தன்னிகரமற்ற தனி லயம் - அம்ஷன் குமார்

.

தெட்சணாமூர்த்தி பற்றிய ஆவணப்படத்தை இயக்கியவர்‏

ஈழத் தமிழர்களிடையே முதன்மையான செல்வாக்கு பெற்ற ஒரே தமிழர் என்று சொல்ல வேண்டுமென்றால் அவர் பிரபாகரன் தான். பிரபாகரனை வழிபடுபவர்கள் அவரது செயல்களை நடுநிலையுடன் அவதானிப் பவர்கள் மட்டுமின்றி அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட அவர் தங்களுக்கான போராட்டத்தை எதிரிகளால் தவிர்க்கவியலாத வண்ணம் தோற்றுவித்தவர் என்பதில் மாறுபாடான கருத்துகள் கொள்வதில்லை. அவருக்கு அடுத்தாற்போல் ஈழத்தமிழர்களின் பேரபிமானத்திற்குரிய மனிதர் யார்? உடனடியாக அவர்களுக்குப் பதில் தட்டுப்பட்டாலும் சற்று நேரம் எடுத்துக்கொண்டு பல ஆளுமைகளை மனதில் கொண்டுவந்து நிறுத்தி அசைபோட்ட பின்னரும் முதலில் யாரை நினைத்தார்களோ அவரையே மொழிவார்கள். அவர் அரசியல் தலைவர் அல்லர். மாபெரும் கவிஞரோ எழுத்தாளரோ அல்லர். சினிமா, நாடகப்பிரபலமும் அல்லர். மதகுருவும் அல்லர். அவர் தவில் இசைக்கலைஞர் யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி.
ஒரு தவில் இசைக்கலைஞர்மீது இவ்வளவு அன்பையும் ஈடுபாட்டையும் காட்ட முடியுமா என்று வியக்கும்வண்ணம் உள்ள ஈழத் தமிழர்களின் செயல்கள் பிரமிப்பை ஊட்டுகின்றன. இவ்வள விற்கும் அவர் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். ஈழத்தமிழர்களிடையே மட்டுமல்ல தமிழக கர்நாடக இசைப் பிரியர்களும் அவருக்குத் தனிப்பட்டதொரு இடத்தை அளித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அது எத்துறை யாகினும் சரி. தங்களுக்கு ஈடானவர்கள் அல்லது தங்களை விட சாதனை புரிந்தவர்கள் என்று ஒரு சில 

விதிவிலக்கானவர்களைத்தவிர பெரும்பாலான ஈழத்தமிழர்களை ஒப்புக் கொண்டதில்லை. இலக்கியம், நாடகம், சினிமா என்று எல்லாத்துறைகளும் இதில் அடங்கும். இசையும்கூட. தவில் இசையைப் பொறுத்த வரை ஒப்புநோக்கலுக்கே இடமில்லை. காரணம் யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி. நாதஸ்வரத்திற்கு டி.என். ராஜரத்தினம் என்றால் தவிலுக்குத் தெட்சணாமூர்த்தி என்று சொன்னவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த இசை விற்பன்னர்கள்தாம்.

எவராலும் மறுக்க முடியாத உன்னதமான இடம்பெற்றுள்ள தெட்சணாமூர்த்தியின் மூதாதையர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வெவ்வேறு காலகட்டங்களில் இலங்கையை நோக்கிப் பயணித்து அங்கேயே குடியமர்ந்தன பல இசைக்கலைஞர்களின் குடும்பங்கள். இவ்விதமாக இலங்கை காரைத்தீவுப் பகுதியில் குடியேறிய குடும்பமொன்றில் பிறந்தவர் தவில் கலைஞர் விசுவலிங்கம். முதல் மனைவி இறந்தபின் இவர் இரண்டாவதாக ரத்தினம் அம்மாள் என்பவரைக் கல்யாணம் செய்துகொண்டார். இவர்களுக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஒருவர் தெட்சணாமூர்த்தி. ரத்தினம் அம்மாளின் தந்தையான நாதஸ்வரக்கலைஞர் கந்தசாமி, திருவாரூருக்கு அருகிலுள்ள திருப்பயற்றங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தன் குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்தில் குடியேறியவர். எனவே, தெட்சணாமூர்த்தியின் வம்சாவழியினரின் இந்தியத் தொடர்பு அண்மைக் காலத்தியது என்பதை அறியலாம்.
தெட்சணாமூர்த்தி 1933, ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியன்று இணுவில் என்கிற ஊரில் பிறந்தார். அப்போது அவரது குடும்பம் வறுமையில் ஆழ்ந்திருந்தது. சிறு வயது முதலே அவருக்குத் தவில் வாசிக்கக் கற்றுக்கொடுத்தார் விசுவலிங்கம். மூன்றாவது வரைதான் தெட்சணாமூர்த்தியால் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. தெட்சணாமூர்த்தி தொடர்ந்து படிக்க விரும்பியதாகவும் அதற்கு அவரது தந்தையின் இசைவு கிடைக்கவில்லையென்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்; அவர் சிறுவயதிலேயே பள்ளிப் படிப்பில் ஆர்வமில்லாது தவில் இசைமீதே லயிப்பு கொண்டிருந்தார் என்று சொல்பவர்களும் உள்ளனர். சிறு வயதிலேயே ஒரு நாளைக்குப் பதினாறு மணிநேரம் தவிலைக் கற்றுக் கொள்ளவேண்டி அவர் செலவிட நேர்ந்தது. அதுதவிர இசைக் கச்சேரிகளுக்கும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். கச்சேரிகளில் எவ்வாறெல்லாம் தவில் வாசிக்கப்பட்டதோ அதைப் போலவே இவரும் வாசித்துக்காட்ட வேண்டும். இரவு எவ்வளவு நேரமானாலும் சரி, அவர் செய்துகாட்டிய பிறகுதான் அவருக்கு சாப்பாடு. இல்லாவிட்டால் பட்டினி போடப்படுவார். சிறுவயதிலேயே கச்சேரிகளிலும் வாசிக்க ஆரம்பித்தார். தவிலைக் கூட தூக்கமுடியாத அப்பருவத்தின்போது அவரது தந்தை தவிலைக் கச்சேரி மேடைக்குக் கொண்டுவந்து வைப்பார்.
என்னதான் தவிலை உள்ளூர்க் கலைஞர்களிடம் கற்றாலும் தமிழகம் சென்று அங்குள்ள கலைஞர்களிடம் கற்றால்தான் தெட்சணாமூர்த்தி முழுமை பெறுவார் என்கிற எண்ணத்துடன் விசுவலிங்கம் அவரை 1942இல் இந்தியா அழைத்து வந்தார். நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளையிடம் அவர் தவில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். சுமார் ஒன்றரை வருடங்கள்தான் அவரிடம் கற்றார். அதற்குள் ராகவப்பிள்ளைக்குத் தெரிந்துவிட்டது தெட்சணாமூர்த்தி அசாத்திய மாணவர் என்பது. எதைச் சொல்லிக் கொடுத்தாலும் அதற்குமேலே கற்றதை எடுத்துச் சென்று அலங்கரிக்கும் வண்ணம் திறமை படைத்த தெட்சணாமூர்த்தியை அவர் உற்சாகப்படுத்தி, “உனக்கு சொல்லிக் கொடுக்க இனி எதுவும் பாக்கியில்லை. ஒரு அபிப்பிராயம் காதிலே விழுவதற்குள்ளாகவே உன் கையில் அது ஒலித்துவிடும்படியான அளவுக்குக் கடவுளின் வரப்பிரசாதம் பெற்றுள்ள நீ இனி ஊருக்குத் திரும்பலாம். மகோன்னதமான பேரும் புகழும் வந்தடைய அதிக காலம் இல்லை’’ என்றுகூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். பின்நாட்களில் தனது குருக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது “பலரிடம் நான் தவில் பயின்றேன். பல மேதைகளின் வாசிப்பைக் கேட்டேன். ஆனால் லய சம்பந்தமான விவகாரம் என்ற அம்சத்தில் என் கண்களைத் திறந்த மானசீகக் குருநாதர் திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளைதான்’’ என்றார் தெட்சணாமூர்த்தி.
இலங்கை திரும்பியபின் அவர் கோவில் கச்சேரிகளில் நிறைய வாசிக்கத் தொடங்கினார். அவரது லய வித்தியாசங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவரவே பல இடங்களிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்தன.
அக்காலங்களில் தமிழகத்திலுள்ள திறமையான கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று மாதக்கணக்கில் இருந்து இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுவிட்டுத் தாயகம் திரும்புவார்கள். மறைந்த கலை விமர்சகரும் கர்நாடக இசையில் ஆழ்ந்த புலமை பெற்றவருமான தேனுகா அதுபற்றி இவ்வாறு நினைவுகூர்ந்தார்:
“புகழ்பெற்ற தவில் வித்வான் நீடாமங்கலம் சண்முக வடிவேல்பிள்ளை அவ்வாறு இலங்கை சென்றிருந்த சமயம் தெட்சணாமூர்த்தியின் தவில் கச்சேரியைக் கேட்டார். அதற்கு முன்னரே தெட்சணாமூர்த்தி பற்றிய பேச்சு தமிழகத்தில் இருந்தாலும் சண்முகவடிவேலுக்கு நேரிடையான அனுபவம் அப்போதுதான் ஏற்பட்டது. தெட்சணாமூர்த்தியின் திறமையால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமிழகம் திரும்பிய அவர் தெட்சணா மூர்த்தி பற்றி வியந்து பாராட்டியது மட்டுமின்றித் தன்னை விட அவர் பெரிய கலைஞர் என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார்.’’
“என்னுடைய அண்ணனைப் பெரிய தவில்கலைஞராக எல்லோரும் கருதிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் அவரே ‘தெட்சணாமூர்த்தியின் ஒரு சொல்லுக்கு நான் காணமாட்டேன்’ என்று கூறியபோது நான் ஆடிப்போய் விட்டேன்” என்று அவரது சகோதரர் பி.எம். சுந்தரம் கூறினார். பி.எம். சுந்தரம் ஒரு இசை அறிஞர். ‘மங்கல இசை மன்னர்கள்’ என்னும் இவரது புத்தகம் நாதஸ்வரம் தவில் கலைஞர்கள் பற்றிய முதன்மை ஆவணமாகக் கருதப்படுகிறது. தெட்சணாமூர்த்தி தமிழகத்திற்கு வந்து கச்சேரிகள் செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சண்முக வடிவேல். தெட்சணாமூர்த்தி பல நாதஸ்வரக் கலைஞர்களுக்குத் தவில் வாசித்தார். அவரது இசையைக் கேட்க இலங்கையைப் போலவே தமிழகத்திலும் ரசிகர் கூட்டங்கள் அலைமோதின. 1959ல் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த சென்னை தமிழ்ச் சங்க இசை விழாவில் காருகுறிச்சி அருணாசலம் பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரியில் சன்முகவடிவேலுவும் தெட்சணாமூர்த்தியும் தவில் வாசித்தனர். அது நேரடியாக அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இரவு பன்னிரண்டு மணிக்கு நிலைய நிகழ்ச்சிகள் முற்றுப்பெறும். ஆனால் கச்சேரி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வானொலிப்பெட்டிகள் முன் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களின் விருப்பத்திற்கேற்ப கச்சேரி முடியும்வரை நள்ளிரவிலும் ஒலிபரப்பு தொடர்ந்தது.
சண்முகவடிவேல், தெட்சணாமூர்த்தி இருவரும் இணைந்து பல இடங்களிலும் வாசித்தார்கள். மக்கள் வரவேற்பு அதிகரித்து தெட்சணாமூர்த்தியின் புகழ் தமிழகமெங்கும் பரவ அக்கச்சேரிகள் உதவின.
நீடாமங்கலம் சண்முகவடிவேல் 1963இல் இறக்கும்வரை அவரது தமிழகப் பயணங்கள் தங்கு தடையின்றி நீடித்தன. அவரது புகழையும் வளர்ச்சியையும் விரும்பாதவர்கள் இலங்கையில் இருந்தனர். எனவே அவர் தமிழகம் வருவதை விரும்பினார். 1969லிருந்து 1975வரையிலான காலகட்டத்தில் தஞ்சாவூரிலேயே இருந்து கச்சேரிகளில் வாசித்தார். அவரது உடல் மன நிலைகளில் பாதிப்பு இருந்துகொண்டே இருந்தது. உடல்நிலை மோசமாகி மூளாய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனளிக்காது 1975ஆம் வருடம் மே மாதம் 15ஆம் நாளன்று இறந்துபோனார். மீண்டும் அவர் தவில் வாசிக்கமாட்டாரா என்று ஏங்கியிருந்த மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பெருமளவு கலந்துகொண்டனர். அவர் இறந்து முப்பதே நாட்களில் அவரது மனைவி மனோன்மணியும் இறந்து போனார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள். அவரது புதல்வர்களில் ஒருவரான உதயசங்கர் இலங்கையில் தவில் கலைஞராக இருக்கிறார். இதுதான் யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் வாழ்க்கைச் சுருக்கம் .
மேதமையும் சாதனைகளும் நிறைந்த அந்த வாழ்வில் கொடுமைகளுக்கும் துயரங்களுக்கும் குறைவில்லை. முதலாவதாக தெட்சணாமூர்த்தி தனது குழந்தைப் பருவத்தை இழந்தார். பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை விளையாடி இரவு தூங்கச்செல்லும் சிறுவனின் வாழ்க்கையல்ல அவரது பால்ய காலம். எந்நேரமும் தவில் சாதகம் செய்யும்படிப் பணிக்கப்பட்டிருந்தார். அதை அவர் விரும்பித்தான் செய்தாரா என்ப தெல்லாம் தெரியாது. அதிலிருந்து அவரால் தப்ப முடியவில்லை. பீத்தோவன் உள்ளிட்ட பல குழந்தை மேதைகளின் வாழ்க்கையை அவரது வாழ்வும் ஒத்திருந்தது. தன்னால் பெறமுடியாத புகழையும் வெற்றியையும் தனது தனயன் பெறவேண்டும் என்கிற வெறியுடன் விசுவலிங்கம் அவரைத் தயார் செய்தார்... தெட்சணாமூர்த்திக்குத் தெரிந்ததெல்லாம் தவில் வாசிப்பு ஒன்றுதான். அதில் அவர் சிறந்து விளங்கத் தொடங்கினார். சிறு வயதிலேயே அவருக்குக் கிடைத்த அங்கீகாரம் அவரைப் பலவாறாயும் பாதித்தது. “அவர் மகா கோபக்காரர்” என்கிறார் பி.எம். சுந்தரம். இவர்தான் பின்நாட்களில் தெட்சணாமூர்த்தியின் கச்சேரி நிகழ்வுகளைத் தமிழகத்தில் கவனித்துக் கொண்டதோடு மட்டுமின்றி அவர்மீது மிகுந்த அக்கறைகொண்டவரும் ஆவார். ஆனால் அவரது கோபம் தவறானது என்று கூறவியலாதவண்ணம் அவர் அதை வெளிப்படுத்திய நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. பிற கலைஞர்களைப் பற்றித் தன் எதிரில் குறை கூறுவதை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். தனது இசையை விலைபேச வருபவர்களிடமும் அவர் இணக்கமாக நடந்து கொள்ளமாட்டார். அவரது தவில் இசைக் கச்சேரி ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் ரூபாய் தரப்பட்டது. அந்நாளில் அது பெரிய தொகை. ஆனால் தனக்குச் சரியான கௌரவம் தரப்படாவிடின் எவ்வளவு பணம் கொடுக்க முன்வந்தாலும் அதை மூர்க்கத்துடன் நிராகரித்துவிடுவார். அவரை எளிதாக நெருங்கிவிடலாம் என்கிற எண்ணம் எவருக்கும் ஏற்படவில்லை. ஆனாலும் அவரை நன்கறிந்தவர்கள் அவர் எளிமை பாராட்டுபவர் என்றுதான் கூறியுள்ளனர்.
அழகான தோற்றமுடையவர். அவருக்குப் பெண் ரசிகைகள் அதிகம். நன்றாக உடைகள் உடுத்துவதிலும் வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்வதிலும் ஆர்வமுடையவர். “திடீரென மோட்டார் பைக் அல்லது காரை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார். எங்கே போனார் என்றே தெரியாதிருக்கும். பொதுவாக அந்நாட்களில் தவில்காரர்கள் அவ்வாறெல்லாம் இருந்தது கிடையாது’’ என்கிறார் தவில் கலைஞர் திருவாளப்புத்தூர் டி.ஏ. கலியமூர்த்தி.
எவ்வளவோ விசித்திர இயல்புடையவராக இருந்தாலும் வாசிப்பு என்று வந்துவிட்டால் எல்லா வற்றையும் ஒதுக்கிவிட்டு அதில் மட்டுமே கவனம் செலுத்தும் குணாதிசயம் அவரிடம் இருந்தது. ‘‘அவருக்கு முன் வாசித்தவர்களிலிருந்து அவரது வாசிப்பு பெரிதும் வேறுபட்டதற்குக் காரணம் அவர் உருட்டுச் சொற்களை உருவாக்கியதுதான். இடை விடாது அவர் ஒலித்துக்கொண்டே இருப்பார்’’ என்று உற்சாகமாக அவரது வாசிப்புபற்றிக் கூறுகிறார் தேனுகா. தேனுகாவின் உற்சாகம் மற்றவர்களைத் தொற்றிக்கொள்ளும் வகையினது. ஆர். பத்மநாப ஐயர் அவரால் உந்துதலுக்குள்ளாகி தெட்சணாமூர்த்தி பற்றிய ஆவணப் படம் எடுக்கப்படவேண்டும் என்கிற எண்ணத்தை மேற்கொண்டார். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆதரவுடன் அது நிறைவேறியது.
பதினொரு அட்சரமுடைய சங்கீர்ண தாள ஜதியை உருவாக்கி அதை ருத்ரகதியில் மணிக்கணக்காகத் தனி வாசித்த, அவரது புதுமை பலராலும் பாராட்டப்பெற்றது. பதின்மூன்று மற்றும் பதினேழு அட்சரங்களைக் கொண்ட ஜதிகளையும் உருவாக்கி வாசித்து, கேட்பவர்களை மலைக்கவைத்தார். “அதையெல்லாம் கேட்டபிறகு நாமெல்லாம் வாசிப்பது தவில்தானா?” என்கிற சந்தேகம் எழுவதாக அடக்கத்துடன் குறிப்பிடுகிறார் தவில் கலைஞர் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல். தெட்சணாமூர்த்தியின் தவில் வாசிப்பைக் கேட்ட மிருதங்கக் கலைஞர் பாலக்காட்டு மணி ஐயர் அவரை, ‘உலகின் எட்டாவது அதிசயம்’ என்று புகழ்ந்தார்.
இதுபோன்ற கணக்கு வழக்குகளை இசையறிவு மிக்கவர்கள் கவனித்து அறியத் தொடங்கிய அதே நேரங்களில் பாமரர்கள் என்று கருதப்படும் இசையைக் கற்றறியாத ஜனத்திரள் அவரது இசையால் ஈர்க்கப்பட்டது. அவரது வெற்றிக்கு அதுவே காரணம். எல்லாத்தரப்பினரையும் அவரது இசை உடனடியாகக் கவர்ந்தது. அவரது ‘தனி வாசிப்’பை மணிக்கணக்கில் மக்கள் மெய்மறந்து கேட்டனர். நீண்ட நேரம் தனி வாசிப்பது என்பது இலங்கையில் வழமையாக இருந்தது. அதை தெட்சணாமூர்த்தி தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தினார். அது தொடர்பாக நாதஸ்வரக் கச்சேரியில் தவில் இசை அதிக நேரம் எடுத்துக்கொள்வது பற்றி விமர்சனங்கள் எழுந்தன. 1969இல் டிசம்பர் மாதம் கிருஷ்ண கான சபாவில் நடைபெற்ற ஷேக் சின்ன மௌலானா நாதஸ்வரக் கச்சேரிபற்றி சுப்புடு இந்தியன் எக்ஸ்பிரஸில் விமர்சனம் எழுதினர். ‘தாளக்கடவுள் நந்திகேஸ்வரர் சுவர்க்கத்தில் யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் தவில் ஓசையைக் கேட்டு ஆனந்தத்தில் குதித்திருப்பார்’ என்று எழுதிய அவர் தெட்சணாமூர்த்தி அதிக நேரம் எடுத்துக்கொண்டு தனி ஆவர்த்தனம் செய்ததை விரும்பவில்லை. தவில் ஒரு தாள வாத்தியம் என்பதால் அதற்குச் சிறிதளவே நேரம் ஒதுக்கப்பட வேண்டுமேயொழிய கச்சேரியின் அமைப்பை அது குலைத்து விடக்கூடாது என்றார். கச்சேரி இலக்கணத்திற்கு அது புறம்பானதாக இருந்ததைப் பற்றியெல்லாம் மக்கள் கவலைப்படவில்லை. தெட்சணாமூர்த்தியின் ‘அத்து மீறலை’ ரசிக்க அவர்கள் நெடும் பயணங்கள் மேற்கொண்டு திரண் டனர். உடன் வாசித்த நாதஸ்வரக் கலைஞர்களும் அதை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தவில் ஒரு பக்கவாத்தியம் என்பதில் தெட்சணாமூர்த்தி அசைக்கமுடியாத எண்ணம் கொண்டிருந்தார். தனியாகத் தவில் கச்சேரிகள் நடத்த அவருக்கு வந்த அழைப்புகளை அவர் நிராகரித்தவண்ணம் இருந்தார். அவர் அசாதாரணமான கொள்கைப் பிடிப்புள்ளவராக இருந்தார். நாதஸ்வரத்திற்கு மட்டுமே தான் வாசிப்பது என்கிற ஒரு கொள்கையை உடையவராக இருந்தார். கிளாரினெட் இசைக்கு அவர் தவில் வாசித்ததில்லை. வேறு வாத்தியங்கள் முதன்மை பெற்ற இடங்களிலும் அவர் தவில் இசைத்ததில்லை. தவில், நாதஸ்வரத்துடன் கலப்பதுதான் முறை என்கிற சம்பிரதாயத்தில் வேரூன்றியவர் அவர்.
பழமையில் பற்றுக் கொண்டவர் என்றாலும் அவரது பல செயல்கள் அவரை மிகவும் முற்போக்கான, அவர் வாழ்ந்த காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதராகக் காட்டுகின்றன. பொதுவாக இசைக் கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை மிகவும் வணக்கத்துடன் போற்றிப் பாதுகாப்பார்கள். தெட்சணாமூர்த்தி அதற்கு நேர்மாறானவர். தமிழகம் வரும்போது தனது தவிலைத் தூக்கிக்கொண்டு வரமாட்டார். “நீங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒரு சின்ன ஹாண்ட் பேக். அதில் இரண்டு தவில் கழிகள். தவிர பாஸ்போர்ட். வேற ஒன்னும் கிடையாது. மாத்து வேஷ்டி சட்டைகூட இருக்காது” என்று தெட்சணாமூர்த்தி பற்றிய ஆவணப்படத்திற்கான நேர்காணலில் குறிப்பிடுகிறார் பி.எம். சுந்தரம். எந்த தவில் கிடைக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கிவிடுவார். ஒருமுறை மூட்டுகள் குறைந்த கோவில் தவில்தான் அவருக்கு வாசிக்கக் கிடைத்தது. கோவில் தவில்காரர், தெட்சணாமூர்த்தி அதை வைத்துக்கொண்டு எவ்வாறு வாசிப்பார் என்று ஐயங்கொண்டார். அவர் பயந்தபடியே தவில் “தொப்... தொப்’’ என்ற தோல் சப்தத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. அவருடன் ஜோடியாக வாசித்த கலைஞரின் தவில், சங்கதிகளைக் கொட்டிக்கொண்டிருந்தது. இதெல்லாம் கொஞ்ச நேரம்தான். பின்னர் தெட்சணாமூர்த்தி வாசித்த கோவில் தவிலும் கணகண வென்ற சுநாதத்தை எழுப்ப ஆரம்பித்தது. கோவில் தவில்காரர் அது தனது தவில்தானா என்று அதிசயிக்கத் தொடங்கினார். தவிலுடைய தோலின் தன்மையைப் புரிந்துகொண்டால் அதை வைத்துப் பிரமாதமாக வாசித்துவிட முடியும் என்பது தெட்சணாமூர்த்தியின் நம்பிக்கை. கச்சேரி முடிந்தவுடன் அவர் எழுந்து சென்றுவிடுவார். அவர் வாசித்த தவிலை மற்றவர்கள்தான் தூக்கிக்கொண்டு செல்வார்கள்.
சென்ற வருடம் சரோத் இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான் விமானப் பயணத்தின்போது தமது சரோத் இசைக்கருவியைத் தொலைத்துவிட்டார். அதைக் கடந்த நாற்பது வருடங்களாக பொக்கிஷம்போல் பாதுகாத்து வந்திருக்கிறார் அவர். அதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவின. அலிகான் மிகுந்த பரிதவிப் புக்குள்ளானார். ரசிகர்களும் அது அவரிடம் மீண்டும் போய்ச் சேரவேண்டும் என்று கவலை கொண்டனர். அவரது அதிர்ஷ்டம் ஓரிரு நாட்களிலேயே அது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை அவர் காவிய இணைவு (epic union) என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். அதைப் படித்தபோது அதுபோன்ற நிகழ்வு தெட்சணாமூர்த்தியின் வாழ்வில் நடந்திருந்தால் அவர் எவ்வாறு நடந்துகொண்டிருப்பார் என்று நினைக்கத் தோன்றியது. முதலாவதாக அவரிடம் நீண்ட நெடுங்காலமாக எந்த தவிலும் நிலைத்ததில்லை. அப்படியே அவருக்கு விருப்பமான ஒரு தவில் தொலைந்து போயிருந்தால் அவர் அது போனால் போகட்டும் என்றுதான் நினைத்திருப்பார். பணத்தின்மீது மட்டுமல்ல பொருட்களின் மீதும் அவர் பற்றற்றவராகவே விளங்கினார்.
தன்னை ஒரு தெய்வப்பிறவி என்றெல்லாம் அவர் பாவித்துக்கொள்ளவில்லை .தன்னையும் தவிலையும் பிரிக்க முடியாது என்றும் அவர் கொண்டதில்லை. தனக்குப் பிடிக்காத காலங்களில் அவர் தவில் வாசிப்பதை நிறுத்தியும் இருக்கிறார். அளவுக்கு அதிகமாகத் தன்னைப் புகழ்ந்தவர்கள்மீது அவருக்கு அலட்சிய உணர்வு இருந்திருக்கிறது என்பதைப் பல நிகழ்ச்சிகள் வாயிலாக அறிய முடியும்.. பிற்காலங்களில் அவர் சாதகம் செய்வதையும் நிறுத்திவிட்டார். மேடையில் வாசிக்கும்போதுதான் தவிலைத் தொடுவார். இருப்பினும் அவரது கச்சேரிகளில் அவர் வாசித்த ஒரு சொல் மீண்டும் வராது. அபரிமிதமான கற்பனை வளம் அவரது.
அளவற்ற புகழ், எவ்வளவு பணம் வேண்டினும் கொடுக்கத் தயாராக இருந்த சமூகம் ஆகியனவற்றிற்கிடையேயும் அவர் தனிமனிதனாய் வெறுமையை உணர்ந்தவராகவே வாழ்ந்தார். சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த துயரம், அதீதமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டி கடினமாக உழைத்தது, காதலித்த பெண்ணை மணந்து கொள்ளவியலாததால் ஏற்பட்ட விரக்தி ஆகியன அவரைத் தொடர்ந்து கலக்கத்தில் ஆழ்த்தின. மற்றவர்களுடன் பழகுவதை முற்றாகவே தமது கடைசி வருடங்களில் அவர் தவிர்த்தார். அளவெட்டியில் அவர் கட்டிய கலாபவனம் வீட்டிலிருந்து குடும்பத்தினரையும் வெளியே செல்லவிடாது தடுத்தார். அவர் இருந்தவரை அவரது குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. மற்றவர்கள் தனக்கும் தனது குடும்பத் தினருக்கும் ஏதேனும் தீங்கிழைத்து விடுவார்களோ என்கிற மனோ வியாதிக்கு உள்ளானார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இசைப் பாலமாய் விளங்கிய அவர் தன் இறுதி வருடங்களில் இலங்கைக்கும் இந்தியாவிற்குமாக அல்லாடிக் கொண்டிருந்தார். அவரது திறமை மீதும் அவருக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கு மீதும் இரு நாடுகளிலும் மற்ற கலைஞர்கள் பொச்சரிப்பு கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. ஆனால் அதை அவரால் எதிர்கொள்ள முடியாமற்
போயிற்று. சித்தம் கலங்கிய நிலையில் அவர் குணசீலத்தில் கால்கள் விலங்கிடப்பட்ட சில மாதங்களைக் கழித்தார். குணமாகி விட்டார் என்று நம்பிக்கை தரும் வகையில் தோற்றமளித்தபோது அவர் ஒரத்தநாடுக்கு அருகேயுள்ள தென்னமநாடு கோவில் தெப்பத்தில் வாசித்தார். மிகவும் அலாதியானதாக அவர் வாசித்த கச்சேரிகளிலேயே சிகரம் என்று சொல்லத்தக்கதாக இருந்தது அது என்று அவருடன் கூட வாசித்த அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், தஞ்சாவூர் டி.ஆர். கோவிந்தராஜன் ஆகியோர் சொல்கிறார்கள். அந்தக் கச்சேரி ஒலிப்பதிவு செய்யப்படவில்லை. தெட்சணாமூர்த்தியின் கைவிரல்கள் எவ்வாறெல்லாம் தவில் தோல்மீது படிந்தன, பரவின, அழுந்தின என் பதையெல்லாம் அவரது கச்சேரிகளை நேரில் பார்க்காதவர்களால் தெரிந்துகொள்ள முடியாது. அந்த அசைவுகளை எந்தச் சலனப்பட கேமராவும் படம் பிடிக்கவில்லை. சினிமா என்கிற சாதனம் நம்மிடையே செல்வாக்குடனிருந்த அக்காலத்திலும் ஆவணங்களை உருவாக்க அது பயன்படுத்தப்படவில்லை.
இறுதியாக இலங்கைக்குத் திரும்பிய தெட்சணாமூர்த்தி ஒரு இருட்டறைக்குள்ளேயே தனது காலத்தைக் கழித்தார். தீவிர மதுப் பழக்கம், லேகியம் உட்கொளல் ஆகியவற்றால் அவரது உடல் சீர் கேட்டினை அடைந்திருந்தது. தமது நாற்பத்திரண்டாம் வயதில் அவர் காலமானார்.
அவரது மறைவிற்குச் சரியாக நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரைப் பற்றிய ஆவணப்படம் தயாரானது. அதனோடு கூடவே அவரது இசையை எங்கிருந்தெல்லாமோ திரட்டி ஒரு தொகுப்பும் நினைவு மலரும் தயாராயின. அவற்றை ஒருசேர வெளியிட லண்டன், டொரண்டோ ஆகிய நகரங்களில் நிகழ்வுகள் ஏற்பாடாகின. ஆவணப்படத்தை இயக்கியவன் என்கிற முறையில் அங்கெல்லாம் நான் அழைக்கப்பட்டிருந்தேன். வெளியீட்டு விழாக்கள் பெரிய திருமண விழாக்கள்போல் கோலாகலமாக நடந்தன. மக்கள் பெரும் திரளாக வந்திருந்தனர். ஆவணப் படத்திற்காக அவரை அறிந்தவர்களை நேர்காணல்கள் செய்தபொழுது ஏதோ நேற்றுவரை தங்களுடன் இருந்த ஒரு மனிதரைப் பற்றிப் பேசுகிற அண்மைத் தோரணையில் நினைவு கூர்ந்தார்கள். அதேபோன்று அந்த மண்டபங்களில் சூழ்ந்திருந்தவர்கள் அவரைப் பற்றிய நினைவுகளைச் சொந்தத்துடனும் நெகிழ்வுடனும் பரிமாறிக் கொண்டனர். தங்களிடையே தோன்றி மறைந்த ஓர் ஒப்பிலாக் கலைஞனுக்கு அவர்கள் செய்த அஞ்சலி மனதை நிறைத்தது. ஆவணப் படத்தையும் இசைத் தொகுப்பினையும் வெளியீட்டிற்குப்பின் அவர்கள் வரிசையாக நின்று பெற்றுக்கொண்டு அதற்கான விலையாகவும் நன்கொடையாகவும் அளித்த தொகை மலைக்கவைப்பதாக இருந்தது. தமிழர்களின் கலை, இலக்கிய நிகழ்வுகள் தமிழ்நாட்டிலோ வெளிநாட்டிலோ எங்கு நடந்தாலும் அங்கு நடுத்தர மற்றும் முதியதலை முறையைச் சேர்ந்தவர்களே காணப்படுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் அதிகம் காணப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் தெட்சணாமூர்த்தி பற்றி ஏதோவொரு குறிப்பிடத்தக்க செய்தியையாவது அறிந்துவைத்திருந்தார்கள். நாதஸ்வரம் தவில் இசைக்கான வரவேற்பு தமிழகத்தில் மங்கத் தொடங்கியிருக்கும் இத்தருணத்தில், புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் தவில் வாசிக்கக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வமாயிருப்பதை அறிந்த போது தெட்சணாமூர்த்தி போன்ற கலைஞர்களின் பாதிப்பு பலவாறாயும் அவர்களிடம் நிலைகொண்டிருப்பதை உணர முடிந்தது.

Nantri kalachuvadu.com

No comments: