ஆலயத்தின் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டவர்
கையுமெய்யுமாக பிடிப்பு
ஜனாதிபதி மஹிந்த நேபாளம் பயணமானார்
யாழில் இராணுவ நடமாட்டம் அதிகரிப்பு
தமிழர்கள் மீது முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல், இருவர் வைத்தியசாலையில்: டெல்வின் பகுதியில் பதற்றம்
மட்டக்களப்பில் வெள்ளம்
வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக 76 குடும்பங்கள் இடம்பெயர்வு
மோடி – மஹிந்த சந்திப்பு : இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை
=======================================================
ஆலயத்தின் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டவர் கையுமெய்யுமாக பிடிப்பு
24/11/2014 மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவரை கையுமெய்யுமாக பொலிஸார் பிடித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோயில் வளாகத்தில் காவல் ரோந்து நடவடிக்கையில் இருந்த போது கோயிலினுள் ஏற்பட்ட சத்தத்தின் காரணமாக கோயிலினுள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அதன்போது நபர் ஒருவர் உண்டியலை உடைத்துகொண்டிருப்பதை அவதானித்த பொலிஸார் அவரை கையுமெய்யுமாக பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் குறித்த நபரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட 23 ஆயிரத்து 642 ரூபா கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . நன்றி வீரகேசரி
ஜனாதிபதி மஹிந்த நேபாளம் பயணமானார்
25/11/2014 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நேபாளம் - காத்மண்டுவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
நேபாளத்தில் இடம்பெறவுள்ள 18 ஆவது சார்க் உச்சிமாநாட்டில் பங்குகேற்பதற்காகவே இவர் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழில் இராணுவ நடமாட்டம் அதிகரிப்பு
26/11/2014 யாழ். மாவட்டத்தில் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டு ஆறாவது ஆண்டாகின்ற போதிலும் கடந்த ஆண்டுகளில் மாவீரர் நாளில் யாழ். பல் கலைக் கழகம் உட்பட பல இடங்களில் தீபம் ஏற்றி மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இம்முறையும் அத்தகைய சம்பவங்கள் நடைபெறாது தடுக்கும் முகமாக யாழ். மாவட்டத்தில் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக யாழ்ப்பாணம் நகரப்பகுதி உட்பட யாழ்.பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் எற்கனவே ரோந்து நடவடிக்கைகள் அதிகாரிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கால் நடையாக இராணுவ வீரர்கள் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது. நன்றி வீரகேசரி
தமிழர்கள் மீது முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல், இருவர் வைத்தியசாலையில்: டெல்வின் பகுதியில் பதற்றம்
இறக்குவானை டெல்வின் டீ பிரிவில் தமிழர்கள் மீது மூன்று முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றறுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 16 வயது தழிழ் சிறுமியை முஸ்லிம் இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தின் பின்னணியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள இறக்குவானை பொலிசார் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இறக்குவானை டெல்வின் டீ பிரிவில்நேற்று இரவு கடைக்கு சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் மீது மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இவரை பாதுகாக்க சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவரும் தமிழ் வர்த்தகர் ஒருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் காவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவத்தால் இறக்குவானை டெல்வின் பிரிவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறக்குவானை டெல்வின் பிரிவில் 16 வயது நிரம்பிய தழிழ் சிறுமியை முஸ்லிம் இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து தப்பிச்சென்ற போது இவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு மேற்படி டெல்வின் பிரிவை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் பின்னர் சம்பந்தபட்டவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரனை நடத்தி நீதி மன்றத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் இளைஞனுக்கு எதிராக செயற்பட்ட தமிழர்கள் மீதே சம்பந்தப்பட்ட இளைஞனும் அவரது சகோதரர்களும் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவம் குறித்து இறக்குவானை பொலிசார் இருவரை கைதுசெய்துள்ளனர். இதில் ஒருவர் இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை தேடி பொலிசார் வலைவிரித்துள்ளனர். நன்றி வீரகேசரி
மட்டக்களப்பில் வெள்ளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இப் பகுதியில் கடும் மழையுடன் கடல் கொந்தளிப்பும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடச்சியாக பெய்துவரும் அடை மழையால் நீர் நிலைகள் அனைத்தின் நீர் மட்டங்களும் அதிகரித்து காணப்படுகின்றது.
வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக 76 குடும்பங்கள் இடம்பெயர்வு

அடை மழை காரணமாக பாதிக்கப்பட்ட 262 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
மோடி – மஹிந்த சந்திப்பு : இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை
27/11/2014 இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை விடுவித்தமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
நேபாளம்இ காத்மண்டு நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும்இ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் நேற்று இடம்பெற்ற விசேட இருதரப்பு சந்திப்பின் போதே இந்தியப் பிரதமர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.
நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்று வரும் சார்க் அமைப்பின் 18 ஆவது உச்சிமாநாட்டின் உப நிகழ்வாகவே இந்த இரண்டு தலைவர்களினதும் சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்குமிடையிலானசந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுவாக்குவது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கிடையிலான பொருளாதார வர்த்தக உறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இரணடு தலைவர்களும் ஆழமாக ஆராய்ந்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை விடுவித்தமை தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடி தனது நன்றியை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் தேசியப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அடைவது குறித்து அணுகுமுறை தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது இரண்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். நேற்றைய தினம் இரண்டு நாடுகளின் தலைவர்களும் 18 ஆவது சார்க் உச்சிமாநாட்டில் தமது நாடுகளின் சார்பாக உரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment