.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
ராஜினி ராஜசிங்கம் திரணகம: ஸ்ரீலங்கா தமிழர்களின் துயரத்தில் மறக்கமுடியாத அடையாளம் (2)
- டி.பி.எஸ்.ஜெயராஜ்
முறிந்த பனைமரம்
தனது பங்குக்கு அவர் ஒரு கையெழுத்துப் பிரதியையும் வைத்திருந்தார், இறுதிய
ில் அதை ஒரு புத்தகமாக முறிந்த பனைமரம் என்கிற தலைப்பில் அதை பிரசுரித்தும் இருந்தார். எனக்கு சுவராஸ்யமாக தோன்றிய சில பகுதிகளை போட்டோ பிரதி செய்வதற்கும் அவர் என்னை அனுமதித்தார். அவைகள் இந்திய இராணுவத்துடனான போராட்டத்தின்போது பெண்களின் நிலையை பற்றியதாக இருந்தன. பின்னர் அந்த பகுதிகளை நான் ரொன்ரோவில் சுருக்கமாக தொகுத்த ஒரு இதழில் பிரசுரிக்கவும் செய்திருந்தேன்.

எங்களது கடைசிச் சந்திப்பின்போது, அந்த நேரத்தில் புது தில்லிக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் நான் மேற்கொண்ட சிறிய பாத்திரத்தை பற்றிய அவரது மறுப்பை பற்றிய மற்றொரு விடயத்தை பற்றியும் அதில் நாங்கள் விவாதித்ததாக எனக்கு நினைவிருக்கிறது. அதில் நான் தலையிட்டது ஏனெனறால் அந்த நகர்வு தமிழ் மக்களின் சிறந்த நலன்களுக்கு உதவியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அது ஒரு அமைதியான முயற்சியாகும் ஆனால் இந்திய செய்தி இதழான “இந்தியா ருடே” சில விவரங்களை வெளிப்படுத்தியதுடன் எனது பெயரையும் குறிப்பிட்டு விட்டது. எல்.ரீ.ரீ.ஈ நேரத்துக்கு ஏற்றபடி விளையாடுவதாகவும் மற்றும் நான் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருப்பதாகவும் இருந்தது ராஜினியின் கருத்து.
ராஜினி கொல்லப்பட்டபோது நான் ஸ்ரீலங்காவில் இருக்கவில்லை. 1988 செப்டம்பரிலேயே ஸ்ரீலங்காவை விட்டுப் போய்விட்டேன். அவர் இறந்தது செப்டம்பா 1989ல். கால் நூற்றாண்டுகள் ஓடிவிட்டன இப்போதுகாலம் மாறிவிட்டது, அப்போது முதல் இப்போதைய நந்திக் கடலேரி வரை பல சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. இராணுவ ரீதியாக எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப்பட்டு விட்டது, அனால் அதன் விளைவு தமிழ் மக்களின் நம்பிக்கைகளுக்கு பிரகாசமான ஒரு விடியல் இன்னமும் வரவேண்டியுள்ளது. ராஜினியின் கணவர் தயாபால திரணகமவை பற்றி விசேடமாக குறிப்பிடாதவரை ராஜினியை பற்றிய எந்தக் குறிப்பும் பூரணமற்றதாகவே இருக்கும். அவர்களது ஐக்கியம், சாதி, மதம், இனம் மற்றும் வர்க்கம் ஆகிய சகலதையும் மீறிய ஒன்று. தயாபாலகூட அடக்குமுறைக்கு எதிரான அரசியல் எதிர்ப்புடன் தொடர்பு பட்டிருந்தார். அவர் பின்தங்கிய நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒருவராக இருந்தபடியால் அரசாங்கத்தின் கரங்களில் அகப்பட்டு பலகாலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
தயாபால
ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ராஜினியின் நினைவு நிகழ்வுகளில் அவரது கணவன் தாங்கள் எப்படி சந்தித்து,திருமணம் செய்து ஒரு குடும்பத்தை உருவாக்கினார்கள் என்பதையும் இறுதியில் அவர்களது திட்டங்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிய கதையை மேலோட்டமாக விளக்கியிருந்தார். அது மனதை தொடும் ஒரு கதையாக இருந்ததுடன் அது வெளிப்படுத்தும் தனித்துவமான உள்ளுணர்வு ஒரு உலகளாவிய விண்ணப்பமாக திகழ்கிறது. தயாபால சொன்னதை அவருடைய வார்த்தைகளினால்தான் விளக்கமுடியும். அது தொடர்பான எடுத்தாள்கை கீழே தரப்பட்டுள்ளது:-
“நான் ராஜினியை சந்தித்தது செப்ரம்பர் 1976ல்,அப்போது மாணவர்களின் அமைதியின்மை ஸ்ரீலங்காவின் பல்கலைக்கழகங்களில் வேகமாக பரவிக்கொண்டிருந்தது மற்றும் ஒரு புதுப்பிக்கப்பட்ட போர்க்குண செயற்பாடு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இருந்தது. பேராதனையில் ஒரு அப்பாவி மாணவன் வீரசூரிய காவல்துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து மாணவர்களின் போர்க்குண இயல்பு, மாணவர் இயக்கத்திற்கு எதிரான இத்தகைய அட்டூழியங்களுக்கு முகங்கொடுக்கும் வண்ணம் வலுவாக வளர்ந்தது. இவை அசாதாரணமான காலங்கள். நாட்டில் அரசியல் அமைதியின்மை ஏற்கனவே எங்கள் வாழ்க்கையை மாற்றும் வண்ணம் ஆரம்பமாகியிருந்தது மற்றும் அதற்கு மாறாக எங்கள் வாழ்க்கை, நாட்டின் அரசியல் விடயத்தை மாற்றும் வண்ணம் மாறியிருந்தது, ஒரு சிறிய வழியில் என்றாலும் திரும்பவும் அதே இடத்துக்கு திரும்பாதபடி அந்த மாற்றம் எற்பட்டிருந்தது”
“நான் சில நீண்ட வருடங்களை சிறையில் கழித்தபின் அப்போதுதான் 1976ல் இரண்டாவது முறையாக சிறையை விட்டு வெளியில் வந்திருந்தேன். கிறீஸ்தவ மத பின்னணியை சேர்ந்தவரும் மற்றும் தீவிர அரசியல் சிந்தனையை கொண்டவருமான ராஜினி என்கிற ஒரு இளம் தமிழ் பெண், கொழும்பு மருத்துவபீடத்தில் உள்ள மருத்துவ மாணவர்களிடையே அப்போது செல்வாக்கை செலுத்தத் தொடங்கியிருந்தார். நீதிக்கும் மற்றும் ஜனநாயகத்துக்குமான அவரது தாகம், தமிழர்களுக்கு எதிரான வரலாற்று ரீதியான பாகுபாடு மற்றும் வன்முறைகள் காரணமான அரச அடக்குமுறைக்கு எதிரான அடையாளமாக இருந்தது, இந்த நேரத்தில் நான் ஒரு பல்கலைக்கழக கல்வியாளனாக மாறியிருந்தேன். நாங்கள் சந்தித்து எங்கள் உறவைப் பற்றி போலியாக கற்பனை செய்த போதெல்லாம், எங்கள் வாழ்க்கை ஒருபோதும் எங்களுக்கும் இனிமேல் பிறக்கப்போகிற எங்கள் குழந்தைகளுக்கும் திரும்பவும் அதேபோல இருக்காது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது”.
“1977 ஆகஸ்ட் 28ல் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் நடப்பதற்கு மத்தியில் கொழும்பில் வைத்து எந்த வித விழாவும் இன்றி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் திருமணம் செய்த அன்றைய தினம் இரத்மலானயில் உள்ள எனது சிங்கள நண்பி ஒருவரின் வீட்டில்தான் தங்கியிருந்தோம், அந்த அயலில் இருந்த தமிழ் குடும்பங்கள் சில முந்தைய தினம் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததால், எங்களைப் பாதுகாப்பதற்காக அந்த சிநேகிதியின் தந்தை தனது துப்பாக்கியை தயாராக வைத்துக் கொண்டு இரவு முழுவதும் தூங்காது கண்விழித்துக் காவலிருந்தார்”.
திருமணம்
“எங்கள் திருமணம், இரண்டு இனங்களைச் சேர்ந்த, சமுதாய ரீதியாக, அரசியல் ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட இரண்டு நபர்களை, மானிட புரிந்துணர்வு மற்றும் காலத்தால் அசைக்க முடியாத ஆழமான காதல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட உறவுமுறையால் ஒன்று சோத்தது. என்மீது தான் கொண்ட காதல் சமுத்திரம்போல வெகு ஆழமானது என்று ஒருமுறை ராஜினி எனக்கு எழுதியிருந்தாள். இவ்வாறான அத்தகைய வேறுபாடுகளுக்கு மத்தியிலும்; அத்தனை சிக்கல் நிறைந்த எங்கள் அன்பான உறவு அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ள ஒரு காலகட்டத்தில் இரண்டு சமூகங்கள் போர் தொடுத்து நிற்கையில், மற்றும் அதிலும் தமிழ் சிறுபான்மையினர் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய இறுதி முனையில் உள்ளபோது, எவ்வளவு தூரத்துக்கு எங்கள் திருமண பந்தம் பாதுகாக்கப் படப்போகிறது என்பது ஒரு சுவராஸ்யமான விடயமாகவே தோன்றியது. சிங்கள் மற்றும் தமிழ் மக்கள் ஆகிய இருபகுதியினரது கலாச்சாரமும் ஒருவருக்கொருவர் போராடும் நிலையில் உள்ளது, அதிலும் சிங்களவர்கள் தங்கள் கலாச்சாரம்தான் உயர்ந்;தது என்று கருதுகிறார்கள்.”
“சமூக ரீதியாக நாங்கள் இரண்டு சமூக வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ராஜினி யாழ்ப்பாண
நடுத்தர வர்க்க வளர்ப்பில் இருந்து வந்தவர். நான் தென்பகுதி வறிய விவசாய குடும்பத்தால் வளர்க்கப்பட்டவன் மற்றும் எனது வாழ்க்கைக்காக எனக்குத் திறந்துள்ள ஒரே வாய்ப்பு கல்வி மட்டும்தான். நான் சிறுவனாக இருந்தபோது எனது பாடசாலைக்கு வெறும் காலுடன் மைல் கணக்கில் நடந்து சென்றுள்ளேன். எனது பால்யம் ஏழ்மை மற்றும் இடர்பாடு நிறைந்தது எப்படி நான் இவைகளைக் கடந்து ஒரு இளம் பையனாக வளர்ந்தேன் என்பது ராஜினிக்கு மிகவும் கவலையளிப்பதாக இருந்தது, எனது கடந்த காலத்தைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அப்பால் ராஜினிக்கு விரிவாக விளக்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை. நான் ஒருவாறு சமாளித்து எனது கல்வியில் வெற்றி பெற்றது ஒரு அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் வெற்றி கிட்டியதைப் போன்றது”

எப்படியிருந்தாலும் ராஜினிக்கு தனது நடுத்தர வர்க்கத் தரப் பின்னணிக்கும் மற்றும் எனது சமூகத் தரத்துக்கும் எதிர் எதிரான வேறுபாடுகள் பற்றிய எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. தனது சொந்த நடுத்தர வர்க்க குடும்ப அங்கத்தினர்களிடையேயும் மற்றும் வெளியாட்கள் இடையிலும் நான் நடுத்தர வர்க்க தரங்களை அனுசரித்து நடப்பதில்லை என்று அவர்களின் கவனத்துக்கு தென்பட்டபோது என்னைப் பாதுகாக்க ராஜினி வாதாடுவாள்.
வேற்றுமைகள்
“அரசியல் ரீதியாகவும் நாங்கள் வேறுபட்டிருந்தோம் மற்றும் உண்மையில் இந்த அரசியல் வேறுபாடுகள்தான் எங்கள் திருமணத்தில் ஒரு பிரிவினைப் பங்கை வகித்தது. மார்க்கசிய – லெனிசிய மற்றும் மாவோயிச அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களில் கிட்டத்தட்ட ஒரு மதத்தின் மீதுள்ள நம்பிக்கையே எனக்கு இருந்தது, மற்றும் ஏனைய நாடுகளில் இடம்பெற்ற வெற்றிகரமான புரட்சிக் கதைகளை சமூகநீதியின் ஒரு நடைமுறை உதாரணமாக ஸ்ரீலங்காவில் பிரயோகிக்க ராஜினி விரும்பினாள். இந்த நடைமுறை காரணமாகக்கூட தனது சொந்த அரசியற் பயணத்தில் ராஜினி தமிழ் புலிகளுக்கு நெருக்கமானவளாக மாறினாள். பின்னர் அவள் தமிழ் புலிகளை விட்டு விலகியபோது, அவளது அரசியல் வாழ்க்கையில் அவளது சக்தி மற்றும் உணர்வுகளை மனித உரிமைகள் பக்கம் திருப்புவதற்கு இதே வழியில் இந்த நடைமுறையின் அடிப்படைக் கருத்தியல் நம்பிக்கை அவளுக்கு பயனுள்ளதாக அமைந்தது”.
“;ராஜினியை சந்தித்தபோது, நான் அப்போதுதான் சிறையிலிருந்து வெளியே வந்திருந்தேன், என்னில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையின் தழும்புகள் என் உடல் முழுவதும் சிதறிக் கிடந்தன, மற்றும் நான் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள மட்டுமல்லாது, மீண்டும் ஒரு வாழ்க்கையை வாழுவோம் என்றுகூட எதிர்பார்த்தது கிடையாது. எங்களுக்கு இடையில் இருந்த வித்தியாசங்கள் பலதையும் நான் கொண்டிருந்தது மட்டுமல்லாது எனது சொந்த சமூக அரசியல் கடந்தகாலம் அவளது சொந்த மத்தியதர வாழ்க்கை மற்றும் இலட்சியங்களுக்கு மிகப் பெரிய முரண்பாடாக இருந்ததால் என்னை ஏற்றுக் கொள்வதற்காக ராஜினி அசாதரணமான துணிவை வெளிப்படுத்தினாள். அதற்காக அவளது குடும்பத்தினருடன் அவள் யுத்தம் நடத்த வேண்டியிருந்தது. எனது அரசியல் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக நான் ஒரு நாள் அவளை விட்டுப் போய்விடுவேன் என்பதை ராஜினி ஏற்றுக் கொண்டிருந்தாள். ஒருக்கால் நான் குடும்பத்தை விட்டுப் போய்விட்டால் நாங்கள் மீண்டும் சந்திப்பதில்லை என்பதும் கூட ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது”.
“எனது தலைமுறை அவர்களது உளப்பாங்கில் மிகப் பெரிய மாற்றத்துக்கு உள்ளாகியிருந்தது, மற்றும் எங்களது தனிப்பட்ட தேவைகள் மற்றும் இலட்சியங்கள் யாவற்றையும் அரசியல் நீதி மற்றும் ஏழை மக்களின் விடுதலை என்பனவற்றுக்காக ஒடுக்கிக் கொள்ள வேண்டும் என்றும் முடிவாகியிருந்தது. மேலும் நாங்கள் குடும்ப பிணைப்புகளின் ஆழமான உணர்வுகள் மற்றும் நன்றிக்கடன்கள் ஆகியவற்றை கொண்டுள்ளதுடன், எங்களை வளர்த்து ஆளாக்க வேண்டி சொல்லொணா துன்பங்களை அனுபவித்த எங்கள் பெற்றோரின் தேவைகளையும் வழங்கவேண்டியவர்களாக இருந்தோம். இந்த உணர்வுகளையும் கடமைகளையும், சமூக நீதி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆயுதப் புரட்சி என்பன நிரந்தரமாக தீர்த்து வைக்கும் என்கிற நம்பிக்கையில் நாங்கள் அடக்கிக் கொண்டோம்”.
குழந்தைகள்
என்னுடைய பிரசன்னம் இல்லாமலே ராஜினி தனது குழந்தைகளுடன் வாழ்க்கையை
ஒரு நிலைக்கு கொண்டு வருவதுடன் தானே சொந்தமாக அவர்களை வளர்ப்பது என்கிற தீhமானத்திலும் உறுதியாக இருந்தாள். எங்களுக்கு ஏற்படும் தேவைகள் எங்கள் எதிர்பார்ப்புகளைத் தியாகம் செய்ய வைத்து எங்களது பாரம்பரிய பாத்திரங்களை தூக்கி எறியச் சொல்லும்போது நமது இலட்சியங்கள் எதுவும் நிலை நிற்பதில்லை. சரியாக இதைத்தான் ராஜினியும் செய்தாள். அந்த நேரத்தில் நாங்கள் நினைத்தோம் ஒருவேளை நாங்கள் இல்லாவிட்டாலும்கூட எங்கள் குழந்தைகள் மற்றவர்களால் பாதுகாக்கப்படுவார்கள், குறிப்பாக எங்கள் தோழர்களால் என்று”.

“1989 செப்ரம்பர் 22ல் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்துள்ள ஒரு அவசரமான செய்தியை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பில் உள்ள ஒரு மறைவிடத்துக்கு வரும்படி எனக்கு கூறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த ஒரு தூதுவருடன் எனது நண்பர்கள் எனக்காகக் காத்திருந்தார்கள், இந்த தூதர் முதல் நாள் ராஜினியுடன் சேர்ந்து மதிய உணவை உண்டவர். அந்தப் பெண் தனது செய்தியை சொல்வதற்கு நேரத்தையோ அல்லது சொற்களையோ வீணாக்கவில்லை. “உங்கள் மனைவி ராஜினி, நேற்று மாலை பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு துப்பாக்கிதாரியால் சுடப்பட்டார். அந்த தாக்குதலில் அவர் மரணம் ஏற்படும் அளவிற்கு காயம்பட்டுள்ளார். உங்கள் குழந்தைகள் அவர்களது தாத்தா பாட்டியுடன் உள்ளனர்”
“அந்தப் பெண், தானே ஆழமான அதிர்ச்சிக்கும் ஒரு துன்பமான நிலைக்கும் உட்பட்டிருந்தாள். முன்பின் தெரியாத ஒரு நபருக்கு ஒருபோதும் வழங்கமுடியாத மிகவும் கடினமான செய்தியாக அத்தகைய குறுகிய காலத்தில் அத்தகைய குறுகிய வார்த்தைகளுடன் அவள் வழங்கிய செய்தி இருந்தது. ஒரு நம்பமுடியாத அசாதாரண வேகத்தில் எனது தலை சுற்றியதையும் நான் பேச்சற்று வாயடைத்து நின்றதையும் இப்போதும் என்னால் உணர முடிகிறது”.
“ராஜினியின் மரணச் செய்தியை என்னிடம் கொழும்பில் கொண்டுவந்து சேர்த்த அந்தப் பெண்மணி பின்னாளில் ஒரு மதிப்பிடமுடியாத சிநேகிதியாக மாறியிருந்தார், லண்டனில் எங்களுக்கு உதவி தேவைப்பட்ட போதெல்லாம் உடனடியாக உதவிக்கரம் நீட்டி எஙகள் குடும்பத்தின் பக்கமிருந்தார்”
ஈடு செய்யமுடியாத இழப்பு
“நல்லூரில் உள்ள அவர்களது குடும்ப மயானத்தில் 25 செப்ரம்பர் 1989ல் ராஜினி அடக்கம் செய்யப்பட்டாள். எனது இரண்டு சிறு பெண் மக்களின் கரங்களைப் பிடித்தவாறே நான் நடந்தேன், என் வாழ்க்கையில் மிகவும் கடினமான வலி நிறைந்த துயரமான நடையாக அது இருந்தது. அவளுடன் சேர்த்து எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிகரமான நாட்களும் புதைக்கப்பட்டு விட்டன மற்றும் எங்கள் குடும்பம் அவளுடைய பிரசன்னம் இல்லாமல் முன்னரைப்போல பழைய நிலைக்கு ஒருபோதும் திரும்பவேயில்லை. 20 நீண்ட வருடங்களாக அவளுடைய கல்லறைக்கு எங்களால் விஜயம் செய்ய இயலவில்லை. அவளுடைய பிள்ளைகள் தங்கள் தாய் இல்லாமலே ஒவ்வொரு நாளையும் கழித்தார்கள், அவர்களது ஈடு செய்ய முடியாத இழப்பை அவர்களுடனேயே கொண்டு நடந்தார்கள்”
“போரினால் பெற்றோர்களை இழந்து வாடும் ஸ்ரீலங்காவிலுள்ள ஏனைய சிறார்களுடன் அவர்களும் இணைந்து கொண்டார்கள். இதில் வஞ்சனை என்னவென்றால் இந்தப் போராட்டத்தில் சாகவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது ராஜினி இல்லை, அது நானாக இருந்திருக்க வேண்டும் குழந்தைகளை பாதுகாக்கும் தனது பங்கை அவள் ஏற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் எல்லாம் நேர்மாறாக நடந்து முடிந்துவிட்டது. எங்கள் உறவின் ஆரம்பத்தில் எனது பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக எனது அரசியல் வாழ்க்கையை நான் முடித்துக் கொள்வேன் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. ஸ்ரீலங்கா அரசியலில் எனக்குள்ள தொடர்பு எனக்கு மரணத்தையே விளைவிக்கும் என நான் எண்ணியிருந்தேன். அது நடக்கவில்லை”
“மாறாக தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக ராஜினி தன் உயிரையே ஈந்தாள்
மற்றும் நான் எனது பிள்ளைகளுக்காக உயிர் வாழவேண்டியவனாக இருந்தேன். அவர்கள் சுதந்திரமானவர்களாக மாறும்வரைக்கும் நான் அவர்களை வளர்த்தேன். ஆனால் எனது பாராட்டு யாவும் ராஜினிக்குச் சேரவேண்டியதே. அவர்களுடைய ஆரம்ப வருடங்களில் ராஜினி ஏற்படுத்திய உறுதியான அடித்தளம் அந்தப் பணியை செவ்வனவே முடிக்க எனக்கு உதவியாக இருந்தது. இந்த நிலை எனது பிள்ளைகள் அல்லது எனது குடும்பத்துக்கு மட்டும் பொதுவானது அல்ல. அரசியல் நிலமையின் அத்தகைய வியத்தகு உருமாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் போர்க்குண செயற்பாடுகள் இடம்பெற்ற குறுகிய காலத்தில் தமிழ் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட அங்;கத்தவர்களையும் தாக்கியுள்ளது”.

வீராங்கனை
ராஜினி ராஜசிங்கம் திரணகம உண்மையில் எங்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு வீராங்கனை மற்றும் ஸ்ரீலங்காவை மூடியிருந்த தமிழ் துயரத்தின் மறக்கமுடியாத அடையாளச்சின்னம். கலாநிதி.ராதிகா குமாரசாமி ஒருமுறை குறிப்பிட்டபடி “ ஸ்ரீலங்கா தமிழர்களாகிய தனது மக்களைப் பற்றி அவரிடம்(ராஜினியிடம்) ஒரு கருத்து இருந்தது. அவர்கள் சமாதானம் மற்றும் கண்ணியத்துடன் வாழ்ந்து ஜனநாயக உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவித்து மகிழவேண்டும் என்று ராஜினி கனவுகண்டார். அடக்குமுறை மற்றும் கொடூரத்தனம் என்பனவற்றின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக எழுந்து நின்ற அவர், அச்சத்துடன் வாழ்ந்து கொண்டு; சுய மரியாதைக்காக போராடும் சமூகத்திற்கு ஒளி கொடுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார். ஸ்ரீலங்காவில் சுதந்திரத்துக்காகப் போராடும் ஒவ்வொருவராலும் ஒருபோதும் மறக்க முடியாத தெய்வீக வடிவம் ராஜினி”.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
No comments:
Post a Comment