வங்கிக் கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி: ஏழை பெண்ணுக்கு ஷாக் கொடுத்த வங்கிக் கிளை

.


உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஏழைப் பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி இருப்பு இருந்தது தெரியவந்தது. இதை அறிந்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

கான்பூரில் வீட்டு வேலை செய்பவர் ஊர்மிளா யாதவ். இவர் விகாஸ் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் யுபிஎஸ்ஐடிசி கிளையில் மத்திய அரசின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் சில தினங்களுக்கு முன்பு சேமிப்புக் கணக்கு தொடங்கி உள்ளார். இதற்காக அவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.2,000 செலுத்தி உள்ளார். 

இதையடுத்து அவருக்கு 2 எஸ்எம்எஸ் வந்துள்ளது. முதல் எஸ்எம்எஸ்ஸில் ரூ.9,99,999 வரவு வைத்ததாகவும், 2-வதில் ரூ.9.97 லட்சம் கழித்துக் கொண்டு மீதம் ரூ.2,000 இருப்பு இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வங்கிக் கணக்கு தொடங்க உதவிய லல்தா பிரசாத் திவாரியை அழைத்துக்கொண்டு வங்கிக்குச் சென்றுள்ளார். அங்கு அவரது கணக்கை சரிபார்த்தபோது, அதில் ரூ.95,711,69,86,47,130.14 (ரூ.95 ஆயிரம் கோடி) இருந்துள்ளது. இந்தத் தொகையை கணக்கிட முடியாமல் வங்கி அதிகாரியே அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து வங்கி அதிகாரி வி.கே.ஸ்ரீவாஸ்தவா கூறும்போது, “ஊர்மிளாவின் கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் செயலற்றதாக இருந்தது. இதையடுத்து, கற்பனையான ஒரு தொகையை கணக்கில் வரவு வைத்துள்ளனர். பின்னர் இந்தத் தவறு சரிசெய்யப்பட்டது” என்றார். 

ஆனால் “வாடிக்கையாளரின் அனுமதியின்றி அவரது கணக்கில் வரவு வைப்பது அல்லது கழிப்பது விதிமுறைப்படி தவறானது” என கணக்குத் தணிக்கையாளர் அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.
நன்றி thehindu

No comments: