மெல்பேண் பேசின் அருள்மிகு ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகப் பெருமானின் தேரோற்சவம்.

.
மெல்பேண் பேசின் அருள்மிகு ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகப் பெருமானின் தேரோற்சவம்.


மெல்பேண் பேசின் என்ற இடத்தில் வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகப் பெருமான் ஆலயத்தில் மகோற்சவத் திருவிழா கடந்த 15.04.2016 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பாகியது. இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களைக் குறித்து நிற்கின்ற இந்த மகோற்சவகாலங்களில் இறைவழிபாடு எமது ஆன்ம ஈடேற்றத்திற்கு முக்கியமாகும். கடந்த சனிக்கிழமை 23.04.2016 காலை மூலஸ்த்தான ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகருக்கும், சுற்றுப் பிரகார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்புப் பூசைகள், தீபாராதனை, வேதபாராயணம், தேவபாராயணம் நடைபெற்றது. யாகசாலையில் பூசை நடைபெற்ற பின்னர் எழுந்தருளியாகக் கோலங்கொண்ட ஆனைமுகன் பஞ்சமுகப் பெருமான் அடியார்கள் புடைசூழ உள்வீதி உலா வந்ததைத் தொடர்ந்து விசேட நாதஸ்வர, தாளவாத்தியங்கள், இசைக்க, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிய பக்தர்களின் அரோகரா ஒசையுடன், சிவாச்சாரியார்களின் வேதங்கள்  ஒலிக்க அழகுற அமைக்கப்பட்ட சித்திரத் தேரில் வேழமுகத்தோன் பஞ்சமுகப் பெருமான் ஆரோகணிக்கப் பெற்றார். பிள்ளையாரின் உலாவிற்குப் பின்னால் பெண் அடியார்கள் அடி அழித்த வண்ணம் வந்தார்கள்.




தேரடியில் வழமை போல் பூசை, அருச்சனை, தீபாராதனை நடைபெற்று சிதறு தேங்காய்கள் பக்த கோஷங்களுடன் உடைக்கப்பட்டது. ஆண்கள் ஒருபுறம் பெண்கள் ஒருபுறமுமாக ஊரார் ஒன்று கூடித் தேரின் வடங்களைப் பிடித்து முழுமனதோடு இழுக்க எல்லாம் வல்ல முதன்மைக் கடவுள் விக்கினேஸ்வரனின் சித்திரத் தேர் உருளத்தொடங்கியது. வெளிவீதி என்னும் போது  மாநகர வீதிகள் ஊடாக ஆயிரக்கணக்கான அடியார்கள் சகிதம் அட்டதிக்குகளையும், நான்கு மூலைகளையும் சுற்றுலா வந்தமை ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வெள்ளை இனத்து மக்கள் வருகை தந்து இந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் வீதிச் சட்டங்களை மீறாத வண்ணம் பரிபாலன சபையினர் கண்காணித்த வண்ணம் இருந்தனர்.
ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகப் பெருமான் மக்கள் அனைவருக்கும் மேன்மைகள் கிடைக்கவும், நாட்டில் சுபீட்சம் ஓங்கி வளம் பெற்று வாழ்வுகள் சிறக்கவும் அருள் பாலித்த வண்ணம் வெளிவீதி உலா வந்து மீண்டும் தேரடிக்கு வந்து சேர்ந்தார். தேரிற்குப் பின்னால் பக்தர்கள் பஜனைப் பாடல்களை இசைத்துக் கொண்டு புடை சூழ வந்தனர்.
தேரடியில் அருச்சனைகள் முடிந்த பின்னர் பஞ்சமுக விநாயகப் பெருமானுக்கு பச்சை சாத்துதல் என்ற வழமைக்கு ஏற்ப பச்சை நிறத்தில் புத்தாடைகள், பூமாலைகள் அலங்காரங்கள் அணியப் பெற்று அழகுற மிளிரப் பெற்றார். விசேட பூசை தீபாராதனை நடைபெற்று தேரில் இருந்து இறங்கிய விநாயகப் பெருமான் அடியார்களின் அன்பான பக்தி மயமான ஊஞ்சல் ஆட்டத்துடன் மீண்டும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளப் பெற்றார்.


வசந்த மண்டபத்தில் பூசை, தீபாராதனை நடபெற்றது. தேரோற்சவம் சிறப்புடன் நடந்தேறியது. பிரபல சிவாச்சாரியார்களால் சகல பூசைகளும் ஆகம விதிப்படி பக்திமயத்தோடு நிகழ்த்தினார்கள். பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ.கௌரீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. சிவஸ்ரீ.கௌரீஸ்வரக்குருக்கள் தந்து குருத்துவப் பணியில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கொடியேற்ற மகோற்சவங்களை நடாத்திய பெருமைக்கும் மதிப்புக்கும் உரியவர் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். மற்றும் சிவாச்சாரியார்களான சிவஸ்ரீ.நிர்மலேஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ.நித்தியானந்தக் குருக்கள் ஆகியோர் உதவியாக இருந்தார்கள். தொடர்ந்து அடியார் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோற்சவ நிகழ்ச்சிகள் அனைத்தையும் 24 மணி நேர வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக நேரடி வர்ணனையாளர்கள் எடுத்து வந்திருந்தார்கள். எனவே அன்றயை தினம் வரமுடியாத அடியார்கள் அனைவரும் தேரோற்சவ நிகழ்வுகளை வானொலி ஊடாகக் கேட்கக் கூடிய வசதியை ஏற்படுத்தியிருந்தமை வரவேற்கத்தக்க விடயம்.


வாகனங்கள் போக்குவரத்து, தரிப்பிடங்கள் அனைத்தையும் ஆலய நிர்வாகத்தினம் செம்மையாகச் செய்திருந்தமை பக்தர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. முக்கியமாக அடியார்களின் பக்திக்கு இடையூறு இல்லாமல் சூர்யபகவான், வர்ணபகவான், வாயுபகவான் தங்கள் ஆதரவினையும் கொடுத்து அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தேற எல்லாம் வல்ல மூத்த கணபதி ஸ்ரீ வக்கிரதுண்ட வி நாயகப் பெருமான் அருளைப் பெற்று ஏகும் வண்ணம் நல்கியமை உணர்வு பூர்வமாக இருந்தது.


மெல்பேண் நவரத்தினம் அல்லமதேவன்.