மாண்டலின் ஸ்ரீநிவாஸ்: மின்னி மறைந்த இளம் நட்சத்திரம்!

.

வி. ராம்நாராயண்,‘ஸ்ருதி’ மாத இதழின் முதன்மை ஆசிரியர்.‏

மகனின் உடலைப் பார்த்து கதறியழும் தந்தை சத்திய நாராயணா
மாண்டலின் ஸ்ரீநிவாஸ் பெயரைக் கேட்டாலே அவருடைய அதிசய மேதாவிலாஸத்துக்கும் மேலாக நமக்கு நினைவுக்கு வருவது அவருடைய குழந்தை முகமும், மாறாத புன்சிரிப்பும்தான். அக்டோபர் 1983-ல் வெளிவந்த ‘ஸ்ருதி’ பத்திரிகையின் முதல் இதழில், 13 வயது ஸ்ரீநிவாஸ் பற்றிய கவர் ஸ்டோரியை ஆசிரியர் என். பட்டாபிராமன் இவ்வாறு முடித்திருந்தார்...
‘‘விண்கற்கள் கணத்தில் தோன்றி மறைபவை; அவை விண்ணில் தீக்கதிராக வீசி தம்மைத் தாமே அழித்துக் கொண்டு விடும். நட்சத்திரங்களோ நம்முடனே வாழ்ந்து, நம் வாழ்க்கைக்கு உயிரூட்டும். ஸ்ரீநிவாஸின் சங்கீதத்தின் ஒளியை அனுபவித்த நாம் எல்லோருமே அவர் கர்நாடக இசை வானில், அவர் நட்சத்திரமாக பிரகாசிக்க வேண்டுவோம்.’’
சிறு வயதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அசாத்திய திறமை கொண்ட குழந்தைக் கலைஞர்கள் எல்லோருமே பிற்காலத்தில் நட்சத்திரமாக ஒளிவீசிவிடுவதில்லை. பலரும் விண் கற்களாகவே பிரகாசித்து சட்டென்று மறைந்து விடுகிறார்கள். ஸ்ரீநிவாஸைப் பொறுத்தவரை ஸ்ருதி பட்டாபிராமனின் பிரார்த்தனை பலித்தது. குழந்தைப் பருவத்தில் அவரது கச்சேரி எவ்வளவுக்கு எவ்வளவு பிரமிப்பூட்டியதோ அதுபோல், அதற்கு பல மடங்கு ஆண்டுதோறும் அவரது ஆற்றல் பெருகி உலகமெங்கும் ரசிகர்களை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தது.


ஸ்ரீநிவாஸ் பிறந்தது மேற்கு கோதாவரி மாவட்டத்தில், நர்ஸாப்பூர் அருகே பாலக்கோல் என்ற கிராமத்தில் - 28 பிப்ரவரி 1969 அன்று. தாத்தா சிம்ஹாசலம் நாகஸ்வரக் கலைஞர். தகப்பனார் உப்பளப்பு சத்யநாராயணா ‘சரஸ்வதி மியூசிக் பார்ட்டி’ என்ற பெயரில் லைட் மியூசிக் குழு நடத்திவந்தார். சிறு வயதிலேயே அப்பாவின் மாண்டலினை எடுத்து வீட்டில் அமர்ந்தபடி வாசிக்க ஆரம்பி்த்த ஸ்ரீநிவாஸின் அபாரத் திறமை நாளடைவில் வெளிவர ஆரம்பித்தது. அதே கிராமத்தில் வசித்து வந்த சுப்பராஜுவிடம் சேர்ப்பிக்கப்பட்டான். சுப்பராஜுதான் சத்யநாராயணாவுக்கு குரு.
சுப்பராஜு சாமானியப்பட்டவரல்ல. செம்பை வைத்தியநாத பாகவதரிடம் கர்நாடக இசை பயின்றவர். தந்தையிடம் கற்ற சில கிருதிகளை ஸ்ரீநிவாஸ் வாசிப்பதைக் கேட்டு, வியந்த சுப்பராஜு அவனுக்கு முறையே கர்நாடக இசை கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஆசிரியர் பாட, மாணவன் மாண்டலின் வாசிக்க, வகுப்புகள் மிக வேகமாக வளர்ந்தன.
1980 - 81 வாக்கில் சென்னையில் கச்சேரிகளில் வாசிக்க வாய்ப்பு கிடைக்க, சிறுவன் ஸ்ரீநிவாஸின் இசைத்திறமை பலரையும் மயக்க ஆரம்பித்தது. செம்பை விழாவில் தொடங்கிய அந்தப் பயணம், 28 டிசம்பர் 1982 அன்று இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் கச்சேரி அவரை ஒரு நட்சத்திரமாக அறிவிக்கும் அளவுக்கு சூடுபிடித்தது.
அந்த ஆண்டு முடிவதற்குள் நூற்றுக்கணக்கில் பாடல்கள் அவருக்குப் பாடமாயின. ராக ஆலாபனை, நிரவல், ஸ்வர கற்பனை போன்ற மனோதர்மம் சார்ந்த வித்தைகளும் ஸ்ரீநிவாஸுக்கு அநாயாசமாக அத்துப்படியாயின.
அடுத்த பத்தாண்டு காலத்திற்கு ஸ்ரீநிவாஸ் கச்சேரியென்றால் கூட்டம் நிரம்பி வழியும். மூத்த கலைஞர்கள் தஞ்சாவூர் உபேந்திரன், உமையாள்புரம் சிவராமன், கன்னியாகுமரி போன்றோர் ஆரம்ப காலத்திலிருந்தே பக்கவாத்தியம் வாசித்து ஊக்குவித்து வந்தார்கள். இந்தியா முழுவதுமின்றி மேல்நாடுகளிலும் அவர் பிரபலமானார். மாண்டலின் போன்ற ஒரு கிராமிய இசை வாத்தியத்தை, ஒரு சாஸ்திரிய இசைக் கருவியாக மாற்றியது அவரே. மேல்நாட்டு இசைக் கலைஞர்கள் அவருடன் சேர்ந்து மேடையேற போட்டிபோட, 1983-ல் மேற்கு பெர்லின் ஜாஸ் விழாவில் தொடங்கி பல நாடுகளிலும் அவர் கர்நாடக இசைக் கச்சேரிகள் தவிர ஃப்யூஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். 1992-ல் பார்ஸலோனாவில் நிகழ்ந்த ஒலிம்பிக் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவெல் என்ற விழாவில் பங்கேற்றது இச்சாதனைகளுக்கு சிகரமாக அமைந்தது.
பல இந்துஸ்தானி கலைஞர்களுடன் ஜுகல்பந்தி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அக்கச்சேரிகளுக்கு மெருகேற்றிய ஸ்ரீநிவாஸ், தன் தனிக் கச்சேரிகளில் காட்டும் தனது முழுத் திறமையையும், அக்கூட்டு முயற்சிகளில் காட்டாமல் அடக்கியே வாசிப்பார். அதைப் பற்றி அவரிடம் கேட்டால், ‘அப்படியொன்று மில்லை. அவர்களும் சிறந்த கலைஞர்களே.
மேலும் இது ஒன்றும் போட்டியல்ல’ என்று தனக்கே உரிய அடக்கத்துடனும், புன்சிரிப்புடனும் பதிலளிப்பார்.
ஸ்ரீநிவாஸ் இளமேதையாக இசை உலகில் பிரவேசித்தாலும், கடும் உழைப்புடன் தன் கலையை அபிவிருத்தி செய்து கொண்டவர். உழைப்பு என்று வருணித்தாலும் அவருக்கு இசையும், இசைப் பயிற்சியும் ஒரு விளையாட்டுதான். ஆனந்த அனுபவம்தான். கர்நாடக இசையின் கனராகங்களாக இருந்தாலும், வடக்கத்திய சாயை கொண்ட ராகங்களாக இருந்தாலும், அபூர்வ ராகங்களாக இருந்தாலும், அவற்றின் பரிமாணங்களை ஆழ்ந்து உணர்ந்து நாம் எதிர்பாராத விதங்களில் வெளிக் கொணர்வதில் வித்தகர்.
மயிர்க்கூச்செறிய வைக்கும் அவருடைய சங்கீதம், கண்ணீரையும் வரவழைக்கும். அதன் தூய்மைதான் அதற்குக் காரணம்.
அமைதி நிறைந்த ராகபாவம் சொட்டும் ராக ஆலாபனையோ, அதி செளகிக காலப் பாடல்களோ (மிகவும் மெதுவான பாடல்கள்) அவரால் வாசிக்க முடியாததல்ல. ஆனால் வேகமும் விறுவிறுப்பும் அவரது முத்திரையாக அமைந்தது.
அவருடைய வாசிப்பைக் கேட்டே கர்நாடக இசையின்பால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் ஏராளம். ‘மாண்டலின் ஒரு துல்லியமான இசைக் கருவி. மைக்கில்லாமல் அதைக் கேட்பதே கடினம். அப்படியிருக்க, ஒரு சிறிய அறையில், இசையறிவில் உயர்ந்த ரசிகர்களுக்கு, மிக உன்னதமாக இசையை அளிக்கலாமே’ என்று அவரிடம் ஒருமுறை கேட்டபோது, அவர் சொன்ன பதில்: ‘‘அதெல்லாம் வாசிக்க வேறு கலைஞர்கள் இருக்கிறார்கள். எனக்கு பெரிய கூட்டங்கள் பிடிக்கும். பல ஆயிரம் வெகுஜன ரசிகர்களைச் சென்றடைவதே என் நோக்கம்.’’
கர்நாடக இசைவானில் ஸ்ரீநிவாஸ் விண்கல் போலத் தோன்றி உடனே மறைந்துவிடாவிட்டாலும், மிகச் சிறிய வயதிலேயே நம்மை விட்டுச் சென்று விட்டார். ஆனாலும், இந்த 30 - 35 ஆண்டு காலத்தில் அவர் படைத்த இசைச் சாதனைகள் என்றென்றைக்கும் நினைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.
வி. ராம்நாராயண்,‘ஸ்ருதி’ மாத இதழின் முதன்மை ஆசிரியர். 
தொடர்புக்கு:vramnarayan@gmail.com

No comments: