தொத்து வியாதிகள் - (சிறுகதை) அருண். விஜயராணி

.
( படைப்பிலக்கியவாதியும் சமூகச்செயற்பாட்டாளருமான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் மறைந்து ஒரு மாதமாகிவிட்டது. அவர் மறைந்த திகதி 13-12-2015. அவரது நினைவாக பதிவாகும், அவரது இச்சிறுகதையை தமிழ்நாட்டில் பேராசிரியை, கவிஞி தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்)


"  இப்ப  நான்  உங்களை  ஒஸ்ரேலியாவுக்கு  கூப்பிட்டது,  ஒவ்வொரு  நாளும்   மூட்டை   மூட்டையாக  எனக்கு  புத்தி  சொல்லவோ...?"
உந்தக் கண்றாவியளைக் காட்டத்தான்  என்னைக் கூப்பிடுகிறாய்  என்று தெரிந்திருந்தால்  அங்கேயே  நின்றிருப்பன்."
"  பின்னப்  பயந்து  வாழ்ந்திட்டால்  சரி...  கொஞ்சம்  தலையை நிமிர்த்திவிட்டால்... அது  கண்றாவி   அப்படித்தானே...?"
சுட்டுவிரலை    முகத்துக்கு  எதிரே  நீட்டி  புருவத்தை  மேலே  உயர்த்தி, நிமிர்ந்து   நிற்கும்  மகளை  வியப்புடன்  பார்த்தாள்  அருளம்மா.
மகளா  பேசுகிறாள்...?  ஒஸ்ரேலியாவுக்கு  வந்து  எப்படி  மாறிவிட்டாள். உடையில்   பேச்சில்,   உறவாடுவதில்...?



"  அம்மா...  எனக்கும்  மாப்பிள்ளையைப்  பிடிச்சிருக்கா... என்று  கல்யாணம் முற்றாக்க  முன்பு  ஒருக்கால்  அப்பாவைக் கேட்கச்சொல்லு  அம்மா."
ஒரு காலத்தில்  அப்பாவுக்குப்பயந்து  பயந்து  தாயின்  சேலைத்தலைப்பால் தன்  முகத்தை   மூடிக்கொண்டு  காதோரம்  கிசு  கிசுத்த  சுபாஷினி, பயத்தைப்பற்றி   இப்போது  எப்படி  எடுத்தெறிந்து  பேசுகிறாள்.
என்ன  பேசாமல்  இருக்கிறீங்கள்.   முன்னர்  நாங்கள்  அப்பா   அம்மாவுக்கு முதலில்  பயம்.   பிறகு  ரீச்சருக்குப்பயம்.... பிறகு  பக்கத்து வீட்டாருக்குப்பயம்.... பிறகு  ஊருக்குப்பயம்.... கடைசியில்  புருஷனுக்குப்பயம்.... இப்படிப் பயத்திலேயே   பொம்பளையின்ட  சீவியம் முடிஞ்சு போகும்..."   என்றாள்  சுபாஷினி.
" இதையெல்லாம்  ஏன்  பயம்  எண்டு  நினைக்கிறாய்.   மரியாதை  எண்டு நினைச்சுப்பார்.   கட்டுப்பாடென்று  நினைச்சுப்பார்.   அப்பா  அம்மாவின்ட சொல்லுக்கு    கட்டுப்படேக்கில்ல  நல்ல  பிள்ளையா  வளர்கிறம்.   ரீச்சருக்கு பயப்படும்போது  நன்றாக  படிக்கிறாய்.... ஊருக்கு  கட்டுப்பட்டு நடக்கேக்குள்ள  மரியாதையாக  வாழப்பழகுகிறாய்...."   அருளம்மா நிதானமாகச் சொன்னாள்.
"  நிற்பாட்டம்மா....   இப்படியே  கதைச்சு  கதைச்சு...  உன்னுடைய  வாழ்வை நாசமாக்கிப்போட்டாய்...    என்னுடைய  வாழ்க்கையையும் நாசமாக்கிப்போடாதை."
எந்தத்  தாயும்  தன்ர  மகளின்ர  வாழ்க்கை  நாசமாகிப்போறதை   விரும்ப மாட்டாள்  சுபா..."
ஆனால்,   நீ   ஆசைப்படுறாய்.   அதுதான்  அந்தக் கஞ்சனோடு  சேர்ந்து என்னை  வாழச் சொல்லுறாய்.   போயும்  போயும்  தேடிப்பிடிச்ச  ஒரு கஞ்சனைத்தானே   அப்பா  எனக்கு  கட்டித்தந்தவர் ."   சுபாஷினியின்  குரல் உயர்ந்தது.
பொத்தடி  வாயை....  ஊரில  இருக்கேக்குள்ள  புருஷன்  நல்லவர். ஒஸ்ரேலியாவுக்கு   வந்தவுடன்  கஞ்சனா   மாறிட்டாரோ...?"
" அங்கே  அப்பா  குடுத்த  சீதன  வீட்டுக்கு  வாடகையும்  கட்டாமல் சம்பளத்தை   எடுத்துச் செலவழிக்கேக்குள்ள  எப்படி  கஞ்சத்தனம்  வரும்"
" அப்படி  வா  வழிக்கு....  ஊரிலை   உன்னை   வேலைக்கும்  அனுப்பாமல் நல்லாத்தான்   வைச்சிருந்தவர்.   இங்கு  வந்து  கொஞ்சம்  காசை இறுக்குகிறார்     எண்டால்...  அது  தேவையைப் பொறுத்தது  எண்டு  உனக்கு ஏன்   விளங்கேல்லை...."
"  உங்கடை   மருகமகனுக்கு  விளங்கேல்லை   எண்டு  சொல்லுங்கோ...  அங்க நான்    உழைக்கேல்ல...  இங்கை   உழைக்கிறன்.   என்ர  விருப்பத்துக்கு  ஒரு உடுப்பை    வாங்கினால்  என்ன... படத்துக்குப்போனால்  என்ன...?"
உன்னை   மாதிரி  மருகனும்  உழைக்கிறார்  என்றிட்டு,   ஒவ்வொரு கிழமையும்    உடுப்பு  வாங்க  வெளிக்கிட்டால்...   குடும்பத்துச்செலவுக்கு எங்கே   கையேந்திறது... எண்டு  சொல்லு  பார்ப்பம்..."
"  அம்மா...  நீ...  திருப்பித்திருப்பி  எவ்வளவு  கதைச்சாலும்...  நான்   குமரனை டிவோர்ஸ்  பண்ணுறது   பண்ணுறதுதான்....  சும்மா  ஙொய்...  ஙொய்... எண்டு வண்டு    மாதிரிச்சத்தம்  போட்டு  என்ர  பிள்ளைகளின்ட  மனதையும் பழுதாக்கிப்போடாதை..."
அதைக்கேட்க  அருளம்மாவுக்குச்  சிரிப்பாக  வந்தது.
இவர்களுக்குப்   பிள்ளைகளைப்பற்றிய  எண்ணம்  கொஞ்சமாவது  இருக்கா...?    வெள்ளைக்கார  நாட்டுக்கு  வந்தவுடன்,   வெள்ளைக்காரர் மாதிரியெல்லோ   நடக்க  ஆசைப்படுகினம்.   பிள்ளைகள்  எப்படிப்போனால் என்ன...?    அதுகளின்ட  மனம்  என்னமாதிரி  உடைஞ்சால்  என்ன...?  என்று. அவள்    தன்  கணவனிடம்  எத்தனை   அடி  உதைகளை   வாங்கியிருப்பாள். அவற்றையெல்லாம்   தாங்கிக்கொண்டு,   பிள்ளைகளை வளர்த்தபடியால்தானே    இன்று  ஒரு  பொம்பிளையாக  அவள்   முன்னால் நின்றுகொண்டிருக்கிறாள்   மகள்  சுபா.
"  சுபா... அண்டைக்கு  நான்  அப்பாவை  டிவோர்ஸ்   பண்ணியிருந்தால்...  நீ இண்டைக்கு   மரியாதையாக  வாழமாட்டாய்."
"  உனக்கு  அப்பாவை  டிவோர்ஸ்  பண்ணப்பயம்.  ஆனால்,  எனக்கு அந்தப்பயம்  இல்லை  அம்மா...."
"  ஆனால்...  தற்கொலை  செய்யப்பயம்  இருக்கேல்லை.   உங்களை நினைச்சுத்தான்   இந்த  சீவியத்தைக்கொண்டு  இழுத்தனான்  தெரியுமே..."
சொல்லும்போதே    அருளம்மாவுக்கு  கண்ணீர்  பொங்கிக்கொண்டு   வந்தது. ஓடிப்யோய்    தன்னுடைய  கட்டிலில்  விழுந்தாள்.
படார்   என்று  கதவு  சத்தத்துடன்  சாத்துகின்ற  ஒலி.
சுபாஷினி   வேலைக்குப் போய்விட்டாள்.
பேரப்பிள்ளைகள்    ஸ்கூலுக்கு  வெளிக்கிட்டுப்போன  பின்னர்... அருளம்மாவும்    மகளுக்கு  எத்தனையோ  புத்திமதிகளை சொல்லிப்பார்த்துவிட்டாள்.
ஒவ்வொரு    நாளும்  இப்படித்தான்  பிடிகொடுக்காமல் நழுவிப்போய்விடுகிறாள்.
சும்மாவா  நழுவுகிறாள்...   அவளது  மனதை   ஏதாவது  ஒன்று  சொல்லி... அறைந்து... ரத்தம்   சிந்தும்படியாக  வைத்துவிட்டுத்தான்  நழுவுகிறாள்.
"  கஞ்சப்புருஷனோட  என்னால  வாழ  முடியாது "
எவ்வளவு    சாதாரணமாகச்  சொல்லிவிட்டுப்போய்விட்டாள்...  அப்படியானால்   அருளம்மாவும்...  அவளை  ஒத்த  பெண்களும்...  எவ்வளவு காரணங்களுக்காக   புருஷன்மாரை   விவாகரத்துச் செய்திருக்கவேணும். வெறும்   பயத்திலா  அவர்கள்  டிவோர்ஸ்  பண்ணாமல்  இருந்தார்கள்....?
இன்பத்திலும்   துன்பத்திலும்  இணைபிரியோம்  என்று  அம்மி  மிதித்து அருந்ததி   பார்த்து,   சத்தியம்  பண்ணி  ஏற்றுக்கொண்ட  திருமண வாழ்க்கையை    எவ்வளவு  பயபக்தியுடன்  ஒரு  கண்ணாடிப் பாத்திரத்தைத் தலையில்  கொண்டு   நடப்பதைப்போன்ற  அவதானத்துடன் நடந்துகொண்டார்கள்.   ஒருவர்  குறையை   இன்னொருவர்  அனுசரித்து விட்டுக்கொடுத்து,    தம்  சந்தோஷத்தில்  உருவான  குழந்தைகளை அநாதைகளாக   விட்டுவிடக்கூடாது  என்றா...  ஒரு  பொறுப்புடன்... பரிவுடன்... ஆசையுடன்...
இவையெல்லாம்   சுபா  கூறுவது போல...  பயத்துடன்  நடக்கிற காரியங்களா...?  என்ன  பேச்சுப்பேசுகிறாள்...?
வீடு  கட்டித்தாறன்  என்று  சொல்லிப்போட்டு...  அத்திவாரத்தைப்போட்டு ஏமாத்தினார்  எல்லே...உன்ரை   மாமனார்.   அப்படிப்பட்டவரின்ட மகளுக்குப்பக்கத்திலையும்   படுக்காதை  ராசா...  உனக்கு  நஞ்சு பருக்கிப்போடுவாள் "
அருளம்மாவின்   தந்தை   இறந்த பின்னர்,..  இனி அத்திவாரம்  மேற்கொண்டு    எழும்பாது  என்று   தெரிந்தவுடன்...   மாமியார்  தன் கணவனுக்கு    எழுதிய  கடிதத்தை...   எத்தனை தரம்  வாசித்து  அருளம்மா அழுதிருப்பாள்.    பெண்ணே    பெண்ணுக்கு  எதிரியா...?   ஒவ்வொரு  முறையும்    மாமியார்  விடுதலைக்கு  வந்து  நிற்கும்பொழுது  அவளது தூண்டுதலால்    கணவனிடம்  தான்  வாங்கும்  அடிகள்...  அவர்  பெண்டாட்டிதாசன்    இல்லை   என்பதை  தாய்க்கு  நிரூபிக்க...  அவள்மேல் அவர்    கோபத்துடன்  வீசியெறியும்  கோப்பைகள்...
எவ்வளவு   பொறுமையுடன்  கண்ணாடித் துண்டுகனைப் பொறுக்கியிருப்பாள்  அருளம்மா.
மாமியார்  ஊருக்குப் போனபின்பு  அவளோடு  வந்து  ஒட்டிக்கொள்ளும் கணவன்,    அவளது  கன்னத்துக்காயங்களைத் தடவும்போது...
"  சீ...  நீங்கள்  ஒரு  கோழைஎனச்சீற  முடிந்ததா...?  அல்லது  அவரை உதறத்தான்   முடிந்ததா...?   எய்தவன்  இருக்க  அம்பை  நோவானேன்...  என எவ்வளவு    இரக்கத்துடன்...  அவரை   மன்னிக்க  முடிந்தது.  இவையெல்லாம் பயத்தில்    நடந்ததா...?  அந்த  சகிப்புத்தன்மை   ஒரு  பக்கத்தில் இருந்ததால்தானே   அவர்  நல்ல  தகப்பனாக...   பிள்ளைகளுக்கு  ஒரு  நல்ல வாழ்க்கையை   அமைத்துக்கொடுத்தார்.   அதில்  சிறிதளவுகூட  சுபாவிடம் இருந்தால்...  அவளுடைய  வாழ்க்கை  இப்படி  சீர்குலையுமா...?
டிரிங்...டிரிங்...
வாசல்   மணியின்  அழைப்புச்சத்தம்.
சுபாதான்   திரும்ப  வந்துவிட்டாளோ.... அவளை   நிம்மதியாக  வேலை செய்யவிடேல்லையோ...
யோசித்துக்கொண்டே   அருளம்மா   கதவைத்திறந்தாள்.
வாசலில்   மருமகன்  குமரன்.
" வாங்கோ தம்பி "
"  என்ன  அழுதுகொண்டிருந்தனீங்களே...? "
" ஒஸ்ரேலியாவுக்கு  வந்த  நாள்  தொட்டு  அழுதுகொண்டுதானே இருக்கிறன்  தம்பி."
அருளம்மா    சேலைத்தலைப்பால்  கண்ணைத்துடைத்துக் கொண்டாள்.
"  நீங்கள்  வந்தபடியால்  அழுகிறீங்கள்....  நான்  ஏன்  ஒஸ்ரேலியாவுக்கு வந்தனான்    என்று  கவலைப்படுறன்....  இல்லாட்டி  சுபா  இப்படி மாறியிருக்கமாட்டாள்."
" இருங்கோ.... கோப்பி  கொண்டுவாறன். "
"  வேண்டாம்  மாமி...   முக்கியமான  பத்திரங்களை  சைன்பண்ணி  மகளின்ட அறையில்   வைச்சிட்டுப்போறன்  எண்டு  போன்  பண்ணினவை.....  அதுதான்  எடுக்க வந்தனான்."
"  தம்பி  அவள்தான்...  ஏதோ  சின்னப்பிள்ளை....  தெரியாமல்  கூத்தடிக்கிறாள் எண்டால்  நீங்களுமே..."
"  பத்தும்....  பன்னிரண்டும்  வயசான  பிள்ளைகளின்ட  தாய்... சின்னப்பிள்ளை இல்லை   மாமி." என்றான்  குமரன்.
அருளம்மாவுக்கு   மேலே   என்ன  பேசுவது  என்று  புரியவில்லை.   அவனது பேச்சின்    உரப்பில்...  சுபா  மீது  அவன்  கொண்டுள்ள  கோபம்  புரிந்தது.
"  ஊரில்  சுபா....  உழைக்கேல்லை... இங்கை   வந்து  உழைக்கத் துடங்கின உடன  சின்னச்சின்ன  ஆசைகள்  தம்பி.  "
குமரனுக்கு   முகம்  சிவந்தது.
சுபாவுக்கு  வந்தது  சின்ன  ஆசைகளா...?  ஆசை   விழுங்கும்  ஆசைகள். அவள்    ஆசைகளை   அறிந்து,   வாடகை  வீட்டில்  இருப்போம்  என  எத்தனை தரம்    மன்றாடியிருப்பன்....   கேட்டாளா...?  சொந்தமாக  வீடு வேணும்...பெரிய வீடுவேணும்...   சிநேகிதிகளிட்டை   இருக்கிற  மாதிரி  பெரிய  கார்  வேணும்...   அதைக்கொண்டு போய்க்காட்டவும்   பெருமைபேசவும்  அவளுக்கு     நாலு   விழாக்கள்  வேணும்....
கடனை    நினைத்து  நினைத்து  எவ்வளவு  நாள்  அவன்  நித்திரையில்லாமல்    தவித்திருப்பான்.
சிரிப்பில்லை...   நிம்மதியில்லை...  அதற்காக  கொஞ்சம் செலவைக்குறையென்றால்...   அவன்  கஞ்சன்.   எத்தனை  நாட்கள்  அந்த நரகத்தை    சகித்துச் சகித்து...
மாமி   உங்கடை   மகளுக்கு  வந்தது  பெரிய  ஆசை.   இண்டைக்கு ' கஞ்சன் ' என்று    என்னை   ஒதுக்கிறவள்நாளைக்கு  'கரைச்சல் ' எண்டு  பிள்ளைகளை உதறவும்   தயங்கமாட்டாள்.    வந்தனீங்கள்....   தயவுசெய்து..... என்ட பொம்பிளைப்பிள்ளைகளுக்குப்    பாதுகாப்பாக  இருங்கோ..."
குமரன்    போய்விட்டான்
*   *   *   *    *   *   *  *   *   *   *   *   *
"  அப்பா,    நீங்கள்  எவ்வளவு  சொன்னாலும்  நான்  என்ர  மனத்தை மாத்தப்போறேல்லை.    அவள்...   பொம்பிளை...  அவளுக்கு  இவ்வளவு பிடிவாதம்   எண்டால்  எனக்கு  எவ்வளவு  இருக்கும்."
"  அவளுடைய  விருப்பத்தை  ஏன்  பிடிவாதம்  எண்டு  சொல்லுறீங்கள்...."
"  என்னுடைய  ஆசைப்படி  நடக்காத...   பெண்சாதி  எனக்குத்தேவையில்லை...   நான்   சொல்றமாதிரி  உடுப்புப்போட  அவளுக்கு என்ன    அவ்வளவு  வெட்கம்.   எங்கை  போறதெண்டாலும்,  ஒரு  ஆறு  யார் சீலை.   எல்லோரும்   பார்ட்டிகளில்  வைனை   வைத்துக்குடிக்கேக்கில்லை, நான்   கூல்ட்றிங்ஸ்  எடுக்கிறன்  எண்டு  சொல்லிக்கொண்டு...   அவள் பட்டிக்காடு   மாதிரி..."
கணவன்    தன்னை   பட்டிக்காடு  எனக்குறிப்பிட்டது  தாராவுக்கு...   கோபம் கோபமாக   வந்தது.
ஒஸ்ரேலியாவுக்கு   வந்த  கொஞ்ச  மாதங்களிலேயே...  தியாகு  தலைகீழாக மாறியது    அவளுக்கு  வியப்பாக  இருந்தது.   தான்  மட்டும்  மாறாமல்... அவளையும்    எல்லாவற்றிலும்  மாறும்படி  வற்புறுத்துவது  எவருக்குப் பிடிக்கும்...?
வேலையின்    தேவை  கருதி  அவள்  வேலைக்குப்போகும்போது  சட்டை, பாவாடை,    ஜீன்ஸ்  போட்டுக்கொண்டாள்.  ஆனால்,  அதையே  தன்னோடு எங்கு   வரும்போதும்  அணியச்சொல்வது  தாராவுக்கு  கொஞ்சம் கூடப்பிடிக்கவில்லை.
அழகாக  நிலத்தில்  படும்படியாக  சேலை   கட்டிக்கொண்டு  தலை  நிறைய பூவை  சூடிக்கொண்டு  இருக்கும்போது  வரும்  அழகு  வேறு  எதிலும் உண்டா...?
எத்தனை  பார்ட்டிகளில்  பெண்கள்  தங்களது  வயதையும்  மறந்து... டீசேர்ட், ஹோட்   போட்டுக்கொண்டு  தொடைதெரிய  நெஞ்சு தெரிய ஆம்பிளையளுக்கு  முன்னால  இருக்கிறதையும்,  பிறகு  அவனின்ட  பார்வை    சரியில்லை...   இவனின்ட  பார்வை  சரியில்லை... என ஆர்ப்பரிப்பதையும்    கண்டு  மனம்  வெறுத்திருக்கிறாள்... அதே    பிழையை... கணவன்    தன்னையும்  செய்யச்சொல்லும்பொழுது... அவளால்    மனம் குமுறாமல்   இருக்க   முடியுமா...?
தீர்மானமாக   மாமனாரின்  பக்கம்  திரும்பினாள்.
'" ஒஃபீஸ_க்கு  மட்டும்தான்  அந்த  உடுப்பு  போடுவன்.   மற்ற இடங்களுக்கெல்லாம்  சேலைதான்  மாமா..."
சேலை  உடுத்திறவையெல்லாம்...  தோளை  மூடிக்கொண்டு திரியிறவையெல்லாம்   பெரிய  பத்தினிதான்.   எங்களுக்குத்  தெரியும்  யார் பத்தினி   என்று..."
தியாகு   ஆத்திரத்துடன்   கத்தினான்.
இப்ப  எந்த  உடுப்புப்போடுறவை...  பத்தினியெண்டது எங்களுக்குத்தேவையில்லாத  விஷயம்.... ஒரு  சின்ன  உடுப்பு  விஷயம்... உங்களுடைய   வாழ்க்கையையே  எப்படி  திசை திருப்புது  பாருங்கோ... கல்யாணம்    கட்டுவது   சந்தோஷமாக  இருக்க.  டிவோர்ஸ்  பண்ண  இல்லை தியாகு."
" ஆனால்,   அந்தத்திருமணத்திலேயே  சந்தோஷமில்லையெண்டால் டிவோர்ஸ்   பண்றதிலையும்  பிழையில்லை   அப்பா.   அதுதான்  என்னுடைய   சிநேகிதன்  தீபனும்   காலுக்கு  உதவாத  செருப்பை  கழற்றி எறி   எண்டு  சொன்னவன்."
குமரேசருக்கு   கோபம்  பொத்துக்கொண்டு  வந்தது.
"  உன்ர  சிநேகிதன்  என்ன  மாதிரி... அவர்  செருப்பு  போட்டிருக்கிறாரோ... அல்லது   கழற்றி  எறிஞ்ச  கேஸ்தானோ...?"
தியாகு    தகப்பனின்  கோபத்தை   சட்டை செய்யவில்லை.
ஆயிரம்   புத்திமதிகள்  கேட்டாயிற்று.
அவனுக்கு   அவனுடைய  நாட்டு  வாழ்க்கை  முற்றாகப்  பிடிக்கவில்லை.
வெளிநாட்டுக்கு   வந்தபின்தான்  தீபன்  சொன்னதுபோல்... வாழ்க்கையை அனுபவிக்காமல்    எப்படி  வீணடிக்கிறம்  என்று  அவனுக்கு  விளங்கியது.
பதினைந்து   வயதிலேயே  வெள்ளைக்கார  ஆண்,  பெண்  என்ன  மாதிரி உல்லாசமாகத் திரியுதுகள்.   சிரிச்சுக்கதைத்து  உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி   மனம்  வெதும்பாமல்,   இது  என்னவாமென்றால்  படிக்க வேணும்,    தங்கச்சிமாரை கரைசேர்க்க   மாடாக  உழைக்கவேணும். சாதாரணமான   ஒரு   திருமண  வாழ்க்கைக்குக்  கூட  ஏங்கிக்கொண்டு,  அப்பா   அம்மா   நிச்சயமாக்கும்  வரை,   காத்துக்காத்து  உணர்ச்சிகளை அடக்கிப்போதும்...  போதும்.... என்னுடைய  கடைசிப் பருவத்தையாவது வெளிநாட்டுக்காரன்   மாதிரி  உல்லாசமாக  வாழவேணும்.   இரண்டு பிள்ளைகள்   பிறந்தவுடனேயே  எல்லாம்  முடிஞ்சிட்ட  மாதிரி. பிள்ளைகளுக்காக   உழைச்சு  உழைச்சு  முறிய  நான்  தயாரில்லை.
தியாகுவின்    சிந்தனையில்  தீபன்  நின்று  இதோபதேசம்  செய்தான்.
" அப்பா... பழம் பெருமை   பேசிப்பேசி  என்னுடைய  வாழ்க்கையை   இனியும் வீணடிக்காதீங்கோ...  உங்கடை  பாசம்...  உங்கடை   தியாகம்... எல்லாவற்றையும்விட  '  உனக்காக  வாழ் '  என்ற  வெளிநாட்டுத்தத்துவம்தான்    எனக்குப்பிடிச்சிருக்கு.   எனக்குப் பிடிச்சமாதிரி யார்  என்னோட   சேர்ந்து  வாழ  நினைக்கினமோ...  அவள்தான்  என்னுடைய பெண்சாதி. "
குமரேசர்  தாராவைத் திரும்பிப்பார்த்தார்.
ஸொரி  மாமா...  புருஷன்  என்றாலும்  என்னால  முடிஞ்சளவுதான் அவருக்காக  வாழலாம்.   என்னை   அவர்  டிவோர்ஸ்  பண்ணுவது  பற்றி எனக்கு   பரவாயில்லை.   பிள்ளைகள்  யார்ட  பொறுப்பு...? அவருடையதுதானே...   அல்லது  ' உனக்காக  வாழ் '  என்ற வெளிநாட்டுத்தத்துவத்தில்   அதுகளும்  என்னைப்போல  வெளியாலயோ...?"
அமைதியாக   மிக  அமைதியாக  நெஞ்சில்  அடித்தாற்போல் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்   தாரா.
குமரேசர்    கண்களை  மூடிக்  கதிரையில்  சாய்ந்தார்.
தழையத்தழைய   சேலை  உடுத்துக்கொண்டு  தலையில்  பூவும்,   நெற்றியில் அழகான   பொட்டுமாக...   அவள்  தியாகுவுடன்  ஊரில்  திரிந்தது ஊர்வலமாகக்  கண்ணில்  நகர்ந்தது.
அமைதியான  முகம்....
அழுத்தமான  முகம்....
ஏறேடுத்துப்  பார்த்தாலே... "  நான்  மரியாதைக்குரியவள் "   என்று  ஒரு சின்னப்புன்னகையுடன்    சொல்லி...   மற்றவர்களைப்  பண்பாகக் கதைக்கவைக்கும்   முகம்....
அவளைப்பார்த்தா...  மொடர்ன்  ட்ரெஸ்  போட்டுக்கொண்டு,  கையிலை வைனை   ஏந்தச்சொல்கிறாய்... உனக்கு  என்ன  பிடிச்சிட்டுது  தியாகு... விளங்கேல்லையேடா...
கொஞ்ச   நாட்களாக...  நடைபெற்ற  வாக்குவாதங்கள்  இப்போ   விவகாரத்தில் போய்முடியும்  அளவுக்கு  இரண்டுபேரும்  பிடிவாதமாக  இருப்பதை  எண்ணி    எண்ணி  அவருக்கு  மூளை   வலித்தது.
அவரும்    வெளிநாட்டுக்கு  வந்த  நாள்தொட்டு...  இந்த  உல்லாச வாழ்க்கையைப்பார்த்தவர்தான்.    காலையில்  பேப்பரை   விரித்தாலே கண்ணில்   படுவது... "  பதின்மூன்று   வயதும் பெடியனுக்கு  பதினாறு  வயதில்  காதலி... திருமணமாகாமலே  குழந்தை."
தியாகு    இதுவாடா...  உணர்ச்சிகளைக்  கட்டுப்படுத்தாமல்  மனசுக்குள் போட்டு    வெதும்பாமல்  வாழுற  ஆசை...
அந்த   அந்த  நேரத்தில்  உணர்ச்சிகளை   வெளிப்படுதுறதுதான்  மனித நோக்கம்   எண்டால்...   பிறகு  எங்களுக்கும்  மிருகங்களுக்கும்  என்ன வித்தியாசம்  இருக்க  முடியும்....?
ஜேம்ஸ் கூட    தழுதழுத்த  குரலில்  எங்களுடைய  வாழ்க்கையை...  பாசத்தை    சொல்லிச் சொல்லி  வியந்தாரே....  தன்னுடைய  வீட்டில்  தான் குடிக்கிற  கோப்பிக்குக்கூட  காசு  கொடுக்கவேண்டும்  என்று  கண்ணீர் மல்கினாரே...   அந்த  வெள்ளைக்கார  வாழ்க்கைதானா உனக்குப்பிடிச்சிருக்கு...    அவர்களிடம்  எத்தனையோ  நல்ல  குணங்கள் இருக்கே...   ஏனடா...   பாலை   விட்டுட்டு  நீரை  மட்டும்  பிரிச்சு  எடுக்கிறாய்...?
மகனிடம்    பேச  முடியாதவர்  மனசுக்குள்ளேயே   அவனுடன்  போராடினார்.
********    *********     *********      *********    *******
ட்ரிங்... டரிங்...
ஹலோ... சுபாஷினி   ஹியர்."
"----------------------------------"
"  யார்  ரூபிணியே.... என்ன  விஷயம்...?"
"--------------------------------"
"  என்ன  சத்தியாவுக்கு  புருஷன்  அடிச்சு  முகம்  வீங்கிவிட்டுதோ...? எந்தநாட்டில்  இருக்கிறாராம்...?   இன்னும்  சிலோன்  எண்ட நினைப்போ...  அண்டைக்கே  சொன்னன்.   விட்டுட்டு  வெளிக்கிடும்  என்று..."
"-------------------"
" சரி... சரி... இப்ப   டிவோர்ஸ்  எடுக்கப்புத்தி  வந்ததே  பெரிய  காரியம்... நீர் சத்தியாவைக் கூட்டிக்கொண்டுபோய்...  டொக்டரிட்டை   நல்ல  லெட்டர் ஒண்டு  எடும்.   இது  எல்லாம்  நாளைக்கு  டிவோர்ஸ_க்கு நல்ல Valid Points ... நான்  பின்னேரம்  வந்து  சொலிஸிட்டரிட்டைக் கூட்டிக்கொண்டு போறன்."
" --------------------------"
என்ர  பிள்ளைகள்  எண்டு  அழுகிறாவோ... .  சொல்லும்  புருஷனை விட்டுட்டு   இருக்கிற  பொம்பிளைக்கும்...  பிள்ளைகளுக்கும்  சேர்த்து அரசாங்கம்   நல்ல  பண  உதவி  செய்யும்  எண்டு...  தைரியமாக இருக்கச்சொல்லும்."
----0---

(தமிழ்நாடு கணையாழி  - அவுஸ்திரேலியா சிறப்பிதழில் வெளியான சிறுகதை - ஓகஸ்ட் 2000)