ஐந்து மாணவர் கடத்தல் விவகாரம்: கடற்படை அதிகாரி ஒருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது
19 ஆவது திருத்தத்திற்கு அங்கீகாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை பணிப்பு
ரவிராஜ் எம்.பி. கொலை: 3 கடற்படையினர் கைது
30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு
குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை கட்டளை 53 வாக்குளால் நிறைவேற்றம்: கூட்டமைப்பு ஆதரவு
யாழில் நீர் அருந்திய பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
ஐந்து மாணவர் கடத்தல் விவகாரம்: கடற்படை அதிகாரி ஒருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது
16/03/2015 தெஹிவளைப் பிரதேசத்தில் வைத்து மூன்று தமிழ் மாணவர்கள், அவர்களது நண்பர்களான இரு முஸ்லிம் மாணவர்கள் உள்ளிட்ட ஐவரை கடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடற்படையின் முக்கிய அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கடத்தல்களுக்கும் அப்போது கடற்படையில் இருந்த சில முக்கிய அதிகாரிகளுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இது தொடர்பில் விசேட விசாரணை ஒன்று இடம்பெற்று வரும் நிலையிலேயே லெப்ரின்ட் கொமான்டர் தர கடற்படை அதிகாரியை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர உறுதிப்படுத்தினார்.
குறித்த கடற்படை அதிகாரியை புலனாய்வுப் பிரிவினர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அதற்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.
2008 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தலை நகரின் பல பிரதேசங்களில் இருந்தும் கடத்தப்பட்டு திருகோணமலைஇ கொழும்பு கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காணாமல் போயுள்ள 11 பேர் தொடர்பில் 7 இற்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் குறித்த காலப்பகுதிக்குள் தலை நகரின் மருதானை, மட்டக்குளி, கொட்டஞ்சேனை, புளூமென்டல் மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் காணாமல் போனோர் இது வரை உயிருடன் உள்ளனரா என்பது தெரியவராத நிலையில் இந்த காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூறத்தக்க அனைவரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணையை ஆரம்பித்திருந்தனர்.
முன்னதாக இது தொடர்பில் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கப்டன் தஸநாயக்கவை புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்துவிட்டு விடுதலை செய்துள்ள போதிலும் தேவை ஏற்படின் அவரை மீண்டும் விசாரணை செய்யவுள்ளதாகவும் இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குழுக்களில் ஒன்று அவரின் கீழ் இருந்துள்ளமை தொடர்பிலான சந்தேகத்திலேயே இந்த விசாரணைகள் தொடர்வதாகவும் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.
இது வரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 35 வாக்கு மூலங்களை இந்த விவகாரம் குறித்து பதிவு செய்துள்ள நிலையில் தெஹிவளையில் வைத்து 2008 ஆகஸ்ட் மாதம் கடத்தப்பட்ட இரு முஸ்லிம் மாணவர்கள் உள்ளிட்ட 5 மாணவர்களின் விவகாரம் தொடர்பில் கடற்படையின் அதிகாரி ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
19 ஆவது திருத்தத்திற்கு அங்கீகாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை பணிப்பு
16/03/2015 நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் குறைப்பு உள்ளிட்ட சில சரத்துக்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக 19ஆவது திருத்தச்சட்டத்தின் உத் தேசவரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு அரச அச்சகத்திற்கு அமைச்சரவை அறிவித்துள்ளது. அத்துடன் தகவலறியும் சட்டமூலத்தை சமர்ப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தேர் தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர் பில் அமைச்சரவையில் இணக்கம் காணப்படவில்லை என தெரியவந்துள்ளது.
நேற்றையதினம் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டிசில்வா, முன்னாள் அமைச்சர்களான அநுரபிரியதர்ஷன யாப்பா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வாசுதேவ நாயணக்கார, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில்பங்கேற்றிருக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து விசேட அமைச்சரவை கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு சில சரத்துக்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தற்போது காணப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. பாராளுமன்றம் நிறுவப்பட்டு ஓராண்டுக்கு பின்னர் அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. புதிய திருத்தங்களின் அடிப்படையில் நான்கு ஆண்டுகள் நிறைவுறும் வரையில் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கு சட்டத் திருத்தங்களில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி படைகளின் சேனாதிபதி, அமைச்சரவையின் பொறுப்பாளர், அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரங்கள் என்பன தொடர்ந்தும் அமுலிலேயே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமையானது அடிப்படை உரிமையாக பார்க்கப்படுகிறது. ஜனநாயக சமூகம் ஒன்றின் நீடிப்புக்காக தாக்கம் செலுத்தும் தேசிய பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு, மக்கள் பாதுகாப்பு, குற்றங்களை தடுத்தல் சுகாதார பாதுகாப்பு, ஏனையவர்களின் உரிமைகளை பாதுகாத்தல்,தனிப்பட்ட தன்மையை பாதுகாத்தல்இ இரகசியமாக பெரும் தகவல்கள் வெ ளியிடப்படுவதை தடுத்தல்இ நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாத்தல், ஆகியவற்றை தவிர்த்தல் ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது என்ற சட்டமூலத்திற்கும் அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.
அதேநேரம் குறித்த 19ஆவது திருத்தச்சட்ட வரைவானது அவசர சட்ட மூலமாக பாராளுமன்றில் சமர்பிக்கப்படமாட்டாது எனவும் வர்த்தமான அறிவித்தலைத் தொடர்ந்து சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக உயர் நீதிமன்றுக்கு சட்ட வியாக்கியாணத்தைக் கோருவதற்காக அனுப்பிவைக்கப்படும். அதனைத்தொடர்ந்து சில தினங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
62 பக்கங்களைக் கொண்ட 19 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை இடமபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான சட்டமூலத்தை வாசித்து ஆராய்வதற்கு காலஅவகாசம் அவசியம் என சில அமைச்சர்கள் அறிவித்திருந்தனர் இதனால் அவ் அமைச்சரவை அமர்வின் போது 19 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இறுதி இணக்கப்பாட்டிற்கு வரக் கூடிய சாத்தியம் ஏற்படவில்லை.
அவ்வாறிருக்கையில் நேற்யைதினம் நடைபெற்ற கூட்டத்தின் போது தேர்தல் முறைமை தொடர்பில் இணக்கபாடு எட்டப்பட்டிருக்கவில்லை. இதனால் இவ்விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கட்சிகள் கலந்துரையாடவிருப்பதாக தெரியவருகின்றது. குறிப்பாக தேர்தல் முறைமை தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் நாளையதினம் செவ்வாய்கிழமை மீண்டும் சந்திக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
அதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சட்டமூலம் மற்றும் தேர்தல் முறைமையில் திருத்தங்களை ஏற்படுத்தும் சட்டமூலம் ஆகிய இரண்டையும் ஒன்றாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகவிருக்கும் சுதந்திரக் கட்சி இன்றைய தினம் அவ்விடயம் தொடர்ந்து கலந்துரையாடவுள்ளதாக தெரியவருவதுடன் இதன்போது தேர்தல் முறைமை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசியலமைப்பு மாற்றங்கள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் விரைவில் முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் அரசாங்கம் முன்வைக்கவுள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தின் நகல் வரைபு ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் கடந்தவாரம் இடம் பெற்ற அரசாங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டத்திலும் இந்த நகல்வரைபுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் கிடைத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ரவிராஜ் எம்.பி. கொலை: 3 கடற்படையினர் கைது
19/03/2015 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பில் மூன்று கடற்படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் 72 மணி நேரம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு நீதி மன்ற உத்தரவின் பேரில் மீண்டும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் துப்பாக்கி தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று கடற்படையினரும் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ரவிராஜின் குடும்ப நலன் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜாரானார்.
இவர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வருகையில்,
நடராஜா ரவிராஜ் கொலையில் சம்பந்தப்பட்டதாக 2006ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 12ஆம் திகதி மூன்று சந்தேக நபர்கள் இந்த நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்கள் பின்னர் நான்கு தவணைகளின் பின்னர் மூன்று சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
இப்பொழுது ஆட்சிமாற்றத்தின் பின்னர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தியுள்ளனர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களில் முதலாவது சந்தேக நபரான ஆஜர்படுத்தப்பட்டுள்ள கொமாண்டோ சம்பத் முனசிங்க 2008 ஆம் ஆண்டு தெகிவளையில் கடத்தப்பட்ட ஜந்து மாணவர்களில் கடத்தலில் சம்பந்தப்பட்டமைக்கு சான்றுகள் உள்ளனவென புலனாய்வுப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான நீதவான் நீதிமன்றில் சான்று அளித்துள்ளார்.
எனவே, நடராஜா ரவிராஜ் கொலையிலும் தெகிவளையில் கடத்தப்பட்ட ஜந்து மாணவர்களின் கடத்தல்களிலும் பிரதான சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் கடற்படை கொமாண்டோ சம்பத் முனசிங்கவிற்கும் மற்றைய இரண்டு சந்தேக நபர்களுக்குமான விசாரணைகளை ஒருமித்து விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டுமென புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடும்படி நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டதுடன் பிரதான நீதவான் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு விசாரணையில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கைகளையும் நீதிமன்றிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி பாரப்படுத்தினார்.
சந்தேக நபர்களான மூன்று கடற்படையினரையும மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமே பாரமளிக்கப்பட்டு நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் மேலதிக விசாரணை நீதிபதி நிரோசா பொ்னாண்டோ சித்திரை மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் நன்றி வீரகேசரி
30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு
19/03/2015 தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக கொட்டகலை யூனிபீல்ட் பிரதேசத்தில் தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யூனிபீல்ட் வெலிங்டன் தோட்டத்தில் இயற்கை அனா்த்தங்களால் பாதிக்கப்பட்ட 30 வீடுகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர். பி. திகாம்பரம் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும், பெயர்பலகை தீரை நீக்கம் செய்யப்படுவதையும், அடிக்கல் நாட்டப்படுவதையும், கலந்து கொண்ட பிரமுகா்கள் மற்றும் மக்கள் தொகுதியினரையும் இங்கு படங்களில் காணலாம். நன்றி வீரகேசரி
குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை கட்டளை 53 வாக்குளால் நிறைவேற்றம்: கூட்டமைப்பு ஆதரவு
19/03/2015 குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டகோவை விஷேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை இன்று பாராளுமன்றத்தில் 53 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்ததோடு ஜனநாயக தேசியக்கூட்டணி மாற்றுக்குழு உறுப்பினரான அஜித் குமார மாத்திரம் எதிராக வாக்களித்தார். நன்றி வீரகேசரி
யாழில் நீர் அருந்திய பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
19/03/2015 யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய மாணவர்கள் 27பேர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிநீர் விஷமானதாலேயே இவர்கள் சுகயீனமடைந்துள்ளதாகவும் இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையின் குடிநீர் தாங்கியிலிருந்த நீரை மாணவர் கள் சிலர் அருந்தியதையடுத்து சுகயீனமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment