விழுதல் என்பது எழுதலே - பகுதி 43

.
விழுதல் என்பது எழுதலே - பகுதி 43
எழுதுபவர் மதுவதனன் மௌனசாமி – டென்மார்க் 
இவரது அறிமுகம்
அடுத்த பகுதி 44 இல் பார்க்கலாம்.
கதை தொடர்கிறது.
சீலன் டொக்ரரிடம் போயிருந்தான். மொழிபெயர்ப்பாளர் இன்றியே டொக்ரருடன் ஆங்கிலத்தில் கதைத்தான். அவன் படித்த மருத்தவப் படிப்பு அவருடன் கதைப்பற்கு இலகுவான சந்தர்ப்பத்தை வழங்கியது. போனது தலையிடிக்குத்தான் என்றாலும் டொக்ரர் அவனிடம் நிறையக் கதைத்தார். அவனது பழைய வருத்தங்கள்இ குடும்பத்திலே இருக்கும் வருத்தங்கள் மற்றும் அவனது வாழ்க்கை முறை என்று நிறையவே கலந்தாலோசித்தார்.

ஐரோப்பிய வைத்தியர்கள் இலேசில் நாங்கள் எதிர்பார்க்கும் மருந்துகளை தந்துவிடமாட்டார்கள். நிறையக் கதைப்பார்கள். வருத்தம் தானாகவே மாறட்டும் என்ற நிலையைத்தான் கூடுதலாகத் தேர்ந்தெடுப்பார்கள். இவையெல்லாம் நிறையப்பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான் சீலன். மருத்துவப் படிப்பை தொடர்ந்த சீலனுக்கு மருத்துவ ரீதியாக இங்குள்ள வைத்தியர்களின் நடைமுறை சரியானதுதான் என்றும் தெரிந்திருந்தது. ஆனாலும் சிலசந்தர்ப்பங்களில் அம்முறை பிழைத்துப்போயும் இருக்கிறது என்று அறிந்திருக்கின்றான்.

"உந்த டொக்ரர்மார் வருத்தம் வந்து சாகப்போற கட்டத்திலதான் எல்லாத்தையும் கண்டுபிடிப்பாங்கள். உவங்களை நம்பக்கூடாது" என்று சிலர் சொல்லவும் கேட்டிருக்கின்றான்.

அதனால்தான் சீலனும் தனது ஞாபகத்தில் இருந்த தான் சம்மந்தப்பட்ட மருத்துவரீதியான பிரச்சினைகளை வைத்தியரிடம் சொன்னான். தலையிடி திடீரென்று வந்திருக்கிறதுஇ ஏதும் மூளையில் கட்டியாக இருக்குமோ என்றும் கவலைப்பட்டான்.

"இதுவரை காலமும் இப்படியானதொரு தலையிடி வந்ததில்லை என்று சொல்கிறீர்கள். குடும்பத்திலும் யாருக்கும் இல்லை. திடீரென்று வந்திருக்கிறது. நீங்கள் நிறைய யோசிக்கின்றீர்கள் போல இருக்கிறது. உங்கள் நாட்டில நிறையப் பிரச்சினை. அங்கிருந்து வந்த பல பேருக்கு இப்பிடி தலையிடி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்குது. உங்களது முகத்தைப் பார்த்தே என்னால கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கிறது நீங்கள் நிறையப் பிரச்சினைகளை தலையில் வைத்திருக்கிறீர்கள் என்று. இது தலையிடி வகைகளில் முதலாவது வகையான டென்சன்-ரைப் தலையிடியாகத்தான் இருக்கும்போலத் தெரிகிறது."

கொஞ்சம் ஆறுதலாக இருந்தது சீலனுக்கு. தான் இப்போது இருக்கும் நிலைக்கு உலகத்துத் தலையிடிகள் எல்லாம் வந்துதானே போகும் என்று அவனுக்குத் தெரியும். என்றாலும் ப்ரைன்-ரியூமர் வகைத் தலையிடி பற்றி தேவையில்லாமல் யோசித்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தான்.

"ஆனால் டொக்ரர்இ இந்தத் தலையிடி என்னால தாங்கேலாமல் இருக்கு. வந்தால் வேற வேலைகளே செய்யேலாமல் இருக்கு."

வைத்தியர் சிரித்துக்கொண்டே… "உங்களுக்கு முதலில் தலையிடிகள் பெரிதாக வந்ததில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆகவே இது சாதாரண தலையிடி என்றாலும் பெரிதாகத்தான் தெரியும். அத்துடன் தலையிடியென்றால் தாங்கேலாமத்தான் இருக்கும். தலையிடி வெறும் தலையிடியாகவும் இருக்கலாம் அல்லது வேறு வருத்தங்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். நீங்கள் இப்ப இருக்கிம் நிலையில் நிறைய யோசிக்கின்றீர்களா?"

சீலனுக்கு தான்பட்ட வேதனைகளையும்இ இப்போது இருக்கும் சிக்கலான நிலையையும் அவருக்கு சொல்லவேண்டும் போல இருந்தது. ஆனால் அதுவே பிறகு தனது இருப்புக்கு சிக்கலேதையும் கொடுத்துவிடுமோ என்று கொஞ்சம் அடங்கிப்பேசினான்.

"ஓம்இ இப்ப இருக்கிற நிலை ஒன்றும் யோசிக்காதிருப்பதற்கான நிலையல்ல. நிறைப் பிரச்சினைகள் இருக்கின்றன." என்று சாடைமாடையாக பிரச்சினைகளைச் சொன்னான்.

"சரிஇ ஆரம்பத்திலேயே நான் உங்களுக்கு தலையை ஸ்கான் செய்யவேண்டி பிரேரிக்கமாட்டேன். வழமையான சில மருந்துகள் எழுதித்தருகின்றேன். கொஞ்சநாள் போகட்டும் ஸ்கான் எடுப்பது பற்றி யோசிப்போம். குறிப்பாக பிரச்சினைகளை தலையில் போட்டுக் குழப்புவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை மாறாக அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய சக்திகூட எங்களிலிருந்து இல்லாது போய்விடும்" வைத்தியர் குட்டிப் பிரசங்கமொன்றை நடத்தியிருந்தார்.

"நன்றி டொக்ரர்" என்று அவர் எழுதித்தந்ததை வாங்கிக்கொண்டு எழந்தான்.

"முதலில் உங்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை நீங்களே சொல்வது நல்லது என்றுதான் ஆங்கிலத்தில் கதைத்தேன். இனி விரைவில் நீங்கள் டொச் மொழியில கதைப்பதற்குரிய தகைமையைப பெறவேண்டும்" என்று கடைசியாகக் கூறியிருந்தார் வைத்தியர்.

வெளியில் வந்த சீலன் வைத்தியரின் நாட்டுப் பற்றைச் சிலாகித்துக்கொண்டு யோசித்தான்.

"நான் நிறைய யோசிக்கிறன் போலத்தான் கிடக்குது. இவ்வளவு பிரச்சினைகளையும் சந்திச்சாப்பிறகு யோசிக்காம இருக்க நானென்ன ரோபோவா… நிறையப் பிரச்சினைகள் இருந்தாலும் உவள் பத்மகலா அதுக்கெல்லாம் மருந்தாக இருந்தவள். இப்ப அவளே பிரச்சினை ஆகிட்டாள். உவளை யோசிச்சுத்தான் எனக்கு தலையிடியே வந்திருக்குமோ. அவளை யோசிக்கிறதில்லை என்று எங்கோ மூலையில ஒளிச்சுவச்சாலும் அவளைப் பற்றி யோசிக்காமலும் இருக்கிறதில்லை. இவ்வளவு காலம் காத்திருந்தவள் இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்திருக்கலாம். இப்ப நிரந்தர வீசா வேற கிடைச்சிட்டு. உவன் முரளிதான் எதாவது சொல்லிக் குழப்பியிருப்பானோ… என்னை வேறு பானுவோட இணைச்சுக் கதைச்சு.. சிச்சீ..."

வைத்தியர் சீலனை யோசிக்கவேண்டாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் சீலனோ வைத்தியரை சந்தித்து திரும்பும் வழியிலேயே யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
தொடரும் 44

No comments: