங்கம் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றும் காண்பிக்கவே முயல்கின்றனர்.
ஹைட்பார்க் கூட்டம்
அண்மையில் ஹைட்பார்க்கில் கூட்டமொன்றினை இவர்கள் நடத்தியிருந்தனர். உளவுத்தகவல்களின் படி இந்தக் கூட்டத்திற்கு 11900 பேரே வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தக்கூட்டமானது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவே நடத்தப்பட்டது. இங்கு உரையாற்றிய முன்னாள் அரச தலைவர் இங்கு கூடியுள்ள மக்களை நீதித்துறையினர் பார்க்கவேண்டும் என்று உரையாற்றியிருந்தார். இந்தக்கூற்றின் மூலம் அவர் நீதித்துறையினருக்கு மற்றும் விசாரணையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதையே அவதானிக்க முடிந்தது.
உலகிலேயே தோல்வியுற்ற ஒரு தலைவருக்கு விரும்பிய இராணுவ அதிகாரிகளையும், பாதுகாப்பு தரப்பினரையும் அழைத்துக்கொண்டு ஹெலிகொப்டர் மூலம் வீடு திரும்புவதற்கு அனுமதியளித்த ஒரே தலைவராக நானே இருக்கின்றேன்.
கேள்வி:- ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையும் கிடைக்குமா?
பதில்:- மீன்பிடி இறக்குமதி தடையினை ஐரோப்பிய ஒன்றியம் தளர்த்துவதற்கு நான், பிரதமர் , வெ ளிநாட்டு அமைச்சர் உட்பட அரசாங்கம் எடுத்த நடவடிக்கையே காரணமாகும். தனிப்பட்ட முயற்சியாக இதைக் கொள்ள முடியாது. கொள்கை ரீதியான நடவடிக்கையாகவே இது அமைந்திருந்தது. இதேபோல் வெகுவிரைவில் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையும் கிடைக்கும்.
கேள்வி:- பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் தகவல்களை கோரியுள்ளீர்கள், இதேபோல் தாக்குதல்களுக்கு உள்ளான ஊடகநிறுவனங்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்படுமா?
பதில்:- ஊடக நிறுவனங்கள் இதற்கான கோரிகைகளை முன்வைத்தால் அரசாங்கம் எவ்ற ரீதியில் இவை குறித்து பரிசீலிக்கப்படும்.
கேள்வி:- சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தப் போவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது. 21 விமானங்கள் இருக்கின்ற நிலையில் ஐயாயிரம் ஊழியர்கள் இதில் பணியாற்றுகின்றனர். நாம் ஆட்சி அமைத்த பின்னர் விமானங்களில் வணிக இருக்கைகளில் இருந்தே நான் பயணம் செய்கின்றேன். இதனால் அரசாங்கம் வேறு அரசாங்கத்துடனோ அல்லது சர்வதே நிறுவனத்துடனோ ஒன்றிணைந்து இந்த சேவையினை முன்னெடுக்கவேண்டியுள்ளது. அவ்வாறு இல்லையானால் மக்களே கடன்சுமையை சுமக்கவேண்டி வரும்.
கேள்வி:சமஷ்டி மூலமான அரசியல்தீர்வு வேண்டுமென்று வடமாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இலங்கையில் வேறு நாடு உருவாவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று கூறியிருக்கின்றார். இவ்விடயங்கள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- வெளிநாட்டிலிருந்துகொண்டு ஒவ்வொருவரும் கூறும் விடயங்கள் தொடர்பில் கவனத்தில்கொள்ளவேண்டியதில்லை. தமிழகத்தில் தேர்தலை இலக்காகக் கொண்டு கருத்துக்களை கூறுகின்றனர். மத்திய அரசின் தலைவர்களுடன் நாம் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். இதனால் தேர்தலை இலக்காகக் கொண்டு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கவலைகொள்ளத்தேவையில்லை.
அத்துடன் பொதுவாக எடுத்துக்கொண்டால் மாகாண சபைகளில் முன்மொழிவுகள் பிரேரணைகள், நிறைவேற்றப்படுகின்றன. பாராளுமன்றத்தில் 1947 ஆம் ஆண்டு முதல் பல பிரேரணைகள் சட்டமூலங்கள், நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அப்படியே உள்ளன. வடமாகாணசபையிலும், பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அது அவர்களது கருத்தாக அமைந்துள்ளது. ஆனால் நாட்டை பிரிப்பதற்கோ , அல்லது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுவதற்கோ அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
வடக்கு, மற்றும் தெற்கில் அரசியல் இலாபம் பெறுவதற்கு சிலர் முயலுகின்றனர். வடக்கு, தெற்கில் சிலர் தமது அடிப்படைவாதக் கொள்கைகளை முன்வைக்கின்றனர். எது எப்படியிருந்தாலும் நாட்டை துண்டாடுவதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.
கேள்வி:- 2015 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை எவ்வாறானதாக அமைந்துள்ளது? .
பதில்:- ஐ.நா. ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்த போது மூன்று விடயங்கள் தொடர்பில் எடுத்துக்கூறியிருந்தார். வடக்கு மக்களின் மீள் குடியேற்றம், காணாமல் போனோர் விவகாரம், நீதிமன்றத்தின் சுயாதீனம் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலேயே சுட்டிக்காட்டியிருந்தார். ஜெனிவா தீர்மானம் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.
கேள்வி:- வடக்கில் முன்னாள் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்:- இந்தப் பிரச்சினை குறித்து நான் தேடிப்பார்க்கின்றேன். அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. நன்றி வீரகேசரி
கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரிக்கவே முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது.!
28/04/2016 தேடப்பட்டுவரும் முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க தாய்லாந்தில் மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்தது எவ்வாறு என்பது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
புனர்வாழ்வு வழங்கப்பட்ட புலிகள் கைது செய்யப்படுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கேயாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உதயங்க வீரதுங்கவின் ,ராஜதந்திர கடவுச்சீட்டை இரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் டாக்டர்.ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தாய்லாந்து சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தேடப்பட்டுவரும் முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அரசால் தேடப்பட்டு வரும் உதயங்க வீரதுங்க எவ்வாறு தாய்லாந்து சென்றார் என்பது தொடர்பில் அமைச்சரவைக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
அத்தோடு அவரது இராஜதந்திர கடவுச்சீட்டு 2020 ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகவுள்ளது. இதனை இரத்து செய்யவும் தடைசெய்யவும் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை.
இக் கடவுச்சீட்டை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதோடு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
அவரை கைது செய்வதற்கும் நடவ டிக்கைகள் எடுக்கப்படும். அதேவேளை புனர்வாழ்வு வழங்கப்பட்ட புலிகள் கைது
செய்யப்படுவது அண்மையில் கண்டுபிடிக் கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசா ரணைகளை நடத்துவதற்கேயாகும் என்றார். நன்றி வீரகேசரி
அடக்கு முறைக்கெதிராக பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
29/04/2016 கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மூன்றாம் வருட மாணவர்கள் இன்று பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடியிலுள்ள அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் வீதியில் அமர்ந்திருந்து பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்விச்சுற்றுலா தாமதப்படுத்தப்படுவதாகவும் அடிக்கடி நிகழ்வுகள் நடைபெறுவதால் பாடங்கள் நடைபெறுவதில்லையெனவும் நிர்வாக அடக்குமுறை காரணமாக மாணவர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதாகவும் ஆர்பாட்டகாரார்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தனர். நன்றி வீரகேசரி
மகனை கருணாவும் மற்றைய இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்: கண்ணீருடன் தாய் சாட்சியம்
29/04/2016 தனது மூத்த மகனை கருணா குழுவும் ஏனைய இரண்டு மகன்களையும் புலிகளும் பிடித்துச் சென்றனர். இன்று மூன்று பிள்ளைகளையும் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் இருக்கின்றேன் என பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த சோமசுந்தரம் ஜெயமேரி எனும் தாய் கண்ணீருடன் சாட்சியமளித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிநாள் அமர்வு நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பளை மற்றும் பூநகரி பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தவர்களுக்காக இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது சாட்சியத்தில்,
1978 ஆம் ஆண்டு பிறந்த எனது மூத்த மகன் 2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் வைத்து கருணா குழுவால் பிடித்துச் செல்லப்பட்டார். இவர் பின்னர் இயக்கத்தில் இருக்கும் போது இறந்து விட்டார்.
பின்னர் 1986 ஆம் ஆண்டு பிறந்த இரண்டாவது மகன் சோமசுந்தரம் இருதயராசா 2008-–2-–6 அன்று புலிகளால் பிடித்துச்செல்லப்பட்டார் இன்றுவரை எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு பிறந்த எனது மூன்றாவது மகனை 2009- ஆம் ஆண்டு 2-8 ஆம் திகதி புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடித்துச் சென்றனர். அவர் தொடர்பிலும் எந்த தகவலும் இல்லை. என கண்ணீருடன் தெரிவித்த ஜெயமேரி, புலிகளால் பிடிக்கப்பட்ட எனது இரண்டு பிள்ளைகளில் ஒரு மகனை மாத்தளன் கடற்கரையில் எனது ஊரவர்கள் கண்டுள்ளனர். அதில் ஒரு மகன் மாத்தளன் பகுதியில் இருந்து சாலை நோக்கி சென்றுகொண்டிருந்ததாக கண்டவர்கள் சொன்னார்கள் என்றும் தெரிவித்தார்.
எனது மூன்று ஆண் பிள்ளைகளும் இல்லாமல் நான் பெரிதும் கஷ்டப்படுகின்றேன், அவர்களை நினைத்து நினைத்து மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதற் காக சிகிச்சையும் பெறுகின்றேன் எனப் பையிலிருந்த குளிசைகளையும் எடுத்து காட்டினார். நன்றி வீரகேசரி