காற்றின் கலை - தனித்திருந்து செய்த தவம் -பி. ரவிகுமார்

.

  சுந்தராம்பாள் ஒவ்வொரு பாட்டுப் பாடும்போதும் அழுதுகொண்டேயிருக்கிறார்.
சுந்தராம்பாளின் பாட்டை முதன் முதலாக எப்போது கேட்டேன் என்பது நினைவில்லை. ஆனால் நினைவு பின்னோக்கிப் பின்னோக்கிச் செல்லும்போது நான் ஸ்ரீநிவாசன் என்ற நபரிடம் போய்ச் சேருகிறேன். ஸ்ரீநிவாசன் சுந்தராம்பாளின் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் பழைய நாட்களுக்குப் போய்ச் சேருகிறேன்.

எங்களுடைய உறவினரான ஸ்ரீநிவாசன் அந்தக் காலத்தில் எப்போதாவது வீட்டுக்கு வருவார். இரண்டோ மூன்றோ நாட்கள் எங்களுடன் தங்குவார். ஸ்ரீநிவாசனை நாங்கள் பாகவதர் என்றுதான் அழைப்போம். கொஞ்சம் சங்கீதம் கற்றுக்கொண்டிருந்தார் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். எம்.கே.தியாகராஜ பாகவதர்இ பி.யூ. சின்னப்பாஇ கே.பி. சுந்தராம்பாள் ஆகியவர்களின் பாட்டுகளை ஸ்ரீநிவாசன் பாடுவார்.

மனப்பிறழ்வுக்கு ஆளான பாகவதர் இளம் பருவத்தில் என்றோ ஊரைவிட்டுப் போயிருந்தார்.எல்லா நேரமும் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருப்பார் பாகவதர். என்னிடமும் என் அண்ணனிடமும் அவருக்குப் பெரும் வாஞ்சையிருந்தது. எங்களை அருகில் உட்காரவைத்துக்கொண்டு பாடிக் காட்டுவார். சுந்தராம்பாளின் பாட்டுகளைப் பாடும்போது பாகவதர் தன்னையே மறந்துவிடுவார். அவர் கண்கள் நிறைந்து ததும்பும்.

பிற்காலத்தில் சுந்தராம்பாளின் பாட்டை நான் கேட்டது எங்கள் கிராமத்திலிருந்த பீருக்கண்ணுவிடம். ஆறடி உயரமும் அதற்கு ஏற்ற பருமனும் மொட்டைத் தலையும் சிவந்த உடலும் நீலக் கண்களும் கொண்டவர் பீருக் கண்ணு. முழங்கால்வரைக்குமான கட்டம்போட்ட வேட்டிதான் உடை.

சொந்தக்காரர்கள் சிலர் இருந்தாலும் பீருக்கண்ணு கிட்டத்தட்ட அநாதை போலத்தான். சுமைதூக்கிப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தான். எவ்வளவு கனமான சுமையையும் சிரமமில்லாமல் தலையில் ஏற்றி வைத்துப் பாட்டுப் பாடியபடி ஒரு நாட்டியக்காரனின் தாள லயத்துடன் பீருக்கண்ணு நடந்து போவான்.

பாட்டுத்தான் பீருக்கண்ணுவின் உயிர். மதுரை மணி அய்யர் மறைந்த தகவல் தெரிந்து பீருக்கண்ணு விம்மி அழுததை இன்றும் மறக்க முடியவில்லை. மிகவும் வேண்டிய ஒருவர் பிரிந்து சென்றது போன்ற துக்கத்துடனேயேதான் பீருக்கண்ணு அந்த நாட்களைக் கழித்தான்.

‘‘மணி அய்யரு போயிட்டார்...’’

பார்க்கிறவர்களிடமெல்லாம் பீருக்கண்ணு பரிதாபமாகப் புலம்பிக் கொண்டிருந்தான்.

தனித்திருந்து வாழும் மெய்த்
தவமணியே! தண்டபாணித்
தெய்வமே!

- பீருக்கண்ணுஇ சுந்தராம்பாள் பாட்டைப் பாடுவது இன்றும் எனக்குள்ளே தெளிவாக ஒலிக்கிறது.

நீண்ட காலத்துக்குப் பிறகுதான் சுந்தராம்பாள் பாடுவதை நேரில் கேட்க எனக்கு வாய்த்தது.

1979 மார்ச் மாதம் 4ஆம் தேதி. இரவு. திருவனந்தபுரம் ஆற்றுகால் தேவி க்ஷேத்திரத்தில் முதியவரான சுந்தராம்பாள் பாடுகிறார். எம்.எஸ். அனந்தராமன் வயலின். சுந்தராம்பாளுக்கு நேர் முன்னால் அமர்ந்து நான் பாட்டைக் கேட்கிறேன்.

தியாகராஜ சுவாமிகளின்

‘ஞானமோ சகராதா’ என்ற பூர்வி கல்யாணி ராகக் கிருதியை விஸ்தாரமாகப் பாடுகிறார்.
ஞானமோ சகராதா...

- நீ எனக்கு ஞானம் அளிக்காதது எதனால் என்று கேட்கும்போது சுந்தராம்பாள் விம்மி வெடிப்பதைப் பார்த்தேன்.

அவர் பாடிக்கொண்டிருந்த மேடைக்கு மிக அருகில் வழிபாட்டு வெடிகள் முழங்கிக் கொண்டிருந்தன. செவிப்பறை கிழிந்துபோகும் ஓசை. தொடர்ந்து வெடிகள் வெடித்துக் கொண்டிருந்தன. ஆனால் இந்த வேட்டுச் சத்தம் எதையும் சுந்தராம்பாள் கேட்கவே இல்லை. அவர் கண்கள் மூடி அமர்ந்திருக் கிறார். பாட்டினூடே தன்னுணர்வு இல்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறார். அவருடைய கன்னங்களில் கண்ணீர் கசிந்து ஒழுகிக்கொண்டிருக்கிறது.

ஓயாத வெடி முழக்கங்களுக்கு இடையிலும் சுந்தராம்பாள் பாடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பாட்டைப் பாடும்போதும் அவர் அழுதுகொண்டேயிருக்கிறார்.

ஞானப்பழத்தைப் பிழிந்து...

- சுந்தராம்பாள் காம்போஜியாகஇ சாவேரியாகஇ காபியாகஇ மோகனமாகஇ கேதார கௌளையாகஇ கானடாவாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.

வேலைப் பிடித்தவனின்
காலைப் பிடித்தவர்க்கே
வேதனை யில்லையென்பேன்

- திருமுருகாற்றுப்படையுடன் நக்கீரர் கண் திறக்கிறார். சங்க காலத்துக்குள்ளிருந்து அவ்வையார் நடந்து வருகிறார். நீண்ட காலம் வெந்து உருகி அருணகிரிநாதர் பிறக்கிறார். அருணாசலத்தின் சிகரத்திலிருந்து மரணத்துக்குள் வீழும் அருணக்கிரிநாதரைக் கண்ணுக்குப் புலப்படாத கைகள் ஏந்திக் கொள்கின்றன. அருண கிரிநாதர் திருப்புகழ் பாடுகிறார். வடலூரில் ராமலிங்க சுவாமிகள் பெருங்கருணையில் ஆழ்கிறார்.

உலக பந்த பாசங்களில்
என் சிந்தனை செல்லாமல்
பக்குவ நிலையருள்
சொக்க நாதன் மகனே.

- பந்தங்களின் சரடுகளில் தன்னைச் சிக்க வைக்க வேண்டாம் என்று அவர் பிரார்த்திக்கிறார்.

தனித்திருந்து வாழும் - மெய்த்
தவமணியே!

- பிரார்த்தனை கனன்று படர்கிறது.
அநித்திய வாழ்வுதனிலே அடி யேன் மிக
அலுத்து உழைத்த ஜென்மம்
போதும் போதும் - இனி நான்
அலுத்து உழைத்த ஜென்மம்
போதும் போதும்
- பாட்டில் தீ பரவுகிறது.

இந்த அநித்திய வாழ்வில் நான் நொறுங்கிச் சிதைந்து போயிருக்கிறேன்; எனக்கு இந்த ஜென்மம் அலுத்துப் போயிருக்கிறது; போது மென்றாகியிருக்கிறது.

வாழ்க்கை முழுவதும் மாய வித்தையாக இருந்தது.

ஒவ்வொரு பாட்டைப் பாடும் போதும் சுந்தராம்பாளின் மனதில் அந்த மாயவித்தைகள் கடந்து போயிருக்கலாம்.

தமிழகத்தில் கொடுமுடி என்ற கிராமத்தில்இ தனது பால்ய தினங்களில்இ ஏதோ ஒரு நண்பகலில் முதலாவது மாய வித்தை நிகழ்ந்தது.

அவதூதர்களும் சித்தர்களும் கிராமத்துக்கு வந்து போய்க்கொண்டிருந்த காலம்.

சுந்தராம்பாளுக்கு அன்று ஐந்து வயது. கிராமத்தில் கோவில் சுற்றுப் புறங்களில் தெருப் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

சடை விழுந்த தலைமுடியும் நீண்ட தாடியுமாகச் சித்தர் ஒருவர் அங்கே வந்து சேர்கிறார். தெருப் பிள்ளைகளின் நடுவே இருந்த சுந்தராம்பாளைச் சித்தர் பக்கத்தில் வரச் சொல்லி அழைக்கிறார். தனது வலது கையைச் சுந்தராம்பாளின் முன்னால் நீட்டி உள்ளங்கையை மலர்த்திக் காட்டுகிறார். தலையை மேலே உயர்த்திக் கண்களை மூடுகிறார். பிறகு தலையைக் குனிந்து கண்களைத் திறக்கும்போது வெறுமையான அந்த உள்ளங்கையில் ஒரு நாணயம் இருக்கிறது.

சுந்தராம்பாள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போகிறாள். சித்தர் அந்த நாணயத்தைச் சுந்தராம்பாளிடம் ஒப்படைக்கிறார். கஞ்சா வாங்குவதற்கான காசு அது. கிராமத்துக்கு வந்து சேரும் சித்தர்கள் எல்லாரும் கஞ்சா புகைப்பவர்களாக இருந்தார்கள். சொக்கலிங்கம் பிள்ளை என்பவர் தான் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். சுந்தராம்பாள் கஞ்சா வாங்குவதற்குச் சொக்கலிங்கம் பிள்ளை கடைக்குப் போனாள்.

கஞ்சாவை வாங்கிக்கொண்டு திரும்ப வந்தபோது சித்தரைக் காணவில்லை. நான்கு பக்கமும் பார்த்தாள். அதோஇ அருகிலிருந்த வேப்பமரத்தின் கிளையில் சித்தரின் தலை தொங்கிக்கொண்டிருக்கிறது. வேறொரு கிளையில் கைகள். இன்னொன்றில் கால்கள். ஒவ்வொரு அவயவமும் ஒவ்வொரு கிளையில் தொங்குகின்றன.

சுந்தராம்பாள் ஸ்தம்பித்துப் போனாள்.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்கின்றன. சித்தர் மரத்திலிருந்து இறங்கி வருகிறார். பயந்து நடுங்கி நிற்கும் சுந்தராம்பாளைப் பக்கத்தில் அழைத்து நாக்கை நீட்டச் சொல்லுகிறார். ஒரு பொம்மைபோல சுந்தராம்பாள் நாக்கை நீட்டுகிறாள். நாக்கின் மேல் சித்தர் விரலால் ஏதோ எழுதுகிறார். சுந்தராம்பாளின் உடல் வழியாக மின்னல் பாய்ந்து செல்கிறது.

சித்தர் எங்கிருந்தோ சிலும்பியை எடுத்து அதில் கஞ்சாவை நிரப்பிப் பற்றவைத்துப் புகையை இழுக்கத் தொடங்கினார். சட்டென்று கண் முன்னாலிருந்து மறைந்து போனார்.

- பின்னும் மாய வித்தைகள் நிகழ்ந்துகொண்டிருந்தன.

கொடும் பட்டினி நிரம்பிய அந்தப் பொல்லாத நாட்கள் ஒன்றில் சுந்தராம்பாளின் தாய் மகளையும் சேர்த்துக்கொண்டு காவேரியில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்றாள்.

காவேரியின் முடிவற்ற பெருக்கின் முன் நின்று அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டு சுந்தராம்பாள் கதறினாள்;
‘‘கொன்னுடாதீங்க... அம்மா... கொன்னுடாதீங்க.’’

அந்தத் தாய் மகளை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு விம்மி அழுதாள்.

- பின்னும் மாய வித்தைகள் நிகழ்ந்துகொண்டிருந்தன.

ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா என்று தேடி அந்தத் தாயும் மகளும் உடன்பிறந்தவர்களும் கொடுமுடியிலிருந்து கரூருக்குப் போகிறார்கள்.

இருட்டில் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. தாய் விசும்பிவிசும்பி அழுகிறாள். அம்மாவின் அழுகையைப் பார்த்துச் சுந்தராம்பாளும் அழுகிறாள். சகோதரர்கள் தளர்ந்து உறங்குகிறார்கள்.

எதிர்ப்புறத்து இருக்கையில் மிகவும் வயதான ஒருவர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். தாய்இ பிள்ளைகளின் கதையைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர் சொன்னார். ‘‘எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள். அவள் விதவை. அவள் இப்போது என் வீட்டில்தான் இருக்கிறாள். நீங்களும் அவளைப் போல என் சகோதரிதான். எனக்குப்பிள்ளைகள் இல்லை. நான் இந்தப் பிள்ளைகளை என் பிள்ளைகளாக வளர்த்துக் கொள்கிறேன்.’’

மணவாள நாயுடு என்ற அந்த நல்ல மனிதரின் சின்ன வீட்டில் சுந்தராம்பாளும் சகோதரர்களும் தாயும் குடிபுகுந்தார்கள்.
- பின்னும் மாய வித்தைகள் நிகழ்ந்துகொண்டிருந்தன.

மணவாள நாயுடுவின் வீட்டில் குடியிருந்த காலம்.

சின்ன வீடு. வசதிகள் மிகவும் குறைவு. சிறுமியான சுந்தராம்பாள் இரவில் வீட்டுத் திண்ணையில்தான் படுத்து உறங்கினாள். உறக்கம் வராத ஒரு இரவு. முன்னால் தெரு ஆளரவமற்று அமைதியாக இருக்கிறது.

இருட்டில் கொடுமுடி கிராமம் துலங்குகிறது.

நடுப்பகல் பொழுதில் தோழிகள் விளையாடுகிறார்கள். வேப்ப மரத்தின் கிளைகளில் சடைபிடித்த தலையும் வற்றி மெலிந்த கைகால்களும் அசைந் தாடுகின்றன.

கஞ்சாப் புகை பரவுகிறது. அதனூடே மின்னல் கீற்றுப் பாய்கிறது. காவேரி முடிவற்று ஓடுகிறது. அம்மா கதறி அழுகிறாள். இருட்டில் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது.

உறக்கம் வருவதே இல்லை. சுந்த ராம்பாள் பாடத் தொடங்கினாள்.

கொடுமுடி கிராமமும் தோழிகளும் வேப்பமரக் கிளைகளில் தொங்கும் தலையும் கைகால்களும் முடிவில்லாமல் ஓடும் காவேரியும் அம்மாவின் கதறலும் இருட்டில் ஓடும் ரயிலும் மெல்ல மெல்ல மறைந்து போயின.

சுந்தராம்பாள் பாடிக்கொண்டேயிருக்கிறாள். பாடிப்பாடியே உறங்கிப் போனாள்.

காலையில் இரண்டு போலீஸ் காரர்கள் மணவாள நாயுடுவின் வீட்டுக்கு வருகிறார்கள். முந்தைய இரவு பாடியது யார் என்று விசாரிக்கிறார்கள். சுந்தராம்பாளும் அம்மாவும் வீட்டுக்காரர்களும் பயந்து போனார்கள். போலீஸ்காரர்கள் சுந்தராம்பாளை அழைத்துக் கொண்டு போய்த் தங்கள் மேலதிகாரி கிருஷ்ணசாமியின் முன்னால் விட்டார்கள்.

‘‘நேற்று அர்த்த ராத்திரி பாடியது யார்?’’ கிருஷ்ணசாமி கேட்டார்.

‘‘நான்தான்’’ சுந்தராம்பாள் பதற்றத்துடன் சொன்னாள்.

‘‘நீயா... நீயா?’’

கிருஷ்ணசாமிக்கு நம்பிக்கையே வரவில்லை. கடைசியில் பக்கத்து வீடுகளிலும் விசாரணை நடத்திய பிறகு சுந்தராம்பாள்தான் பாடினாள் என்று கிருஷ்ணசாமிக்குப் புரிந்தது.

சுந்தராம்பாளின் கதையையும் குடும்பத்தின் கதையையும் முழுக்கக் கேட்டு முடிப்பதற்குள் கிருஷ்ணசாமி யாரும் பார்க்காதபடி கண்களைத் துடைத்துக்கொள்கிறார். ஐம்பது ரூபாயை அன்பளிப்பாகக் கொடுத்து சுந்தராம்பாளைத் திருப்பி அனுப்பினார்.

- பின்னும் மாய வித்தைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.

அப்படியிருக்கும்போதுஇ ஏழு வயது சிறுமியான சுந்தராம்பாள் வேலு நாயரின் நாடகக் கம்பெனியில் பால நடிகையாகச் சேர்கிறாள்.

முதல் நாடகம் ‘நல்ல தங்காள்’.

கொடும் சித்திரவதைகளையும் அவமானத்தையும் பட்டினியையும் தாங்க முடியாமல் மக்களையும் தன்னையும் மாய்த்துக்கொள்ளும் நல்ல தங்காளின் கதை.

பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு நல்லதங்காள் கிணற்றில் குதிக்கத் தயாராகிறாள். அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டு வாய் விட்டு அழும் குழந்தையாகச் சுந்தராம்பாள் நடிக்கிறாள்.

கொடும் பட்டினி நிரம்பிய நாட்களின் இரவு -

காவேரியின் முடிவில்லாத பெருக்குக்கு முன்னால் நின்று அம்மாவின் கால்களைக் கட்டிக் கொண்டு சுந்தராம்பாள் கதறுகிறாள்:

“கொன்னுடாதீங்க... அம்மா... கொன்னுடாதீங்க’’

சுந்தராம்பாளின் கண்கள் ததும்பி வழிகின்றன. சுந்தராம்பாள் கதறி அழுகிறாள். சுந்தராம்பாள் என்ற பால நடிகையின் நடிப்புத் திறனில் பார்வையாளர்கள் ஒட்டுமொத்தமாக ஆச்சரியமடைந்து அசையாமலிருந்தார்கள்.

திரை கீழிறங்கும்போது இடி முழக்கம்போலக் கரவொலி உயர்கிறது.

சுந்தராம்பாளின் முன்னால் அப் போதும் காவேரி முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.

- பின்னும் மாய வித்தைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த
குளிர் தருவேஇ தரு நிழலே...

கொடும் கோடையின் வெம்மையை நீக்கும் குளிர் தருவாகஇ படர்ந்து போகும் கிளைகளின் நிழலாக எஸ்.ஜி. கிட்டப்பா வந்தார்.

‘வள்ளி திருமண’த்தில் கிட்டப்பா முருகன் ஆனார். சுந்தராம்பாள் வள்ளியானார். நாடகத்திலும் வாழ்க்கையிலும் நாயக - நாயகியானார்கள்.

சுதியின் உச்ச ஸ்தாயியில் இருபத்தியெட்டாம் வயதில் கிட்டப்பாவின் பாட்டும் பிராணனும் நின்று போயின. சுந்தராம்பாள் தனித்து விடப்படுகிறார். நிறை இளமை சட்டென்று கசிந்து போகிறது. வெள்ளைச் சேலையணிந்து பேய்க் கோலம் பூண்கிறார். புனிதவதி காரைக்கால் அம்மையாராகிறார்.

- வாழ்க்கை முழுவதும் மாய வித்தைகள் நிரம்பியிருந்தன. ஒவ்வொரு பாட்டுப் பாடும்போதும் சுந்தராம்பாளின் மனதில் அந்த மாய வித்தைகள் கடந்து செல்வதாக இருக்கலாம்.

மனப் பிறழ்வுக்கு ஆளாகி தேசாந் தரங்களில் அலைந்த ஸ்ரீநிவாச பாகவதரும் பெரும் சுமைகளைச் சுமந்து கடைசியில் உன்மத்தனாக வாழ்க்கையை நடந்தே தீர்த்த பீருக்கண்ணுவும் சுந்தராம்பாளின் புராதனமும் திராவிடத் தன்மை நிரம்பியதுமான ஆதி நாதத்தில் அனுபவித்தது என்னவாக இருக்கலாம்?

கனத்த சுமையைத் தலையில் வைத்துப் பாட்டுப் பாடிக்கொண்டு நாட்டியக்காரனின் தாளகதியுடன் நடந்து செல்வதற்கிடையில் என்றோ ஒருநாள் பீருக்கண்ணுவின் மனதின் சமநிலை தவறுகிறது. காலில் சீழ் வெடித்த பெரும் ரணத்துடன் பீருக் கண்ணு தாளம் தப்பி நடக்கத் தொடங்குகிறான். அப்போதும் பீருக்கண்ணுவின் தலையில் பெரும் சுமைகள் இருந்தன.

சுமைகளில்லாமல் நடக்க அவனால் முடிந்ததில்லை. யாரையும் நினைத்துப் பார்க்க முடியாமல்இ எதையும் நினைத்துப் பார்க்க முடியாமல் நடந்து கொண்டேயிருந்தான்.

இரவு நேரங்களில் ஆளற்ற தெருவில் குப்பை கூளங்களைக் குவித்து வைத்துத் தீ மூட்டுவான். எரிந்து உயரும் அந்தத் தீச்சுடர்களுக்கு முன்னால் சீழும் நீரும் கசியும் காயத்துடன் கூனிக் குறுகி உட்கார்ந்திருப்பான்.

வெண்ணீறணிந்ததென்ன?
வேலைப்பிடித்ததென்ன?
கண்மூடி நின்றதென்ன?
காவி உடுத்ததென்ன?

- எல்லாமும் மறதியில் புதைந்த உன்மத்தத்தின் உச்ச நிலையிலும் சுந்தராம்பாளின் பாடல்களைத் தாளம் தப்பாமல் பாடுவான்.

ஸ்ரீநிவாச பாகவதரின் பாட்டுகளுக்குள்ளும் பீருக்கண்ணுவின் பாட்டுகளுக்குள்ளும் ஏதோ விசும்பல்கள் துடிப்பதை என்னால் கேட்க முடிந்திருக்கிறது.

சுந்தராம்பாளின் பாட்டை எப்போது முதன்முதலாகக் கேட்டேன் என்று இப்போதும் எனக்குத் தெளிவாக நினைவில்லை.
ஆனால்இ இப்போது தெரியும். சுந்தராம்பாள் ஜென்மாந்தரங்களினூடே பாடிக் கொண்டிருக்கிறார்.

சுந்தராம்பாள் ஒவ்வொரு பாட்டைப் பாடும்போதும் அழுது கொண்டேயிருக்கிறார்.

Nantri kalachuvadu.com

No comments: