பவளவிழா நாயகன் ஞானசேகரன் (கடந்தவாரத் தொடர்ச்சி) மறுமலர்ச்சி காலத்திலிருந்து புகலிட இலக்கிய காலம் வரையில் ஆவணப்படுத்திய ஞானம் புனைவிலக்கியத்திலிருந்து இதழாசிரியரான ஞானசேகரன் இழந்ததும் பெற்றதும் முருகபூபதி



ஈழகேசரி  பொன்னையா,  தேசபக்தன்  நடேசய்யர்,  செய்தி  நாகலிங்கம்,  சிரித்திரன்  சிவஞானசுந்தரம், மல்லிகை  ஜீவா,  குமரன் கணேசலிங்கன்இளம்பிறை  ரஃமான்,  எழுத்து  செல்லப்பா,  தீபம் பார்த்தசாரதி,   சரஸ்வதி   விஜயபாஸ்கரன்,   கலைமகள்  ஜகந்நாதன், கல்கி   கிருஷ்ணமூர்த்தி,   இதயம்பேசுகிறது  மணியன்  இவ்வாறு இதழ்   ஆசிரியர்களின்  ஒரு  பட்டியலை  எழுதினால் --  இவர்களில் சிலர்   ஆக்க  இலக்கியம்  படைத்த   படைப்பாளிகள்தான்   என்பதையும் நாம்   மறந்துவிடுவதற்கில்லை.
அவர்களால்  தொடங்கப்பட்ட  இதழ்களினால்  அவர்கள்  அவ்வாறு பிற்காலத்தில்  அழைக்கப்பட்டனர்.   இன்று  அவர்களின்   வரிசையில் இணைந்துகொண்டார்,   முன்னர்   சிறுகதைகளும்  நாவல்களும், குறுநாவலும்   எழுதிய  ஆக்க   இலக்கிய கர்த்தா  ஞானசேகரன்.
இங்கு   பதிவுசெய்யும்   முக்கியமான   இரண்டு  இலக்கிய ஆளுமைகளுக்கு  என்ன   நடந்ததோ,   அதே  தற்பொழுது ஞானசேகரனுக்கும்   ஞானம்  இதழைத்தொடங்கிய   பின்னர் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில்   புதுமைப்பித்தனின்   நண்பர்  தொ.மு.சி. ரகுநாதன் தொடக்கத்தில்  பல  சிறுகதைகள்  எழுதியவர்.   சேற்றில்  மலர்ந்த செந்தாமரை , க்ஷணப்பித்தம் , சுதர்மம் ,  ரகுநாதன் கதைகள்  முதலான சிறுகதைத்தொகுதிகளையும்  சில  கவிதைத்தொகுப்புகளையும்  புயல்,  முதலிரவு,   பஞ்சும் பசியும்   ஆகிய   நாவல்களையும்  சில நாடக  நூல்களையும்  எழுதியவர்.   பின்னாளில்  சாந்தி  என்ற   மாத இதழை  தொடக்கினார்.


இதில்  ஜெயகாந்தன்,  சுந்தரராமசாமி   முதலானோரும்  எழுதினர். பின்னர்   நட்டப்பட்டு,   சாந்தி  இதழை  நிறுத்திய  ரகுநாதன்,  பாரதி இயல் ஆய்வாளராகவும்   விமர்சகராகவும்  மொழிபெயர்ப்பாளராகவும் மாறினார்.   அதன்  பின்னர்  அவர்  சிறுகதைகளோ   நாவலோ எழுதவில்லை.
இலங்கையில்  டொமினிக்ஜீவா  --  தண்ணீரும் கண்ணீரும்,   பாதுகை  சாலையின் திருப்பம் ,   வாழ்வின் தரிசனங்கள்,   டொமினிக் ஜீவா சிறுகதைகள்  என்பனவற்றுடன்  சில  கட்டுரைத்தொகுப்புகளும் எழுதினார்.   அவர்   மல்லிகையைத்   தொடங்கியதும்   படிப்படியாக சிறுகதை  எழுதுவதை   நிறுத்திவிட்டு,  தனது  நேரத்தை மல்லிகைக்காகவே  அர்ப்பணித்தார்.
எனினும்  இவர்கள்   இரண்டுபேரிலும்  ஒரு  விடயத்தை   நாம் கவனிக்கவேண்டும்.   இருவரும்  பின்னர்  செம்பதிப்பாக  முன்னர் வெளிவந்த  தமது  சிறுகதைகளில்  தேர்ந்தெடுத்தவற்றையே   மீண்டும்  தனித்தொகுப்பாக  வெளியிட்டனர்.
ரகுநாதன்   கதைகள் --  டொமினிக் ஜீவா  சிறுகதைகள்தான்  எமக்குக் கிடைத்தன.
இதழியல்  வாழ்க்கை  இவர்கள்  இருவரையும்  சிறுகதைப்பக்கமிருந்து அந்நியப்படுத்தியது.
ஞானசேகரனும்   இவர்கள்  இருவரையும் போன்று  தமது தேர்ந்தெடுத்த  சிறுகதைகளைத்தொகுத்து    செம்பதிப்பாக  ஞானசேகரன்  கதைகள்  நூலை வரவாக்கினார்.
 ஞானம்   இதழைத் தொடங்கியதும்  தமது  இதழுக்காக  மற்றவர்களின்  சிறுகதைகளை   தெரிவுசெய்வதிலும் சிறுகதைப்போட்டிகளை  காலத்துக்குக்காலம்   நடத்துவதிலும் காலத்தை   ஒதுக்கினார்.
புதிய  நாவல்களும்  அவரிடமிருந்து  வரவில்லை.   ஞானம் அவருடைய   நேரத்தை  விழுங்கியது.  1999  இல்  அவுஸ்திரேலியா பயணக்கதை   எழுதியவர்,  பின்னர், வட  இந்திய பயண அனுபங்களை   எழுதினார்.    தற்பொழுது  தினக்குரலில்  தமது அய்ரோப்பிய  பயண  அனுபவங்களை  எழுதிவருகிறார்.
ஒரு   ஆக்க இலக்கியப்படைப்பாளியின்  துறை  மாறிவிடும் தன்மையை  நாம்  இதிலிருந்து  காணமுடிகிறது.
அதனால்  ஞானம்  ஆசிரியர்  இழந்ததையும்  இன்று பெற்றுக்கொண்டிருப்பதையும்  காணமுடிகிறது.
ஞானம்   இதழுக்கு  மாதாந்தம்  படைப்புகளை  தெரிவுசெய்வது  முதல் அச்சிடல்,  விநியோகம்,   ஞானம்  பதிப்புத்துறை  என்று  அவருடைய கவனம்   முழுமையாக  ஞானம்  தொடர்பாகவே திசைதிரும்பியிருப்பதை   அவர்  நிச்சயம்  உணர்ந்தே  இருப்பார்.
"  சிறுகதைகள்   எழுதுவதைவிட   மற்றவர்களுக்கு  களம் அமைத்துக்கொடுப்பதில்   அமைதியடைகின்றேன்  "  என்று  இவரும் மல்லிகைஜீவா   பாணியில்   சொல்லக்கூடும்.
1999  இல்  புரிதலும் பகிர்தலும்  என்ற  தலைப்பில் அவுஸ்திரேலியா வாழ்   படைப்பாளிகளின்   நேர்காணல்   தொகுப்பினை   வெளியிட்டவர், அதிலிருந்து  பெற்ற  ஞானத்தின்  விளைவாகவோ  என்னவோபகிர்தலின்  மூலம்  விரிவும்  ஆழமும்   பெறுவது  ஞானம்   என்ற மகுடத்தில்  கடந்த  2000  ஆம்  ஆண்டு   ஜூன்    மாதம்  முதல்  ஞானம் இதழை   வெளியிட்டுவருகிறார்.
ஆரம்பத்தில்   கண்டியிலிருந்தும்    தற்பொழுது   கொழும்பு வெள்ளவத்தையிலிருந்தும்  ஞானம்  வடிவமைப்பில் மெருகேற்றப்பட்டு  வெளியாகிறது.   இதில்  சிறப்பு  என்னவென்றால் ஒவ்வொரு   மாதமும்   முதல்   திகதியன்றே    ஞானம்  இதழ் இணையத்தின்   ஊடாக  வெளிநாட்டு   வாசகர்களை  வந்தடைகிறது.
மூத்த  இளம்  தலைமுறைப்படைப்பாளிகளின்  படைப்புகளை   ஒரே சமயத்தில்   ஞானம்   இதழ்களில்   காணமுடிகிறது.   ஈழத்து  இலக்கிய வளர்ச்சியை   மறுமலர்ச்சி    காலத்திலிருந்து  நாம் அவதானிக்கின்றோம்.    போர்க்கால   இலக்கியத்தையடுத்து புலம்பெயர்ந்தோர்   இலக்கியம்  பற்றி  பேசுகின்ற  காலத்திற்கு வந்துள்ளோம்.
ஞானம்   மறுமலர்ச்சி   காலத்து  படைப்பாளிகளிலிருந்து  இன்றைய பின் நவீனத்துவம்   பேசும்   படைப்பாளிகள்   வரையில்   களம் வழங்கியது.   அதனால்  நாம்  சிற்பி  சரவணபவனின் எழுத்துக்களையும்   முற்போக்கு  எழுத்தாளர்களின்  படைப்புகளையும் மெய்யுளில்   தெளிவைத்தேடிய  மு.பொன்னம்பலம், முற்போக்கிலிருந்து  வழுவாத  நுஃமான் ஆகியோரின் கருத்துக்களையும்  சபாஜெயராசா,  .சுப்பிரமணியன்  முதலானோரின்  ஆய்வுகளையும்  பெண்ணியவாதிகளின்    சிந்தனைகளையும்   பிரதேச  இலக்கிய  மண்வாசனை  சிறுகதைகள்,    கவிதைகளையும்   புகலிடம் பெற்றவர்களின்    அந்நிய   வாழ்க்கைக்கோலங்களையும் மொழிபெயர்ப்புகளையும்   நாம்   ஞானம்   இதழ்களில்   தொடர்ந்து பார்க்க  முடிகிறது.
ஆனால்,  அதன்  ஆசிரியரும்  முன்னாள்  புனைகதை எழுத்தாளருமான   ஞானசேகரனின்   புதிய   சிறுகதைகளையோ  புதிய நாவல்களையோ   நாம்   காணமுடியாதிருக்கிறது.
இதுவே   அவர்மட்டுமல்ல,  நாமும்  பெற்றதும்   இழந்ததுமாகும்.
ஞானம்  இதழை  இலங்கை,  தமிழக  பல்கலைக்கழக  மாணவர்களும்  ஆய்வுசெய்துவருகின்றனர்.   ஞானம்  போர்  இலக்கியச்சிறப்பிதழையும்   புலம்பெயர்ந்தோர்  இலக்கிய சிறப்பிதழையும்   நேர்த்தியுடன்  வெளியிட்டிருக்கிறது.
உலகச்சிற்றிதழ்   சங்கத்தின்   தமிழ்த்தாய்  அறக்கட்டளை   விருதையும்,   தமிழகத்தின்   உயிர்மை  இதழும்  சுஜாதா அறக்கட்டளையும்  இணைந்து  வழங்கிய  விருதையும்  பெற்றுள்ளது.
ஞானம்  இதழை  வெளியிட்டவாறே  பல  நூல்களையும் பதிப்பித்துள்ள  ஞானசேகரன்,   சில  நூல்கள் , மலர்களுக்கும் தொகுப்பாசிரியராக  விளங்கினார்.
2002  ஆம்  ஆண்டு  கண்டியில்  ஞானம்  தம்பதியரை சந்திக்கச்சென்றேன்.    அவ்வேளையில்  எனக்கு  அவுஸ்திரேலியா தினத்தில்  சிறந்த  பிரஜைக்கான  விருது  கிடைத்திருந்ததை முன்னிட்டு  ஞானசேகரனும்  கண்டி  இலக்கிய  ஆர்வலர்  இராமனும் இணைந்து   வரவேற்புக்கூட்டத்தை   நடத்தினார்கள்.   அதற்கு முதல்நாள்  இரவு  தலாத்து ஓயா  கணேஷ்  அவர்களின்  இல்லத்தில் சந்தித்து  உரையாடிய  ஞானசேகரன்,   தமது  இதழில் படைப்பாளிகளின்  எழுத்துலக  அனுபவங்களை பதிவுசெய்யவிருப்பதாகச்சொன்னதுடன்,   என்னையும்   எழுதி  மறுநாள்  நிகழ்ச்சியின்போது  தருமாறு  கேட்டிருந்தார்.
 எனது  எழுத்துலகம்  என்ற  கட்டுரையை   அன்றிரவே  எழுதி மறுநாள்   எடுத்துச்சென்றேன்.
அன்றைய   கூட்டத்தில்  துரைமனோகரன்,   அந்தனி ஜீவா,  ரூபராணி ஜோசப்   ஆகியோருடன்  ஞானசேகரனும்  இராமனும்  உரையற்றினர்.
எமக்கிடையே  அவுஸ்திரேலியாவில்  மலர்ந்த  இலக்கிய  நட்பு  பற்றி அவர்  விதந்து  குறிப்பிட்டதுடன்,   ஞானம்  இதழில்  தொடர்ந்து படைப்பாளிகளின்  எழுத்துலக  அனுபவங்களை   பதிவுசெய்துவரும் தகவலையும்  வெளியிட்டார்.
பின்னர்  இவரும்  "  எனது  இலக்கியத்தடம் - முதலாம்  பாகம்  " என்ற   தொடரை  எழுதி  நூலாக்கினார்.
எழுத   ஆரம்பித்த  காலம்  முதல்   ஞானம்  இதழில்  பெற்ற
அனுபவங்களையும்   2011   இல் இணைப்பாளராக  இயங்கி வெற்றிகரமாக   நடத்தி  முடித்த  சர்வதேச  தமிழ்  எழுத்தாளர்  மாநாடு   மற்றும்,   கொழும்பு  தமிழ்ச்சங்கம்  நடத்திய  உலக  இலக்கிய  மாநாடு  பற்றியும்   பதிவுசெய்திருந்தார்.
இம்மாநாடுகளின்போது  நடந்த  அமளிகள்  பற்றி  மீண்டும் பதிவுசெய்யவேண்டிய  அவசியமில்லை.   ஆனால்,   இம்மாநாடுகளில்  உழைத்தவர்கள்   குறித்து  இன்றும் எங்கிருந்தாவது முகநூல்களிலும்   தமது  விமர்சனங்களிலும்    நேர்காணல்களிலும் சிலர்   சீண்டிப்பார்த்துக்கொண்டுதானிருக்கின்றனர்.
2010   ஆம்  ஆண்டு   ஜனவரி  மாதம்  3   ஆம்   திகதி  ஞாயிற்றுக்கிழமை கொழும்பு   தமிழ்ச்சங்கத்தில்  காலை  முதல்  மாலை வரையில்  நடந்த    சர்வதேச   மாநாடு  தொடர்பான  ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில்  ஞானசேகரன்    அவர்களையே  2011  இல்  நடக்கவிருக்கும் மாநாட்டின்   இலங்கை   இணைப்பாளராக  நியமித்தேன்.
தன்னிச்சையான  எனது   இந்த  முடிவு   சில  முற்போக்காளர்களுக்கு உவப்பானதாக   இருக்கவில்லை.    ஏற்கனவே   இலங்கை   முற்போக்கு எழுத்தாளர்   சங்கத்தில்    இணைந்திருந்த  நான்,  எவ்வாறு  முற்போக்கு   இலக்கிய  இயக்கம்  சாராத  ஒருவரை   மாநாட்டின் இணைப்பாளராக்க  முடியும் ?  என்ற   விமர்சனங்களையும் மௌனமாக   கசியவிட்டிருந்தனர்.
ஞானசேகரனின்  இயக்கமும்  ஆளுமையும்  நன்கு  தெரிந்திருந்தமையாலும்   நடைமுறைசாத்தியங்களையும்   கருதியே தீர்க்கதரிசனத்துடன்  அவரை   தெரிவுசெய்திருந்ததை  கனடாவிலிருந்த  
 முற்போக்கு  எழுத்தாளர்   சங்கத்தின்   செயலாளர் பிரேம்ஜி   ஞானசுந்தரனுக்கு    தெரிவித்தேன்.   அவரும் கனடாவிலிருந்து   மாநாட்டுக்கு   நிதிப்பங்களிப்பு செய்து  வாழ்த்தினார்.
இலங்கையில்  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்  செயல் இழந்திருந்தது.
பிரேம்ஜிக்கும்   மாநாடு  தொடர்பாக   ஒரு  கனவு  நீண்டகாலம்  இருந்தது.    ராஜஸ்ரீகாந்தனை   சர்வதேசச் செயலாளராகவும்  முன்னர் நியமித்திருந்தார்.
அனைவருடனும்    இன்முகத்துடன்  உறவாடக்கூடிய  ராஜஸ்ரீகாந்தனும்,   மாநாடுகள்  பலவற்றில்    இயங்கியிருந்த சோமகாந்தனும்  மறைந்திருந்த  சூழலில்,   ஈழத்து  எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்த   எழுத்தாளர்களுடன்  ஆரோக்கியமான உறவுவைத்திருந்த   ஒருவராகவும்   இரவு  பகல்   என்றில்லாமல் எந்நேரத்திலும்    தொடர்புகொள்ளக்கூடியவராகவும்  என்னால் இனம்காணப்பட்டவர்  நண்பர்  ஞானசேகரன்.
" யார்  முன்னின்று  செய்தால்  என்ன  யாவும்  எமது  இலக்கிய வளர்ச்சிக்குத்தானே !!!  " என்ற    பெருந்தன்மை  பிரேம்ஜியிடம் இருந்தது.
இன்றைய   தமிழ்  இலக்கிய  உலகிற்கும்  ஊடகத்துறைக்கும் அவசியம்  தேவைப்படுவது  பெருந்தன்மையான   மனப்பான்மைதான். இந்த  முகநூல்  கலாசாரமும்  மின்னஞ்சல்    தொழில்நுட்பமும் இல்லாத  அந்நாட்களில்   எமது   மூத்த  இலக்கியவாதிகளிடம் கருத்தியல்  சார்ந்த   மோதல்கள்,  இஸங்கள்  குறித்த  முரண்பாடுகள் யாவும்  இருந்தன.  ஆனால்,  பெருந்தன்மை  என்பது  அன்று ஆரோக்கியமாக  அனைவரிடமும்  குடியிருந்தது.
கூழ்முட்டை   அடித்தவர்களும்  அடிவாங்கியவர்களும்  பின்னாளில்  ஒன்றாக   அமர்ந்து   கூழ்  குடித்தனர்.
காலம்   அனைத்தையும்  மாற்றிப்போட்டுவிட்டது.

ஞானசேகரன்   ஞானம்  இதழை  தொடங்கிய    காலத்திற்கு   முன்பே  சிரித்திரன்   நின்று விட்டது.    காலப்போக்கில்   மல்லிகையும்   தனது ஆயுளை  முடித்துக்கொண்டது.     யாழ்ப்பாணத்திலிருந்து  ஜீவநதியும் மட்டக்களப்பிலிருந்து  மகுடம்  அநுராதபுரத்திலிருந்து படிகள்  மற்றும் மறுபாதி,   புதியசொல்,   பேனா   முதலான   சில  சிற்றிதழ்களும் வருகின்றன.
ஞானம்  2000  ஆம்  ஆண்டிலிருந்து  தங்கு  தடையின்றி தொடர்ச்சியாக  16  ஆண்டுகாலமாக   வெளியாகிறது.  நிச்சயமாக ஞானம்  தொடர்ந்து  வெளியாகும்  என்ற  திடமான  நம்பிக்கை  இருக்கிறது.
 காரணம் :  அதன்  பின்புலம்.  எவ்வாறு  கல்கி  இதழுக்கு  அன்று கல்கியின்  மகன்  கி. ராஜேந்திரன்  கிடைத்தாரோ,  எவ்வாறு சுந்தரராமசாமி  தொடங்கிய  காலச்சுவடு  இதழுக்கு   அவரின் புதல்வன்   கண்ணன்   வந்துள்ளாரோ  அவ்வாறே  ஞானம்  இதழுக்கு பக்கத்துணையாக   ஞானசேகரனின்  துணைவியார்  திருமதி ஞானலட்சுமி   அவர்களும்  புதல்வன்  பாலச்சந்திரனும் கிடைத்துள்ளார்கள்.
இவர்கள்   எழுத்தாளர்களாக  இருப்பதும்  ஞானம்  இதழுக்கு கொடுப்பினைதான்.
எனவே  பவளவிழாக்காணும்  ஞானசேகரனை  வாழ்த்தும் இச்சந்திர்ப்பத்தில்  திருமதி  ஞானலட்சுமி   ஞானசேகரனுக்கும்   திரு. ஞானசேகரன்  பாலச்சந்திரனுக்கும்  எமது   மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.
--------------
மருத்துவம்  பயின்று  மலையக  மக்களுக்கு  சேவையாற்றிய ஞானசேகரன்,  தாம்  பிறந்த  ஊருக்கும்  பெருமைசேர்த்தவர். புன்னாலைக்கட்டுவனில்  நலன்புரிச்சங்கம்,  சனசமூக  நிலையம், முன்பள்ளி  என  இவருடைய   இயங்குதளம்  விரிவானது.   அத்துடன் கொழும்பு  தமிழ்ச்சங்கத்திலும்  இவருடைய  சேவை   மகத்தானது. அங்கு   நூலகச் செயலாளராகவும்  இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டார்.
இலக்கியப்பணிகளுக்காக  விருதுகளையும்  பெற்ற  இவர்,  இலங்கை அரசியல்  தலைவர்களான  ஸ்ரீமாவோ  பண்டாரநாயக்கா, சௌமியமூர்த்தி  தொண்டமான்,  ரணில்  விக்கிரமசிங்கா,  செல்லையா இராஜதுரை  ஆகியோரிடமும்  அரச  சார்பு  விருதுகளையும் பரிசில்களையும்   பெற்றுக்கொண்டவர்.
இலங்கைப்படைப்பாளிகளுக்கு   மாத்திரமின்றி  புகலிடம்  பெற்று அந்நிய நாடுகளுக்குச்சென்ற   எழுத்தாளர்களுக்கும்   ஞானம்  இதழில் களம்  வழங்கி  அண்மையில்  புகலிடச்சிறப்பிதழ்  என்ற  மகுடத்தில் ஒரு  பெரிய   ஆவணத்தையே   தமிழ்  உலகிற்கு  வழங்கினார்.
இவர்  மொழிக்கும்,   சமூகத்திற்கும்  இலக்கியத்திற்கும்  அயராது மேற்கொண்ட   சேவை   மகத்தானது.

பவளவிழாக்காணும்    ஞானசேகரன்  நல்லாரோக்கியமுடன் பல்லாண்டு  வாழ   வாழ்த்துகின்றோம்.