மணி ஓசை - எம். ஜெயராமசர்மா ... மெல்பேண்

.

           மணி ஓசை கேட்டவுடன்
               மனமெல்லாம் மகிழ்கிறது
           துணி வெல்லாம் பிறக்கிறது
                 தூயநிலை வருகிறது

           மால்மருகன் கோவில் மணி
               மருந்தாக இருக்கிறது
           தோல்வி எலாம் தொலைகிறது
                 துவண்டநிலை போகிறது

           வேலவனின் கோவில் மணி
                வினையெல்லாம் போக்கிறது
           நால்வேதப் பொருளை எல்லாம்
                  நயமாகத் தருகிறது


           சிவனாரின் கோவில் மணி
                சீர்திருத்த முயல்கிறது
           அவமான செயல் எல்லாம்
                அதுபோக்க முயல்கிறது

            மாதாவின் கோவில மணி
                 மனங்குளிர வைக்கிறது
           ஆதாரம் தான் எனவே
               அதுஒலித்து நிற்கிறது

         விகாரையின் கோவில் மணி
               விண்ணென்று ஒலிக்கிறது
        வீண் வார்த்தை பேசுவதை
               விட்டுவிடு என்கிறது

        கோவில்மணி ஓசை கேட்டால்
            குணமெல்லாம் மாறுமையா
        குவலயத்தில் நாம் வாழ 
             கோவில்மணி உதவும் ஐயா 

       ஆதலினால் கோவில் தன்னை
           அனைவருமே நாடிநிற்போம்
      ஆண்டவனின் அருள்ப் பார்வை
          அனைவருக்கும் கிட்டும் ஐயா !

No comments: