திரும்பிப்பார்க்கின்றேன் - (கடந்த வாரத்தொடர்ச்சி) - முருகபூபதி

.
கிராமத்து விழிசைக்குயில் எங்கும் பறந்து சென்று சோலைக்குயிலான கதை.
தேசங்கள்  சென்றாலும் தன் கால்களை தாய்மண்ணில் ஊன்றியிருக்கும் பல்துறை ஆற்றலின் ஆளுமை கோகிலா மகேந்திரன்


' குயில் ஒன்று பறந்து வருகிறது. வசந்தகாலச்சோலை அதன் மனதைக்கொள்ளை கொள்கிறது. அங்கு பச்சைப்பசேலென மரங்களும் செடிகளும் கொடிகளும் பலவர்ண மலர்களுமாய் பூத்துக்குலுங்குகிறது. காய்களும் கனிகளும் விருந்து தருகின்றன. குயில் அங்கும் இங்கும் தத்தித்தத்திப்பறந்து இன்பலாகிரியில் தன்னை மறந்து பாடுகிறது. குயிலின் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. குயிலின் குரலோசை உச்சஸ்தாயியில் விதவிதமான மெட்டுக்களில் ஒலிக்கிறது. இப்படி ஒரு புதுமையான உருவகச்சித்திரமான கோகிலாவின் சோலைக்குயில் எங்களுக்கு விருந்து வைக்கிறது."
இவ்வாறு 2010 ஆண்டு வெளியாகியிருக்கும் சோலைக்குயில் (கோகிலா மகேந்திரனின் மணிவிழா மலரின் அணிந்துரையில் பதிவுசெய்துள்ளார் இம்மலரை வெளியிட்ட தெல்லிப்பழை கலை இலக்கியக்களம் அமைப்பின் தலைவர் கலாபூஷணம் சைவப்புலவர் செல்லத்துரை.
தெல்லிப்பழை விழிசிட்டியின் புதல்வி எவ்வாறு விழிசைக்குயிலாக அங்கிருந்து பறந்து மிகப்பெரிய சோலையின் குயிலாக சிறகடித்திருக்கிறார் என்பதை ஆவணமாக்கியிருக்கிறது இம்மலர்.
விழிசிட்டியும் இலங்கை இராணுவத்தினால் கபளீகரம் செய்யப்பட்டது. இன்றும் வலிகாமத்தில் அரசு விடுவிக்காத நிலங்கள் அங்கு தரிசாகிக்கிடக்கின்றன. அந்த அழகிய கிராமத்தின் இலக்கியக்குயில் சிறகடித்து பறந்து சென்ற பிரதேசங்கள் பல. அந்நிய தேசங்களுக்கும் இந்தக்குயில் பறந்து சென்றாலும் தன் தாய்நிலத்தில் காலூன்றி வாழவே விரும்புகின்றது. அதற்கான இரை அங்குதான் நிறைந்திருக்கிறது. அந்த இரையில் கலையும் இலக்கியமும் கல்வியும் சீர்மியமும் பல்சுவையாகியிருக்கிறது.



கோகிலா  பல்துறை ஆற்றல் மிக்கவர். அவற்றையெல்லாம் அவருடைய வாழ்விலும் எழுத்துக்களிலும் அயற்சியற்ற அவர் பணிகளிலும் காணமுடிந்திருக்கிறது
கோகிலா மிகச்சிறந்த நிருவாகி என்பதற்கும் சான்றாகத்திகழுகின்றது சோலைக்குயில் மலர்.
நிருவாகத்திறமையற்றவர்கள் - எதனையும் திட்டமிட்டுச்செய்யத்தெரியாதவர்கள் - தங்கள் எழுத்துக்களையே பேணிப்பாதுகாக்காமல் மற்றவர்களின் தயவை நாடி நிற்பவர்கள் - தம்மை தாம் ஆளத்தெரியாமல் மற்றவர்களை ஆளத்துடிப்பவர்கள் என்று பொதுவாக எமது எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றிய மதிப்பீடு இருந்துவருகிறது.


ஆனால், அந்தக்கூற்றை பொய்யாக்கியிருக்கும் சிலரையும் நான் எனது வாழ்வில் கண்டிருக்கின்றேன். அவர்களில்  நான் சந்தித்தவர்களின் வரிசையில் பேராசிரியர் கைலாசபதி - இரசிகமணி கனகசெந்திநாதன் - கோகிலா மகேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
சோலைக்குயில் கோகிலாவின் அறுபது ஆண்டுகால வாழ்வை அழகாக பதிவுசெய்துள்ளது. அவருடைய ஆரம்ப இடைநிலை உயர்தரக்கல்வி - பல்கலைக்கழக பிரவேசம் மருத்துவத்துறையிலிருந்து விஞ்ஞான ஆசிரியராகி காலப்போக்கில் கல்வி முகாமைத்துவ பணிப்பாளராகி சீர்மியத்தொண்டராக பணிதொடர்ந்து ஆளுமையின் முழுவடிவமாகியிருக்கிறார். எந்தத்துறையில் ஈடுபட்டிருந்தாலும் எழுத்தை கைவிடாமல் தனது அனுபவங்களையெல்லாம் படைப்பு இலக்கியமாக்கிவிடும் ஆற்றலும் மிக்கவராகத்திகழ்ந்துள்ளார்.
235 பக்கங்களில் மலர்ந்துள்ள சோலைக்குயிலை பதிப்பித்திருப்பவர் கோகிலா - மகேந்திரராஜா தம்பதியரின்  ஏக செல்வப்புதல்வன் கலாநிதி பிரவீணன்.

நான்காவது அனைத்துலக மகளிர் மாநாடு சீனாவில் 1995 ஆம் ஆண்டு நடந்தவேளையில் இலங்கை பிரதிநிதிகளில் ஒருவராக கலந்துகொண்டிருக்கும் கோகிலா - தமது பயணக்கதையையும் எழுதியிருக்கிறார்.

1965 ஆம் ஆண்டளவில் மகாஜனாவில் கற்கும் காலத்தில் உள்ளுராட்சி அமைச்சராக இருந்த மு. திருச்செல்வம் அங்கு தமது துணைவியாருடன் ஒரு நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்தபொழுது கோகிலா மாணவர் தலைவராக ஆங்கிலத்திலும் தமிழிலும் வரவேற்புரை நிகழ்த்தியிருக்கிறார்.
அவசரப்பட்டு அகலக்கால் வைக்காமல் வாழ்வில் ஒவ்வொரு படியாக ஏறி உச்சத்திற்கு வந்திருக்கும் கோகிலாவின் குறிப்பிடத்தகுந்த சமகாலப்பணி அவரை மேலும் பாராட்டுவதற்குக் காரணமானது.
அதுதான் அவருடைய சீர்மியத்தொண்டு. அதனைப்பற்றிய குறிப்புகளை மேலும் பாரக்கலாம்.


உள்ளத்துள்  உறைதல்  
கோகிலாவின்  உள்ளத்துள் உறைதல்  என்ற  நூல்  காலத்தின்  பதிவு. அதனை  வாசித்தால்  இவரை  இலக்கிய  மருத்துவர்  என்றும் அழைக்கலாம்.
சமகாலத்தில்  எம்மவர்  மத்தியில்  பரவியிருக்கும்  முகநூல் கலாசாரம்   எவ்வளவு  நன்மைகளைத் தந்திருக்கிறதோ,  அதேயளவு தீமைகளையும்தான்  தந்திருக்கிறது   என்பது  எனது  அபிப்பிராயம். முகநூலில்  பயனுள்ள  குறிப்புகள்  எழுதுவதை  விடுத்து,  காழ்ப்புணர்வுகளின்  கழிவறையாக்கிக்கொண்டிருக்கும்  பலர் மத்தியில்  நாம்  வாழ்வதனால்  பலருக்கு  உளவளப்பயிற்சியும் அவசியமாகியிருக்கிறது.
சில   வருடங்களுக்கு  முன்னர்  வீரகேசரியில்   வெளியான  கேள்வி-பதில்  பகுதியில்  2020  ஆம்  ஆண்டளவில்  உலகம் பூராவும்  ஒரு கொள்ளை   நோய்  பரவப்போகிறது  என்ற   தகவல் வெளியாகியிருந்தது.
அது  என்ன  கொள்ளை நோய்..?  மனச்சோர்வு  என்பது  அதன்  பெயர். உலகமயமாதல்  தந்துள்ள  மற்றும்  ஒரு  வரப்பிரசாதமாகத்தான் இந்த  மனச்சோர்வு  நோயையும்  அவதானிக்க  முடிகிறது. ஒரு காலத்தில்  பிளேக்  நோய்   பெரிதாகப்பேசப்பட்டது.   பின்னர்  காசநோய்.   அதன்பிறகு  புற்றுநோய்.   புற்றுநோய்  ஒரு  தொற்றுநோய் அல்ல  என்று  கண்டுபிடிக்கப்பட்டபோது,  எயிட்ஸ்  வந்துவிட்டது. எபொலாவையும்  கண்டுவிட்டோம்.    இனிவரும்  நூற்றாண்டுகளில் மேலும்   புதிய  புதிய  நோய்கள்  வரலாம்.   சமயங்களும் பல்கிப்பெருகிவிட்டன.    சாமியார்களினதும்  சோதிடர்களினதும் எண்ணிக்கையும்   அதிகரித்துவருகின்றன.
மனச்சோர்வு   நோய்  உலகெங்கும்  பரவிவருகிறது  என்பதற்கு அறிகுறிதான்   இந்த  சமயங்களின்  அதிகரிப்பும்  சாமியார்களின் எண்ணிக்கை   வளர்ச்சியும்.  பலமொழி  இதழ்களிலும்  எண்  சாத்திரம் முதல்  ராசிபலன்  வரையிலான  தகவல்  பகுதிகளும்  என்று எண்ணத்தோன்றுகிறது.
தன்னம்பிகை  குறைந்து -  நிம்மதி  தேடி ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு   வழிகாட்டுபவர்களாக  மனநல மருத்துவர்கள்    தொழிற்படுகிறார்கள்.
அத்தகைய   மனநலமருத்துவர்கள்  இலக்கியம்  படைக்கும் படைப்பாளிகளாக   இருந்தால்,  அவர்களின்  அனுபவங்கள்  நூல்களாக நிச்சயம்    பதிவாகும்  என  நம்பலாம்.


தமிழ் சமூகத்தில்  சமகாலத்தில்   மனிதர்களுக்கு  மருத்துவ  சிகிச்சை வழங்கும்   மருத்துவர்கள்,  மற்றும்  பறவைகள்,   விலங்குகள் உயிரினங்களுக்கு    சிகிச்சையளிக்கும்  மருத்துவர்கள்  தமது தொழில்சார்  அனுபவங்களை   இதழ்களில்   எழுதி , பின்னர் அவற்றைத்தொகுத்து   நூல்களாக   பதிவுசெய்து வெளியிட்டுவருகின்றனர்.
கோகிலா, உள்ளத்துள்  உறைதல்  நூலில்   தமது  சீர்மியத்தொண்டின்  ஊடாக பெற்றுக்கொண்ட   அனுபவங்களை   ( அனுபவம்  என்பதைவிட  அவர் அறிந்துகொண்ட  ‘கதைகளை)    இலங்கையில்    தினக்குரல் ஞாயிறு    இதழில்  எழுதி,   பின்னர்    தொகுத்து   நூலாக்கியிருக்கிறார்.
இந்திய  திரைப்படநடிகர்  அமிதாப்பச்சன்  பலவிதத்திலும் உலகப்புகழ்பெற்றவர்.   அதேசமயம்  கோடீஸ்வரர்.   எனினும்  பல சவால்களை -  எதிர்ப்புகளை -  வேதனைகளை   சந்தித்தவர். அவருக்கும்  அதனால்  மனச்சோர்வு  கிட்டியிருக்க  வாய்ப்புகள் அதிகம்.    ஒரு  பேட்டியில்  இவ்வாறு  சொல்கிறார்:
 நினைப்பதெல்லாம்  நடந்துவிட்டால்  மகிழ்ச்சிதான். நினைப்பதெல்லாம்   நடக்காவிட்டால்  அதனையும்  நன்மைக்கென்றே எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.”
உள்ளத்துள்  உறைதல்   நூலில்  தான்  சந்தித்த உளப்பாதிப்புக்குள்ளானவர்களுக்கு   கோகிலா   தமது  சீர்மிய பயிற்சியின்  ஊடாக  வழங்கும்  சிகிச்சை  அல்லது   ஆலோசனைகள் அமிதாப்பச்சனின்   கருத்துடன்    ஒத்துப்போகிறது.
 கவலைவந்தால்  என்ன  செய்யலாம்....?  வாழ்நாள்  பூராவுமே கவலைபட்டு   மனநோயாளியாவதா...?  அதனால்  வந்த  மனஅழுத்த நோய்க்கு   மருந்திலே   தஞ்சம்  அடைவதா...?   அல்லது கவலையிலிருந்து   முற்றாக  விடுதலைபெறுவதற்காக  தற்கொலை செய்துகொள்வதா...?
 கவலையை   கடந்துசெல்லும்  கலையை    கற்றுக்கொள்வதை  விடுத்து,    மேற்சொன்ன  முடிவுகளுக்கு   செல்பவர்கள்தான் எம்மத்தியில்  அதிகம்.
 எனவே,  கோகிலா  மகேந்திரன்  போன்ற  சீர்மிய  தொண்டர்களின் சேவை  எமது  தமிழ்  சமூகத்திற்கு  அதிகம்  தேவைப்படும்  காலத்தில்   நாம்  வாழ்கின்றோம்.
 இலங்கையில்  30   ஆண்டு  காலமாக   நீடித்த  போரினால்  ஏற்பட்ட இழப்புகளும்  சுனாமி  கடற்கோள்  அநர்த்தத்தின்  விளைவுகளும் பலரை  மன அழுத்தங்களுக்குள்ளாக்கியிருக்கிறது.   இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள  40  அனுபவங்கள்  40  பேரின்   வாழ்வை  மாத்திரம் சித்திரிக்கின்றது.    இதுபோன்று  ஆயிரக்கணக்கான  ‘கதைகள்  தமிழ் சமூகத்தில்  தொடருகின்றன.
 கோகிலாவை  சந்தித்தவர்களில்  குழந்தைகள்,  சிறுவர்,  மாணவர்கள்,  பல்கலைக்கழக  மாணவர்கள்,   குடும்பத்தலைவிகள்,   தலைவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள்,    தாழ்வுமனப்பான்மையினால் அவதியுறுபவர்கள்  -  வெளிநாடு   சென்று  வேலை  இழந்து மனச்சோர்வினால்   சட்டத்துக்குப்புறம்பான  செயல்  செய்து அதிலிருந்து   தப்பிக்க  நாடு  திரும்பி  மன  அழுத்தங்களுக்கு ஆளானவர்,   தினமும்  கனவுகள்  கண்டு  மனம்பேதலித்தவர்கள்.... இப்படியாக  பலர் வருகிறார்கள்.
 அவர்களின்   கதைகளைக்கேட்க  நிதானமும்  பொறுமையும் சகிப்புத்தன்மையும்   வேண்டும்.   மொத்தத்தில்  அன்புக்கு  ஏங்குகின்ற, அங்கீகாரத்துக்கு  அலைகின்ற  ஆத்மாக்களின்  அவலக்குரல் இந்நூலில்   சன்னமாக  ஒலிக்கின்றது.   தான்  உள்வாங்கிய ஒலிஅலைகளை   (கோகிலா   ஒரு  இலக்கிய  படைப்பாளியாகவும் இருப்பதனால்)  எழுத்தில் கவனமாக   பதிவுசெய்கிறார்.
 தன்னிடம்  சிகிச்சைக்காக  வந்தவர்களின்  கதைகளை  கேட்டுவிட்டு அனுதாபம்  தெரிவிக்காமல்,  சிகிச்சை  முறைகளையும் சொல்லிக்கொடுத்து   அனுப்புவதுடன்  நில்லாமல்,  அடுத்ததடவை சந்திக்கும்போது  என்ன  செய்யவேண்டும்...? என்பதையும் பக்குவமாகச்சொல்லிவிடுகிறார்.   அதனால்  அவரது  பதிவுகளில்  நாம் இரண்டுவிடயங்களை    அவதானிக்கின்றோம்.
 ஒன்று   பாதிப்புக்குள்ளானவரின்  கதை.   இரண்டு  அதனைக் கேட்கும் சீர்மியரின்  ஆலோசனை.
இந்நூலைப்படிக்கும்   எவரேனும்   இக்கதைகளுடன்  தம்மையும் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ளலாம்.    சீர்மியரிடம்  செல்லாமலேயே தன்னைத்தானே   தேற்றி   நிமிர்ந்துகொள்ளவும்   வாய்ப்புண்டாகலாம்.
  இந்நூலுக்கு   அணிந்துரை  வழங்கியிருப்பவர்  கோகிலாவின் முன்னாள்   ஆசிரியரும்  தெல்லிப்பழை  மகாஜனாக்கல்லூரியின் முன்னாள்  அதிபருமான  கல்விமான்  பொ. கனகசபாபதி  அவர்கள். இவரும்   சில   மாதங்களுக்கு  முன்னர்  கனடாவில் விடைபெற்றுவிட்டார்.     தமது  ஆசிரியரிடமிருந்து  வாழ்த்தும் அணிந்துரையும்   பெற்ற  பாக்கியசாலிதான்  இந்நூலாசிரியர்.   தனது பெருமைக்குரிய  மாணவிதான்  கோகிலா மகேந்திரன்  என்று  தான் செல்லும்  இடமெங்கும்  சொல்லிவந்தவர்  கனகசபாபதி.
 கனகசபாபதி   அவர்கள்  தமது  அணிந்துரையில்  குறிப்பிட்டுள்ள  ஒரு விடயம்  வாசகர்களை , குறிப்பாக  படைப்பாளிகளை  வெகுவாகக் கவரலாம்.
 கோகிலாவின்  ஒரு  கட்டுரையில்  அந்த  வாக்கியம்  இப்படி இடம்பெறுகிறது:-
உங்கள்  கடிதத்தினை  வரி  தவறாமல்  படித்தேன். வரிகளுக்கு இடையிலும்  படித்தேன்.”
 இவ்வாறு   அபூர்வமாகத்தான்  படைப்பாளிகளுக்கு  எழுதும்போது சொற்கள்   வந்துவிழும்.   ஒருகணம்  நின்று  மீண்டும்  படித்துவிட்டு அடுத்த    வரிக்கு  கண்கள்  நகரும்.   வரிகளுக்கு  இடையிலும் படிக்கலாமா...?  ஆம்  படிக்கலாம்.   அதுதான்  வாசகனின்  சிந்தனையில்  ஊடுருவும்  ஆற்றல்.
கோகிலாவின்   எழுத்துக்கள்  அத்தகையன.    அவருக்கு   எமது வாழ்த்துக்கள்.