ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான்டா வளர்ச்சி

.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்
பாட்டுக்கோட்டையார் என்றும், பட்டுக்கோட்டையார் என்றும் தமிழர்களால் அன்புP.Kalyanasundaramடன் நினைவுக் கூரப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஒரு சிறந்த தமிழ் அறிஞராகவும், சிந்தனையாளராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும் திகழ்ந்தவராவார்.

இவரது பெரும்பாலான பாடல்கள் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி இயற்றப்பட்டவையாகும். இவருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திராவிட இயக்கத்திலும், கம்யூனிச சித்தாந்தத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கவுரவாம்பாள்.

தனது பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டிய இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் கொட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் ஒருசேர சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக வடித்துத் தந்தார்.

இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு ’படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி, தமிழ் சினிமா இசைத்துறையில் அழுத்தமான முத்திரையை பட்டுக்கோட்டையார் பதித்தார்.

இளம் வயதிலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை மக்களின் மனங்களில் பதிய வைப்பதில் சலிக்காது பாடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்த பட்டுகோட்டையார், தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பணியாற்றினார்.

கவிஞரை "சுந்தரம்" என்று எல்லோரும் அழைப்பதுண்டு. உதவி என்று யார் அழைத்தாலும், ஓடோடிச் சென்று உதவுவது அவரின் வழக்கம்.அவர் கண் முன்னே யாரும் துன்பப்படுவதை ஏற்றுக்கொள்ள அவரது மனம் என்றுமே சகித்ததில்லை.

அப்படிப்பட்ட மிகப்பெரிய "பொதுநலவாதி"யாக திகழ்ந்த கவிஞர், அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிந்தனையை தூண்டக்கூடிய பாடல்களை பாடினார். கம்பீர குரலில் தாளமிட்டு, பாடியபடி தனது பாடல்களை இயற்றுவது, இவரது தனிச்சிறப்பு. பாடுவதோடு மட்டுமின்றி, பொதுவுடமை கருத்துக்கள் அடங்கிய கதையம்சம் கொண்ட சில நாடகங்களில் இவர் நடித்தும் உள்ளார்.

திரை உலகில் நுழைய பட்டுக்கோட்டையார் சென்னைக்கு வந்து ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் 10-ம் நெம்பர் வீட்டில் ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்குப் பிடித்தார். சிறிய அறை. அதில் அவரது நண்பர்களான ஓவியர் கே.என். ராமச்சந்திரனும், நடிகர் ஓ.ஏ.கே.தேவரும் தங்கி இருந்தனர். பட்டுக்கோட்டை துவக்க காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராகவும் தைரியசாலியாகவும் இருந்தார்.

சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதிக் கொடுத்தார். பணம் வந்து சேரவில்லை. பணத்தைக் கேட்க பட அதிபரிடம் சென்றால், 'பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கள்' என்று பதில். ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். 'நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்' என்ற பட அதிபர் வீட்டிற்குள் போய்விட்டார்.

உடனே கல்யாணசுந்தரம், சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, அந்த தயாரிப்பாளரின் மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தைக் கொடுத்தார். அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதினார் பட்டுக்கோட்டை? இதோ...

'தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; நீ யார் என்னை நில் என்று சொல்ல?'

இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.

இப்படிப்பட்ட தன்மானத்தோடு, கவிச்செருக்கும் ஒருசேர வாழ்ந்து, பகுத்தறிவையும், சுயமரியாதையையும் நமக்கு ஊட்டிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் சுமார் 200 திரையிசைப் பாடல்களை வழங்கியுள்ளார். இருபத்தொன்பதே வயதிலேயே காலன் அவரை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டபோதிலும், சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா.., தூங்காதே தம்பி தூங்கதே.., திருடாதே பாப்பா திருடாதே.., சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி.., மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே.., உன்னைக் கண்டு நானாட.., போன்ற இனிய, எளிய, கருத்தாழம் மிக்க பாடல் வரிகளின் மூலம் தமிழர்களின் இதயங்களில் என்றென்றும் நீங்காத சிறப்பிடம் பிடித்துள்ளார்.

பட்டுக்கோட்டையாரின் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டையாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.


1 comment:

திருநந்தகுமார் said...

தமிழ் மாணவருக்குப் பொருத்தமான நல்ல பதிவு. பட்டுக்கோட்டையார் பற்றிய எளிய, இனிய, நல்ல அறிமுகம்.