பாகிஸ்தானிடமா இந்தியாவிடமா போர் விமானங்களை கொள்வனவு செய்வது ?
ஹிருணிகாவின் பிணையில் புதிய கிண்ணஸ் சாதனை
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு பிணை
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்
முஸ்லிம்களுக்கு பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புபில்லை : அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
நாடு திரும்பினர் 80 பணிப்பெண்கள்
இந்திய வெளிவிவகார செயலாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்திப்பு
துமிந்தவிற்கு பிணை
“பீகொக்” மாளிகையில் மஹிந்தவின் தங்கம்?
வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரத சேவைகளில் மாற்றம்
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா
யாழ். பொங்கல் விழாவில் கலந்துகொள்வது எனக்கு கௌரவம் : நாட்டில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது
வண. இராயப்பு ஜோசப் பதவி துறப்பு
பாகிஸ்தானிடமா இந்தியாவிடமா போர் விமானங்களை கொள்வனவு செய்வது ?
12/01/2016 தேசிய பாதுகாப்பை பலப்படுத்த போர்விமானங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அதை இந்தியாவிடம் இருந்து வாங்குவதா அல்லது பாகிஸ்தானிடம் இருந்து வாங்குவதா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
போர்ச் சூழலிலோ அல்லது அமைதிக்கால சூழலிலோ பாதுகாப்பை பலப்படுத்தி பேணுவது ஒரு நாட்டின் கொள்கையெனவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் இருந்து எட்டு ஜே.எப். 17 போர் விமானங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளதாக இந்திய மற்றும் பாகிஸ்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை பாதுகாப்பு தரப்பு அந்த செய்தியை மறுத்துள்ளது.
அது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில்,
இலங்கையில் இன்று போர்க்கால சூழல் ஒன்று இல்லாத நிலையில் நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த அவசியமில்லை என கருத முடியாது. போர்க்கால சூழலிலும் அதேபோல் அமைதிகால சூழலிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எமது விமானப்படை பலமானதாக உள்ளது. எனினும் அவர்களுக்கான மேலதிக பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு போர் விமானங்கள் அவசியமாகின்றன. நாமும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம்.
அந்த வகையில் போர் விமானங்களை நாம் கொள்வனவு செய்யவேண்டிய தேவை உள்ளது. ஆனால் அதை பாகிஸ்தானிடம் இருந்தா அல்லது இந்தியாவிடம் இருந்தா கொள்வனவு செய்வது என்பது தொடர்பில் இன்னும் எமது அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. எனினும் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
ஆனால் ஊடகங்கள் வெளியிட்டு வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும். நாம் அவ்வாறு இரகசியமான உடன்படிக்கைகளை கைச்சாத்திட இல்லை என அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
ஹிருணிகாவின் பிணையில் புதிய கிண்ணஸ் சாதனை
12/01/2016 பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை குறுகிய காலத்தில் விடுதலை செய்து நல்லாட்சி அரசாங்கம் புதிய கிண்ணஸ் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கறுப்புக்கொடி விவகாரம் தொடர்பிலும் தாம் மக்களிடமிருநது திரட்டிய தகவல்களை அடிப்படையாக கொண்டும் தாம் புத்தகம் ஒன்றை வெளியிடவுள்ளதாககூம் அவர் சுட்டிக்காட்டினார்.
தூய்மையான ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் .நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பாது எமது நாட்டில் பிரசித்தமான ஒரு கதாபாத்திரமாக பேசப்படுபவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹிரணிகா பிரேமசந்திர ஆவார். ஜனவரி 4 ஆம் திகதி இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் நான் ஆரூடம் கூறியிருந்தேன். ஹிருணிகா கைது செய்து பிணையில் விடுவிக்கப்படுவார் என்று கூறியிருந்தேன்.
அந்த வகையில் பார்த்தால் இன்று நான் இலங்கையில் முதல்தர ஜோதிடராக உள்ளேன். கடந்த 4 ஆம் திகதி அவரை கைது செய்யவிருப்பதாகவே எமக்கு தகவல் கிடைத்திருந்தது. எனினும். நாம் இது தொடர்பில் முன்கூட்டியே அறிவித்தமையினால் அவரை சில நாட்கள் சென்ற பின்னர் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர். ஏவ்வாறாயினும நாம் குறிப்பிட்ட விடயம் நடந்துள்ளது.
இன்று நாலக சில்வா என்ற புத்திஜீவி விசாரணைக்கு இடையூறு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்களை அவ்வாறு செய்துள்ள போது ஹிருணிகா விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் நாட்டில் மிக விரைவாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்ற பெருமையும் அவரையே சாரந்துள்ளது. இது மிகச்சிற்நத கிண்ணஸ் சாதனையாக பதிவு செய்யப்பட வேண்டிய காரணியாகும்.
அதேபோல் சாதாரணமாக வௌ்ளிக்கிழமைகளில் எவரும் பொலிஸ் நிலையத்திற்கு செல்லவதில்லை. காரணம் அன்றைய தினம் மாலை 03.00 மணியைத் தாண்டினால் பல அதிகாரிகள் கடமையை நிறைவு செய்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவதால், பிணையில் கையெழுத்திட இருப்பதில்லை.
எதுஎவ்வாறு இருப்பினும் ஹிருணிகா விடயத்தில் கடந்த சனிக்கிழமை ஆச்சரியமாக பதிவாளர் அலுவலகம் திறந்திருந்தமையும், அதிகாரிகள் பிணையில் கையெழுத்திட தயாராக இருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நாம் ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியானதையிட்டு அந்த நாள் நாட்டின் இருளான நாள் என்று அடையாளப்படுத்தும் வகையில் கறுப்புக்கொடி ஏந்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
பின்னர் அதற்கு மாற்று நடவடிக்கையாக முகநூலின் அடையாளப் புகைப்படத்தை கறுப்புக்கொடி படமாக மாற்றுமாறு அறிவித்திருந்தோம். அதனையடுத்து பாராளுமன்றத்தில் சிலர் ஜனநாயகமான முறையில் எமக்கு பதிலளித்தனர். மறுபுறம் அமைச்சர்களான ராஜித ,தலதா, ஹரீன் ஆகியோர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான பதில்களை மறைமுகமானக தெரிவித்தனர்.
இதன் போது அமைச்சர் ஹரீன் பாராளுமன்றத்தில் கறுப்பு கொடியேந்தச் சொல்வபர்களுக்கு விரைவில் வௌ்ளைக்கொடி ஏந்த வேண்டிய தேவை ஏற்படும் என்றார்.
வௌ்ளைக்கொடி ஒரு நபர் இறந்த பின்னரே ஏந்தப்படும். இதனால் அமைச்சர் என்ன குறிப்பிட முற்படுகின்றார் என்பது தெரியவருகின்றது. அதேபோல் தொடர்ந்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்துவரும் அபயாராம வஹாரை பூமியிலும் பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கறுப்புக்கொடிகளை நீக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனை எதிர்பார்த்து தான் முகப்புத்தகம் வாயிலாக நாம் கறுப்புகொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க கோரினோம். ஆனால் இந்த கறுப்புக்கொடி போராட்டத்தில் எவரும் பங்குகொள்ளவில்லை என்ற கருத்தும் பரப்பப்டுகின்றது.
ஆனால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் சமன்மலி, மொஹமட் முஸம்மில் ஆகியோரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். நன்றி வீரகேசரி
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு பிணை
12/01/2016 முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூவை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்
12/01/2016 இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவருடன் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
முஸ்லிம்களுக்கு பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புபில்லை : அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு
12/01/2016 இலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள். தென்னிலங்கையிலும் வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட்டை சீரழித்த காலத்தில் கூட அவர்கள் எந்தப் பக்கமும் சாராது ஜனநாயக விழுமியங்களை பேணிப் பாதுகாத்தவர்கள். அவர்களுக்கு எந்தவிதமான பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்பில்லையென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.
மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கையின் ஐ.நா. வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்துகொண்டு ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் செல்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சில் பாராட்டு வைபவம் நடத்தப்பட்டது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையில் போர்க்கால நெருக்கடியின் போதும், போர் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னரும் ஐ.நா சபை முகவர் நிறுவனங்கள் ஆற்றிய பங்களிப்பை நாம் மறக்க முடியாது. இலங்கை மக்கள் உக்கிர போரினால் பாதிக்கப்பட்டிருந்த போது அவர்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த நிறுவனங்கள் அளப்பரிய உதவியை செய்தன. அவற்றை நாம் இன்று நன்றி உணர்வுடன் நினைவு கூருகின்றோம்.
குறிப்பாக நீங்கள் கடந்த நாலரை வருடகாலம் இங்கு பணியாற்றிய காலத்தில் இலங்கை மக்களுக்கு செய்த பணிகளுக்காக நான் தனிப்பட்ட ரீதியில் நன்றி கூறுகின்றேன். எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அகதி முகாமில் கஷ்டப்பட்டு வரும் வடமாகாண முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதற்கு சர்வதேச நிறுவனங்களோ இலங்கை அரசோ குறிப்பிடத்தக்க எந்தவிதமான உதவியையும் நல்கவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு இந்த சந்தர்ப்பத்தில் கொண்டுவருகின்றேன். நாங்கள் இந்த அகதி மக்கள் தொடர்பாக இன்று கையளிக்கும் உண்மையான ஆவணங்களை நீங்கள் எப்போதாவது நேரமிருக்கும் போது படித்துப் பார்த்தால் உண்மைகள் விளங்கும்.
முஸ்லிம்கள் மீளக்குடியேறும் போது வில்பத்து என்றும் காணிக் கொள்ளையர்கள் என்றும் கூறி எம்மை தடுக்கின்றனர். ஐ.நா. நிறுவனம் வழங்கிய நிவாரணத்தில் கூட பழைய அகதிகள் புதிய அகதிகள் என்று பாரபட்சம் காட்டப்பட்டு நாம் புறக்கணிக்கப்பட்டோம். இந்த மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் நான் இவர்களுக்காக குரல் கொடுக்கும் போது என் மீது சேறு பூசுகின்றனர். இனவாத ஊடகங்கள் என்னை குறி வைத்துத் தாக்குகின்றன.
இலங்கையிலே ஐ எஸ் தீவிரவாதிகள் தலிபான்கள் ஊடுருவி உள்ளனர் என்றும் அவர்களுடன் இலங்கையர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் இங்குள்ள ஊடகங்கள் கதையளக்கின்றன. இங்கு இவ்வாறான தீவிரவாதிகளுடன் இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பிருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துங்கள் என நாம் கூறுகின்றோம்.
ஐ.நா நிறுவனத்தில் உயர்பதவி பெற்றுச் செல்லும் நீங்கள் வடமாகாண முஸ்லிம் மக்களின் விடயத்தில் கூடிய கரிசனை செலுத்த வேண்டும். அத்துடன் புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் வரையிலான இடங்களில் உள்ள முஸ்லிம்களின் காணிகள் இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த மக்கள் தமது காணிகளில் வேளாண்மை செய்ய முடியாத அவல நிலை இன்று இருந்து வருகின்றது. இவற்றுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றார். நன்றி வீரகேசரி
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
13/01/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திர காந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 27ம்; திகதி வரை (27.1.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் 26ம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. நன்றி வீரகேசரி
நாடு திரும்பினர் 80 பணிப்பெண்கள்
13/01/2016 குவைட் நாட்டுக்கு பணிப்பெண்களாக சென்றிருந்த பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளான இலங்கைப் பெண்களில் 80 பேர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று நாடு திரும்பியுள்ளனர்.
பணிப்பெணிகளிடம் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இந்திய வெளிவிவகார செயலாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்திப்பு
13/01/2016 இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்ஷங்கருடன் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினார்.
இச் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.
நன்றி வீரகேசரி
துமிந்தவிற்கு பிணை
13/01/2016 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சொத்துக்கள் விவரங்களை பிரகடனம் செய்யாமையை தொடர்பில் இவருக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
“பீகொக்” மாளிகையில் மஹிந்தவின் தங்கம்?
14/01/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்கப்படவிருந்த தனது “பீகொக்” மாளிகையின் (மயில் மாளிகை) மணல் போட்டு மூடப்பட்ட நீச்சல் தடாகத்திற்குள் “பொலித்தீன் பைகளில் தங்கமும் பணமும்” புதைக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் விசாரித்து உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டுமென அம் மாளிகையின் உரிமையாளர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்தார்.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்ததாகவும் அம்முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு கோட்டையிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு நேற்று புதன்கிழமை மாலை வந்த பிரபல தொழில் அதிபரும் தொழிலாளர் கட்சித் தலைவருமான ஏ.எஸ்.பி.லியனகே பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துவிட்டு வெளியே வந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் எனக்கு சொந்தமான பீகொக் மாளிகையை கடந்த 8 மாதங்களுக்கு முன்பதாக இரண்டு வருடங்களுக்கு தற்காலிகமாக வாடகைக்கு வழங்க எதிர்பார்த்தேன்.
தனிப்பட்ட காரணங்களால் அதனை வாடகைக்கு வழங்க முடியாமல் போனது.
இம் மாளிகை வழங்கப்பட தீர்மானித்த காலத்தில் சோதிடர்கள் மற்றும் வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமைய மாளிகையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு மாளிகை முன்பாக இருந்த நீச்சல் தடாகமும் முழுமையாக மண்போட்டு மூடப்பட்டது.
தற்போது இவ்வாறு மூடப்பட்ட நீச்சல் தடாகத்தினுள் மஹிந்தவுக்கு சொந்தமான தங்கமும் பணமும் பொலித்தீன் பைகளில் புதைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் உண்மைத் தன்மை எனக்கு தெரியாது. நான் அங்கு இல்லாத சந்தர்ப்பங்களில் ஏதாவது “நடந்தும்” இருக்கலாம். இச் செய்திகளால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே நீச்சல் தடாகத்தை தோண்டி வெளியான செய்திகள் தொடர்பாக உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடம் இன்று முறைப்பாடு செய்தேன்.
இந்த முறைப்பாடுகளின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பாளர் உட்பட ஊடகங்களுக்கும் வழங்கியுள்ளேன் என்றார். நன்றி வீரகேசரி
வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரத சேவைகளில் மாற்றம்
14/01/2016 வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
அதன்படி புதிய நேர அட்டவணைகள் வருமாறு,
கொழும்பு யாழ்பாணம் இடையில் சேவையில் உள்ள யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து காலை 05.50 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06.35 இற்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த புகையிரதம் பிற்பகல் 02.37 இற்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதுடன், பிற்பகல் 03.20 ற்கு காங்கேசன்துறையை சென்றடையவுள்ளது.
யாழ்தேவி யாழ்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்படும் போது, காங்கேசன்துறையில் இருந்து காலை 08.25 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து காலை 9.35 இற்கு யாழ்ப்பாணத்தையும், கொழும்பு கோட்டைக்கு பிற்பகல் 06.32 இற்கும் சென்றடையவுள்ளது.
ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரம் சேவையில் ஈடுபடக்கூடிய கடுகதிப் புகையிரதம், யாழ்ப்பாணத்திலிருந்து காலை 08.20 இற்கு பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 04.25 இற்கு கொழும்பு கோட்டையை சென்றடையவுள்ளது.
இதுதவிர தலைமன்னாரிலிருந்து புறப்படும் புகையிரதம் காலை 07.30 இற்கு பயணத்தை ஆரம்பித்து, காலை 10.50 இற்கு அநுராதபுரத்தையும், பிற்பகல் 04.05 இற்கு கொழும்பு கோட்டைக்கு வந்தடையும்.
இந்த மாற்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். நன்றி வீரகேசரி
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா
14/01/2016 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரக்னங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழ். பொங்கல் விழாவில் கலந்துகொள்வது எனக்கு கௌரவம் : நாட்டில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது
14/01/2016 எல்லோரையும் போலவே, நானும் தைப்பொங்கலுக்காக ஆர்வத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் காத்திருக்கின்றேன். ஆனால் இந்த வருடம் இலங்கைக்கான புதிய அத்தியாய ஆரம்பத்தின் தருணமாக இவ்வருடம் கொண்டாடப்படவிருக்கின்றது. இதற்காக, ஆசியவுக்கான ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானியா) அமைச்சர் என்ற வகையில் மூன்றாவது விஜயமாக இலங்கை வருகிறேன். கடந்த 12 மாதங்களில் நாடு கடந்து வந்த பாதை என்னை அதிசயிக்க வைத்துள்ளது. இன்று, பெரும்பாலான இலங்கையர்களும், அனைத்து இன பிரிவினரும் ஒன்றிணைந்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன் கற்பனை செய்ததைவிட பிரகாசமான எதிர்காலத்தை நோக்குவதை நான் பார்க்கின்றேன் என பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தனது இலங்கை விஜயம் தொடர்பில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் மாற்றத்தை காணும் பொருட்டு ஜனாதிபதி சிறிசேனாவை தெரிவு செய்து சிறிது காலத்தின் பின்னர் நான் கடந்த விஜயத்தை மேற்கொண்டேன். முக்கியமாக மூன்று விடயங்களால் ஊக்குவிக்கப்பட்டு ஈர்க்கப்பட்டேன்.
இதில் முதலாவதாக, இதுவரை நாட்டில் பல வருடங்களாக நிழலாக காணப்படும் புரையோடிப்போன இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பு, இரண்டாவதாக, ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்கு அவசியமான சோதனைகள் மற்றும் சமநிலைகளை மீள கட்டியெழுப்பதற்கான அரசாங்கத்தின் ஆர்வம், மூன்றாவதாக, பல வருடகால கசப்பான உறவின் பின்னர் தமது பழங்கால தோழர்களுடனான உறவு புத்துயிர் அளித்தல் என்பனவற்றை கூற முடியும். நன்றி வீரகேசரி
வண. இராயப்பு ஜோசப் பதவி துறப்பு
14/01/2016 மன்னார் ஆயர் அதி. வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பதவித்துறப்பை திருச்சபை சட்ட எண் 401 பகுதி 1க்கு அமைவாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளதையடுத்து இலங்கைக்கான அபோஸ்த்தலிக்க தூதுவர் இந்த அறிவிப்பை உத்தியோக பூர்வமாக இன்று அறிவித்தார்.
மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வரை திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் அதி. வணக்கத்திற்குரிய ஜோசப் கிங்ஸிலி சுவாம்பிள்ளை ஆண்டகையை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்த்தலிக்க பரிபாலகராக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்துள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணி அளவில் வத்திகானில் இருந்து பரிசுத்த பாப்பரசரால் இந்த அறிவிப்பை விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை தெரிவித்தார்.
இந்த நியமனத்தின் பின்னர் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியின் ஊடாக மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்த்தலிக்க பரிபாலகராக ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி