பூக்களோடு ஒரு கைகுலுக்கல்

.

புன்னகை விற்கும் சந்தை என்னும்
பூங்கா வனத்தில் நின்ற நேரம்
மின்னிடும் வண்ணம் மெல்ல இழந்து
மெல்லிய இதழ்கள் உதிர்ந்த சோகம்
தன்னை எண்ணி வருந்திய பூக்கள்
தன்மை கண்டு கலங்கியே அவைக்கு
என்னிரு கையால் ஆறுதல் வழங்க  
இதமாய் நீட்டி வாழ்த்துச் சொன்னேன்

உதிர்வை பார்த்து வாழ்த்துக் கூறும்
உள்ளம் கொண்ட மனிதா மனிதா
உதிரும் எமக்கு  கைகள் நீட்டி
உதிர்த்த வாழ்த்தால் என்ன உணர்ந்தாய்?
அதிர வைத்தது  பூக்களின்  கேள்வி.
அடடா என்னக் கொடுமை செய்தேன்
புதிராய் வந்து புயலாய் தாக்கி
பூக்கள் சாய்த்து விட்டதே என்னை.

ஆறுதல் என்பது வாழும் போதில்
அளிக்க வேண்டும். .சாவில் அல்ல.
மாறுதல் காண்பாய் மனிதா நீயும்
மறுபடி வந்து கூறிய பூக்கள்  
சோறுடன் உப்பை சேர்த்தே உண்பாய் 
சூடு சொரணை வரலாம் என்றே
கூறிய படியே கைகள் நீட்ட
கொடுத்துக் கையை குலுக்கிய நானும்
உதிர்ந்தேன் பூக்களின் காலில் சருகாய்.!

 *மெய்யன் நடராஜ் (இலங்கை)

No comments: