அந்த நாட்களின் ஆத்மாவே வேறுதான்!‏

.
மூத்த இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன் எழுதிய ‘காந்தி’ கட்டுரையின் சுருக்கமான வடிவம் இது. அக்டோபர் 21 அன்று காலமான வெங்கட் சாமிநாதனை நினைவுகூரும் விதமாக வெளியிடப்படுகிறது.

பிற்காலத்தில் சொல்லிப் பெருமைப்பட வேண்டிய விஷயம், மகாத்மா காந்தியைப் பார்க்கப்போவது.
எனக்குச் சரியாக ஞாபகமில்லை. 1944-ம் வருடமாக இருக்க வேண்டும். அக்கால ஞாபகங்கள் கொண்ட காந்தியவாதிகள்தான் சரியாகச் சொல்ல முடியும். நான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சின்ன ஊர், நிலக்கோட்டையில் படித்துவந்தேன்.
காந்தி மதுரைக்கு வரப்போகிறார் என்ற செய்தி பலமாக அடிபட்டுக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரயிலில்தான் மதுரை செல்லப்போகிறார். ரயில் பூராவும் ஒரே காங்கிரஸ் தொண்டர்களாக இருப்பார்கள், காந்தியுடன் ராஜாஜியும் வரப்போகிறார் என்றெல்லாம் செய்திகள். ஒவ்வொரு செய்தியும் துணுக்குகளாக ஒவ்வொருவரிடமிருந்து வந்து பரவும். அப்போது நிலக்கோட்டையில் இருந்த பஞ்சாயத்துக்கு உடமையான ஒரு பூங்காவில் ஒரு ரேடியோ பெட்டி வைத்திருந்தார்கள். அதுதான் எங்களுக்குச் செய்தி தரும் ஒரே இடம். பத்திரிகைகள் வாங்குவது, படிப்பது அவ்வளவாகப் பரவியிருக்கவில்லை. அந்தப் பூங்காவில் உள்ள பொது வாசக அறையில் தினம் மாலை போய் பத்திரிகை படிக்கலாம். அல்லது அவ்வப்போது பஸ்ஸ்டாண்டில் இருக்கும் ஹோட்டலில் ரேடியோ பெட்டி இருந்தது. அதில் பாட்டுகளுக்கிடையே செய்திகளும் வரும். கேட்டவர் எங்கள் தெருக்காரராக இருந்தால் செய்திகள் கிடைக்கும். அவருக்கு சுவாரஸ்யமானதைச் சொல்லிச் சிரித்துவிட்டுப் போவார்.
காந்தியும் யோசனைகளும்

“காந்தி வரப்போகிறார் என்றால் பார்க்காமல் எப்படி இருப்பது? ஆனால், மதுரைக்கு அல்லவா வருகிறார். யார் மதுரைக்குப் போவது? இப்போது பார்க்கவில்லை என்றால் பின் எப்போது அவரைப் பார்க்க முடியப்போகிறது? எப்பவோ நம் வாழ்நாளில் ஒரு தடவை காந்தி நம் ஊர் பக்கமாகப் போகிறார், பார்க்கவில்லை என்றால், பின்னால் யாரும் கேட்டால் என்ன முகத்தை வைத்துக்கொண்டு
`இல்லை, முடியலை' என்று பதில் சொல்லப்போகிறோம். மதுரைக்கு ரயிலில்தானே போகிறார், கொடைக்கானல் ரோடு வழியாகத்தானே ஐயா போகணும்? கொடைக்கானல் ரோடு போய்ப் பார்த்துடலாமே?” என்று யோசனைகள்.
மதுரை 32 மைல் தூரம். கொடைக்கானல் ரோடு இதோ 5 மைல்தான். காலை கொஞ்சம் எட்டிப் போட்டா ஒரு மணி நேரத்துல போய்ச் சேர்ந்துடலாம். ஆனால், வண்டி நிக்கணும், எவ்வளவு நேரம் நிக்குமோ. இதென்ன செங்கோட்டை பாசஞ்சரா, ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் நின்னு நின்னு போறதுக்கு. இப்படிப் போனா, அவர் என்னிக்கு மதுரைக்குப் போவார், என்னிக்கு டெல்லி போய்ச் சேருவார்? அவருக்கு எத்தனையோ வேலை!” இப்படியாகக் கேள்விகள், பதில்கள், சமாதானங்கள் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தன.
எனக்கு இவையெல்லாம் பெரியவர்கள் பேசும் பேச்சுகள். கேட்கலாம். அவ்வளவோடு சரி. மாமா போவாரா, என்னையும் அழைத்துப்போவாரா என்பதெல்லாம் நினைப்பிலேயே இல்லாத விஷயங்கள். திடீரென்று, மாமா சொன்னார், “நீ வேணா, மத்த பசங்களோட போய்க்கோடா” என்றார். எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. மாமா மிக சாது. பயங்கள் அவருக்கு மிக அதிகம். ஆனால், அசாத்திய முன்கோபி. 25 ரூபாய் சம்பளத்தில் ஆறு பேர் கொண்ட குடும்பத்தை சமாளிக்கப் படும் பாட்டில், கோபம் அடிக்கடி வெடித்து வெகு சீக்கிரம் அடங்கியும் விடும். நாங்கள் துணிச்சலோடு எதுவும் வழக்கத்தை மீறிச் செய்துவிட மாட்டோம். அவருக்கு இது வழக்கத்தை மீறிய காரியம். சின்னப் பசங்க என்று எங்களுக்கு ஒரு சலுகை வாழ்வில் ஒரு நாளைக்குக் கிடைத்துள்ளது என்று நினைத்துக்கொண்டேன்.
இதோ இன்று நடக்கப்போகிறது
எனக்கு இது ஒரு துணிகரச் செயல்தான். சந்தைக்கு, கோயிலுக்கு, ஓடைக்கு, பள்ளிக்கூடத்துக்கு என்று சுற்றி வந்துகொண்டிருந்த எனக்கு கொடைக்கானலுக்குத் தனியாக மகாத்மா காந்தியைப் பார்க்கப்போவது என்பது பெரிய காரியம். அது பற்றிப் பின்னால் நிறைய தடவை நிறைய சொல்லிப் பெருமைப்பட வேண்டிய விஷயம். இதோ இன்று மாலை மத்தியான சாப்பாட்டுக்குப் பிறகு நடக்கப்போகிறது! பெருமையாக இருந்தது. கர்வம் என்று கூடச் சொல்லலாம்!
என் நினைவில் இருப்பதெல்லாம், பல தெருக்களி லிருந்தும் பல மூலைகளிலிருந்தும் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் விரைவாகப் போய்க்கொண்டிருந்தார்கள். பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எனக்குத் தெரிந்த பஸ் போகும் ரோட்டில் வந்து சேரவில்லை. குறுக்கே சந்தைப்பேட்டையைக் கடந்து, ரோட்டைக் குறுக்கே வெட்டி, வயல்கள் ஊடே போய்க்கொண்டிருந்தார்கள். எல்லோரும் தனித் தனியாகவும், நாலைந்து பேர் சேர்ந்தும், பேசிக்கொண்டேயும் விரைந்துகொண்டிருந்தார்கள். காந்தி பற்றித்தான் பேச்சு. “வண்டி நிக்குமா, நிறுத்துவாங்களா, எவ்வளவு நேரம் நிக்கும், ஸ்டேஷன் மாஸ்டர்கிட்ட கேட்கணுமா?” இப்படியான பேச்சுகள். நிலக்கோட்டையே காலியானதுபோலத்தான் தோன்றியது. நிலக்கோட்டை மாத்திரம் என்ன, சுற்றுவட்டாரத்தில் இருந்த கிராமங்களும் காலியாகிக்கொண்டிருந்ததுபோலத்தான் இருந்தது. எல்லோரும் குறுக்கு வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள். இது வரை நான் அறிந்திராத, புதிய வழி. ஒற்றையடிப் பாதையாக இருந்தது அது.
அதில் ஆங்காங்கே இன்னும் பல ஒற்றையடிப் பாதைகளும் சேர்ந்துகொண்டன. அதுபற்றியெல்லாம் அவர்கள் அன்று கவலைப்படவில்லை. ஒற்றையடிப் பாதையின் வழியேதான் போவது என்பது அந்தக் கூட்டத்துக்குச் சாத்தியமில்லை. என் ஞாபகத்தில் சில குன்றுகளையும் அவற்றின் ஊடே செல்லும் கணவாய் வழியாகவும் சென்றோம். மூன்று மைல் தூரம் என்று சொல்லிக்கொண்டார்கள். கடைசியாக, கொடைக்கானல் ரோடு ஸ்டேஷன் தாண்டியோ அல்லது அதற்கு முன்னதாகவோ தண்டவாளத்தின் ஒரு பக்கமாக மக்கள் குழுமியிருந்ததைப் பார்த்து அவர்களோடு நாங்களும் சேர்ந்துகொண்டோம். தண்டவாளம் ஒரு ஆள் உயரத்தில் இருந்தது. கீழே வயல் பரப்பு. பரப்பில் குழுமியிருந்த எங்களைப் பார்த்து ஜனங்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம். கூட்டம் பெருகிக்கொண்டிருந்தது. அங்கு யார் குழுமச் சொன்னார்கள்? அங்கு வண்டி நிற்கும், காந்தி வெளியே வந்து எங்களைப் பார்ப்பார் என்று எப்படித் தெரியும்? யார் சொல்லி இதெல்லாம் நடக்கிறது என்பதெல்லாம் தெரியவில்லை. சாதாரணமாக இப்படிக் கூட்டம் கூடும் இடத்தில் போலீஸ்காரர்கள் கெடுபிடி இருக்குமே. அதுவும் இல்லை. காங்கிரஸ் தொண்டர்கள்தான் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறார்களோ என்றால் அதுவும் இல்லை.
தனக்குத் தானே கட்டுப்பாடு
சுற்றி மாட்டு வண்டிகளில் வந்தவர்கள், சைக்கிளில் வந்தவர்கள் என ஆங்காங்கே மாட்டு வண்டிகளை நிறுத்தி மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டிருப்பதும் தெரிந்தது. ஏதோ சந்தைக்கு, திருவிழாவுக்கு வந்தவர்கள் மாதிரிதான் தாமே ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கில் எல்லாம் பரவியிருந்தன. சலசலப்பும், இரைச்சலும் இருந்தபோதிலும், ஏதும் கலவரமில்லை. தமக்குள்ளேயே ஒரு கட்டுப்பாடும் ஒழுங்கும் தாமே உருவாகிக்கொண்டன போலும். ஒரு பரபரப்பு, எதிர்பார்ப்பு, காணக்கிடைக்காத ஒன்றைக் காணும் உற்சாகம். ஆனால், கோஷங்கள் இருந்ததாக நினைவில்லை. அந்தப் பகுதியில் அவ்வளவு பெரிய கூட்டத்தை நான் கண்டதில்லை!
வண்டி வந்துகொண்டிருந்தது மெதுவாக. கூட்டத்தைப் பார்த்து நிற்கச் சொல்லியிருக்க வேண்டும். அதுகாறும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் தம் இயல்பில் எழுந்து நிற்கத் தொடங்கினர். அவசியமே இல்லை. உட்கார்ந்திருந்தாலும் சரி, நின்றாலும் சரி, அந்த உயர இருப்புப் பாதையில் மேல் நிற்கும் வண்டியிலிருப்பவர்களைத் தாராளமாக வெகுதூரம் வரை பார்க்க முடியும். ஒரே பரபரப்பு அலையாகக் கூட்டம் முழுதும் பரவியது.
காந்தியாண்டவர் சந்நிதி
ஒரு வண்டியின் முன் கட்டப்பட்டிருந்த சிறிய மேடையின் முன் காந்தி வந்து நின்றார். பக்கத்தில் கருப்புக் கண்ணாடி அணிந்திருந்த ராஜாஜி. இன்னும் யாரோ நினைவில் இல்லை. வந்து நின்றதும், அவர் கைகூப்பியதும் கூட்டம் முழுதுமே தலைக்கு மேல்கைகூப்பி வணங்கியது. கூட்டத்தின் சலசலப்பில் கூப்பிய கைகளுடன்
`மகாத்மா காந்திக்கு ஜே' என்று திரும்பத் திரும்ப எழுந்த கோஷம் மயிர்க் கூச்சிட வைத்தது. காந்தி முன் நின்றது, ஏதோ பழனி ஆண்டவர் சந்நிதியில் திரை விலகி ஆண்டவருக்குத் தீபாராதனை நடப்பதுபோலத்தான், கூட்டம் முழுதுமே தன் நினைவின்றித் தலைக்கு மேல் கைகூப்பியதும், கோஷங்கள் எழுப்பியதும். நிலக்கோட்டைக்குப் பக்கத்துப் புண்ய க்ஷேத்திரம் பழனிதான். கூட்டம் முழுதிலும் ஒரு புல்லரிப்பு பரவியதை உணர முடிந்தது. காந்தி ஏதோ சில வார்த்தைகள் சொன்னார். காந்தி சொல்லச் சொல்ல, ராஜாஜி தமிழில் அதைத் திருப்பிச் சொன்னார். ஆதலால் காந்தி ஆங்கிலத்தில்தான் பேசியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு நினைவில் இல்லை. ஒரு சில நிமிடங்கள்தான். காந்தி திரும்பக் கூட்டத்தைப் பார்த்துக் கைகூப்பி உள்ளே சென்றுவிட்டார். மற்றவர்களும் தொடர, வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது. கூட்டம் மெதுவாகக் கலைய ஆரம்பித்தது.
`என்ன நிறமுங்கறேன்… தங்கம் மாதிரில்லே ஜொலிக்குது!'
`அவர் ஒரு வார்த்தை சொல்லட்டும். உலகமே கேட்குதுங்க' என்று அவரவர்க்குத் தோன்றியதைப் பேசிக்கொண்டு வந்தார்கள். மாட்டு வண்டிகள் ரோடு வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தன. அந்த நாட்களின் ஆத்மாவே வேறுதான்!
மூத்த இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன் எழுதிய ‘காந்தி’ கட்டுரையின் சுருக்கமான வடிவம் இது. அக்டோபர் 21 அன்று காலமான வெங்கட் சாமிநாதனை நினைவுகூரும் விதமாக வெளியிடப்படுகிறது.

நன்றி http://tamil.thehindu.com/

No comments: