மிச்சமிருக்கும் ஒரு கவிதை -கவிதா முரளிதரன்

.
எனது வேசித் தொழிலில்
ஒரு ஆணுடைய பணத்தை
ஏற்றுக்கொண்ட பிறகு
இரண்டாவது ஆணினுடையதை
ஏற்றுக்கொள்ளலாகாது ஐயா.
மீறினால்
என்னை நிர்வாணமாக நிறுத்தி
கொல்வார்கள் ஐயா.
மேலும் கேடு கெட்டவர்களோடு
நான் உடனுறைந்தால்
சிவந்த, சூடேறிய கத்தி கொண்டு
எனது மூக்கையும் காதையும் அறுப்பார்கள் ஐயா.
மாட்டேன், முடியாது.
உங்களை அறிந்த பிறகு
அதைச் செய்ய மாட்டேன்.
கட்டுகளற்ற சிவனே,
என் சொல் உண்டு.
கவிதையை எழுதியவர் கன்னடப் பெண் கவிஞர் சூலே சங்கவா. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கவிஞரான சூலே சங்கவா எழுதியதில் மிச்சமிருப்பது இந்த ஒரு கவிதை மட்டுமே. 


பெரும்பாலான காலகட்டங்களில் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குதல்களுக்கும் ஆளாக வேண்டியிருந்த பெண்களுக்கு பக்தியும், பக்தியின்பாற்பட்ட காதலுமே சுதந்திரத்திற்கான மார்க்கமாக இருந்திருக்கின்றன.
சங்கவாவின் மிச்சமிருக்கும் இந்த ஒரு கவிதை நமக்கு அறியத்தருவது, சங்கவா வேசியாக இருந்திருக்கக்கூடும் என்பது. அனேகமாக பக்திக் கவிதைகளை எழுதிய பெண் கவிஞர்களுள் வேசியாக இருந்திருக்கக்கூடியவர் சங்கவா மட்டுமே. அதனாலும்கூட அவருக்கு பக்தி இலக்கியம் எழுதிய பெண் கவிஞர்களுள் முக்கியமான இடம் இருக்கிறது. இந்த ஒரு கவிதையின் மூலம் அவர் சொல்ல விரும்பிய செய்தியைச் சொல்லியிருக்கிறார், நிகழ்த்த விரும்பிய கலகத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
‘வெட்கம் எதுவும் இல்லாத' சிவனைப் பற்றிப் பாடும்போது ஒரே நேரத்தில் சிவன் பால் உள்ள பக்தியையும் காதல் தரும் சுதந்திரத்தின் நிந்தனையையும் முன்வைக்கிறார் சங்கவா. கன்னட இலக்கியப் பரப்பில் சைவ மரபில் வந்த பெண் கவிஞர்கள் பலர். அக்கம்மா தேவி அவர்களுள் முக்கியமானவர். சங்கவாவும் அதே மரபில் வந்தவர். அவரது கவிதையின் மூலத்தில் இரண்டாம் நபர் சைவ சமயத்தவர் இல்லை என்று குறிப்புணர்த்தும் சொல் இருப்பதாகவும் ஆங்கிலத் தழுவலில் அது இல்லை என்றும் சொல்கிறார்கள் ‘இந்தியப் பெண் எழுத்து’ என்னும் புத்தகத்தைத் தொகுத்திருக்கும் சுசீ தாரு மற்றும் கே. லலிதா. ஒரு வேசியின் வாழ்வில் அன்றாடம் நிகழும் ஒரு அதீதமான தருணத்தைப் பற்றி பேசும் அதேநேரம், சிவனுடனான தனது தனிப்பட்ட உறவையும் இந்தக் கவிதை கையாள்வதாக அவர்கள் சொல்கிறார்கள்.
சமூகத்தின் போலித்தனங்கள் மீதான பூடகமான, நுட்பமான சாடலாக வெளிப்பட்டிருக்கும் சங்கவாவின் இந்த ஒற்றைக் கவிதை அவரது இலக்கியப் பங்களிப்பிற்குக் காலத்தை வென்ற சான்று.
http://tamil.thehindu.com/

No comments: