சங்க இலக்கியக் காட்சிகள் 32- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

இயற்கையை இரசித்தனர், இன்பத்தில் திளைத்தனர்.


நாடாளும் மன்னனின் படைத்தலைவன் அவன். மாற்றாருடன் நடைபெற்ற போரிலே படைகளை வழிநடத்திச் சென்று வேற்று நாட்டிலேää பாசறையிலே இவ்வளவு காலமும் தங்கியிருந்தான். மழைக்காலத்தில் போர் நடப்பதில்லை. ஆதனால் மழைக்காலத்தில் தன் ஊருக்குச் சென்று தன் காதலியுடன் இன்பமாயிருப்பதை எண்ணியெண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தான். ஆனால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே எதிர்பாராதவிதமாகப் போர் முடிவுக்கு வந்தவிட்டது. அவனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. போரை முடிவுக்குக் கொண்டுவந்த கையோடு தன் ஊருக்கு ஓடோடிச்சென்று தன் காதலியைக் காண்கிறான்.  வருவதாகச் சொல்லிச் சென்ற காலத்திற்கு முன்னதாகவே அவன் வந்துவிட்டதால் அவனது காதலி இன்ப மகிழ்வில் துள்ளிக் குதிக்கிறாள். அவனருகே சென்று நாணத்தில் மிதக்கிறாள். இல்லத்திலே இருவரும் கூடிக்குலவி இன்ப வெள்ளத்திலே நீந்துகிறார்கள். பின்னர் காட்டுக்குச் சென்று பொழிலாட்டயரவும்ää புனலாடி மகிழவும் அவன் அவளை அழைக்கிறான். இருவரும் காட்டுவழி சென்று அழகிய இயற்கை வனப்புக்களைக் கண்டு களித்து மகிழ்கின்றனர்.காட்டிலே கடுமழை பெய்ததால் அருவிகள் பாய்ந்து ஓடுகின்றன. அந்தப் புதுப்புனலில் நீராட அவளை அவன் அழைக்கிறான். இருவரும் அருவி நீரிலே அமிழ்ந்து நீரடித்து நீராடி இன்ப உறவாடி மகிழ்கின்றனர். இதனைச் சொல்லும் பாடல் இதோ.


ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்
கார்தொடங் கின்றாற் காமர் புறவே
வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்
தாழிருங் கூந்தல்! வம்மதி விரைந்தே.

(ஐங்குறுநூறு. முல்லைத்திணை. பாடல் இலக்கம்: 411 பாடியவர்: பேயனார்)


இதன் நேரடிக்கருத்து:

அடர்த்தியான நீண்ட கரிய கூந்தலையுடையவளே! அழகான காடுகளைக்கொண்ட முல்லை நிலத்திலே இடிமுழக்கத்தோடு மேகங்கள் மழையைப் பெய்ததால் கார்காலம் தொடங்கிவிட்டது. வேகமாக ஓடிவரும் அருவியின் புத்தம்புதுப் புனலிலே நாம் சென்று நீராடி மகிழ்வோம். விரைந்து வா! (என்று காதலன் தன் காதலியை அழைப்பதாக அமைந்த பாடல் இது)

அந்தக்காடடிலே யானையொன்று தன் சோடியைத் தழுவியபடியே அசைந்து அசைந்து நடந்து வருகின்றது. கூடலுக்குப் பின்னரான குளிர்ந்த மகிழ்வோடு அவை ஒன்றையொன்று தடவிக்கொடுத்தபடி வருகின்றன. அதனைக் கண்ட அவன் அந்த யானையிடம் பேசுவதைப் போலத் தன்காதலிக்குக் கேட்குமாறு சொல்கிறான். “நீ மட்டுந்தான் உன் காதலியோடு கூடிக்களித்து இன்புற்றாயா? நானுந்தான் எனது அழகிய இளம் காதலியோடு கலந்து இன்பம் நுகர்ந்தேன். அது தெரியுமா உனக்கு?” என்று சொல்லித் தனக்குள் மகிழ்ந்து தன் காதலியையும் நாணம் கலந்த உவகையிலே நீந்த வைக்கின்றான். இதனைக் காட்டும் பாடல் வருமாறு:

போதார் நறுந்துகள் கவினிப் புறவில்
தாதார்ந்து
களிச்சுரும் பரற்றும் காமர் புதலின்
மடப்பிடி தழீஇய, மாவே
சுடர்த்தொடி மடவரற் புணர்ந்தனம், யாமே!


ஐங்குறுநூறு. முல்லைத்திணை. பாடல் இலக்கம்: 416 பாடியவர்: பேயனார்.
இதன் நேரடிக்கருத்து:

புதிதாகப் பூத்திருக்கும் மலர்களிலே உள்ள நறுமணம்கொண்ட மகரந்தத் துகழ்கள் உடலிவே படிந்து புதிய அழகைப் பெற்ற வண்டுகள் தேனை உண்டு களித்து ஆரவார ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும் காட்டிலே, அழகான புதரிலே இளமைபொருந்திய பிடியினை (பெண்யானையை) தழுவிய மகிழ்ச்சியோடு எதிரே வந்துகொண்டிருக்கும் களிறே!(ஆண்யானையே) நானும் உன்னைப் போன்றே ஒளிவீசும் வளையல்களை அணிந்துள்ள எனது அழகிய இளம் காதலியோடு கூடி மகிழ்ந்து இன்புற்றேன் அறிவாயாக. (என்று பிடியோடு கலந்து இன்புற்றபின்னர் தூரத்திலே வந்து கொண்டிருக்கம் களிறினைப் பார்த்துக் கூறுவதுபோல அமைந்த பாடல் இது)
அருவிகளும், அடர்ந்த புதர்களும், பசிய சோலைகளும் நிறைந்த அந்தக் காட்டிலே இருவரும் மகிழ்வோடு நடந்து பொழுதைப் போக்குகின்றார்கள். அங்கேää விலங்குகளும் பறவைகளும் சோடிசோடியாகத் திரிவதையும்ää கூடி மகிழ்வதையும் அவன் அவளுக்குக் காட்டி மகிழ்கிறான். “அன்பே! இந்தக் காட்டிலே வாழ்கின்ற விலங்குகளைப் பார்த்தாயா? இன்பத்தை அனுபவிப்பதற்கு எற்றது மழைக்காலம் அல்லவா? இந்த மழைக்காலம் விலங்குகளுக்கும் இன்ப உணரவைத் தூண்டி விடுகிறது. அவை ஆணும் பெண்ணுமாக ஒன்றோடொன்று கலந்து ஓருயிர் போல உறவாடுகின்றன. ஒன்றெயொன்று பிரியாமல் எப்போதுமே தழுவியபடியே இருக்கின்றன. நம்மைப்போலவே காதலால் இணைந்து. இன்பத்திலே மூழ்கியிருக்கின்றன. அவற்றைப் பார்” என்று அவளிடம் சொல்லி இன்புறுகின்றான். இந்தக் காட்சியை உணர்த்தும் பாடல் வருமாறு:

உயிர்கலந் தொன்றிய செயிர்தீர் கேண்மைப்
பிரிந்துறல் அறியா விருந்த கவவி
நம்போல் நயவரப் புணர்ந்தன
கண்டிகும் மடவரல்! புறவின் மாவே.

ஐங்குறுநூறு. முல்லைத்திணை. பாடல் இலக்கம்: 419 பாடியவர்: பேயனார்.
இதன் நேரடிக்கருத்து:

இளம் பெண்ணே! இந்தக் காட்டிலேயுள்ள விலங்குகளைப் பார்! இந்தக் கார்காலத்தின் இன்பத்தூண்டுதலால் ஆணும் பெண்ணும் உயிரோடு உயிர் கலந்து ஒன்றுபட்டுக் குற்றமில்லாத அன்புகொண்ட தன்மையோடு இருக்கின்றன. அவை ஒன்றைவிட்டு மற்றொன்று பிரிந்திருப்பதையே அறியாதனவாய், இன்பத்திலே இணைந்து. நம்மைப் போன்றே காதலுடன் கூடியிருப்பதைப் பார்! (என்று காதலன் காதலியிடம் கூறுவதாக அமைந்த பாடல் இது)

No comments: