நேர்மையாக வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கையின் நிஜம் புரிய மறுக்கிறது.
.
நிமிர்ந்து நில் |
|
இயல்பான இந்தியா லஞ்சத்தில் மட்டுமே இயங்குகிறது என்பதை ஏற்க மறுக்கும் அவன் படும் பாடும் அதற்கு அவன் கண்டறியும் தீர்வுமே நிமிர்ந்து நில்.
ஆசிரமத்தில் நேர்மையாக வாழ போதிக்கப்பட்டு படிப்பு முடிந்து வெளிவரும் ஜெயம்ரவி சட்டம் ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்ற நிஜமே புரிய மறுக்கிறது.
அப்பாவியாக ஒரு சிக்னலில் டிராபிக் பொலிசிடம் மாட்டும் ரவி 100 ரூபாய் லஞ்சம் தர மறுக்கிறார், அதனால் ஏற்படும் சிக்கலில் பொலிசில் மாட்டி நீதிபதியிடம் சிக்கி தண்டனை பெறுகிறார். வெளி வரும் ரவி எல்லா அதிகாரிகளையும் பற்றி மேலிடத்தில் புகார் தருகிறார்.
சிக்கலுக்கு உள்ளாகும் அதிகாரிகள் ரவியை தாக்கி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வாழ்வதற்காக ஊரை விட்டே செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் எதிர்த்து நிற்கும் ரவி சமூகத்தையே திருத்த நினைக்கிறார்.
அதற்காக நல்ல அதிகாரிகளின் உதவியுடன் இல்லாத ஒரு ஆளுக்காக அனைத்து அரசு அடையாள அட்டைகளையும், சான்றிதழ்களையும் பெறுகிறார்.
நீதிபதி, டாக்டர், பொலிஸ், எம்.பி என 147 பேர் இந்த ஊழலில் சிக்குகிறார்கள். அனைவரையும் மக்கள் முன்னாலும் சட்டத்தின் முன்னாலும் நிறுத்துகிறார் ரவி. அனைத்து அதிகாரிகளும் சிக்கிக் கொள்கிறார்கள்.
இடைவேளை வரை இவ்வளவு தான். ஊழலில் மாட்டிய அனைத்து அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து ரவியை எதிர்க்கிறார்கள். மேற்கொண்டு என்ன நடந்தது என்பது தான் படம்.
இந்தியன், சாமுராய், சிட்டிசன் போன்ற படங்களின் நினைவுகள் அவ்வப்போது வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.
முதல் பாதியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இரண்டாம் பாதி திணறி விட்டது. க்ளைமாக்ஸ் தான் படத்தின் மைனஸ்.
ஜெயம்ரவிக்கு கேரியரில் இந்த படம் மிக முக்கியமான படம் தான். சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். இயலாமையில் பொறுமும் போதும், விட்டேத்தியாக காதலிக்கும் போதும் அந்நியன் அம்பியை நினைவுபடுத்துகிறார். நரசிம்ம ரெட்டியின் பாடி லாங்குவேஜிலும் அசத்தியிருக்கிறார்.
அமலாபால் அழகாக தெரிந்தாலும் படத்தில் அவருக்கு பெரிய நடிப்பேதும் இல்லை. நாயகனின் நண்பனாக வந்த சூரி காமெடியுடன் குணச்சித்திரத்தையும் கலந்து நிறைவாக செய்து போகிறார். கோபிநாத்தின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.
சரத்குமார் இன்டர்வெல் பிளாக்குக்கு மட்டும் தேவைப்பட்டு இருக்கிறார். கு.ஞானசம்பந்தனும் நகைச்சுவை நடிகராக அசத்துகிறார். பாடல்கள் எல்லாமே ஸ்பீடுபிரேக்கர்கள் தான்.
ஆனால் படத்தின் பிற்பாதி சலிப்பையும் ஒரு அயற்சியையும் தருகிறது. முதல் பாதியில் ரவிக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் காணாமல் போனதன் ரகசியம் தான் புரியவில்லை.
ரவியின் பேட்டியைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அவருக்கு ஆதரவாக உயிரையும் கொடுக்க கிளம்புகிறார்கள். ஆனால் படத்தின் ஓட்டத்தில் காணாமலே போகிறார்கள்.
லஞ்சம் வாங்குபவனை விட லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைக்கும் மக்கள் தான் குற்றவாளிகள் என்பதை சொல்ல நினைக்கும் படம் சற்றே தடம் புரண்டுவிட்டது.
ஆகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டியது, சற்றே மிஸ்ஸாகி ஆவரேஜ் படமாகிவிட்டது.
கொமடி படங்களையும், ஆக்ஷன் படங்களையும் மட்டும் கொடுக்க நினைக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் மக்களுக்காக நல்ல படம் எடுக்கநினைத்திருக்கும் சமுத்திரக்கனிக்கு வாழ்த்துக்கள்.
நடிகர் : ஜெயம் ரவி.
நடிகை :அமலாபால்.
இயக்குனர் :சமுத்திரகனி.
இசை :ஜீ.வி.பிரகாஷ்.
ஓளிப்பதிவு :சுகுமார். |
No comments:
Post a Comment