வால்மீகி தந்த இராமாயணம்


ஆச்சாரியார் ஸ்ரீ சச்சிதானந்த சாயி அவர்கள். ஓன்பது நாட்கள் இராமாயண காவியத்தை போக்கம்ஹில்ஸில்  (St Josheph's Baulkham Hills Centre for Reflective Centre) அமைந்துள்ள மண்டபத்தில் காலை வேளையில் கடந்த ஏப்ரல் மாதம் மகிமை வாய்ந்த மக்களைப் பற்றியும் அவர்கள் சாதனைகள் பற்றியும் கூறி எல்லோரையும் ஆன்மீக சாதனைபுரிய வழிவகுத்துத் தந்துள்ளார். 


சனாதன தர்மத்திற்கு ஆதாரம் வேதங்கள். வேதங்கள் மனிதனால் ஆக்கப்பட்டவை அல்ல. பரப்பிரம்மத்தினால் உணர்த்தப்பெற்று ரிஷிகள் மூலம் வெளிவந்தவையே வேதங்கள். சப்தரிஷிகளால் உணர்த்தப் பெற்று நீண்டகாலம் தவஞ் செய்து உடம்பை புற்றுமூட அதைநீக்கி வெளிவந்தவர்கள்தான் வால்மீகி ரிஷி. இராமயணத்தைத் தந்த வால்மீகி ரிஷிதான் ஆதிகவி. இந்ந இராமாயணமும் ஒரு ரிஷியினால் தரப்பட்டதனால் இதுவும் ஒரு வேதம்தான்.

என்றும் ஞானநிஷ்டையும், தவவலிமையும், சொல் வன்மையும் மிக்க நாரதமுனி வால்மீகி முனிவரின் ஐயங்களைத் தெளிவு படுத்தப் போலும் அவர்முன் தோன்றினார். வியாச பகவானின் மன விசனத்தைப் போக்க அங்கு தோன்றி பாகவதத்தைப்பாட உந்து சக்தியாயமைந்தவர் நாரதமுனிவர். இங்கும், நாரதமுனிவரைக் கண்டதும் வால்மீகி முனிவர் அன்று (அவரது காலத்தில்) யாராவது சர்வகுண சம்பன்னனாகவும், மிகுந்த பராக்கிரமமுள்ளவனாகவும்,
சத்தியவானாகவும், திடமனதுள்ளவனாகவும், ஒழுக்கம் நிறைந்தவனாகவும், தர்மவானாகவும், எல்லோரிடத்தும் அன்புள்ளவனாகவும், ஞானவானாகவும், தன்னை உணர்ந்தவனாகவும், பொறாமை அற்றவனாகவும், கோபத்தை வென்றவனாகவும் உள்ள மனிதர் யாராவது இருக்கின்றாரா என சர்வலோக சஞ்சாரியான நாரத முனிவரைக் கேட்டார்.  அவரும், பகவான் தன்னுள்ளே பிரகாசிப்பதை உணர்ந்து கொண்டே, உவகையோடு இஷ்வாகுவம்சத்தில் உதித்த இராம நாமம் கொண்ட ஒருவர் மனதை வென்றவர், மிகுந்த பராக்கிரமமுடையவர், இந்திரியங்களை வென்ற அதி விவேகி, உதார குணமுடையவர், இதமான வாக்கையுடையவர், பகைவரை வென்றவர். அவரது தோற்றமும் இனிமையானது. ஆஜானுபாவானாக அகன்ற தோள்கள், சக்திமிக்க முழங்கால்வரை நீண்ட கைகள் சந்திரன்போல் செந்தண்மைமிக்க பிரகாசமான கண்களும் முகமும் நீண்ட நாசி இப்படி அவரை வர்ணிக்கப் புகுந்த பக்தர் ஒருவர் தோள் கண்டார் தோளே கண்டார், தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார், தடக்கை கண்டாரும் அஃதே ….. இப்படி வர்ணித்துக் கொண்டே போகின்றார். இவர் வேதங்களை நன்குணர்ந்தவர், வேத அங்கங்களையும் அறிந்தவர், வில்வித்தை வீரர், சாஸ்திரங்களையும் உணர்ந்தவர், நினைவாற்றல் மிக்கவர், மூவுலகிலும் புகழ் பெற்றவர், சம நோககுடையவர், இமாலய மலைபோல் திடமானவர், பூமிபோல் பொறுமையுடையவர், சூரியனைப் போல் பிரகாசமும் சந்திரனைப் போல் தண்ணளியும் கொண்டவர் என்று கூறிக் கொண்டே போய் தொடர்ந்து ஸ்ரீராமரின் சரிதத்தை மிகச் சுருக்கமாகக் கூறி வால்மீகி முனிவரிடம் விடைபெற்று ஆகாய மார்க்கமாகச் செல்லானார்.
இராம சரிதம் வால்மீகி முனிவரை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. மதிய சந்தியா வந்தனததிற்காக தனது உத்தம சீடனான பரத்வாஜருடன் நதிக்கரையை நோக்கி நடந்தார். பரவச நிலையிலேயே தமசா நதிக்கரையை அடைந்தார். அங்கு நீரும் மிகத் தெளிவாக அடிப்பரப்பில் மணல் தெரியக்கூடியதாக இருந்தமையை மனமடங்கிய சிறந்த மனிதனின் உள்ளம் போல் தமசா நதிகாட்சியளிப்பதாகக் கூறிக் கொண்டு தண்ணீரெடுக்க கலசத்தைக் கரையில் வைக்கும் படியும் மரவுரியைத் தன்னிடம் தருமாறும் பெற்றுக் கொண்டு அந்த நதியில் இறங்கும் தருணத்தில் ரம்மியமான வனத்தை, புலன்களை வென்ற முனி ஒரு கண்ணோட்டம் விட்டார். இரண்டு கிரௌஞ்சப் பட்சிகள், ஆணும் பெண்ணும், அருகருகே சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் வேட்டைக்காரன் அம்புக்குப் பலியாகி பயங்கரமாக அலறிக்கொண்டு இரத்தம் வழிய துடித்து ஆண்பட்சி விழுவதையும் பெண்பட்சி விரகதாபத்துடன் கத்தி அலறுவதையும் கண்ட முனிவர் பட்சிகளில் இரக்க உணர்வு மேலிட்டு வேடனின் பாவச் செயலுக்காக அவனுக்குச் சாபம் கொடுக்கின்றார்.  தீச்செயலானனே, தாபத்தோடு இருந்த இரண்டு பட்சிகளில் ஒன்றைக் கொன்ற நீ மனச் சாந்தியடைமால் எண்ணிலடங்கா வருடங்களைக் கடக்கக்கடவாய். ஒசையோடு வெளிவந்தது சாபம். உடனே ஒரு பறவைக்காகக் கவலையால் பாதிக்கப்பட்டு என்ன கூறினேன் என்று ஆராய்ந்தார். தம்புராவுடன் இசைக்கக்கூடிய சிறுசிறு சொற்களைக் கொண்ட இவ்வாக்கம் உண்மையான ஒரு பாடலாகட்டும் எனக் கூறினார். அவரது சீடரும் இதனால் பெரிதும் கவரப்பெற்று பாடலை நினைவில் நிறுத்திக் கொண்டார். முனிவருடம் சீடனில் மகிழ்வுற்றார்.


மதிய சந்தியா வந்தனத்தை தமசாநதிக்கரையில் முடித்துவிட்டு திரும்பும் வழியிலும் இந்தப் பாடலையே நினைத்துக் கொண்டு வந்தார். பரத்வாஜரும் கலசத்தில் நீரை நிரப்பிக்கொண்டு குருவைப் பின் தொடர்ந்தார். குடிலுக்கு மீண்டதும் நிலத்தில் இருந்து கொண்டு ஏனைய சீடர்களுடன் வேறு ஆத்மார்த்த விடயங்களைப் பற்றிக் கலந்துகொண்ட போதும் தன்னிடமிருந்து வெளிவந்த புதுப் பாடலைப்பற்றியே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார். இவ்வாறிருக்கையில் பதினான்குலகங்களையும் படைத்த பிரம்மதேவர் அதிபிரகாசமாய் வால்மீகி முனிவரின் முன் தோற்றமளித்தார். எதிர்பாராத வருகையால் அதிசயப்பட்டவாறே அவரை வணங்கி வரவேறறு அவரது கால், கை அலம்பி அவருக்கு உயரியதொரு ஆசனமும் கொடுத்து உபசரித்து அவரது முன்னிலையில் கீழே இருந்து கொண்டு மீண்டும் அந்தச் சோடிப் பட்சிகளின் சோகத்தால் தூண்டப்பெற்று அம்பிட்டவனைச் சாபமிடத் தன்னிலிருந்து வெளிவந்த அந்தப் பாடலைக் கூறிக்கொண்டும் அதன் கருத்தைச் சிந்தித்துக்கொண்டும் தனது அந்தச் சாபத்தால் தனது தவத்திற்கே இழுக்கேற்படுமோ என எண்ணித் துன்பத்திலாழ்ந்தார். பிரம்மதேவர் சிரித்துக்கொண்டே அவரைப் பார்தது உமக்கு இந்தப் பாடலால் அழியாப் பெரும்புகழ் உண்டாகட்டும். இது பற்றிக் கவலை வேண்டாம். எனது சங்கல்பத்தினாலேயே இந்தச் சொல்மாலை உமது வாயிலிருந்து வெளிவந்தது. ஓ பிராமண ரிஷியே! சிறப்பான திருஷ்டி பெற்றவரே, இந்தப் பூமியில் வாழும் சிறப்பான ஆத்மதிருப்தியைத் தரும் ஸ்ரீராமரின் ஞானம், உண்மை, வீரம் முதலிய எல்லாக் குணநலன்களையும் நாரதரிடம் கேட்டவாறே எழுதவும். முதலில் உமக்கு வந்த பாடல் மங்களகரமான தொடகடகமாயமையட்டும் “மகாலஷ்மியோடு கூடியவிஷ்ணுவாகிய நீர் காமத்தில் மூழ்கிய இராவண தம்பதிகளில் இராவணனைக் கொன்று அழியாப் புகழ் எய்துவிட்டீர். இந்தப் புகழ் என்றும் நின்று நிலவும்.”  உமது வார்த்தைகள் ஒன்றும் பொய்யாக. இராமரைப் பற்றித் தெரிந்த, தெரியாத யாவற்றையும் இலக்குமணனுடன் சேர்ந்து இராஷதர்களுடன் போரிட்டு எவ்வாறு அவர்களைக் கொன்றார்கள் என்பதையும் ஜனகரின் வளர்ப்புப் பெண் சீதையைப் பற்றியும் உமக்குத் தெரிந்த தெரியாத யாவும், இப்பொழுது நடந்த நடக்கின்ற இனி நடக்கப்போவதனைத்தும் உமக்கு தெளிவாக தெரியப்படுத்தப்படும். இவற்றை முன்பு பாடிய யாப்பு ஓசை முறையிலேயே பாடவும். இந்த இராமயணக்கருவூலம் உலகில் ஆறுகள், நதிகள், மலைகள், உள்ளவரை எல்லோராலும் பெரிதும் விரும்பப்பட்டு பரிமளிக்கும் என்று கூறி அந்தவிடத்திலேயே மறைந்து விட்டார். வால்மீகி முனிவரும் சீடர்களும் பிரம்மதேவரே நேரில் வந்து ஆசீர்வதித்தமையால் அதி ஆனந்தமடைந்தனர். சீடர்கள் மீண்டும் மீண்டும் அப்பாடலைப் பாடினர். முனிவரும் தன்னிடமிருந்து வெளிவந்த முதற் பாடல் வடிவத்திலேயே இராமாயணம் முழுவதையும் பாட வேண்டுமென உறுதி பூண்டார். 
பிரம்மதேவர் கூறியபடி குசபுல்லில் அமர்ந்தபடி சிறிது நீரை, புனிதப்படுத்தும் வகையில் அருந்தி, தன் தவவலிமையினால் ஸ்ரீராமர் லஷ்மணர், சீதை இவர்களைப்பற்றியும் தசரதச் சக்கரவர்த்தி அவரது மூன்று மனைவிமார் பற்றியும் அவர்களுக்கு ஆண்குழந்தை வாரிசாக இல்லாததால் புத்திரகா பேஷ்டி யாகத்தின் பலனாக நான்கு ஆண் குழந்தைகளைப் பெற்றமையும் குலகுரு வசிட்டரிடம் குருகுலத்தில் அவர்கள் வசித்தமையும் பின்னர் யாத்திரை சென்று அவர்கள் அரண்மனை திரும்பியமை பற்றியும் அறிந்தார். எதிர்பாராத விதமாக விசுவாமித்திரமுனி தசரதரிடம் வந்தார். இஷ்வாகு வம்சத்தில் பிறந்த தசரதச் சக்கரவர்த்தி முனிவரைக் கண்ட மகிழ்ச்சியில் எது கேட்டாலும் தருவேன் என்று வாக்களித்துவிட்டார். தனது யாகத்துக்கு இராஷதர்களால் பங்க மேற்படுகின்றதெனவும் அதைக்தடுக்க இராமரைத்தன்னுடன் அனுப்பும்படியும் கேட்டார். இதனால் சக்கரவர்த்திக்குப் பெருஞ்சோகமேற்பட, முழுதுமுணர்ந்த குலகுரு வசிஷ்டர் இராமரின் புகழ் துலங்க ஏதுவாகும் நிகழ்ச்சிகளுக்குதவ இராமரை அனுப்பும்படி கூறியதையேற்று தசரதர் இராமலக்குமணர்களை விசுவாமித்திர முனிவருடன் அனுப்பினார். சாதனை வனத்திலே ஆரம்பம். விசுவாமித்திரர் என்றாலே சகல ஜீவராசிகளிடமும் அன்பு பூண்டவர் எனப் பொருள்படும். அவ்வாறே அவரும் இருந்தார். போகும் பொழுது சிறுவர்கட்கு அறிவுரைகளை வழங்கி பின்னர் தாடகை வதம் செய்யவேண்டுமெனன்றும் கூறினார். பெண்ணைக் கொல்லலாமா என இராமர் கேட்க அவளுக்கு பெண் உருவேயொழிய தீங்கே செய்கின்ற ராஷதர்களை அழிக்கவேண்டும் என்றார். பின்னர் யாகந்தொடங்கமுன் இவர்களுக்குத் தேவையான அஸ்திரங்களையும் மந்திரங்களையும் கொடுத்து அவர் யாகத்தைத் தன் சீடர்களுடன் தொடங்க ராஷதர்கள் பெருமளவில் வந்து ஊறுவிளைவிக்கப் போகும் சமயம் ராமபாணம் தாடகை உட்பட எல்லோரையும் அழித்துவிட்டது. ஒருவரை மாத்திரம் தூர எறிந்துவிட்டது. பின்னர் யாகம் இனிதே நிறைவேற இராமர் புகழ் ஓங்க, இராம லஷ்மணர்களுடனும் சீடர்களுடனும் முனிவர் மிதிலாபுரிக்கு சிவதனுசைப் பற்றிக் கூறிச் சென்றார். வழியில் அகலிகை சாபம் ஸ்ரீராமரால் நீக்கப்பட்டது.மிதிலைச் சக்கரவர்த்தி ஜனகரும் ஒரு ரிஷிதான். சீதை சிறு குழந்தையாகவே அதிசயமாகக் கிடைக்கப்பட்டாள். ஜனகராலேயே வளர்க்கட்ட சீதைக்கு மணஞ்செய்ய ஏற்பாடுகள். சிவதனுத ஒன்று அவர்களிடமிருந்தது. அதை ஒடிப்பவருக்கே சீதை மண மாலை சூட்டுவதெனத் தீர்மானம். எத்தனையோ அரசர்கள் வந்து முயன்றார்கள். சிவதனுசை அசைக்கவே முடியவில்லை. இராமர் அதை லாகவமாக “எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்.” தசரதச் சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்பப்பட்டு அவரது நான்கு புத்திரர்கட்கும் மணவிழா. பின்னர் விசுவாமித்திரர் இமயமலை நோக்கிப் புறப்பட்டுவிட்டார். மணமக்கள் அயோத்தி செல்லப் புறப்பட்டனர். வழியில் சிவதனுசை ஒடித்தமையில் சினங்கொண்ட பரசுராமர் இராமரைப் போருக்கழைத்து விஷ்ணு தனுசில் அம்பேற்றும்படி கூற இராமர் அதில் அம்பேற்றி பரசுராமர் அவதாரப் பயன்களைச் செயலிழக்கச் செய்தார். இந்த இராமாயணம் முழுமையும் உண்மை, நேர்மை, மன்னிக்கும் தன்மை, நல்லோர் சேர்க்கை போன்ற குணங்கள் மேலோங்கக் காணப்படுகின்றன.தீயோர் சேர்க்கையால் ஏற்படும் பலனை தரசதர் இராமருக் குயுவராஜாவாகப் பட்டமளிக்க ஏற்பாடுகள் செய்ய, ஒரு இரவிலேயே இராமரைக் காடேகவும் பதினான்கு வருடங்கள் அங்கு வசிக்கவும் கைகேயினால் கூனி என்ற வேலைக்காரியின் புத்திமதிப்படி மாற்றப்பட்டது. விதிப்படி விரத நிட்டைகளைப் புரிந்த இராமரை அதிகாலையில் அழைத்து அயோத்தி நகரை விட்டுச் செல்லும்படியும் காட்டில் பதினான்கு ஆண்டுகள் இருக்கும் படியும கைகேயி கூற, அவரும் தந்தையின் நிலையை உணர்ந்து அவரை மும்முறை வலம் வந்து ஏதொரு மாற்றமும் இல்லாத நிலையில் சீதை லஷ்மணருடன் மரவுரி தரித்துக் கிளம்பினார். இங்கு லஷ்மணரை அனுப்பிய சுமித்திரையின் மனவிசாலமும் லஷ்மணரின் திடவைராக்கியமும் சீதையின் விவேகமும் மிளிர்கின்றன.வனமேகி கங்கையைக் கடக்க உதவிய குகனின் அன்பும் பக்தியும் இராமரை வெகுவாகக் கவர்ந்தன. இராமர் பரத்வாஜ முனிவரைச் சந்தித்து சித்திரகூடத்தில் ஒரு குடிலமைத்து இருக்கும் வேளையில் பரதன், அன்னையர் வசிஷ்டமுனி, மக்கள், சேனை எல்லோருடனும் வந்து இராமரைத் திரும்பி வந்து அயோத்தி அரசுப்பொறுப்பை ஏற்கும்படி வற்புறுத்த, தந்தை சொற்படி குறிப்பிட்ட கால எல்லை வரை அயோத்திதிரும்ப மறுத்துவிட, பரதன் இராமர் பாதுகளை சிம்மாசனத்தில் வைத்து தானும் மரவுரி தரித்து சத்ருக்னனின் உதவியுடன் இராமர்சிந்தையுடன் அரச கருமங்களைப் புரிந்தார். இராமரும் வன சஞ்சாரத்தில் முனி சிரேஷ்டர்களைச் சந்தித்து அவர்களுக்கு இடுக்கண் விழைத்த ராஷத கூட்டங்கள் அனைத்தையும் அழித்து வந்தார். சுரபங்கமுனி, அகஸ்தியமுனி இவர்களை நேரில் போய் கண்டார் அவர்கள் இராமதரிசனம் பெற்று அவருக்கு பல சக்திவாய்ந்த ஆயுதங்களையும் கொடுத்துதவினர். சீதா தேவியாரும் பெண் இரத்தினங்களான அனசூயா லோபமுத்ரா அவர்களைச் சந்தித்து அவர்களாலோசனைகளையும் ஆதரவையும் பெற்று மகிழ்ந்தார்.
ஏதேச்சையாக சூர்ப்பனகை வனத்தில் இராமலக்குமணரைக் கண்டு அவர்களது அழகில் மயங்கி தன்னை மணக்கும்படி இராமரைக் கேட்டாள். அவர் மறுக்க இலக்குமணரையணுகினாள். அவரால் மூக்கும் காதுமறுபட்டு இலங்கை சென்று சீதையின் அழகை இராவணனுக்கு வர்ணித்துப் பேதலிக்க வைத்தாள். இதனால் மாரீசன் பொன் மானாக வந்து சீதைமுன் விளையாட ஆசை புத்தியைப் பேதவிக்கச் செய்ததனால் சீதை இராக்கத இராவணணானால் கவரப்பட்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மானுக்குப் பின் சென்ற இராமர், மானைக் கொலை செய்து திரும்பி வர சீதையைக் காணாது காடெங்கும் அழுதழுது இராமலஷ்மணர்கள் தேடினார்கள். ஜடாயு இராவணனால் தாக்கப்பட்டு குற்றுயிராய்க் கிடக்கும் பொழுது ஸ்ரீஇராமரைக் கண்டு செய்தி தெரிவித்து மடிந்தது. ஸ்ரீராமரே இறுதிக்கடன்களைச் செய்து முடித்து, போகும் வழியில் நீண்டகாலமாக ஸ்ரீராமரைக் காண ஏங்கியிருந்த சபரியைக்கண்டு அவருக்கு விமோசனம் அளித்தார்.
பின்னர் சீதையைத் தேடி அலைந்த பொழுது அனுமானைக் கண்டனர். அனுமானின் சேர்க்கையால் இராமலக்குமணர் பாதை இலக்கு சுலபமாக்கப்பட்டது. அனுமாரே சிறந்த பக்தனும் குருவுமானார் ஸ்ரீஇராமர் வானர வீரனான சுக்கிரீவனின் அன்பைப் பெற்று சுக்கிரீவனின் மனைவியைக் கவர்ந்திருந்த வாலியைக் கொன்று சுக்கிரீவனை அரசனாக்கினார். சுக்கிரீவன் வானர வீரர்களை நான்குதிக்குமனுப்பி சீதையைத் தேட அனுப்பிவைததான். அனுமானுக்கு அவரது திறமை நினைவூட்டப்பட, வான் மார்க்கமாக செல்ல பல தடங்கங்கள் ஏற்பட்ட போதும் புத்திசாதுர்யத்துடன் ராமநாம மகிமையினால் இலங்கைக் கரையைச் சென்றடைந்தார். இரவில் இராவணன் மாளிகை, புஷ்பகவிமானம், துளசி செடிகளுடன் கூடிய விபீடணனின் இருப்பிடத்தையும் கடந்து அசோக வனத்தில் அரக்கியர்களால் சூழப்பெற்று துன்புற்ற நிலையில் சீதையைக் கண்டு இராமரின் கணையாழியைக் கொடுத்து அவரிடம் சூடாமணியைப் பெற்று அவரைத் தானே இராமரிடம் கொண்டு சேர்ப்பதாகக் கூறவும் சீதை இராமருக்கு அது அழகல்ல என்று மறுத்ததும் பல அரக்க வீரர்களைக் கொன்றும் வனங்களை அழித்தும் நகரை எரித்தும் நாசஞ் செய்து மீண்டும் இராமரிடம் சென்றார். 
இலங்கை செல்வதற்குத் தடையாக இந்து சமுத்திரம் இராமநாமம் பதித்த கற்கள் பாறைகள் குன்றுகள் இராம நாமத்துடன் போடப்பட்டு ஒரு பாலம் அமைக்கப்பட்டு அந்த வழியாக இராமலக்குமணர் வானர சேனையுடன் இலங்கை சென்று அரக்கர்களையழித்து இராவணனையும் வதம் செய்தபின் தன்னிடம் சரணடைந்திருந்த விபீடணனை இலங்கைக்கு அதிபதியாக்கி, சீதையின் கற்பின் வலிமையை, புனிதத்தை அக்னியுள் பிரவேசித்து அதிபிரகாசமாய் வெளிவர பிரம்மதேவர் இராமருக்கு அவரது அவதார நிலையை உணர்த்தி நின்றாராம். ஸ்ரீராமர் சீதாபிராட்டியாருடனும் இலக்குமணருடனும் அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் நடைபெற்று சிறப்பான அரசாட்சியை இராமர் புரிந்தார்.

சாதாரணக் குடும்பமொன்றில் இடம் பெற்ற உரையாடலைக் கேட்ட இராமர் கர்ப்பிணியாயிருந்த சீதாபிராட்டியாரைக் காட்டுக் கனுப்பிவிட்டார். அவருக்கு புகலிடம் கொடுத்தவர் வால்மீகி ரிஷி. சீதா பிராட்டியாருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு லவ, குச என நாமகரணம் செய்யப்பட்டு ரிஷியின் வழிகாட்டலிலேயே வளர்ந்தார்கள். இராமயணத்தைப் பாடிய ரிஷி இதனை யார் மூலம் வெளிப்படுத்தலாம் என்று எண்ண இந்த இரு குழந்தைகளும் அவரது காலடியிலேயே தென்பட்டனராம். ஆத் தெய்வீகக் குழந்தைகள் தம்புராவை மீட்டுக் கொண்டு அதி ரம்பியமாக பல ரிஷிகள் முன்னிலையில் பாட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுற்று என்ன கொடுப்பதென்று தெரியாமல் தம்மிடமிருந்த கமண்டலம், மரவுரி என்பனவற்றை கொடுத்தனராம். பின்னர் சிறுவர்கள் நகரத்தில் இப்பாடல்களை இசையோடு ஓசை ஏற்ற இறக்கங்களுடன் பாட கேட்டோரெல்லோரும் பெருமகிழ்வெய்தினர். ஸ்ரீராமரே ஒரு நாள் இவர்களைக் கண்டு அரண்மனைக்கு அழைத்துச் சென்று அரசகுமாரர்கட்குரிய லஷணலெல்லாம் பொருந்திய ஆனால் ஆசிரமத்திலிருப்போராக உடுத்தி கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு உயரிய ஆசனமும் வழங்கி தன்னுடைய சரிதத்தையே மெய்மறந்து கேட்டதிசயித்து அவர்களைப் பாராட்ட அவர்கள் வால்மீகி முனிவரே தமக்கெல்லாம் இவற்றைப் புகட்டியதாகக் கூறி நின்றனராம். வால்மீகி முனிவர் எல்லோரையும் ஒன்றிணைத்து வைத்ததாகச் சொல்லப்படுகின்றது.
ரிஷியினால் பாடப்பட்ட வேதமாகிய இராமயணத்தை இராமரே கேட்டானந்தித்தார். இதில் கூறப்பட்டயாவும் முற்று முழுதாக உண்மையே. “மானிதப் பிரதிஷ்டாம் ......” என்ற பாடலுடன் ஆரம்பித்த இராமாயணம் ஆகிய மகாநதி வால்மீகி எனும் மலையிலிருந்து பாயத் தொடங்கியது. இன்றும் உலகெங்கும் பாய்ந்து பரவிக்கொண்டேயிருக்கின்றது. இந்த இராமாயணம் ஆத்மாவின் புனிதப் பயணமாகும். இராமயணம் வேதத்தை நன்கு விளக்கி நிற்கின்றது. இஃது உண்மையான குணநலன்களின் புனிதஸ்தலம். இந்த புனிதமான காவியத்தையும் அதன் உள்ளார்ந்த வேதாந்த கருத்துக்களையும் அள்ளித்தந்தார் ஆச்சாரியார் ஸ்ரீ சச்சிதானந்த சாயி அவர்கள். ஓன்பது நாட்கள் இராமாயண காவியத்தை போக்கம்ஹில்ஸில்  (St Josheph's Baulkham Hills Centre for Reflective Centre) அமைந்துள்ள மண்டபத்தில் காலை வேளையில் மகிமை வாய்ந்த மக்களைப் பற்றியும் அவர்கள் சாதனைகள் பற்றியும் கூறி எல்லோரையும் ஆன்மீக சாதனைபுரிய வழிவகுத்துத் தந்துள்ளார். பகவானின் பாதார விந்தங்களைப் பணிந்து நன்றி கூறிநிற்கின்றோம். ஞானவேதாந்த சபைக்கும் ஆச்சாரியார் அவர்கட்கும் என்றென்றும் எமது தாழ்மையான வணக்கங்களும்நன்றிகளும்.

எமது ஆச்சாரியார் ஸ்ரீசச்சிதானந்த சாயி அவர்கள் இராமாயண ஆதி காவியத்தை ஸ்ரீராமராகிய ஜீவனின் புனித வாழ்க்கைப் பயணத்தை விவேகம் (சீதை), வைராக்கியம் (இலக்குமணர்)த்துடன் எத்தனை கடும் சோதனைகள் வந்தபோதும் தர்மநிலை பிறழாது வெற்றி கொண்டு எல்லோருக்கும் வழிகாட்டியாக, கலங்கரை விளக்காக ஒளிகாலுவதை விளக்கி எல்லோரையும் ஆன்மீகப் பாதையில் முன்னேறிச் செல்ல ஊக்கமளிக்கின்றார். சீதை, அனுமார் இவர்களின் பக்திச்சிறப்பும் பெருமையும் காவியத்தில் மிளிர்வதையும் காட்டினார். அனுமாரே இராமாயண மணிமாலைக்கு இரத்தனமாக அமைகின்றார். அவர் இராமர், சீதை, இலக்குமணர்களுக்கு ஆற்றிய சேவையால் மனமகிழ்ந்த இராமர் தன்னையே தருவதாக அனுமாரைத் தழுவிக் கொண்டார். அவரது குணநலனும், சோர்வின்மையும், இராம பக்தியும், பணிவும் அவரை இராமருக்கே குருவாகவே கொள்ளும் அளவுக்கு ஆச்சாரியார் விளக்கினார். இராமயண கதாபாத்திரங்கள் எல்லாமே எம்மை ஆன்மீகப் பாதையில் முன்னேற எவ்வாறு வழிகாட்டுகின்றன என்பதையும் காட்டியருளினார்.

எமது ஆச்சரியார் எம்மையெல்லாம் குருவாக வழிப்படுத்தி சுவாமி சொல்வதுபோல் இறைஅம்சம் அடையவே கொண்டு செல்ல முயல்வதற்கு நாம் எல்லோரும் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.St Josheph's Baulkham Hills Centre for Reflective Centre, NSW

No comments: