திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
இலங்கைத்தமிழர்களும்       இந்தியத்திரைப்படங்களும்
பல்வேறு   சவால்களுக்கு   மத்தியில்  குத்துவிளக்கு  திரைப்படம்   வெளியிட்ட    கட்டிடக்கலைஞர்  
வி.எஸ். துரைராஜா
     
                                                                                          இலங்கையில்    நீடித்த    போர்  முடிவுக்கு  வந்த  பின்னர் - இலங்கை த்தமிழர்கள் சார்ந்த    எந்தவொரு    பொது   நிகழ்வாகவிருந்தாலும்   அதற்கும்     இலங்கையின்   தற்போதைய அரசின்    ஆதரவும்     ஆசியும்    இருக்கிறதா   என்று   பூதக்கண்ணாடி வைத்துப்பார்க்கும்     தமிழினக்   காவலர்கள்  எனச்சொல்லிக்கொள்ளும்   தமிழ்    ஆர்வலர்கள்    தமிழ்   நாட்டில் அதிகரித்துவிட்டனர்.
ஆளுக்கொரு    அமைப்புகளை   உருவாக்கிக்கொண்டு   ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது   -   முற்றுகைப்போராட்டம்   தொடர்வது     -  கொடும்பாவி எரிப்பது    -  ஆக்ரோஷமான    அறிக்கைகள்  வெளியிடுவது  - மேடைகளில்   சூழுரைப்பது    முதலான    அறிவுக்கு   அப்பாற்பட்ட உணர்ச்சிகரமான     செயல்கள்   அங்கே   நடந்தேறிவருகின்றன.
அண்மைக்காலத்தில்   முருகதாசின்    இயக்கத்தில்   விஜய்   நடித்த கத்தி   படம்    பெரும்   சர்ச்சைக்குள்ளாகியது.     தமிழகத்தில்   பல அமைப்புகள்   (?)   களமிறங்கி   பேராடிய    சூழ்நிலையில் அந்தத்திரைப்படத்தயாரிப்பில்  சம்பந்தப்பட்ட   சர்வதேச   பிரசித்தி பெற்ற    லைக்கா    நிறுவன  அதிபர்  சுபாஷ்கரன் - சென்னையில் பத்திரிகையாளர்     சந்திப்பு     நடத்தி   விளக்கம்   அளித்து தெளிவுபடுத்தும்   வரைக்கும்   சென்றிருந்தார்.
ஏற்கனவே   இலங்கை   அரசுக்கு   எதிரான   போராட்டங்களில் உண்ணாவிரதம்     உட்பட  பல  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள்தான்    நடிகர்   விஜய்யும்   அவரது  தந்தை இயக்குநர்    சந்திரசேகரனும்.





இத்தனைக்கும்    விஜய்    திருமணம்    முடித்தது   இங்கிலாந்தில்  நீண்ட   காலம்   வாழ்ந்த  ஒரு   இலங்கைத்தமிழரின்    மகளைத்தான்.
நல்லவேளை   அந்த   இலங்கைத்தமிழருக்கும்   இலங்கை   அதிபருக்கும்   இடையில்   திருமண  பந்தங்களினால்    உறவு இருக்கிறது    என்று   எந்தவொரு   தமிழக  -  தமிழின உணர்வாளர்களினாலும்    சொல்லப்படவில்லை.
அவ்வாறு    சொல்லியிருந்தால்  விஜய்யின்  தனிப்பட்ட  குடும்ப வாழ்வும்   பாதிக்கப்பட்டிருக்கும்.
ஏற்கனவே   விஜய்   தாம்  நடித்த   தலைவா   திரைப்படத்திற்காக   தமிழக    முதல்வர்    ஜெயலலிதாவின்    ஒப்புதலுக்காகவும்   காத்திருந்தார்.
அதற்கு   முன்னர்   ராகுல்  காந்தி -  விஜய்யை   காங்கிரஸ_க்கு இழுக்க  முயற்சிக்கிறார்    என்றும்   ஊடகங்களில்   அவரது   பெயர் பெரிதாக    அலட்டிக்கொள்ளப்பட்டது.
எப்படியோ    விஜய்க்கு  நல்ல   விளம்பரம்  தொடர்ந்து கிடைத்துவருகிறது.   அதற்காக  அவர்    குறிப்பிட்ட   தமிழின காப்பாளர்கள்  -   உணர்வாளர்களை    நிச்சயம்  மனதிற்குள் பாராட்டிக்கொண்டுதானிருப்பார்.
கத்தி   படத்தின்    தயாரிப்பு   செலவுக்கு  லைக்கா    நிறுவனத்தின் இரண்டு   நாள்  வருமானமே   போதும்   என்று  சொல்லிவிட்டார் அதன்    அதிபர்   சுபாஷ்கரன்.
தாம்   தமிழ்ப்படங்கள்    மட்டுமல்ல   ஹிந்தி    ஆங்கிலப்படங்களும் எடுக்கவிருப்பதாகவும்   சொன்னார்.
இதற்கு    முன்னர் - இலங்கையில்  வீரகேசரி    நிறுவனத்தின்  முன்னாள்    இயக்குநர்களில்   ஒருவரான   வென்சஸ்லாஸ்   என்ற தொழில்   அதிபரின்   மகள்   நிர்மலாவை  மணந்த  பிரபல டென்னிஸ்  விளையாட்டு   வீரர்   விஜய்  அமிர்தராஜ்   மற்றும்   அவரது சகோதரரின்   தயாரிப்பில்  உருவானதுதான்    பிரசாந்த் -  உலக  அழகி  ஐஸ்வர்யா ராய்   நடித்த  சங்கரின்  இயக்கத்தில்   வெளியான  ஜீன்ஸ் திரைப்படம்.
அமிர்தராஜ்  சகோதரர்கள்   அதற்கு   முன்னர்  ரஜினி   நடித்த   ஒரு பிறமொழிப்படத்தையும்  தயாரித்துள்ளனர்.
வீரகேசரியின்    முன்னாள்  இயக்குநர்    சபைத்தலைவர்   பிரபல தொழில்   அதிபர்    ஞானம்   தயாரிப்பில்    உருவானதுதான்    எம்.ஜி.ஆர் நடித்த    நினைத்ததை   முடிப்பவன்   திரைப்படம்.


அவுஸ்திரேலியாவில்   மெல்பனில்   புலம்பெயர்ந்து    வாழும் இலங்கைத்தமிழர்    ஒருவரின்    தயாரிப்பில்    சில   வருடங்களுக்கு முன்னர்    ஒரு    படம்    வெளியாகி   ஒரே  நாளில்  திரையரங்கிலிருந்து ஓடி    மறைந்துவிட்டது.
   இலங்கையில்   இருந்த   மேலும்    முன்று  தமிழ்    தொழில்    அதிபர்கள்    தங்கள்   பொறுப்பில்    மூன்று திரைப்பட    தயாரிப்பு    ஸ்ரூடியோக்களை   நடத்திக்கொண்டு  தமிழ்ப்படங்கள்    எடுக்காமல்   தொடர்ந்தும்   சிங்களப்படங்களே    எடுத்தார்கள்.    
அவர்கள்தான்    வத்தளை -   ஹெந்தளையில்    விஜயா   ஸ்ரூடியோ நடத்திய    சினிமாஸ்   குணரட்ணம்.    கொழும்பு    தெற்கில்    சிலோன் தியேட்டர்ஸ்   ஸ்ரூடியோ  நடத்திய   செல்லமுத்து.   கொழும்பு  -   நீர்கொழும்பு    வீதியில்   கந்தானையில்  எஸ்.பி.எம்.  ஸ்ரூடியோ  நடத்திய   எஸ்.பி. முத்தையா.
இவர்களில்   முதல்   இருவரும்    இலங்கையில்   பல  பாகங்களிலும் திரையரங்குகள்    சொந்தமாகவும்   குத்தகை   அடிப்படையிலும்  வைத்திருந்தனர்.   வீடியோவின்   வருகைக்குப்பின்னர்  பல திரையரங்குகள்  மூடப்பட்டுவிட்டன.  1983  வன்செயலில்  பல திரையரங்குகள்     வன்முறையாளர்களினால் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன.
குணரத்தினத்தின்    வத்தளையிலிருந்த    சினிமாஸ்   ஸ்ரூடியோவும் கொளுத்தப்பட்டது.
அங்கிருந்த    பல    திரைப்படச்சுருள்கள்   எரிந்து  நாசமாயின. அவற்றைக்காப்பாற்றுவதற்காக    நடிகரும்    சந்திரிகாவின் கணவருமான    விஜயகுமாரணதுங்கா    தமது   வீட்டிலிருந்து  உடுத்தியிருந்த    சாரத்துடனேயே    காரை    எடுத்துக்கொண்டு   ஓடி தீயை     அணைக்கப்போராடினார்.


                      பல   சிங்கள   திரைப்படங்களையும்    இலங்கை - தமிழக கூட்டுத்தயாரிப்பான    எஸ்.வி. சுப்பையா    நடிகை    ஜெயா ( இலங்கையில்     சங்கானையைச்சேர்ந்த    பின்னாளில்   தமிழக திரையுலகில்     பிரபலமான    இயக்குநர்    குகநாதனின்   மனைவி) ஆகியோர்  நடித்த    மாமியார்  வீடு   என்ற   படத்தையும் இயக்கியவருமான     இயக்குநர்     வெங்கட்    1983   வன்செயலில் நடுவீதியில்   வைத்து  குத்திக்கொல்லப்பட்டார்.
பிறிதொரு    சந்தர்ப்பத்தில்   1987   இல்   சினிமாஸ்   குணரட்ணம் சுட்டுக்கொல்லப்பட்டார்.     இவர்  கே.ஜி.  இண்டஸ்றீஸ்    என்ற   பெரிய தொழில்    நிறுவனத்தையும்    கே.ஜி.    பஸ் சேவையையும்  நடத்தியவர். 
  சினிமாஸ்   லிமிடெட்டினதும்    சிலோன்    தியேட்டர்சினதும்   சில திரையரங்குகள்    இன்றும்   இயங்குகின்றன.
இங்கு    குறிப்பிடப்பட்ட    சினிமாஸ்   குணரட்ணமும்   சிலோன் தியேட்டர்ஸ்    செல்லமுத்துவும்    எஸ். பி. முத்தையாவும்  தமிழர்களாக     இருந்தபொழுதிலும்  தமது    வாழ்நாளில்  ஏராளமான    சிங்களப்படங்களைத்தான்     தயாரித்தார்கள்.    தங்கள் திரையரங்குகளில்    அவற்றை    திரையிட்டதுடன்    இந்தியாவிலிருந்து தமிழ் - ஹிந்தி - தெலுங்கு  - மலையாளப்படங்களையும்    ஹொலிவூட் படங்களையும்     இறக்குமதி    செய்து  காண்பித்தார்கள்.
எந்தவொரு    சந்தர்ப்பத்திலும்    இலங்கையில்  ஒரு தமிழ்த்திரைப்படத்தை    உள்ளுர்   கலைஞர்களைக்கொண்டு   தயாரிக்க அவர்கள்   முன்வரவில்லை.
காரணம்    தெளிவானது.   கையைச்சுட்டுக்கொள்ளும் விஷப்பரீட்சைகளில்    அவர்கள்    இறங்கவில்லை.    தமிழகத்தின் படங்களுக்கு    நிகராக    இலங்கையில்   தமிழ்ப்படம்   எடுக்க முடியாது    என்பதுடன்    எதிர்பார்க்கும்   வசூலும்   கிட்டாது  என்பதே அவர்களின்     சிந்தனையாக    இருந்தது.
ஆயினும் -      இலங்கை    -  இந்திய    கூட்டுத்தயாரிப்பில்   பைலட் பிரேம்நாத்  -   தீ   -   நங்கூரம்   -    ரத்தத்தின்    ரத்தமே   முதலான படங்களுடன்    மோகனப்புன்னகை  -    வருவான்   வடிவேலன்  -  என்பன   இந்திய   சினிமாப்பிரமுகர்களினால்   இலங்கையில் தயாரிக்கப்பட்டன.
ஆனால் -   2009   மே   மாதத்தின்   பின்னர்   எந்தவொரு  இந்திய சினிமாத்துறைக்கலைஞரும்    இலங்கைக்கு    வருவதாகவிருந்தால் முதலில்    தமிழ்நாட்டிலிருக்கும்   தமிழின    உணர்வாளர்களிடம் அனுமதி    விசா   பெறல்   வேண்டும்    என்பது   எழுதப்படாத சட்டவிதியாகிவிட்டது.    அனுதிக்குப்பதில்   ஆர்ப்பாட்டம்தான் பதிலாகக்கிடைக்கும்    என்பதனால்   இந்திய  திரையுலகத்தினர் மௌனிகளாகிவிடுகின்றனர்.
 யாருடன்   சேர்ந்து    ஒரு  நாள்   உண்ணாவிரதப்போராட்டம்   உட்பட பல   போராட்டங்களில்   தமிழக  திரையுலகத்தினருடன் கலந்துகொண்டரோ   அவர்களே    விஜய்யை   நோக்கியும்    கத்திக்கத்தி...   கத்தியை     நீட்டிவிட்டார்கள்.     புத்தியை   தீட்ட மறந்தார்கள்.


கத்தியை    திரையில்    நீட்டியே   காண்பிக்கப்போவதாக பத்திரிகையாளர்களைக் கூட்டி   சபதம்   எடுத்துவிட்டார்   லைக்கா சுபாஷ்கரன்.
இந்திய   திரைப்படங்களின்    சந்தையாக  விளங்கியது   இலங்கை. அதனால்  இலங்கையில்   தமிழ்த்திரைப்படத்தயாரிப்பு   என்பது விஷப்பரீட்சையானது.
ஈழத்தமிழர்கள்    வெளிநாடுகளில்  செறிந்து    வாழத்தொடங்கியதும் வெளிநாடுகளிலும்   இந்திய    திரைப்படங்கள்    சந்தையை   விரித்தன.
இந்தப்பின்னணிகளுடன்தான்    கட்டிடக்கலைஞர்   வி. எஸ். துரைராஜாவின்   ஆளுமையை    நான்   பார்க்கின்றேன்.
இலங்கையில்   தோட்டக்காரி   முதல்   பல   படங்கள் இலங்கைத்தமிழர்களினால்    எடுக்கப்பட்டன.     அந்தப்பட்டியலில் குறிப்பிடத்தக்க    படம்தான்    கட்டிடக்கலைஞர்    வி.எஸ்.துரைராஜாவின்    வி. எஸ். ரி.  பிலிம்ஸ்   தயாரிப்பில்   உருவான குத்துவிளக்கு.
துரைராஜா   கட்டிடக்கலைஞர்   மட்டுமல்ல.    தமிழ்க்கலை   ஆர்வலர். இலங்கையில்    நான்காவது   அனைத்துலக   தமிழாராய்ச்சி மாநாட்டுப்பணிகளில்     அர்ப்பணிப்புடன்   இயங்கியவர்.    தமிழ் அகதிகள்   புனர்வாழ்வுக்கழகத்தில்   இயங்கிய சமூகச்செயற்பாட்டாளர்.    1981   மே   மாதம்   யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டபொழுது   அதனை    மீளக்கட்டியெழுப்புவதற்கு    பல்வேறு வழிகளிலும்    ஆக்கபூர்வமாகச்செயற்பட்டவர்.
பம்பலப்பிட்டி    சரஸ்வதி    மண்டபத்தில்   சந்திப்புகளை    நடத்தி தென்னிலங்கையிலிருந்து    நூல்களை    பெருமளவில்   சேகரித்தவர்.
தந்தை    செல்வா    மறைந்தபின்னர்     யாழ்ப்பாணத்தில்    நிறுவப்பட்ட நினைவுச்சின்னத்தை    வடிவமைத்தவர்.
யாழ். பொது    நூலகத்தின்   தோற்றம் -   வளர்ச்சி - அழிவு - புனர் நிர்மாணம்   பற்றிய    விரிவான    நூலையும்     எழுதியிருப்பவர்.
ஜே.ஆரின்.   ஆட்சிக்காலத்தில்   துரைராஜாவும்     நான்காவது   மாடிக்கு புலனாய்வாளர்களினால்    அழைக்கப்பட்டு    விசாரிக்கப்பட்டவர்.
(அடுத்தவாரம்  தொடரும்)


No comments: