மலரும் முகம் பார்க்கும் காலம் 18 - தொடர் கவிதை

.

இலங்கை வவுனியாவைச் சேர்ந்த மருத்துவர் திரு. மதுரகன் செல்வராஜா அவர்கள். இவர் கொழும்பில் மருத்துவ ஆராய்சி – ஆய்வுப் பிரிவில் பணி செய்து வருகிறார்.


எத்திப் பிழைக்கிறது வானம்
ஏதோ ஒரு நாள் வரப்போகும் மழை எண்ணி
பொத்தி மனதுள் பதுக்கும் புன்னகைகள் விரட்டியபடி
இன்னுமோர் தலைமுறையையும் இவ்வாறே
எத்தியே பிழைக்கிறது வானம்

வரண்டுபோய்ப் புழுதி சேர்ந்த வயல்களின் ஓரங்களில்
காய்ந்து போனதில் மீந்திருந்த கடைசி முட்புதர்கள்
எல்லா வளங்களும் இழந்து நின்ற நிலங்களுள்ளும்
என்றோ வரும் மழை எண்ணிப் புதைந்திருக்கும் மண்புழுக்கள்

விளக்குகளில் சிறந்ததை தேர்ந்தெடுப்பதற்காய்
விட்டில்கள் தேர்தல் நடத்தின..
பறந்து பறந்து கருகி வீழ்ந்து
விளக்கின் வீரியத்தை விளக்கின சில
இன்னும் பறப்பதற்காய் இளைய குஞ்சுகளை
தயார் செய்து கொண்டன பல

கருகும் தலைமுறைகள் விடுதலை ஆகும் நாளொன்றில்
என் மலரும் முகம் பார்க்கும் காலம் வரும் - அதுவரை
கனவுகளுடன் கதைகளுடன் புழுகுகளுடன்
பொய்யான புன்னகைகளுடன்
வீணாகிப்போகும் எம்வாழ்வும் எம்சாவும்..


No comments: