அற்பாயுளில் மறைந்த அற்புதக்கலைஞன் மண்டலின் ஸ்ரீநிவாஸ் -முருகபூபதி

.
    
                                 
பிறநாட்டு    நல்லறிஞர்    சாத்திரங்கள்   தமிழ்  மொழியில்  பெயர்த்தல்  வேண்டும்
இறவாத   புகழுடைய  புதுநூல்கள்   தமிழ்மொழியில்  இயற்றல் வேண்டும்
மறைவாக  நமக்குள்ளே   பழங்கதைகள்   சொல்வதிலோர்   மகிமை இல்லை
திறமான   புலமையெனில்   வெளிநாட்டோர்   அதை வணக்கஞ்செய்தல்  வேண்டும்
என்று   மகாகவி  பாரதி    பல்லாண்டுகளுக்கு   முன்னர்   சொன்னார்.
அவரது   வாக்கிற்கு   சிறந்த   இலக்கணமாக  வாழ்ந்த   மெண்டலின் இசைமேதை   ஸ்ரீநிவாஸ்  தனது   45   வயதில்  ஆயுளை முடித்துக்கொண்டார்.
ஸ்ரீநிவாஸ்  என்றால்   எந்த   ஸ்ரீநிவாஸ்..?     என்றுதான்    கேட்பார்கள். மெண்டலின்    என்ற   மேலைத்தேய    இசைக்கருவியுடனேயே   தனது    வாழ்நாளை    செலவிட்ட    இந்தக்கலைஞருடன்   அந்த இசைக்கருவியின்    பெயரும்    இணைந்தமையால்  இன்று  அவரது மறைவு    என்றைக்குமே    அஸ்தமிக்காத   அந்த    இசையுடன் பேசப்படுகிறது.
மேதாவிலாசம்  மிக்க    பலருக்கு   அற்பாயுள்தானா? எனக்கேட்கச்செய்கிறது    அவரது    மறைவுச்செய்தியும். விவேகானந்தர்,   பாரதி,   ஐன்ஸ்றின்,   போன்று   உலகளவில் பேசப்பட்டவர்களும்    அற்பாயுளில்   மறைந்தார்கள்.   அந்த வரிசையில்  இன்று    மெண்டலின்   ஸ்ரீநிவாசன்.
கர்னாடக    இசையாகட்டும்   மேலைத்தேய    இசையாகட்டும் திரையிசையாகட்டும்    அவற்றிலெல்லாம்    சங்கமித்த    மெண்டலின் வாத்தியம்    உள்ளத்தை   கொள்ளைகொண்டு  போகும்   வல்லமை மிக்கது.
தனது    இளம்பராயத்திலிருந்தே    தனது    தந்தையிடமிருந்து   இந்த வாத்திய    இசையை    கற்று  வந்து   சாதனைகள்  படைத்த ஸ்ரீநிவாஸ்    பத்மஸ்ரீ  -    சங்கீத   ரத்னா   விருதுகளையும்   பெற்றவர்.


கீழைத்தேய    வாத்தியக்கருவிகளான   தம்புரா  -  வீணை  -  கோட்டுவாத்தியம்  -   புல்லாங்குழல்  -  நாதஸ்வரம்  -   மிருதங்கம் - தவில்   -  கடம்  -   கஞ்சிரா   -   சதங்கை    முதலானவற்றிலிருந்து வேறுபட்டவை   வயலின்  -   கிட்டார்  -      ட்ரம்ஸ்  -   மெண்டலின்.
இந்திய    இசைமரபில்   ஒரு கால கட்டத்தில்  அதிகம்   பேசப்படாத மெண்டலின்    வாத்தியக்கருவியில்   தனது   இசையாற்றலை வளர்த்துக்கொண்ட    சாதனையாளராகவே   வாழ்ந்திருப்பவர் மெண்டலின்   ஸ்ரீநிவாஸ்.
பொதுவாக  எம்மவர்கள்  வயலின்  -   வீணை  - மிருதங்கம்  முதலான வாத்திய   இசைகளை    பயிலுவதற்காகவே    தமது    பிள்ளைகளை அனுப்புவார்கள்.    அரங்கேற்றமும்   காண்பார்கள்.
ஆனால்   -  தவில்  -   நாதஸ்வரம்     முதலான   இசைக்கருவிகளை பயில்வதற்கு  அவர்களுக்கே   உரித்தான    சாதி   அகம்பாவம் தடுத்துவிடும்.    அவர்களை    நட்டுவர்கள்   என்று சித்திரித்துக்கொள்வார்கள்.    தமிழ்நாட்டில்   இசைவேளாளர்   என்ற சொற்பதம்   அவர்களைக்குறித்து  பேசப்படும்.
அதனால்   குறிப்பிட்ட    இந்த    இரண்டு    வாத்தியக்கருவிகளையும் பயில்பவர்களுக்கு    அந்த   இசைத்துறையில்    பரம்பரைப்பின்னணி தேவைப்பட்டிருப்பது     எழுதாத    விதியாகியாகிவிட்டது.
ஆனால்   -  மேலைத்தேய   வாத்தியங்களுக்கு    சாதி    அடிப்படையிலான   பின்னணிகள்   இல்லாதமையினால்   எம்மவர்கள்    அவற்றை    ஆர்வமுடன்    கற்பிக்கத்தூண்டபட்டார்கள்.
இந்தியாவில்    அனைத்து   மாநிலங்களின்     கிராமங்களிலுமிருந்து பிறந்த     இசைக்கோலங்களுக்கு    உயிரூட்டிய    கலைஞர்களில் விரல்விட்டு     எண்ணத்தக்க    பலர்    திரையுலகில்   பிரவேசித்து கொடிகட்டிப்பறந்தனர்.
இசைஞானி    இளையராஜா  -   சங்கர் - ஜெய்கிஷான்   முதலானவர்கள் அதற்குச்சிறந்த   முன்னுதாரணம்.
மெண்டலின்    ஸ்ரீநிவாஸ்    திரையுலகினால்    புகழடைந்தவர்    இல்லை.    மேடைக்கச்சேரிகளில்     பக்கவாத்தியக்கலைஞராகவே  சிறுவயது    முதல்    அறிமுகமாகி     படிப்படியாக   அந்த இசைக்கருவிக்கு    இந்தியாவிலும்   இலங்கை    உட்பட உலகநாடுகளிலும்   பெரும்   புகழை   ஈட்டித்தந்திருப்பவர்.
மேலைநாடுகளில்   மெண்டலின்   இசைக்காகவே    பிரத்தியேகமான இதழ்கள்     வெளியாகின்றன.     பயிற்சிப்பட்டறைகள்    தொடருகின்றன. மேல்    நாடுகளில்    இந்த    இசைத்துறையில்    பெரும் புகழடைந்தவர்கள்    இணயத்தளங்களில்    பேசப்படுகிறார்கள்.
மென்மையான   மெண்டலின்    இசைவடிவத்தை    ஒலிம்பிக் கலைஞர்களின்  விழா    உட்பட   பல   சர்வதேச இசைவிழாக்களிலெல்லாம்  பரவச்செய்தவர்.
இந்திய   இசைமரபு    என்பது   மாநிலங்களுக்கு  மாநிலம் வேறுபட்டிருக்கும்.    குறிப்பாக    பஞ்சாபிய    இசை - மராத்திய இசை - ஹிந்துஸ்தானி    இசை -   கேரள   இசை -   கர்நாடக  இசை   என்பவற்றை குறிப்பிடலாம்.    இந்த    இசைக்கோலங்களுக்கெல்லாம்   அவரது மெண்டலின்    இசை   ஈடுகொடுத்தது.


சிறுவயதிலிருந்து    மெண்டலின்    இசையில்    தேர்ச்சிபெற்று இசைச்சுடராகவே   ஒளிர்ந்தார்.
வெளிநாடுகளில்   வெளிநாட்டவர்களினால்   வணக்கம்   செய்யப்பட்ட மெண்டலின்    வாத்தியக்கருவியில்    அனைத்து    ஸ்வரங்களிலும் ராகங்களையும்    பிரசவித்து    உள்நாட்டாரும்    வணக்கம் செய்யவைத்தவர்    மெண்டலின்    ஸ்ரீநிவாஸ்.
அவரது   மறைவு     ஈடுசெய்யப்படவேண்டியதாகவே   உலகின் பலபாகங்களிலுமிருந்து    வரும்   அஞ்சலிக்குறிப்புகள் பதிவுசெய்கின்றன.
அவரது    வெற்றிடத்தை   அவரின்   மெண்டலின்    இசை நிரப்பிக்கொண்டே   இருக்கும்.
தொண் ணூற்றி    மூன்று   ஆண்டுகளுக்கு     முன்னர்    மறைந்த   மகாகவி   பாரதியின்    கவிதைகளை   இன்றும்    பலரது    குரலில் - பலரது     இசையில்    நாம்    கேட்டுக்கொண்டிருப்பது போன்று மெண்டலின்   ஸ்ரீநிவாஸின்  அந்த   மந்திர   இசையை இன்றிருப்பவர்களும்    இனிவரும்   தலைமுறையினரும் கேட்டுக்கொண்டே   இருப்பார்கள்.
இறவாத  புகழுடைய     இந்த   இசைமேதைக்கு   அஞ்சலி  செலுத்துவோம்.
----0---No comments: