சிங்கப்பூரில் காண்டவதகனம் - - ஹாஜா முகைதீன் - சிங்கப்பூர்

" இந்தோனேசியாவின்  காட்டுத்தீயின்  புகைமண்டலம்   சிங்கப்பூரையும்  மலேசியாவையும்  வந்தடைகிறது.
இலங்கைப்பேராசிரியர்   மௌனகுருவின்  காண்டவ  தகனம்   மகாபாரதக்காட்டுதீயின்  சுவாலையை  கூத்தாக காண்பிக்கிறது."
சிங்கப்பூரில்  காண்டவதகனம்   காணொளிக்  காட்சியில் கலாரசிகர் பட்டாபிராமன் உரை.
                                                          



" இந்தோ. (இந்தோனேசியாகலிமந்தானில்   எரியும்  தீ,   சிங்கப்பூரிலும், மலேசியாவிலும்  புகை மூட்டத்தை  கிளப்பிவிட,   நாம்  அரசாங்க  இலவச மருத்துவ    சிகிச்சையும்  பெற்று  , முகக்  கவசம்  அணிந்து  உலா  வந்து கொண்டிருக்கிறோம்.   இந்தோனேசியாவின்  முகவாய்க்  கட்டையைப் பிடித்து " செல்லக் குழந்தாய்  உங்கள்  காட்டைக்  கொளுத்தாதே.... எங்களுக்கு  இங்கே  மூச்சு முட்டுகிறது"    அயல்நாடுகளும்   கெஞ்சிப் பொழுதைப் போக்குகின்றன.   ஆனாலும்  என்ன  பெரியண்ணனுடன்  மோதக்கூடாது என்ற  தயக்கம்தான்  அந்தக்கெஞ்சல்.
ஆனால்  - இலங்கைப் பேராசிரியர் மௌனகுருவின் காண்டவதகனம்   இன்று   நேற்று  அல்ல,   மகாபாரதக்காலத்திலேயே  தொடங்கிவிட்டது என்று   தமது  கூத்து  ஆற்றுகையின்  மூலம்  எமக்கு  காண்பிக்கின்றார். அத்துடன்   எமக்கு  ஒரு  செய்தியையும்  தருகின்றார்.
தானும்   பேசி   மக்களையும்  பேசவைப்பவன்தான்   கலைஞன். அக்கலைஞனுக்குரிய  தார்மீகப்பணியை   இலங்கைப்  பேராசிரியர் மௌனகுரு  நீண்டகாலமாக  மேற்கொண்டு  வருகிறார். "




இவ்வாறு   அண்மையில்,   சிங்கப்பூர்  ஆன் மோ-கீன்  நூல்நிலைய  கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற  பேராசிரியர்  மௌனகுருவின்  இயக்கத்தில் மட்டக்களப்பு    அரங்க  ஆய்வுகூடத்தின்  மற்றுமொரு  அரங்காற்றுகையான காண்டவதகனம்    காணொளிக்காட்சியின்  முடிவில்  நிகழ்ந்த கலந்துரையாடலில்   சிங்கப்பூர்  வாசகர்  வட்டத்தின்  சார்பில்  கலாரசிகர் திரு. . பட்டாபிராமன்   தெரிவித்தார்.
இந்நிகழ்வில்    இலங்கையிலிருந்து  சென்றிருந்த  பேராசிரியர் மௌனகுருவும்   கலந்துகொண்டார்.
"  மகாபாரதத்தில்  வில்லுக்குப்  பெயர்  எடுத்த  அர்ஜுனன்,  காண்டவ வனத்தை   அதன்  ஜீவராசிகளுடன்  அழித்து  துவம்சம்  செய்து  புகை மண்டலமாக்கிய  பின்னர்,   புது நகர்  இந்திரப்பிரஸ்தத்தை   உருவாக்கியது சரியா...?
இப்படி  ஒரு  விவாதம்  காண்வதகனம்  காணொளிக்காட்சி  நடந்த நூலகக்கேட்போர்   கூடத்தில்   கலந்துகொண்ட   கலை,  இலக்கிய ஆர்வலர்கள்    மத்தியில்   நடந்தது
உயிர்நிலைச்  சமநிலைக்காக,   இந்திரனின்  பாதுகாப்பில்  இருந்த  காண்டவ வனத்தை   அர்ஜுனன்  அழித்தான்  என்பது  கதை.
இன்று  நாம்  சந்திரனில்  காலடி  எடுத்து  வைத்தாலும்,   அந்த இந்திரனையும்,    சந்திரனையும்  நாம்  நம்  கோணத்தில்  ஆராய்வதில் இருக்கும்    மகிழ்ச்சியே   தனி தான்.
இலங்கைப் பேராசிரியர்  மௌனகுரு,  தன்  தரமான  கூத்துப் பாணி நாடகத்தின்    காணொளியை    'காண்டவ தகனம்'   என்ற   தலைப்பில் காட்டியபோது,   கூடி  இருந்த  அத்தனை   பேரும்  கண் கொட்டமல்  பார்த்து ரசித்து    வியந்தனர்.
காரணம்    ஆடல் ,   பாடல்,  நடிப்பு  அத்தனையும்  அதில்  இருந்தன.   அதைப் பற்றிய    கலந்துரையாடலில்  ஏராளமான  தகவல்  பரிமாற்றங்கள்.
சார்வாகன் கதை   சுவாரஸ்யமானது.
அந்தக் கால  பிராமணர்களால்  அவன்  கொல்லப்பட்ட  விவரமும் சொல்லப்பட்டது.
சென்ற   வார   'விடுதலை'   இதழில்   சார்வாகன்  பற்றிய  கதை   பிரசுரம் கண்டிருந்தது.
மகாபாரதப்    பகுதிகளின்  சிறுசிறு  முனைகளைப்  பிடித்துக் கொண்டு  தன் கற்பனையில்    அழகாகவே  ஊஞ்சலாடினார்   மௌனகுரு.
மகாபாரதமே    இழுத்த  இழுப்புக்கு  வரும்.
- பலபேர்   பார்வையில்,   பலப்பலத்  திருப்பங்களைக்  கொண்ட  பல்லாயிர ஆண்டுக்   கதை  தானே...!!!


கூத்து   அடிப்படையில்,   ஜதிக்  கோர்வையுடன்,   கர்நாடக  இசை   மணக்க, சுருங்கச் சொல்லி    விரிவாக  மனதில்  இடம் பெறும்  அளவுக்கு,   முப்பதே நிமிடங்களில்   கதையை   முன் வைக்கிறார்  நாடக  ஆசிரியர்
- கிட்டத்தட்ட   ஒரு  நாட்டிய  நாடக  அம்சங்களுடன்.  முந்தைய 'ராவநேசனின்'   கவர்ச்சி  இல்லாவிட்டாலும்,   'காண்டவ தகன' த்திலும்  ஒரு அருமையான Messaage இருக்கிறது.
காட்டை   அழித்து,   நாட்டை  உண்டாக்கி,   வணிக  நோக்கோடு  புது நகர் உருவாக்கி,    நாட்டைக்  காக்க  அணு  ஆயுதங்களை  பூமியில்  பதுக்கி வைத்து,    உலகப் போரை  எதிர்நோக்கி  வாழும்  மனித  அவலத்தை காட்சிகளாலும்,   கருத்துக்களாலும்   விளக்குகிறார்.
இந்திரபிரஸ்தம்   நகரை  நிறுவ  காண்டீபத்தால்  காட்டை  அழித்து,  அங்கு வாழ்ந்த   பூர்வ  இனமக்களை   அழித்த  மகாபாரத   நிகழ்வையும்,    இன்று பன்னாட்டு   நிறுவனங்கள்  காட்டை  அழித்து  பூர்வ  இனமக்களை அழித்தொழிக்கும்   நிகழ்வையும்  ஒப்புநோக்கி  காட்டியது  இந்த  மேடைக் கூத்து  நாடகத்தின்  மையக்கரு.
திரு. அருண் மகிழ்நன்    இந்நிகழ்ச்சியைத்  துவக்கி  பேராசிரியர் மௌனகுருவை    சபையினருக்கு    அறிமுகப்படுத்தினார்.   திரு. ரஜித் ராவுத்தர்    பொன்னாடை   அணிவித்தும்   எழுத்தாளர் ஷானவாஸ்  நன்றி கூறியும்   சிறப்பித்தனர்.
திருவாளர்கள்  அருண் மகிழ்நனும்,   மு.ஹரிகிருஷ்ணனும்  எதிர்வரும் ஆண்டில்   மௌனகுரு  அவர்களின்  கூத்து  நாடகத்தை  சிங்கப்பூரில்  மேடை ஏற்ற  வேண்டும்  என்ற  ஆவலை   வெளிப் படுத்தினர்.
அப்படியென்றால்,    அது  நிச்சயம்  இங்கு  நடைபெறும்  எனத்  திடமாக நம்பலாம்.
மௌன குரு சின்னய்யா  அவர்கள்  இலங்கை   தமிழ்  கூத்து  மற்றும்  நாடக அரங்கில்   மிகப்பெரும்  ஆளுமை.
அவரின்  'ராவநேசன்'   என்ற   மேடைக்  கூத்து  நாடகத்தில்  மண்டோதரியின்    வேதனைகளை   ஒரு  பெண்ணியத்தின்  பார்வைக்கொண்டு    படைத்திருப்பார்.   அந்தக்  கோணத்தில்  இதுவரை யாருமே    யோசித்ததில்லை.
மௌனகுரு    அவர்களின்  'நொண்டி'   நாடகமும்   மிகப் பிரசித்தம்.
சென்ற   ஆண்டு  -  என் வீட்டிற்கே அவர் வந்து  எங்களுடன்  இரவு  விருந்தில்  கலந்துக்கொண்டது  என்னால்  மறக்கமுடியாத  நிகழ்வு.



No comments: