கவிவிதை - 7 - உண்ணீர் - -- விழி மைந்தன்--

.
அந்த இடத்திற்குப் பெயர் மணற்காடு.

ஏகாந்தமான வெளிகள். பற்றைகள்.  குட்டை குட்டையாய்த் தேங்கி நிற்கிற சதுப்புத் தண்ணீர். சதுப்புத் தண்ணீர் நடுவே வளர்ந்து தலை சிலுப்பி நிற்கிற சவுக்கு மரங்கள். சவுக்கு மரங்களின் ஊடே  ஊதிச் செல்கிற காற்று.

எப்போவாவது வந்து மெழுகுவர்த்தி ஏற்றி மன்றாடிப்  போகிற, நம்பிக்கை உள்ள மீனவனை எதிர்பார்த்துத் தனித்திருக்கும் அந்தோனியார் கோவில். 'அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே?' என்று யாரும் கேட்கவில்லை அவரைப்  பார்த்து!

கோயில் வாசலில் தொடங்குகிற பால்வெண்மணல் நீர் விளிம்பில் போய்  முடியும். காற்றில் தலை விரித்தாடுகிற தென்னைகளுக்கு நடுவிலே வெட்கத்துடன் ஒளித்து  நிற்கிற வடலிகள், கூத்தாட்டம் போடும் பதின்ம வயதுப் பெண்களின்  மத்தியில் மாட்டிக் கொண்டு விழிக்கும் சிறுமிகள் போலிருக்கின்றன. சின்னச் சின்ன மணல் குவியல்கள் மேல் மண்டி வளர்ந்திருக்கும் சிறு பற்றைகள். மணல் கும்பிகளின் பக்கத்தில்  இழுத்து விடப் பட்டிருக்கும்  மீனவர் படகுகள். சிறிய மனிதனின் கொடிய கடலுடனான  நெடிய போராட்டத்தை நினைவூட்டும்  அவற்றின் பெயர்கள். ஆவே  மரியா. கடலம்மா சரணம். வெற்றி வீரன்.

அப்பாலே கடல். கரும்பச்சை நீலத்தில் ஆழமான கடல். பாறைகளோ சிறு கற்களோ  இல்லாத  சுத்தமான கடற்கரையில் ஆர்ப்பரித்துப் பொங்கி வந்து முட்டி மோதுகிற கடல். கரை பொருதும் அலைகள் 'ஹோ' என்று கொந்தளித்து வந்து  பால் வண்ண நுரையைச் சிதற விட்டு மறுபடியும் பின் வாங்குகின்றன. பலத்தைச் சேர்த்துக் கொண்டு திரண்டு வந்து மறுபடியும் கரையைத் தாக்குகின்றன. ஊரிகளையும் சங்குகளையும் சிப்பிகளையும் காலடியில் விட்டு விட்டுப் போகின்றன. கரையிலிருந்து சில யார்கள்  கடலுக்குள் சென்றால்  ஆளைத் தாழ்க்கும் ஆழம். புயல்களுக்கும் கொந்தளிப்புக்கும் பெயரெடுத்த வங்கக் கடல் அது.

ஒரு காலத்தில் மக்கள் அலையலையாகத் திரண்டு வருவார்கள் குளிப்பதற்கு. சுற்றுலா என்று வருவதற்கு இது தான் ஒரு இடம் அப்போதெல்லாம். இன்று செல்வதற்குப் பல இடங்கள் ஏற்பட்டு விட்டன சனங்களுக்கு. மௌனமாக இருக்கிறது கடற்கரை.

ஒரு சொகுசு வாகனம் வந்து நிற்கிறது, கடற்கரை மணல் ஓரம்.

வாகன ஓட்டியைத் தவிர மற்றெல்லோரும் பதின்ம வயதுச் சிறுவர்கள். நந்தன் என்று ஒருவன். பணக்கார வீட்டுப்   பையன் அவன். வாகனம் அவன் தகப்பனாருடையது. மற்றச் சிறுவர்கள் அவன் 'நண்பர்கள்'. 'வாலுகள்' என்றால் அதிகம் பொருந்தும். பத்தாம் வகுப்புப் பரீட்சை முடிந்ததைக் 'கொண்டாட' வந்திருக்கிறார்கள்.


சிறுவர்களைக் கடற்கரையில் விட்டு விட்டு 'டிரைவர்' திரும்பி விடுகிறான், பின்னேரம் வந்து கூட்டிச் செல்லும்படியான உத்தரவுடன்.

நந்தனும் நண்பர்களும் கடலில் இறங்குகிறார்கள். சில சிறுவர்கள் 'சேட்டைக்' கழற்றத் தயங்கியதால் சிரிப்பு விளைகிறது கொஞ்சம். 'சீதா இப்போது சேந்தனைப் பார்த்தால் என்ன நினைப்பாள்?' இந்த மாதிரியான, அவர்கள் வயசுக்குரிய பேச்சுக்கள். 


கடல் கொஞ்சம் கர்வம் காட்டுகிறது இன்று. 'தோம்' என்று கரையை ஓங்கி அறைகிற அலைகள்.

நந்தன் எல்லோருக்கும் முன்னதாக இறங்கிச் செல்கிறான். ஐஸ்வர்ய கர்வம். இந்தக் குழுவுக்குத் தலைவன் நான் என்கிற அகங்காரம்.

ஒரு பேரலை வருகிறது. பளீரென்று அடித்துப் புரட்டி விடுகிறது.

அடிவயிற்றில் 'குப்பென்று' பயம் கவிகிறது. எழுந்து நின்றால் தலையைத் தாழ்க்கும் ஆழம் இல்லை இன்னும். இருந்தாலும் தலைக்கு மேல் தண்ணீர் சூழ்ந்த வினாடி அறிவு மழுங்கி விட்டது. 'ஓ' என்று கத்துகிறான். வாய்க்குள் தண்ணீர் போகிறது.


மற்றச் சிறுவர்கள் ஓடி விடுகின்றனர். கரையேறிய பின்னும் நிற்காமல் தூரத்தே தெரிந்த சவுக்கங்காட்டை நோக்கி ஓடுகின்றனர்.

ஒரே ஒருவன் மட்டும் நிற்கிறான். அவன் பெயர் கந்தன்.

அவன் பதகளிக்காமல் நிதானமாக, நின்ற இடத்திலேயே நிற்கிறான். அடுத்தடுத்து வந்த இரண்டு பேரலைகள் தன்னைக் கடக்கும் வரை காத்திருந்து, அதன் பின்பு வந்த சின்ன இடைவெளியில் நந்தனை நோக்கிப் போகிறான்.

அவனுக்கும் நீச்சல் தெரியாது. ஆனால் நீந்தத் தேவைப் படாது என்று தெரியும்.


பின்வாங்கி வரும் அலை நந்தனை இழுத்துச் செல்லப் பார்க்கிறது கடலுக்குள். அந்தக் கணத்தில் அவன் காலைப் பிடித்துக் கொள்கிறான். 

தலைக்குக் கீழ் கையைக் கொடுத்து, நீருக்கு மேல் கொண்டு வருகிறான்.

அடுத்த பேரலை வந்து மோதுகிறது. கால்களை இறுக ஊன்றிக் கொண்டு நந்தனையும் விழாமல் பிடித்துக் கொள்கிறான்.

கரையை நோக்கிப் பாதி நடத்தியும் பாதி இழுத்தும் கொண்டு செல்கிறான்.


இன்னும் இரண்டு அலைகளின் மோதலைத் தாங்கிய  பிறகு கரைக்கருகில் வந்து விடுகிறார்கள்.


கரையோரத்தில் பத்தடி தூரத்தில் ஒரு கிணறு. நல்ல தண்ணீர்க் கிணறு. கிணற்றுக் கட்டில் ஒரு சிறு வாளி, காட்டுக்  கொடிகளால் ஆன கயிற்றில் கட்டி வைத்திருக்கிறது. பெருக்குக்  காலத்தில் கடல் அலைகள் வந்து மோதியதால் கிணற்றைச் சுற்றி உப்பு நீர் தேங்கி நிற்கிறது. ஆனால் கிணற்றுக்குள் நாலடி ஆழத்தில் இருப்பது உவர் நீர் அல்ல; உண்ணீர்.

அந்தக் கிணற்றை நோக்கி நந்தனை அழைத்துச் செல்கிறான் கந்தன்.

நாலு வாளி அள்ளி நந்தனின் தலையில் ஊற்றுகிறான். தலையில் சிக்கிக் கிடந்த மணலும் கண்ணில் இருந்த உப்புக் கரிப்பும் போய்  உடல் சுத்தமாகும்படி! தன்  தலையிலும் இரண்டு வாளி  ஊற்றிக் கொள்கிறான். கையில் அள்ளித்  தாகம் தீரக் குடிக்கிறான்.


"இந்த இடத்தில் நல்ல தண்ணீர்க் கிணறு இருப்பது உனக்கு எப்படித் தெரியும்?"  நந்தன் வியப்போடு கேட்கிறான்.


"கடலுக்குக் குளிக்கப் போகும் போதே, நான் இந்தச் சிறு கிணறைக் கவனித்து வைத்திருந்தேன்" - சொல்கிறான்   கந்தன்.

"நண்பர்கள் பலருக்கு மத்தியிலும், இனி நான் உன்னைக் கவனித்து வைத்துக் கொள்வேன்" என்கிறான்  நந்தன்.