விஷ்ணு பிரசாத் கவிதைகள்

.

குனான் போஷ்போரா அல்லது கவி முஹமத் அலியின் சுயசரிதையிலிருந்து ஒரு பகுதி

அலி
அன்று பத்து வயதுச் சிறுவன் நீ
என்னைப் பார்த்துக் கதறி அழுது கொண்டே
விலகிச் செல்வதை மாடி ஜன்னல் வழியே
என்னால் பார்க்க முடிந்தது
உன்னையும் என் அப்பாவையும்
மூன்று சகோதரர்களையும்
விசாரணை என்ற பெயரில்
அழைத்துச் சென்றார்கள்
உங்களை மட்டுல்ல
குனான் மற்றும் போஷ்போரா பகுதியின்
அனைத்து ஆண்களையும்
அந்த இரவில் விரட்டிச் சென்றார்கள்
அலி
22 வருடங்கள் கழிந்தன
உனக்குத் தெரியுமே
நமக்கு நீதிகிடைக்கவில்லை
அப்படியொன்றும் நடக்கவே இல்லையென்று
இந்திய அரசும் ஊடகங்களும்
உலகத்துக்குச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன
எல்லா விசாரணைகளையும் கைவிட்டாயிற்று
அது ஒரு கட்டுக்கதை என்று அறிவித்தாயிற்று.
அலி
அந்த இரவில் இந்திய ராணுவம்
ஆண்களையெல்லாம் இழுத்துச் சென்ற பிறகு
நள்ளிரவில் திரும்பிவந்தது
வீடுகளிலிருந்து



பயத்தின் அடியாழத்திலிருந்து மட்டுமே
வெளிப்பட்ட அந்தப் பிரத்தியேகச் சத்தத்தில்
கூக்குரல்கள் எழுந்தன
துப்பாக்கி முனையால்
பதின்மூன்றுமுதல் எண்பது வயதுவரையிலான பெண்களை
வன்புணர்ச்சியில் சிதைத்தனர்
மறுநாள் காலை ஒன்பது மணிவரை நீண்டது இக்கொடூரம்.
அலி
பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லைதான்
எனினும் உன் அம்மா அன்று தப்பினாள்
உன்னையும் அனைத்து ஆண்களையும்
இழுத்துச் செல்லும்போது
நான் மாடியில் இருந்தேனல்லவாஇ
எல்லா வீடுகளிலிருந்தும்
பெண்களின் கதறல்கள் கேட்கத் தொடங்கின.
இராணுவத்தினரின் அலறல்களும் பூட்சொலிகளும்
சில இராணுவத்தினரும் நம் வீட்டுக்குள்ளும் புகுந்தார்கள்.
அவர்கள் எல்லா அறைகளுக்குள்ளும் நுழைந்து
சோதனை போடத் தொடங்கினார்கள்
படியேறி ஒருவன்
மேலே வரும் ஓசையும் கேட்டது.
பயத்தால் உணர்விழந்து விடுவேன் என்று
எனக்குத் தோன்றியது
அறியாமலேயே என் உடையில்
மலம் கழித்துவிட்டேன்
என் பீயை இரு கைகளிலும் எடுத்து
முகத்திலும் முடியிலும் முலைகளிலும்
உடலெங்கும் பூசிக்கொண்டேன்
ஏன் அப்படிச் செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை
படியேறி வந்த அந்த ராணுவக்காரனும்
அவனைப் பின்தொடர்ந்து வந்த மற்றவர்களும்
உடல் முழுக்கப் பீ அப்பிய என்னைப் பார்த்துக்
காறித் துப்பி மூக்கைப் பொத்தி
அதிவேகமாக இறங்கிப் போனார்கள்
என்னுடைய பீதான்இ அலி
என்னைக் காப்பாற்றியது
நூற்றுக்கணக்கான பெண்கள்
மானமிழந்தபோது
உன் அம்மா தப்பினாள் என்பதில்
பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை
அலி
பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை.

குறிப்பு

தற்காலக் காஷ்மீரிக் கவிஞர்களில் பிரபலமானவர் முஹம்மது அலி. ‘பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை’ என்னும் அவரது சுயசரிதையில் வரும் ஒரு அத்தியாயம் இது. முஹம்மது அலி 1982ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் குனான் போஷ்போரா கிராமத்தில் பிறந்தார். குனான் போஷ்போரா பலாத்காரம் நடந்தபோது முஹம்மது அலிக்கு பத்து வயது. குரூரமான இச்சம்பவத்தின்போது அவரின் தந்தை அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் இருந்தார். வருடங்களுக்குப் பிறகு தாயார் ராபியா அலியிடம் சொன்னதே இச்சம்பவம்.


kalachuvadu.com

No comments: