ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 5- நாட்டியகலாநிதி கார்த்திகா கணேசர்

.
யோகினி இரத்தினசபாபதி , உஷா நாதன் 

எனது முதல் நாட்டிய நாடகமான இராமாயணத்தை பேராசிரியர் மௌனகுருவுடன் இணைந்து தயாரித்த அனுபவத்தை எழுதிய போது திரு மௌனகுரு ஒரு குறிப்பு எழுதியிருந்தார் "கார்த்திகாவின் பணி முக்கியமானவை கார்த்திகாவோடு இணைந்தது பணி புரிந்த அந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கார்த்திகா தொடக்கி வைத்த மரபு தொடராமைக்குரிய காரணம் ஆராயப் பட வேண்டியது". நான் 1974 ஆம் ஆண்டு வடமோடி ஆடலின் வலுவை உணர்ந்து அதை பார்த்தவுடன் பரதத்துடன் இணைத்து இராமாயண நாட்டிய நாடகமாக்கி இன்று 41 வருடங்கள் கடந்து விட்டன. இராமாயண நாட்டிய நாடகம் பெற்ற வெற்றி பற்றி இன்னும் பேசப்படுகிறது. பலதடவை மேடை ஏறி இலங்கையில் பிரபலமானது. பின் சென்னையிலும் ஆஸ்திரேலியாவில் இரு தடவை மேடை ஏறி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன் எனது தங்கை உஷா நாதனால் இலங்கையில் தொடர்ந்து இருதடவை மேடையேற்றப்பட்டது. இத்தனைக்குப் பிறகும் எமது சொத்தான வடமோடி ஆடலின் வலுவை அழகை எம்மவர் உணரவில்லை. தாமாடும் பரதத்துடன் இணைக்க விரும்பவில்லை. ஏன்? இதற்கான விடை நான் எதற்க்காக வடமோடியை கையாண்டேன் என்பதில் தான் உண்டு.நான் பரதத்தை சென்னையிலே கற்று வந்தபின் முதல் தயாரிப்பே இராமாயணம். அண்மையான பாத்திரங்களை இராவணன், இராமன், இலக்குமணன், அனுமான் போன்ற பாத்திரங்களை படைக்க பரதத்தில் ஆடல் வகை இல்லை என்பதை உணர்ந்தேன்வடமோடியில் அவை இருந்ததை கண்டேன். பயன் படுத்தினேன். பரத நாட்டிய ஆடல் வகையை கொண்டு இத்தகைய பாத்திரங்களை படைத்து விட முடியாது என்பது எனது கணிப்பு. அந்த உண்மையை உணர்ந்தமையே  என்னை வேறு வகை ஆடலை தேட வைத்தது. எமது வடமோடி ஆடல் கை கொடுத்தது வெற்றியும் கண்டேன்.

குந்தவி கணேசலிங்கம் 

ஆனால் பெரும்பாலான எமது பெண்கள் பரத நாட்டியம் கற்கும் கலாஷேத்திராவிலே பரத நாட்டியம் தெய்வீகமான கலை அதை மாசுபடுத்தக் கூடாது. அது "சாஸ்த்ரோத்தமானது" என்றெல்லாம் கூறப்பட்டு வருகிறது. அங்கு 4,5 வருடங்கள் கற்றவர் மனதிலே இது ஆழப் பதிந்து விடுகிறது. "சாஸ்த்ரோத்தம்" என்பதன் அர்த்தம் தான் என்ன? "சாஸ்த்ரோத்தம்" "தெய்வீகம்" என்பதெல்லாம் ஆய்வு மனப்பான்மையை தடுப்பவை. எதுவுமே விருத்தியாக ஆய்வு அத்தியாவசியம். "ரிஷி மூலமும், நதி மூலமும்" ஆராயப்படக் கூடாது. என்றார்கள். ஒரு காலத்திலே ஆய்வைத் தடுக்க "வேதங்கள் இறையால் அருளப்பட்டவை" ஆராயாதே என்றனர். மேற்கத்தியர்கள் இந்தியா வந்தார்கள். வந்தவர் வேதங்களை ஆராய்ந்தனர். அன்று வரை மூடு மந்திரமாக இருந்த வேதங்கள் ஆய்வுப் பொருளாகியது. இந்தியரும் கண்களை திறந்தார்கள் ஆராயப் புகுந்தனர்.
பரம்பரை தேவதாசிகளோ ஆண்கள் இன்பத்துக்காக ஆடினார்கள். நாமோ பரதத்தை அவர்கள் கைகளில் இருந்து மீட்டு அதன் தெய்வீக தன்மையை காப்பாற்றுகிறோம். இது மேற்கத்திய கல்வியை கற்ற உயரிகளின் பேச்சு. கிபி 4ம் நூற்றாண்டில் ஆக்கிய சிலப்பதிகாரம் தமிழரின் நாட்டியம் பற்றி பேசுகிறது. இங்கு தான் நாம் இன்று ஆடும் பரதநாட்டியதிற்கான மூலத்தை காண்கிறோம். அன்றிலிருந்து தாசிகள் வளர்த்த ஆடற்கலையை 1934ல் ஒரு பிராமணப் பெண் கற்கிறார். தான் தாசிகள் ஆடியதை ஆடவில்லை நான் ஆடுவது தெய்வீகம் என்கிறார்.இந்தப் பெண்ணே மேற்கத்தியரான அருண்டேலை மணந்த ருக்மணி அருண்டேல். "கலாஷேத்திரா" என்ற கலை கல்லூரியை நிறுவியவர். தாசி என்ற பதம் மாசு படிந்திருந்தமையால், தாசிகளில் இருந்து தம்மை வேறு படுத்த திருமதி அருண்டேல் அவ்வாறு கூறினார். இவருக்கு பின் பல பிராமண பெண்கள் ஆட வந்தபோது தாம் ஆடும் ஆடல் தெய்வீகம் என்றனர். ஆனால் இவர்கள் பரதநாட்டியத்தை கற்றுத் தேர்ந்ததோ தாசிகுலத்தை சேர்ந்த நட்டுவனார்களிடமே. அரங்கத்திலே சபையோருக்கு ஆடிய போதும், அரங்கக் கலை என கூற, என்ன மறுக்கும் மனோபாவம். பரதத்தில் இருந்து விலகினால்  அது தெய்வத் துரோகம், அல்லது சுத்த பரதத்தை மாசு படுத்துவது எனவும் கூறப்படும். இத்தகைய ஒரு பின்னணியிலே எமது மாணவியர் நாட்டியத்தை கற்று திரும்புகிறார்கள்.

அமிழ்தன் கணேசர் 

அங்கு கற்கும் மாணவியர் வடமொழி சுலோகங்களையே மனனம் பண்ண வேண்டும். தேவ பாஷை அல்லவா சமஸ்கிருதம். நந்திகேஸ்வரரின் அபிநய தர்ப்பணம் பாடல்களில் கை முத்திரைக்கான அர்த்தங்கள், அங்க அசைவு அத்தனையும் வடமொழியில் உண்டு. ஆனால் வே சுவாமிநாதர் பதிப்பாக தூய தமிழிலே அபிநய தரப்பான சுலோகங்கள் உண்டு. இதை யாரும் கற்பது கிடையாது. இது தவிர பரத சூடாமணி என்ற தமிழ் நூலும் உண்டு, கற்பதில்லை. இன்று வரை இலங்கை நுண்கலை கல்லூரிகள் கூட இவற்றைப் பயன் படுத்தவில்லை. அதற்கு மேலும் தமிழரின் தனிப்பெரும் செல்வமான சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் தம் காலத்தில் நிலவிய கை முத்திரைகள் அத்தனையையும் தூய தமிழில் எழுதியுள்ளார். அதையும் எந்த ஆடற் கலைஞரும் அறியார். தமிழில் அத்தனையும் இருக்க எமது இலங்கை நுண்கலை கல்லூரிகள் கூட அவற்றைப் பயன் படுத்தவில்லை. இலங்கையில் நுண்கலைப் பட்டதாரிகளாக நடனத்தை கற்றாலும் இவர்களும் இந்திய "கலாஷேத்திராவின்" பிரதிகளே.

தமிழை தமிழரின் ஆடலான பரதநாட்டியத்தில் இருந்து முற்றாக புறக்கணித்து, அதே வேளை தேவ பாஷை என வடமொழியை மட்டும் கற்பித்து வருகிறார்கள். இவ்வாறான செய்கையால் இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழர் வளர்ந்த ஆடற்கலையே தமிழர்களது அல்லாது ஆக்கிவிட்டனர். அவர்கள் கல்வித்திட்டம் அத்தகைய ஒரு மனோ பாவத்தை மாணவரிடம் ஏற்படுத்தியுள்ளது.

பிராமண ஆதிக்கம் தம்மை தமிழராக கருதாதது அவர்கள் தம்மை எப்பொழுதும் ஆரிய வம்சத்தவர் என எண்ணுபவர். இத்தகையோரால் சிலப்பதிகார அரங்கேற்று கதையில் மாதவி ஆடிய ஆடலில் இருந்து பரிணமித்ததே பரத நாட்டியம் என்ற உண்மை மறக்கப் பட்டு விட்டது. இவர்கள் செயல் திட்டமிட்டு தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் குழி தோண்டிப் புதைப்பதே. இவ்வாறு கற்று வந்தவர் கடிவாளம் பூட்டிய குதிரை போன்று அவர்கள் காட்டிய வழியில் செல்பவர். இத்தகைய ஒரு பரிதாப நிலையில் இருந்து இலங்கை தமிழரான நாம் மீள வேண்டும்.

யோகினி இரத்தினசபாபதி , உஷா நாதன் caption


அடுத்து நாம் எப்பொழுதும் கலை கலாசாரத்தில் தமிழக பாதிப்புக்கு உள்ளாகிறோம். அங்கு நடப்பவையே சிறந்தவை, உயர்ந்தவை என்ற எண்ணப்பாதிப்பு எம்மவர்க்கு உண்டு. அண்டை மாநிலமான கேரளத்துடன் நோக்கும் போது தமிழகம் பின்தங்கியே இருந்தது. எப்பொழுதோ நாட்டிய நாடகம் தயாரித்தாலும் பரத நாட்டியம் என்ற கட்டுக்கோப்புக்குள் இருந்து விடுபடாத நிலையே காணப்பட்டது. அங்கு பரத நாட்டிய கச்சேரிகள் பெரியளவில் நடைபெற்றாலும் பல உயர் வர்க்கத்தவரும் பெண்களுக்கு பரத நாட்டியமே கற்பித்தனர். பல பிராமணப் பெண்களும் பரத நாட்டியத்தை தொழில் முறையில் ஆடிவருகிறார்கள். பிரபல நாட்டிய ஆய்வாளர் நர்த்தகி பத்மா சுப்பிரமணியமும் இதற்கு விதிவிலக்கல்ல. சபாக்களில் மட்டுமல்ல இவர்கள் கல்யாண கச்சேரி போன்றவற்றிலும் ஆடுவார்கள். இது நல்ல வருவாயூட்டும் தொழிலாகவும் இருக்கிறது. அதனால் அங்கு நாட்டிய நாடகம் வளர வேண்டிய சூழல் அமையவில்லை. அப்பப்போ சில நாட்டிய நாடகங்கள் வந்து போனாலும் அவை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவ்வாறான சூழ் நிலைகளால் எம்மவர் இனியும் எமது கலை வர்ச்சிக்கு தமிழகத்தை நோக்குவது மடமை.
நாம் மொழியாலும், இனத்தாலும் தமிழகத்துடன் இணைந்தாலும் ஈழத்தமிழருக்கு எப்பொழுதுமே தமிழகத்தில் இருந்து வேறுபட்ட கலாசாரம் உண்டு. பல தலைமுறைகளாக நாம் இதற்கு ஆடப்பட்டே வாழ்கிறோம். நாம் ஆடிவரும் வடமோடி ஆடல் கிபி 2ம் நூற்றாண்டு தொட்டு கிபி 3 வரை என வர்ணிக்கப்படும். "நாட்டிய சாஸ்திரம்" என்ற நூலில் வர்ணிக்கப்பட்ட நாட்டிய அம்சங்கள் யாவற்றையும் தன்னுள் கொண்டது. ஒரு காலத்திலேயே இது உயர் கவினக் கலையாக இருந்துள்ளது. காலத்தின் ஓட்டத்திலே பல வரலாற்றுக் காரணங்களால் தனி ஒருத்தி ஆடும் ஆடல் பரிணமித்து வளர்ந்தது. பலர் கூடி கதை கூறி ஆடும் ஆடல்கள் பின் தள்ளப்பட்டமையை காண்கிறோம். அதனால் கவின் கலையாக திகழ்ந்த நாட்டிய நாடகங்கள் வேத்தியல் கலையாக பொதுமக்கள் கலை அல்லது கிராமியக் கலை என்ற நிலைக்கு பின் தள்ளப் பட்டுள்ளது.   இந்த நிலை ஈழத்தமிழரான எமக்கு மட்டும் ஏற்பட்டது அல்ல. தென்னக தமிழகத்தின் தெருக் கூத்தும் ஒரு கவின் கலையே. அதுவும் கற்றோரும் உயரிகளும் போற்றாத தெரு கூத்து என்ற நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. இது ஏன் என்பது நீண்ட ஆய்வுக்குரிய விஷயம். பத்மா சுப்பிமணியம் போன்ற ஆய்வாளர்கள் தெருக்கூத்தை கருத்தளவில் சிறந்த நாடக அம்சம் கொண்ட கவின் கலை என அங்கீகரித்த போதும் அதை இன்று ஆடிவருபவர்கள் சமூக அந்தஸ்து அற்ற தாழ்ந்த குலத்தவர் என கத்துவதால் அவர்கள் ஆடலை தமது பிராமண அந்தஸ்து வாய்ந்த பரத்துடன் இணைக்க விரும்புவதில்லை.

சிலபதிகாரத்திலே மாதவி ஆடிய 11 வகை ஆடல்கள் நாடக பாணியில் அமைந்தனவையே. அவற்றின் சாயலை நாம் இன்றும் கிராமிய ஆடல்களில் காண முடிகிறது. மாதவி ஆடும் போல்லுது கவின் கலையாக இருந்த அரங்கேற்றுகாதை ஆடல் மட்டுமே நம்மை வந்தடைந்துள்ளது. 11 வகை ஆடலும் எம்மை முறையாக வந்தடையவில்லை.

எந்த ஒரு கலைஞனும் தனது கலைப்படைப்பை படைக்கும் போது கலையின் விருந்திக்கு வித்திடுகிறான். அவ்வாறாக இடப்பட்ட வித்து வளர்ந்து விருட்சமாக வளர வேண்டும். கலை தொடர்ந்தும் பயிலப் படும் போது தான் வித்து விருட்சமாக வளர முடியும். வெறும் ஆய்வுகள் விருத்தியாகி விடா. தொடர்ந்தும் படைப்போம். நம் பணியை மேலும் எடுத்துச் செல்வோம். நாம் வாழும் காலத்திலேயே மாற்றத்தை காண முயல்வோம் நண்பா.

கார்த்திகா தொடங்கிவைத்த மரபு தொடராமைக்குரிய காரணத்தை ஓர் அளவு ஆராய்ந்துள்ளேன். முயல்வோம் வெற்றி காண்போம்.No comments: